சாஹித்ய அகாடமி விருது பற்றிய ஜெயமோகனின் ஒற்றைப் பரிமாணக் கோணம்

jeyamohanசாஹித்ய அகாடமி விருது பற்றி ஜெயமோகனுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அது “மிகச் சிறியவர்களுக்கான மிகச் சிறிய விளையாட்டு”, தான் அதை முக்கியமாகக் கருதவில்லை, வருஷாவருஷம் விருது அறிவிக்கப்படும்போது அவரது நலம் விரும்பிகள் அவரை அழைத்து “உங்களுக்கு இந்த வருஷம் கிடைச்சிரும்னு நினைச்சேன்” என்று ஆதங்கப்படுவதை தனக்கு அவமதிப்பாக உணர்கிறேன் என்று எழுதி இருக்கிறார். என் கருத்து வேறு. அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது

கலைமாமணி விருது பெற்றால் கௌரவமா? இல்லை. ஏனென்றால் அது இலக்கிய மதிப்பீட்டை சுட்டவில்லை. நீக்கப்பட்ட பெயர் பெற்ற விருது நமக்கு கிடைக்கும்போது நாம் கீழே போகிறோம். சாகித்ய அகாதமி அப்படி ஆகிவிட்டது. அதைப் பெறுவது எந்த இலக்கிய மதிப்பையும் சுட்டவில்லை. அதை பெற்றவர்களால் அது கீழே கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அதன் மூலம் உள்ள லாபம் விளம்பரம்தான். அது இன்றைய நிலையில் எனக்குத் தேவை இல்லை. ஆனால் தகுதியானவர்களுக்குத் தரப்படுவதன் மூலம் கௌரவம் மிக்க விருதுகள் உண்டு. எந்த விருதும் அதை முன்னால் பெற்றவர்கள் எவர் என்பதனால்தான் முக்கியமானது. அது உருவாகும் ஒரு வரிசையால்

என்று சொன்னார்.

அவர் சொல்வதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆம் சாஹித்ய அகாடமி விருதுகள் பல தரம் தாழ்ந்த படைப்புகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றனதான். ஒரு காலத்தில் இலக்கியம் என்று நினைத்திருக்குக் கூடிய சாத்தியக்கூறு உள்ள அலை ஓசை, அகிலனின் எழுத்து எல்லாவற்றையும் honest mistake என்று விட்டுவிட்டாலும் கோவி. மணிசேகரன் போன்றவர்களுக்கும் சாஹித்ய அகாடமி விருது, ஜெயமோகனுக்கும் சாஹித்ய அகாடமி விருது என்றால் அவர் இது எனக்கு கௌரவம்தானா என்று யோசிப்பதில் வியப்பொன்றுமில்லை.

ஆனால் யானை என்றால் துதிக்கை மட்டுமே என்ற கோணம் இது. யானைக்குத் துதிக்கை பிரதானம்தான், ஆனால் அதன் பின்னால் பெரிய உடலும் இருக்கிறது. விருதுகளின் முக்கியத்துவம் எழுத்தாளனை கௌரவப்படுத்துவது மட்டுமல்ல. எழுத்தாளனை இன்னும் ஒரு பெரிய அளவில் அறிமுகப்படுத்துவதும் கூடத்தான். என்னுடைய இலக்கிய வாசக நண்பன் மனீஷ் ஷர்மாவுக்கு ஜெயமோகனைப் பற்றித் தெரிந்திருக்க நான் மட்டுமே காரணம். டெல்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஏன் அமெரிக்காவிலும் அண்டார்க்டிகாவிலும் வாழும் பிற மனீஷ்கள் அவரைப் பற்றியும் எந்த விருதும் பெறாத புதுமைப்பித்தனைப் பற்றியும் எப்படித் தெரிந்து கொள்ள? சாஹித்ய அகாடமி விருதோ ஞானபீட விருதோ பெறாத எத்தனை பிற இந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றிய பிரக்ஞை நமக்கு இருக்கிறது?

துருக்கிய மொழியில் எழுதும் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? ஒர்ஹான் பாமுக் என்ற ஒற்றைத் துருக்கிய எழுத்தாளரைத் தவிர்த்து வேறு யாரைப் பற்றியும் தெரியாதது ஏன்? Bridge on Drina, Woman in the Dunes பற்றி நமக்கு எப்படித் தெரிய வருகிறது? அந்த நோபல் பரிசு அவர்களை கௌரவப்படுத்த மட்டுமல்ல – இப்படி ஒரு படைப்பாளி இந்த மொழியில் எழுதுகிறார், இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்துப் படியுங்கள் என்று நமக்குப் பரிந்துரைக்கவும்தான்.

சாஹித்ய அகாடமி தகுதி இல்லாத மனிதர்களால் வழிநடத்தப்படலாம். மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். நாளை கருணாநிதிக்குக் கூட விருது கொடுக்கலாம். ஆனால் பல மொழிகள் நிறைந்த இந்த நாட்டில் ஒரு மொழியின் இலக்கிய முயற்சிகளைப் பற்றி இன்னொரு மொழியினர் தெரிந்து கொள்ள சாஹித்ய அகாடமியும் ஞானபீடமும் அவசியமாகின்றன. அதை சரியான பாதையில் வழிநடத்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர அவற்றை நான் நிராகரிக்கிறேன், அவற்றுக்கு நான் மேலானவன் என்று ஜெயமோகன் சொல்வது வெறும் மேட்டிமைவாதமாகவே எனக்குத் தெரிகிறது.

மேலும் சாஹித்ய அகாடமி விருது தகுதி அற்றவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. இ.பா., கி.ரா., அழகிரிசாமி, ஜெயகாந்தன், தி.ஜா., சா. கந்தசாமி, எம்விவி, அசோகமித்ரன், பூமணி போன்றவர்கள் தகுதி அற்றவர்களா என்ன? குத்துமதிப்பாக ஒரு ஐம்பது சதவிகிதமாவது நல்ல படைப்பாளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்காதா என்ன? கன்னடத்திலும், மலையாளத்திலும், வங்காளத்திலும் இப்படி தகுதி அற்றவர்களுக்கு விருது கொடுக்கப்படுகிறது என்ற குரல் எழுவதாகத் தெரியவில்லை. தமிழின் அரசியல் சூழ்நிலை அப்படி இருக்கிறது. அதை மாற்ற வேண்டியது அவசியம். வரிசையாக ஜெயமோகன், கண்மணி குணசேகரன், ஆ. மாதவன், பிஏகே, முத்துலிங்கம், எஸ்ரா, சுப்ரபாரதிமணியன், அம்பை, பெருமாள் முருகன் என்று பத்து பேருக்குக் கொடுத்தால் பதினொன்றாவதாக குரும்பூர் குப்புசாமிக்கு கொடுப்பது கஷ்டம்.

இயல் விருது மேல் விமர்சனங்களை வைத்த ஜெயமோகனுக்கு இன்று இயல் விருது கொடுக்கப்பட்டு அவரும் ஏற்றுக் கொண்ட மாதிரி சாஹித்ய அகாடமி விருது மட்டும் நாளை உருப்பட வாய்ப்பே இல்லையா என்ன? அதற்கு இன்னும் சில நாஞ்சில்களையும், ஜோ டி க்ருஸ்களையும் கௌரவிக்க வேண்டும். ஜெயமோகன் அது எனக்கு கௌரவக் குறைச்சல் என்று சொன்னால் அது அவருக்குக் கிடைப்பது கஷ்டம். சாஹித்ய அகாடமி உருப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

குறிப்பு: நான் இந்தத் தளத்தில் politically correct ஆக இருக்க வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. ஜெயமோகன் என்னை விடவும் மோசம். 🙂 இருந்தாலும் அவர் குறிப்பிட்ட நபர் – “அவர் பெற்ற விருது எனக்கும் கொடுக்கப்படுவது எனக்கு அவமானம்” யாரென்று அவர் அனுமதி இல்லாமல் வெளியிடுவதற்கில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டி: சாஹித்ய அகாடமி விருது, தான் விமர்சித்த இயல் விருதை இன்று ஏன் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஜெயமோகன் விளக்குகிறார்.