பாரதியின் புனைவுகள்

bharathiபாரதி என்ற கவிஞரை எடை போடுவது என்னால் ஆகாது. ஆனால் அவரது புனைவுகளைப் பற்றி விமர்சிக்க முடியும்.

பாரதியின் கவிதைகளில் ஒரு உத்வேகம் எப்போதும் இருக்கும். அவரது உரைநடையிலும் சிறப்பம்சம் இதுதான். வேகம் நிறைந்த நேரான நடை. அந்தரடிச்சான் சாஹிப், கிளிக்கதை, காக்காய் பார்லிமெண்ட், குதிரைக் கொம்பு எல்லாம் குறிப்பிட வேண்டியவை. அங்கங்கே அவரது உரைநடை கவிதையாகவே இருக்கும். ஆறில் ஒரு பங்கு சிறுகதையில் இறந்துபோன காதலி உயிருடன் இருக்கலாம் என்று நாயகன் அறியும்போது அவன் உணர்ச்சிகளை விவரிக்கும் விதம் –

ஸந்யாசி உடை தரித்து இருந்தேன். நெடுநாளாகத் துறவையே ஆதரித்து வந்திருக்கிறேன். வேஷத்திலென்னடா இருக்கிறது கோவிந்தா! வேஷத்தில் என்ன இருக்கிறது?

கவிதையேதான். வசன கவிதை (காற்று) என்று அவரே சொல்லிக் கொண்டது புதுக் கவிதையோ, கதையோ என்னவோ நானறியேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் உயர்ந்த கவிதை. எனக்கே கற்பூர வாசனையை புரிய வைக்கும் கவிதை.

அவருடைய சிறுகதைகளில் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையை ஜெயமோகன் தமிழின் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார். ஏன் சேர்த்தார் என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை.

காக்காய் பார்லிமெண்ட் கதையில் எனக்குப் பிடித்தமான ஒரு பகுதி –

காக்காய்ப் பாஷை மிகவும் சுலபம். இரண்டு மணி நேரத்திற்குள் படித்து விடலாம். ‘கா’ என்றால் ‘சோறு வேண்டும்’ என்றர்த்தம். ‘கக்கா’ என்றால் ‘என்னுடைய சோற்றில் நீ பங்குக்கு வராதே’ என்றர்த்தம். ‘காக்கா’ என்றால் ‘எனக்கு ஒரு முத்தம் தாடி கண்ணே’ என்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை. ‘காஹகா’ என்றால் ‘சண்டை போடுவோம்’ என்றர்த்தம். ‘ஹாகா’ என்றால் ‘உதைப்பேன்’ என்றர்த்தம்.

குறைகளைக் கண்டுபிடிக்க கஷ்டமே பட வேண்டாம். என்னவோ ராத்திரியில் பிள்ளைகளை தூங்க வைக்கச் சொல்லும் கதைகள் மாதிரிதான் எல்லா கதைகளும் இருக்கும். மனம் போன போக்கில் கதை எழுதப்பட்டிருக்கும். Subtlety என்பது அறவே கிடையாது.

இந்தக் குறைகள் எல்லாம் இருந்தாலும் ஞானரதம் மிகச் சிறப்பான முயற்சி. ஆங்கிலத்தின் முதல் அகராதியைப் பதித்த சாமுவேல் ஜான்சன் எழுதிய ரசேலாஸ் என்ற புத்தகத்தோடு ஒப்பிடலாம். (ஆனால் அதை விட சிறந்த புத்தகம்). இந்த பிரமாதமான புத்தகத்தை யாரும் – ஜெயமோகன் போன்ற தேர்ந்த வாசகர்களும் – பெரிதாக கண்டுகொள்வதில்லை. என் கண்ணில் அது கமலாம்பாள், பத்மாவதி சரித்திரத்தோடு ஒப்பிடக் கூடியது. முன்னோடி முயற்சி என்பதால் மட்டுமல்ல சிறந்த படைப்பு என்பதாலேயே இதை நான் பரிந்துரைக்கிறேன். இணையத்தில் கிடைக்கிறது.

முடிவடையாத கதையான் சின்னச் சங்கரன் கதை முற்றுப் பெற்றிருந்தால் நன்றாக வந்திருக்கும். வ.ரா. இது 29 30 அத்தியாயம் எழுதப்பட்டது என்றும் கையெழுத்துப் பிரதி தொலைந்துவிட்டது என்றும் எங்கோ சொல்லி இருக்கிறார்மஹாகவி பாரதியார்” என்ற புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அருமையான புத்தகம்!

சந்திரிகையின் கதை மனம் போன போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. முடித்திருந்தால் ஒரு வேளை நன்றாக வந்திருக்கலாம். வீரேசலிங்கம் பந்துலுவும் ஜி. சுப்ரமணிய ஐயரும் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். இன்று அதற்கு ஆவண முக்கியத்துவம் மட்டுமே. புதுமைப்பித்தன் இதை கோபாலையங்காரின் மனைவி என்று தொடர முயற்சித்திருக்கிறார்.

பாரதியின் பல கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கடிதங்கள் மஹாகவிபாரதியார்.இன்ஃபோ என்ற தளத்தில் படிக்கக் கிடைக்கின்றன. அதை நடத்துபவர்களுக்கு ஒரு ஜே!

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதியார் பக்கம்