பெருமாள் முருகன் ஏமாற்றிவிட்டார்!

perumal_muruganமாதொருபாகனை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன். பெருமாள் முருகன், கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துகளில் (பகுதி 1, 2, 3) அணுவளவும் மாற்றமில்லை என்றாலும் பெ. முருகன் இந்த நாவலில் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கூளமாதாரி, நிழல் முற்றம் வழியாக நான் அறிந்த பெ. முருகன் சிறந்த இலக்கியம் படைத்தவர். ஆர். ஷண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன், சுப்ரபாரதிமணியன், வா.மு. கோமு வரை தொடரும் கொங்குப் பகுதி எழுத்தாளர்களில் முதன்மை இரு எழுத்தாளர்களில் ஒருவர். அதுவும் நிழல் முற்றம் ஒரு க்ளாசிக்! எத்தனை இழிநிலையிலும் மானுட வாழ்வில் அர்த்தம் இல்லாமல் போய்விடுவதில்லை என்பதை அவர் உணர்த்திவிடுகிறார். அவர் காட்டும் புற உலகம் மட்டுமே நி. முற்றத்தை இலக்கியமாக்கிவிடுகிறதுதான். ஆனால் அந்தப் புற உலகத்திலிருந்து நாம் குறிப்புணரும் அக உலகம் அந்த டெண்டு கொட்டாய் இளைஞர்களைப் பற்றியதல்ல – காலம் காலமாக ஒடுக்கப்பட்டும் வாழும் உத்வேகம் அழியாத மானுடத்தைப் பற்றியது. தோழி அருணாவும் கங்கணம் நாவலை பாராட்டி இருந்தார். அவரது புத்தகப்பித்து அவர் ஒரு சஹிருதயர் என்று அடையாளம் காட்டியது.

இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரின் படைப்புக்கு எதிர்ப்பா, அவர் கருத்து சுதந்திரத்துக்குத் தடையா என்றுதான் நானும் வரிந்து கட்டிக்கொண்டு பதிவு மேல் பதிவு (பதிவு 1, 2, 3) போட்டேன். ஆனால் மாதொருபாகனைப் படித்து முடித்த பிறகு இதற்குப் போயா இத்தனை அலட்டிக் கொண்டோம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பதிவோடு நிறுத்தி இருக்கலாம்.

பலமான கதைக்கரு. ஆனால் குழந்தை இல்லை குழந்தை இல்லை என்று கணவன் மனைவி வருத்தப்படுவதும் அம்மாவும் பாட்டியும் மாமியாரும் வருத்தப்படுவதும் அடுத்த வீட்டுக்காரனும் எதிர்த்த வீட்டு பங்காளியும் குத்திக் காட்டுவதும் சில சமயம் வெளிப்படையாக ஏசுவதும்தான் பக்கம் பக்கமாக வருகிறது. திருவிழாவில் “சாமியிடம்” பிள்ளை பெற்றுக் கொள்வதைப் பற்றி கணவனுக்கு கடுமையான ஒவ்வாமை இருப்பதும் மனைவிக்கு ஏதோ விடிந்தால் சரி என்று இருப்பதும் கடைசி ஐம்பது பக்கத்தில் வருகிறது. அவ்வளவுதான் கதை. அவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைப் பற்றி புரிய வைக்க அவர்கள் வருத்தம், சமூக வம்புகள் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்பது புரிகிறது என்றாலும் கதை பூராவும் இதேதானா?

ஒரு வேளை திருவிழா பற்றி சர்ச்சை மூலம் தெரியாமல் இருந்திருந்தால் வேறு மாதிரி தோன்றி இருக்குமோ என்று யோசித்துப் பார்த்தேன். இல்லை. திருவிழா பழக்கம் பற்றி புத்தகத்தில் தெரிய வரும்போது இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். அவ்வளவுதான். திருவிழா விவரிப்பில் இருக்கும் ஓட்டைகள் அப்போதும் கண்ணில் பட்டிருக்கும். கணவனும் அவன் சிறு வயதில் போய் “அனுபவித்த” திருவிழா, ஆனால் இப்படியும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று உணர்ந்து அதிர்ச்சி அடைகிறானாம். மீண்டும் மீண்டும் வம்பு பேசும், குத்திக் காட்டும் ஊர்க்காரர்கள் யாரும் “உன் பொண்டாட்டியை பதினாலாம் நாள் திருவிழாவுக்கு அனுப்பேண்டா!” என்று சொல்வதே இல்லை. அப்போதுதானே வாசகர்கள் இப்படி ஒரு பழக்கமா என்று அதிர்ச்சி அடைய முடியும்? குத்திக் காட்டுவதால் இப்படி ஒரு முடிவெடுத்த பொன்னா 12 வருஷம் கழித்து தாயாகும்போது ஊர்க்காரர்கள் பேசாமல் இருப்பார்களா?

பெ. முருகனுக்குக் கொடுக்கப்பட்ட நிதிக்கொடை திருச்செங்கோட்டின் வரலாற்றை புனைவாக எழுதவாம். வரலாறாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. Anecdotal history என்பது கூட இல்லை. திருச்செங்கோட்டுத் திருவிழா, ஒரு வெள்ளைக்காரன் வைக்கும் போட்டி, பாவாத்தாதான் மாதொருபாகன் என்று சொல்லும் ஐயர், அறுபதாம்படி முருகன் என வெகு சிலவே இருக்கின்றன. அவற்றை folklore என்று சொல்லிக் கொள்ளலாம். நாவல் இப்போது இருக்கும் நிலையில் ஊர் எப்படி மாறியது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாது.

நாவலில் சிறப்பான விஷயங்களாக நான் கருதுவது பாவாத்தாவின் படுத்திருக்கும் மண்சிலை, மச்சானும் காளியும் தனியாக உட்கார்ந்து பேச, குடிக்க, சாப்பிடச் செல்லும் பாறைகளின்/குகைகளின் விவரிப்புதான். அறுபதாம்படி முருகன், கல்லை ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு எறிந்த நாச்சிமுத்துக் கவுண்டர், பாண்டீஸ்வரர் கோவில் என்று அவர் இன்னும் நிறைய எழுதி இருக்கலாம். இது யூகம்தான். ஆனால் “சாமி கொடுத்த பிள்ளை” என்ற சொற்றொடருக்கு ஒரு மறைபொருள் இருக்கிறது என்று கேட்டவுடன் அதை மட்டும் வைத்துக் கதை எழுத முயன்றிருக்கிறார், கதை முழுதாக உருவாவதற்குள் deadline அழுத்தத்தால் என்னத்தையோ எழுதி ஒப்பேற்றி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

நாவலைப் பாதி படித்திருந்தபோது எனக்கு என்னைப் பற்றி ஒரு விஷயம் திடீரென்று புரிந்தது. நண்பர் ராஜன் அவ்வப்போது பெருமாள் முருகனைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் நீ ஏன் ஹெ.ஜி. ரசூலைப் பற்றி எழுதுவதில்லை என்று கேட்பார். நான் பெரிய சோம்பேறி. எனக்குப் புத்தகம்தான் முக்கியம். மாதொருபாகனை முன்னாலேயே படித்திருந்தால் இதை எல்லாம் எதிர்த்து ஒரு போராட்டம், ஆதரித்து நான் எழுதத்தான் வேண்டுமா என்று ஒரு கணமாவது என் சோம்பேறித்தனம் என்னை யோசிக்க வைத்திருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதிவு எழுதி இருப்பேனோ என்னவோ. பெ. முருகன் உன்னதமான நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதுதான் நான் எழுதுவதில் பைசா பிரயோஜன்ம் இல்லை என்று தெரிந்தாலும் எனக்கு நீட்டி முழக்க ஊக்கம் தந்தது. தஸ்லிமா நஸ் ரீன் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று தெரிந்து கொள்ளாமல் லஜ்ஜா நாவலுக்காக பொங்குவது எனக்குக் கஷ்டம். என்னை யாராவது கூப்பிட்டு கருத்து கேட்டால், கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசத்தான் செய்வேன், ஆனால் அப்படி ஒரு உந்துவிசை இல்லாமல் (ஹெச்.ஜி. ரசூலின் ஃபேஸ்புக் பதிவு போல) நானாக எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டம். டாவின்சி கோட் தடை செய்யப்பட்டதைப் பற்றி என்னால் ஒரு முழுப்பதிவு எழுத முடியாது. என்றாவது டான் பிரவுனைப் பற்றி எழுதினால் அந்தப் பதிவில் இந்தப் புத்தகம் ஒரு தண்டம், ஆனால் இதைத் தடை செய்வது மஹா முட்டாள்தனம் என்று இரண்டு வரி மட்டும்தான் எழுத முடியும்.

பெருமாள் முருகன் மீண்டும் ‘உயிர்த்தெழுந்து’ ஏற்கனவே அடைந்த உச்சங்களைத் தாண்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால் இந்தப் புத்தகம் அவருக்கு சாதனை அல்ல, ஏதோ முயற்சி செய்திருக்கிறார் அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்