பெருமாள் முருகன் – ஹிந்துத்துவர்களுக்கு சில கேள்விகள்

perumal_muruganஆளை விடுங்கடா சாமி என்று பெருமாள் முருகனே களத்திலிருந்து போய்விட்டாலும், எனக்குத் தெரிந்த சில ஹிந்துத்துவர்கள் கடையை மூட மறுக்கிறார்கள். நண்பர் ராஜன் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார். புத்தகத்தை தடை செய்திருக்கக் கூடாது, பெ. முருகன் விவரித்திருக்கும் சர்ச்சைக்குரிய திருவிழா ஹிந்து மதத்தின் நெகிழ்வைக் காட்டுகிறது என்று ஆரம்பித்த ஜடாயு கூட இப்போது கட்சி மாறிவிட்டது போலத் தெரிகிறது. உண்மையான அறிவுஜீவி, scholar என்று நான் மதிக்கும் அரவிந்தன் நீலகண்டனும் பெ. முருகன் ஆதாரம் தரவேண்டும் என்று நினைக்கிறார்.

எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள்:

 1. வயது வந்த ஒரு பெண் (adult) – உடல் சுகத்துக்காகவோ, பிள்ளைப்பேறுக்கோ, எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும் – தான் விரும்புபவனோடு படுப்பது தவறா? அப்படிப் படுத்தால் அது அவள் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்துகிறதா?
 2. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் இந்த சர்ச்சைக்கு அர்த்தமே இல்லை. கேவலப்படுத்தும் என்றால் அடுத்த கேள்வி. அந்த adult ஆணாக இருந்தால் அது அவன் குடும்பத்தை, ஜாதியை, ஊரைக் கேவலப்படுத்தாதா?
 3. கேவலப்படுத்தாது என்று நீங்கள் நினைத்தால் பெண் பெய்யென்றால் மழை பெய்ய வேண்டும், ஆணுக்கு எந்தக் கட்டுப்பாடும் தேவையில்லை என்று நினைப்பவர் நீங்கள் என்பது தெளிவு. உங்களுக்குப் பெண் என்பவள் சொத்து. அவளைக் கட்டுப்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு என்று நினைக்கிறீர்கள். நம் வீட்டு/ஜாதி/ஊர்ப் பெண் அவள் இஷ்டப்படி வேறொருவனுடன் உறவு கொள்வதா என்று பொங்குவீர்கள், அந்தப் பெண் என்ன நினைக்கிறாள் என்பது பற்றி உங்களுக்குக் கவலை இல்லை.  நம்ம வன்னியப் பொண்ணு திவ்யாவை இளவரசன் மாதிரி ஒரு தலித் மணப்பதா என்று கிளம்பியவர்களுக்கும் உங்களுக்கும் கருத்தளவில் வித்தியாசம் இல்லையே?
 4. அதுவும் கேவலம்தான் என்று நினைத்தால் அடுத்த கேள்வி. ஏறக்குறைய அதே பக்கங்களில் ஊர்த் தேவடியாள்கள் இன்று யார் நம்மிடம் வருவார்கள் என்று அலுத்துக் கொள்கிறார்கள். திருச்செங்கோட்டில் தாசிகள் இருந்தார்கள், திருவிழா தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களுக்கு தொழில் நன்றாக நடக்கும் என்று பெருமாள் முருகன் எழுதி இருப்பது திருச்செங்கோட்டுக்குக் கேவலம் என்று ஏன் உங்கள் குரல் எழவில்லை? ஒருவருக்குக் கூட – ஒரு கவுண்டருக்குக் கூட, ஒரு திருச்செங்கோட்டுக்காரருக்குக் கூட, ஒரு ஹிந்துத்துவருக்குக் கூட அது ஊரைக் கேவலப்படுத்துகிறது என்று தோன்றாதது ஏன்?
 5. சரி என்னவோ தோன்றவில்லை, இப்போது நான் எடுத்துக் கொடுத்த பிறகு தோன்றிவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். ஆதாரம், தரவு வேண்டும் என்று நிறைய ஹிந்துத்துவர்கள் எழுதி இருந்தார்கள். சரி. ஊரில் தாசிகள் இருந்ததற்கும் ஆதாரம் கேட்டால் பெ. முருகன் எங்கே போவார்?
 6. நாளை பெருமாள் முருகனுக்கு பதில் ஒரு சிவன் கணபதி பதினேழாம் நூற்றாண்டில் ராசிபுரத்தின் சமூக வரலாற்றை புனைவாக எழுதுகிறேன் என்று கிளம்பி அங்கே ஓரினச்சேர்க்கை நடைபெற்றது என்று எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்து ஓரினச்சேர்க்கை (ஆண்-ஆணாக இருந்தாலும் சரி, பெண்-பெண்ணாக இருந்தாலும் சரி) பற்றி தமிழில் எந்தக் குறிப்பும் கிடையாது. சங்கத் தமிழில், இடைக்காலத் தமிழில், அம்மானைகளில், சிந்துகளில், நாட்டுப் பாடல்களில், தமிழ் நீதி நூல்களில், கல்வெட்டுகளில், தமிழ்நாட்டு கோவில் சிற்பங்களில் எங்கும் கிடையாது. தமிழ்நாட்டிலேயே இல்லாத ஓரினச்சேர்க்கை ராசிபுரத்தில் இருந்ததாக எழுதி ராசிபுரத்தை கேவலப்படுத்திவிட்டாய், ராசிபுரத்தில் பதினேழாம் நூற்றாண்டில் நடந்ததற்கு ஆதாரம் காட்டு என்றால் என்ன செய்ய?
  எத்தனையோ ஜாதி, ஊர்ப் பழக்க வழக்கங்கள் ஆவணப்படுத்தப்படுவதில்லை. எல்லா ஜாதியினருக்கும், எல்லா ஊருக்கும் ஒரு அ.கா. பெருமாள் கிடைத்துவிடுவதில்லை. அதுவும் பாலியல் உறவுகள் பற்றி சிலவற்றைத்தான் வெளிப்படையாக எழுதலாம் என்று ஒரு எழுதப்படாத விதி ஒன்று எப்போதுமே நம் சமுதாயத்தில் இருந்து வருகிறது. அதற்காக பதிவு செய்யப்படாத எந்த விஷயமும் நடக்கவில்லை என்று நினைத்துக் கொள்ள முடியுமா?
 7. தரவு தரவு என்றால் என்னதான் தரவு எதிர்பார்க்கிறீர்கள்? இது என்ன நடக்க முடியாத நிகழ்ச்சியா? வாய்மொழி வரலாறு, “சாமி கொடுத்த பிள்ளை” என்பதற்கு என்ன ரகசிய அர்த்தம் என்பதைப் பெரியவர்கள் சொன்னார்கள் என்கிறார். யார் அந்தப் பெரியவர்கள், சொல்லு சொல்லு என்றால் – கல்லூரிப் பேராசிரியர், ஹிந்துத்துவர்கள் எண்ணத்தில் (பொய் சொல்லியே) உலகமெல்லாம் பேரும் புகழும் பெற்றவர், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ஆதரவு பெற்றவர் – அவரே துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடுகிறார். சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய அரசாங்கப் பிரதிநிதிகள் (கலெக்டரா தாசில்தாரா?) கூப்பிட்டு கட்டைப் பஞ்சாயத்து செய்கிறார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது தகவல் கொடுத்த பல்லுப் போன கிழங்கள் யார் யாரென்று பெ. முருகன் அடையாளம் காட்டிவிட்டால் அந்தக் கிழங்களின் கதி என்ன? சரி அடையாளம் காட்டுகிறார் என்றே வைத்துக் கொள்வோம், அந்தப் பெரிசுகள் பயத்தில், ஜாதியினர், ஊர்க்காரர்கள் கொடுக்கும் அழுத்தத்தில் நான் அப்படி சொல்லவே இல்லை என்று மறுத்துவிட்டால் பெ. முருகன் கதி என்ன? பெ. முருகன் முன்னெச்சரிக்கையாக ஆடியோ வீடியோ எடுத்து வைத்துக் கொண்டிருந்தால் பிழைத்தார்! வெறுமனே நோட்புக்கில் கிறுக்கி வைத்துக் கொண்டிருந்தால்? தன் ஞாபக சக்தியை மட்டுமே நம்பி இருந்தால்?
 8. புனைவுக்காக பெ. முருகன் அங்கும் இங்கும் மாற்றி இருக்கலாம். 1940களில் நடந்ததாக எழுதி இருக்கிறார், அது 1920களில் நடந்திருக்கலாம். திருச்செங்கோட்டில் நடக்காமல் பக்கத்து ஊரில் நடந்திருக்கலாம். இப்படி எல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று வாதிடுபவர்கள் இன்றும் திருச்செங்கோட்டிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கூவாகம் திருவிழாவில் என்ன நடக்கிறது என்று நினைத்துப் பார்த்தீர்களா? கூவாகம் பற்றியும் கல்வெட்டு கிடையாது, இலக்கியம் கிடையாது, ஒரு பத்து இருபது வருஷமாகத்தான் வெளியேவே தெரிகிறது. இந்த இன்டர்நெட் யுகத்தில், இன்றும் உயிரோடு இருக்கும் பழக்கத்துக்கே இவ்வளவுதான் ஆவணம் என்றால் ஒரு நூறு வருஷத்த்துக்கு முன்னால் நடந்த, இன்று மறைந்துபோன ஒரு பழக்கத்துக்கு என்ன ஆதாரம் எதிர்பார்க்க முடியும்?
 9. சரி பெ. முருகன் வாய்மொழி வரலாறு, சொன்ன பெரிசுகள் இவ்விவர்கள் என்று பட்டியலே தருகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தரவுகள் திருப்திகரமாக இருக்கிறதா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பது? இதே ஃபாசிச கும்பல்தானே? தரவு கொடுத்திருந்தால் இந்தக் கும்பல் அடங்கியிருக்கும் என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற அறிவு ஜீவிகள் உண்மையிலேயே நம்புகிறார்களா இல்லை தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்களா?
 10. சரி இப்படி நடக்கவில்லை, இது முழுப்பொய், பெ. முருகன் திட்டமிட்டு பணம் வாங்கிக் கொண்டு திருச்செங்கோட்டைக் கேவலப்படுத்துகிறார் என்று ஒரு சிலர் சொல்கிறார்கள். என்ன ஆதாரம்? ஆதாரம் கேட்பவர்களுக்கு ஆதாரத்தை முன்வைக்கும் தார்மீகக் கடமை இல்லையா? ஃபோர்ட்? அறக்கட்டளை மூன்று நான்கு லட்சம் தந்தது என்றால் போதுமா? (கல்லூரிப் பேராசிரியர்களின் மாதச்சம்பளம் ஒரு லட்சத்துக்கு மேல் என்கிறார் நண்பர் ராஜன். அரை லட்சம் என்றே வைத்துக் கொண்டாலும் பெ.மு.வின் ஆறேழு மாதச் சம்பளம்தான் இது.) பூமணி கூடத்தான் அதே அறக்கட்டளையில் நிதிக்கொடை பெற்று அஞ்ஞாடி எழுதி இருக்கிறார், அதற்கு சாஹித்ய அகாடமி விருதும் கிடைத்திருக்கிறது. பூமணியைப் பற்றியும் குற்றச்சாட்டா? இப்படி இந்த நிறுவனத்திலிருந்து நிதிக்கொடை பெறுவதே ஹிந்துத்துவர்கள் கண்ணில் தேசத்துரோகம் என்றால் எப்படி ஒரு தேசத்துரோகத்தை தூண்டும் நிறுவனத்தை நாட்டில் செயல்பட விட்டிருக்கிறீர்கள்? பெ.மு. பற்றி போடும் கூச்சலை விட நூறு மடங்கு அதிகமாக அல்லவா அந்த நிறுவனத்த்தை எதிர்த்துப் போராட வேண்டும்?
  இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் அறக்கட்டளையில் எல்லா விதிகளுக்கும் உட்பட்டு நிதிக்கொடையை பெ.மு. பெற்று அது வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது தவறு என்று உங்களுக்குக்குத் தோன்றினால் அறக்கட்டளை பற்றிய சட்ட திட்டங்களை மாற்றுங்கள். பெ.மு. செய்த தவறு என்ன?
  தரவாக சொல்லப்படுவது தொண்ணூறு வயதுப் பெரியவர் ஒருவர் (ஒரே ஒருவர்தான்) இப்படி எதையும் கேள்விப்படவில்லையாம். அந்தப் பெரியவரும் community leader-ஆம். எந்தக் community முன்னின்று எதிர்க்கிறதோ, அந்தக் community-யின் பெருசு ஒருவர் சொன்னால் போதும், இது பொய் என்று நிரூபணம் ஆகிவிடுகிறது!
 11. அப்படி நடந்தது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்கள் பெ. முருகனிடமே கேட்டிருக்கலாம். அவரும் இது என் கற்பனை என்றோ இல்லை இது கேள்விப்பட்டது, இந்த இந்தப் பெருசுகள் எல்லாம் சொன்னார்கள் என்றோ, இல்லை இது கேள்விப்பட்டது, ஆனால் சொன்னவர்கள் பேரை வெளியிட முடியாது என்றோ இல்லை இந்தக் கல்வெட்டில் படித்தேன் என்றோ சொல்லி இருப்பார் என்று நம்புகிறேன். மிரட்டியதால், இந்த விளையாட்டுக்கு நான் வரலை என்று விலகிக் கொண்டிருக்கிறார். நஷ்டம் தமிழுக்குத்தான். சார்லி ஹெப்டோ மாதிரி எல்லோரும் ரிஸ்க் எடுக்க முடியாது.
 12. என் முப்பாட்டன் தன் முப்பாட்டன் சொன்னது என்று என்னிடம் சொல்வதை வரலாற்றுத் தரவு என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சமூக வரலாற்றுப் புனைவு என்பதற்கு அது போதும். என் உறவினர் ஒருவர் சொன்னது – 1967 தேர்தலில் ராஜாஜி மயிலாப்பூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் “என் பூணூலை பிடிச்சிண்டு சொல்றேன், நீங்கள்ளாம் தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுங்கோ” என்று அங்கே நிரம்பி இருந்த பிராமணர்களைக் கேட்டுக் கொண்டாராம். நாட்டுக்கே தலைவரான ராஜாஜி ஒரு ஜாதியின் தலைவராகத் தன்னை குறுக்கிக் கொண்ட நிகழ்ச்சி என்றே நான் அதைக் காண்கிறேன். அதை நான் என் பேத்திக்குச் சொல்லலாம். இன்னும் நூறு வருஷம் கழித்து ராஜாஜியைப் பற்றி ஒரு புனைவில் அந்த நிகழ்ச்சி சித்தரிக்கப்படலாம். ஆதாரம் கேட்டால் என் பேத்தி என்ன செய்வாள்?
 13. ஒரு புறம் தஸ்லிமா நஸ் ரீனுக்கும் சல்மான் ருஷ்டிக்கும், சார்லி ஹெப்டோவுக்கும் ஆதரவு. இன்னொரு பக்கம் பெ. முருகனுக்கு எதிர்ப்பு. இரண்டிற்கும் உள்ள முரண்பாட்டை எப்போது ஹிந்துத்துவர்கள் உணரப் போகிறார்கள்?

பின்குறிப்பு: இதை தமிழ் ஹிந்துவில் பிரசுரிப்பீர்களா என்று ஜடாயுவிடம் கேட்டேன். (எனக்கு கொஞ்சம் இங்கிதம் குறைவு). எதிர்பார்த்தபடியே அவர் மறுத்துவிட்டார். 🙂

தொடர்புடைய சுட்டிகள்:
இலக்கிய ஃபாசிசம் வெல்கிறது
மீண்டும் பெருமாள் முருகன்

9 thoughts on “பெருமாள் முருகன் – ஹிந்துத்துவர்களுக்கு சில கேள்விகள்

 1. அன்புள்ள ஆர்.வி.

  பெ.மு விஷயத்தில் இங்கே இரண்டு விஷயங்கள் குழப்பியடிக்கப் பட்டுள்ளன.

  1. அவருக்கெதிரான நடவடிக்கைகள். நிச்சயம் கருத்து சுதந்திரத்துக்கான கழுத்துச் சுருக்கு தான். இது பாசிசம் தான். அது நிச்சயம் நிறுத்தப் படவேண்டும். நம் சமூகத்துக்கு கருத்தை எவ்வாறு கருத்தால் எதிர்கொள்வது என்று தெரியவில்லை. ஒரு கருத்து தவறு என்றால் அதை எவ்வாறு நாகரிகமாக தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுணர்ச்சி கூட இல்லாத சமூகமாக மாரிவிட்டிருக்கிறோம்.அவரின் கருத்து தவறு என்றால், அவரிடம் ஆதாரம் கேட்க வேண்டுமென்றால் அதற்கான முறையாக நீதிமன்றம் வழியாகக் கேட்டிருக்க வேண்டும். இதுவே அவரின் ஆராய்ந்து அறிந்த, திரட்டிய தகவல்கள் அடிப்படையிலான புனைவுக்கு சரியான எதிர்வினையாக இருக்க முடியும்.திருச்செங்கொட்டு வாசிகள் அவசரப்பட்டு நிலைமையைக் கையாளத் தெரியாமல் குழப்பியடித்துவிட்டார்கள்.

  நீங்களே சொன்ன ராஜாஜி விஷயத்துக்கு வருவோம். அது புனைவாக இருக்கும் வரை அது பிரச்சனை இல்லை. ஆனால் ராஜாஜியே இவ்வளவு தான், இது தான் அவர் என்று உங்கள் பேத்தி எழுதியதை வைத்து ஒரு வராலாறு உருவாக்கப்படுமென்றால் அது தவறு தானே. அப்போது ஆதாரம் தேடி அலைந்து தானே ஆக வேண்டும். இன்று நாம் கேள்விப்படும் பெரும்பாலான வரலாறுகள் இவ்வாறு உருவாக்கப் பட்டவையே.

  2. நிதியமைப்புகளின் வழி உதவி பெறுவது: இது மிகவும் சிக்கலான பிரச்சனை. இப்போது தமிழில் புனைவாக இருக்கும் ஓர் ஆக்கம் மொழிபெயர்க்கப்படும் போது இந்த நிகழ்வுகள் தரவுகளின் அடிப்படையிலானவை என்று மாற்றம் பெறும். அப்போது இந்த மூல நூல் வரலாற்று ஆதாரமாகும். பூமணி விஷயத்திலும் எனக்கு அப்படி ஓர் அச்சம் உண்டு தான். இதுவரை திட்டவட்டமாக சைவ, சமணர் பூசலுக்கு ஆதாரங்கள் கிடையாது. இந்நாவலை முன்வைத்து நாளை அது ஓர் புறவயமான, நாட்டாரியலில் நிகழ்த்தப்பட்ட ஆய்வினடிப்படையில் கண்டடைந்த முடிவாக ஏற்றுக் கொள்ளப்படலாம். (இதெல்லாம் என் கனவாகவும், கற்பனையாகவும் மட்டுமே இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன்) உண்மையில் பெ.மு விஷயத்தில் மிக மிக நெருடலான விஷயம் இது தான். ஆனால் இது கருத்துச் சுதந்திரம் என்பதோடு குழப்பிக் கொள்ள வேண்டிய ஒன்று அல்ல. இதைத் தனியாக அணுகி தெளிவு பெற வேண்டும்.

  இங்கே பெ.மு வின் கில்லாடித்தனமான(வேறு எந்த வார்த்தையும் சிக்கவில்லை) காய் நகர்த்தல் என்பது இரண்டையும் ஒன்றாக ஆக்கி குழப்பியது தான். அதற்கு அந்த திருச்செங்கோட்டுவாதிகளும் துணை போய்விட்டனர். இனி இது வெறும் கருத்து சுதந்திரத்துக்கான அறைகூவல் என்ற ஒற்றைப் படையான நிகழ்வாகவே வரலாறில் நீடிக்கும். அதன் கீழுள்ள மற்ற பிரச்சனைகள் மூடிமறைக்கப் படும்.

  அன்புடன்,
  மகாராஜன் அருணாச்சலம்

  Like

 2. இதில் ஜெயமோகன் சொல்வதைத்தான் கேட்க வேண்டி உள்ளது. சாதாரணமாக கடந்து சென்றிருக்க வேண்டிய நாவல் இது. நான் படித்த வரையில் பெரிய இலக்கி சரக்கு கிடையாது. பிரச்சினை என்று வந்த போது, பெருமாள் முருகனின் எதிர் வினை மிக அதீதமானது. இடது சாரி இலக்கிய மாஃபியாக்கள், பெரியாரியர்கள், தலித் அரசியல் கட்சியினர் தவிர மிக நேர்த்தியான முறையில் தேசீய ஊடகங்கள், சர்வதேச ஊடகங்கள் என மிகப் பெரிய வலையமைப்பால் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப் பட்ட ஒரு தெளிவான நாடகம் இது என்று தோன்றுகிறது. இது வரை நான் கண்ட எதிர் வினைகளைப் பார்த்து எனக்குத் தோன்றியது இது. வெறும் இந்துத்துவர்களின் எதிர்ப்பு என்பது இந்தப் பிரச்சினையின் முழுத் தோற்றத்தை பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கிறது என்று தோன்றுகிறது. ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையின் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கன் செய்தியாளர் எழுதுகிறார்.. ‘தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான பெருமாள் முருகன்….. ‘. ஆக இதில் சூடு பட்டவர்கள் கவுண்டர்களும் இந்துத்துவர்களும்தான். களமாட நினைத்தவர்கள் தாங்கள் நினைத்ததை ஆடிவிட்டார்கள் என்றே படுகிறது.

  Like

  1. மகராஜன் அருணாசலம், உங்களை இந்தத் தளத்தில் சந்திப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் சொல்வது போல புத்தகத்துக்கு எதிரான போராட்டம் என்பதற்கும் (அப்படிப் போராட திருச்செங்கோட்டுக்காரர்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்று கருதுகிறேன்) பெருமாள் முருகனின் கருத்து சுதந்திரத்தை அமுக்குவதற்கும் உள்ள வேறுபாடு சின்னக் கோடுதான். அது அளவு மீறிப் போவதில் ஆச்சரியம் இல்லைதான். ஆனால் அது தவறு என்று நான்கு பேராவது கத்தாவிட்டால் அளவு மீறிப் போகிறது என்பதை நாளையாவது உணர்வதற்கு வாய்ப்பு குறைவு. ராஜாஜி விஷயம் உண்மை. அது புனைவாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை என்று நீங்கள் எழுதி இருப்பது எனக்குப் புரியவில்லை.
   நிதியமைப்புகளின் வழியாக வெளிப்படையாக உதவி என்பதில் சிக்கல் எதுவும் இல்லை என்றே நான் கருதுகிறேன். இந்திந்த காரணத்துக்காக உதவி என்று சுலபமாகத் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்போது மூளைச்சலவை முயற்சி செய்யப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிந்துவிடும்.

   பாண்டியன், // பெருமாள் முருகனின் எதிர் வினை மிக அதீதமானது // என்று எழுதி இருந்தீர்கள். பாதுகாப்பு தர வேண்டிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளே கூப்பிட்டு கட்டை பஞ்சாயத்து செய்கிறார்கள். அவர் மேல் இருக்கும் அழுத்தம் என்ன் என்று அவருக்குத்தானே தெரியும்? மாதொருபாகன் ஏமாற்றமளித்ததுதான், ஆனால் பெ.மு. தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்றே இன்னும் கருதுகிறேன்.

   Like

 3. அன்புள்ள ஆர்.வி, வரவேற்புக்கு நன்றி. உண்மையில் இந்த தளத்தை 2009 லிருந்தே பார்வையிட்டு வருகிறேன். ஒருமுறை நீங்கள் ஜெ வுக்கு விசனத்துடன் யாருக்காக எழுதுகிறோம் என்ற கடிதம் படித்தபோது எங்களைப் போன்றவர்களுக்காகத்தான் என்று ஒரு வரியாவது எழுதியிருக்க வேண்டும். என்னவென்று சொல்லவியலா ஓர் தயக்கம், என்னைக் கட்டுப்படுத்திவிட்டது. இப்போது நன்றி சொல்கிறேன்.

  பெ. மு விஷயத்தில் அவருக்குத் தரப்பட்ட அழுத்தங்கள் தவிர்க்கப் படவேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதைக் கண்டிக்கும் அதே வேளையில், மாற்றுக் கருத்தை நாகரிகமாக, முறையாக எவ்வாறு முன்வைப்பது என்பதைப் பற்றிய விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவதே இந்த பிரச்சனைகளுக்குச் சரியான தீர்வாக அமைய முடியும். நான் சொல்ல வருவது யார் சரி, யார் தவறு என்ற பார்வையில் அல்ல. கருத்துக்களையும் எதிர்கருத்துக்களையும் எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதைப் பற்றிய ஓர் குடிமையியல் பயிற்சியை. அப்படி ஓர் தேவை நம் சமூகத்தில் இருப்பது வெட்கக் கேடு தான் என்றாலும், அதை மறைக்காமல் உணர்ந்து கொள்வதால் மட்டுமே அதைக் களைய முடியும் என்பதைத் தான் சொல்கிறேன். இப்போது நடக்கும் விஷயங்களால் குறைந்தபட்சம் எதிர் கருத்துக்களை இப்படியெல்லாம் தெரிவிப்பது அநாகரிகம் என்ற விழிப்புணர்வாவது ஏற்பட்டால் நல்லது தான்.

  நீங்கள் சொன்ன ராஜாஜி விஷயம் உண்மை. ஏனென்றால் அது முழுக்க முழுக்க நீங்களே கேட்டது என்றிருக்கிறீர்கள். இதை நீங்கள் பதிந்து வைக்காமல், முற்றிலும் உங்கள் வீட்டுக்குள் மட்டும் சொல்லியிருந்து அது உங்கள் பேத்தியால் ஒரு புனைவில் பயன்படுத்தப் பட்டிருக்கும் நிலையைப் பற்றியே அக்கருத்தைப் பதிந்திருந்தேன். அப்படி ஓர் சூழ்நிலையில் அது புனைவாகவே கொள்ளப்படும். சரி தானே!!!

  Like

 4. மன்னிக்கவும். 2010 லிருந்து தொடருகிறேன். 2009 என்று அவசரத்தில் எழுதிவிட்டேன்….!!!

  Like

 5. பெ. மு நாவலின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான ஒரு பதிவின் சுட்டி கீழே….வெளியான வருடம் 2011. இந்துத்துவ அறிவுஜீவிகளின் தெளிவிற்கு….

  https://veyilaan.wordpress.com/2011/01/21/bull/

  -HmK

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.