மராத்தி எழுத்தாளருக்கு ஞானபீடம்

bhalchandra_nemadeமராத்திய எழுத்தாளர் பாலசந்திர நெமடே 2014க்கான ஞானபீடம் பரிசை வென்றிருக்கிறார்.

நெமடே தன் முதல் நாவலான கோசலாவை 1963-இல் எழுதினார். தனது சுயசரிதையையே புனைவாக எழுதி இருக்கிறாராம். பிறகு பிதர் (1975), ஹூல், ஜரிலா, ஜூல் (1979), ஹிந்து ஜக்ன்யாசி சம்ருத்த அட்கல் (2010) போன்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.

இதற்கு முன் சாஹித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். 2011-இல் பத்மஸ்ரீ விருது கிடைத்திருக்கிறது.

நான் நெமடே என்ற பேரையே இப்போதுதான் கேள்விப்படுகிறேன். உங்கள் யாருக்காவது ஏதாவது தெரியுமா?

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டி: நெமடே பேட்டி

ஜெயமோகன் மேல் ட்ராட்ஸ்கி மருதுக்கு என்ன கோபம்?

kaaviyath_thalaivanகாவியத்தலைவன் திரைப்படம் சொதப்பிவிட்டது, அதற்கு ஜெயமோகன் முக்கிய காரணம் என்கிறார் ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

trostky_marudhuஅவரது வார்த்தைகளில்:

இயக்குனருக்கு துணை இருக்கும் எழுத்தாளருக்கு முதலில் அந்த காலத்தின் மீது மரியாதை இருக்க வேண்டும். அந்த எழுத்தாளர் மீது பெரிய நம்பிக்கை எனக்கு கிடையாது. ஒரு பெரிய எழுத்தாளரை அழைக்க வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கு முன் காட்சிப்படுத்தி சிந்திக்கும் சக்தியுள்ள ஒருவரை நீங்கள் தேட வேண்டும். நீங்கள் தேடி காட்சிப்படுத்துவதற்கான தரவுகளை சேர்த்த பின்பே ஒரு கதாசிரியர் தேவை. மெலிதான ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு அதை ஒழுங்கு செய்ய எழுத்தாளர் தேவை. ஆனால், அப்படி வரும் எழுத்தாளர் உங்களிடம் இப்படியான குறையிருக்கிறது என்று சொல்லாமலே, தான் சம்பாதித்து போவதற்குத்தான் பார்க்கிறார். இந்த படத்தைப் பார்க்கும்போதே அது தெரிகிறது. வசனத்துக்கும் காலத்துக்கும் சம்பந்தமேயில்லை. அவர் தனித்து இயங்குகிறார்.

….
உள்ளே பேசியதை அந்த இயக்குநர் கேட்கவில்லை என்றால், வெளியே வந்து அதை பேசவேண்டுமல்லவா? அப்படியாக எழுத்தாளருக்கு நேர்மை இல்லாததும், வேறு புறம் பேசுவதுமாக இருப்பது சரியில்லைதானே!

….
எழுத்தாளர், பதினைந்து நாளிலே எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார், அவருக்கும் இதற்கும் சம்பந்தமில்லாதது போல் இயங்குகிறார்.

jeyamohanநான் தமிழ் சினிமா உலகத்தைப் பற்றிப் பெரிதாக அறிந்தவனல்ல. ஆனால் வசனகர்த்தாவுக்கு இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய ரோல் இருக்கிறதா என்ன? இயக்குனர் அல்லது ஸ்டார் நடிகர்தான் படத்தை உருவாக்குகிறார் என்றுதான் தோன்றுகிறது. அப்படி என்றால் இயக்குனர் அல்லவா தனக்கு என்ன வேண்டும் என்று தெளிவாகச் சொல்ல வேண்டும்?

காவியத்தலைவன் படத்தில் ஜெயமோகனின் திறமை வெளிப்படவில்லைதான். விமர்சனத்தில் “வசந்தபாலன் போர் வாளை பென்சில் சீவ பயன்படுத்தி இருக்கிறார்” என்று நானும் ஜெயமோகனின் பங்களிப்பைப் பற்றி சொல்லி இருந்தேன். கேட்டதை செய்து கொடுக்கும் வசனகர்த்தாவை எப்படி பொறுப்பாளி ஆக்குகிறார் என்று புரியவில்லை. அதுவும் தாக்குவதுதான் தாக்குகிறார், பெயரைக் குறிப்பிடாமல் ஏன் ஒளிய வேண்டும் என்று தெரியவில்லை.

மருதுவின் ஓவியங்கள், குறிப்பாக பின்னணி நிறங்கள் எனக்குப் பிடித்தமானவை. தமிழ் அரசர்களின் உடைகள், நகைகள் பற்றிய அவரது எண்ணங்களை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த மாதிரி பேரைச் சொல்லாமல் விமர்சிப்பது தனி மனிதத் தாக்குதலாகவே தெரிகிறது. இதை விட அதிகமான நேரடித் தன்மையை அவரிடம் எதிர்பார்த்தேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள், ஜெயமோகன் பக்கம்

2015 பத்மபூஷண், பத்மஸ்ரீ விருதுகள்

இந்த வருஷம் இலக்கியத்துக்காக விருது பெற்றவர்களைப் பற்றி கீழே. அது என்னவோ இலக்கியம் மற்றும் கல்வி என்று ஒரு category! எதற்காக இரண்டையும் கலக்கிறார்கள் என்று புரியவில்லை. பத்தாதற்கு பத்திரிகையாளர்களுக்கு இதே category-யில் விருது கொடுக்கிறார்கள். அதுவும் இந்த வருஷம் எழுத்தாளர்களை கண்டு கொள்ளவில்லை. லக்ஷ்மிநந்தன் போரா, உஷாகிரண் கான், குண்வந்த் ஷா, சுனில் ஜோகி, நாராயண புருஷோத்தம மல்லயா ஐவரைத்தான் எழுத்தாளர்கள் என்று சொல்ல முடிகிறது. அதுவும் ழான்-க்ளாட் காரியர் போன்ற திரைக்கதை எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்துக்கான விருது கொடுக்கப்பட்டிருப்பது கொடுமை. பற்றாக்குறைக்கு கல்வியாளர்கள், சமூக சேவை செய்பவர்கள் என்று தெளிவாகத் தெரியும் பலருக்கும் “Others” category-யில் விருது கொடுக்கப்பட்டிருக்கிறது.

பத்மவிபூஷண்:
ஸ்வாமி ஜகத்குரு ராமானந்தாசார்யா ஸ்வாமி ராமபத்ராசார்யா இளமையிலேயே கண்ணிழந்தவர். ஊனமுற்றவர்களுக்காகவே ஒரு பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். பல புத்தகங்களை எழுதி இருக்கிறாராம். இவருக்கு “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

பத்மபூஷண்:
ஸ்வபன் தாஸ்குப்தா பத்திரிகையாளர். அதற்கு மேல் நானறியேன். அவரது தளம் இங்கே.

ரஜத் ஷர்மா இந்தியா டிவி என்ற ஹிந்தி செய்தி சானலின் முதலாளி.

டேவிட் ஃப்ராலி Indologist. இவருக்கு “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

பத்மஸ்ரீ:
டாக்டர் பெட்டினா சாரதா பாமர் காஷ்மீர சைவத்தைப் பற்றிய முதன்மையான ஆராய்ச்சியாளராம். ஆஸ்திரியர்.

லக்ஷ்மிநந்தன் போரா நான் முன்னாலேயே கேள்விப்பட்டிருந்த ஒரே எழுத்தாளர். அஸ்ஸாமியர். அவரது கங்கா சில் நீர் பாகி நாவலைப் பற்றி ஜெயமோகன் விலாவாரியாக எழுதி இருக்கிறார்.

டாக்டர் க்யான் சதுர்வேதி அங்கத எழுத்தாளராம். மருத்துவர். அவரது சகோதரர் வேத் சதுர்வேதிக்கு இதே வருஷம் பரம விசிஷ்ட சேவா பதக்கம் கிடைத்திருக்கிறது.

ஹுவாங் பாவோஷெங் சீனர். மஹாபாரதத்தை சீன மொழிகளில் மொழிபெயர்த்த குழுவின் தலைவர். இவருக்கும் “Others” category-யில் விருது வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று புரியவில்லை.

பிபேக் தெப்ராய் பொருளாதார நிபுணராம். இவருக்கு எதற்கு இலக்கியம்-கல்விக்காக பத்மஸ்ரீ என்று புரியவில்லை. இதிகாசங்களில் ஆர்வம் கொண்டு மஹாபாரதத்தை மொழிபெயர்த்திருக்கிறாராம்.

டாக்டர் சுனில் ஜோகி ஹிந்தி கவிஞராம்.

உஷாகிரண் கான் மைதிலி மொழி எழுத்தாளர். சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்.

நாராயண புருஷோத்தம மல்லயா கொங்கணி எழுத்தாளர் போலத் தெரிகிறது. ஆனால் கேரளர் என்று பத்மஸ்ரீ அறிவிப்பில் இருக்கிறது.

லாம்பர்ட் மஸ்கரனாஸ் கோவாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்.

ராம் பஹதூர் ராய் ஜெயபிரகாஷ் நாராயணோடு களப்பணி செய்திருக்கிறார். யதாவத் என்ற பத்திரிகையின் ஆசிரியர். ஜன்சத்தாவின் ஆசிரியராக இருந்திருக்கிறார்.

ஜே.எஸ். ராஜ்புட் பேராசிரியர், கல்வியாளர்.

பிமல் ராய் Indian Statistical Institute-இல் இயக்குனராக இருக்கிறார்.

குண்வந்த் ஷா குஜராத்தி எழுத்தாளர், கல்வியாளர்.

பிரம்மதேவ் ஷர்மா, மற்றும் மனு ஷர்மா யாரென்று தெரியவில்லை.

ழான்-க்ளாட் காரியர் திரைக்கதை எழுத்தாளராம். அவருக்கு எதற்காக இலக்கியம்-கல்விக்கான விருது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

டாக்டர் நடராஜன் “ராஜ்” செட்டி ஹார்வர்ட பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கிறார்.

ஜார்ஜ் ஹார்ட் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர். அவருக்கு கல்வி-இலக்கியத்துக்கான விருது கொடுக்கப்படவில்லை, Others என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏன் என்று தெரியவில்லை.

ஆனெட் ஷ்மிட்சென் Indologist.

விருது பெற்றவர்களின் முழுப் பட்டியல் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

பெருமாள் முருகன் ஏமாற்றிவிட்டார்!

perumal_muruganமாதொருபாகனை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன். பெருமாள் முருகன், கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துகளில் (பகுதி 1, 2, 3) அணுவளவும் மாற்றமில்லை என்றாலும் பெ. முருகன் இந்த நாவலில் ஏமாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கூளமாதாரி, நிழல் முற்றம் வழியாக நான் அறிந்த பெ. முருகன் சிறந்த இலக்கியம் படைத்தவர். ஆர். ஷண்முகசுந்தரம், சி.ஆர். ரவீந்திரன், சுப்ரபாரதிமணியன், வா.மு. கோமு வரை தொடரும் கொங்குப் பகுதி எழுத்தாளர்களில் முதன்மை இரு எழுத்தாளர்களில் ஒருவர். அதுவும் நிழல் முற்றம் ஒரு க்ளாசிக்! எத்தனை இழிநிலையிலும் மானுட வாழ்வில் அர்த்தம் இல்லாமல் போய்விடுவதில்லை என்பதை அவர் உணர்த்திவிடுகிறார். அவர் காட்டும் புற உலகம் மட்டுமே நி. முற்றத்தை இலக்கியமாக்கிவிடுகிறதுதான். ஆனால் அந்தப் புற உலகத்திலிருந்து நாம் குறிப்புணரும் அக உலகம் அந்த டெண்டு கொட்டாய் இளைஞர்களைப் பற்றியதல்ல – காலம் காலமாக ஒடுக்கப்பட்டும் வாழும் உத்வேகம் அழியாத மானுடத்தைப் பற்றியது. தோழி அருணாவும் கங்கணம் நாவலை பாராட்டி இருந்தார். அவரது புத்தகப்பித்து அவர் ஒரு சஹிருதயர் என்று அடையாளம் காட்டியது.

இப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரின் படைப்புக்கு எதிர்ப்பா, அவர் கருத்து சுதந்திரத்துக்குத் தடையா என்றுதான் நானும் வரிந்து கட்டிக்கொண்டு பதிவு மேல் பதிவு (பதிவு 1, 2, 3) போட்டேன். ஆனால் மாதொருபாகனைப் படித்து முடித்த பிறகு இதற்குப் போயா இத்தனை அலட்டிக் கொண்டோம் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பதிவோடு நிறுத்தி இருக்கலாம்.

பலமான கதைக்கரு. ஆனால் குழந்தை இல்லை குழந்தை இல்லை என்று கணவன் மனைவி வருத்தப்படுவதும் அம்மாவும் பாட்டியும் மாமியாரும் வருத்தப்படுவதும் அடுத்த வீட்டுக்காரனும் எதிர்த்த வீட்டு பங்காளியும் குத்திக் காட்டுவதும் சில சமயம் வெளிப்படையாக ஏசுவதும்தான் பக்கம் பக்கமாக வருகிறது. திருவிழாவில் “சாமியிடம்” பிள்ளை பெற்றுக் கொள்வதைப் பற்றி கணவனுக்கு கடுமையான ஒவ்வாமை இருப்பதும் மனைவிக்கு ஏதோ விடிந்தால் சரி என்று இருப்பதும் கடைசி ஐம்பது பக்கத்தில் வருகிறது. அவ்வளவுதான் கதை. அவர்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தைப் பற்றி புரிய வைக்க அவர்கள் வருத்தம், சமூக வம்புகள் பற்றி மீண்டும் மீண்டும் எழுதுகிறார் என்பது புரிகிறது என்றாலும் கதை பூராவும் இதேதானா?

ஒரு வேளை திருவிழா பற்றி சர்ச்சை மூலம் தெரியாமல் இருந்திருந்தால் வேறு மாதிரி தோன்றி இருக்குமோ என்று யோசித்துப் பார்த்தேன். இல்லை. திருவிழா பழக்கம் பற்றி புத்தகத்தில் தெரிய வரும்போது இன்னும் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். அவ்வளவுதான். திருவிழா விவரிப்பில் இருக்கும் ஓட்டைகள் அப்போதும் கண்ணில் பட்டிருக்கும். கணவனும் அவன் சிறு வயதில் போய் “அனுபவித்த” திருவிழா, ஆனால் இப்படியும் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று உணர்ந்து அதிர்ச்சி அடைகிறானாம். மீண்டும் மீண்டும் வம்பு பேசும், குத்திக் காட்டும் ஊர்க்காரர்கள் யாரும் “உன் பொண்டாட்டியை பதினாலாம் நாள் திருவிழாவுக்கு அனுப்பேண்டா!” என்று சொல்வதே இல்லை. அப்போதுதானே வாசகர்கள் இப்படி ஒரு பழக்கமா என்று அதிர்ச்சி அடைய முடியும்? குத்திக் காட்டுவதால் இப்படி ஒரு முடிவெடுத்த பொன்னா 12 வருஷம் கழித்து தாயாகும்போது ஊர்க்காரர்கள் பேசாமல் இருப்பார்களா?

பெ. முருகனுக்குக் கொடுக்கப்பட்ட நிதிக்கொடை திருச்செங்கோட்டின் வரலாற்றை புனைவாக எழுதவாம். வரலாறாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. Anecdotal history என்பது கூட இல்லை. திருச்செங்கோட்டுத் திருவிழா, ஒரு வெள்ளைக்காரன் வைக்கும் போட்டி, பாவாத்தாதான் மாதொருபாகன் என்று சொல்லும் ஐயர், அறுபதாம்படி முருகன் என வெகு சிலவே இருக்கின்றன. அவற்றை folklore என்று சொல்லிக் கொள்ளலாம். நாவல் இப்போது இருக்கும் நிலையில் ஊர் எப்படி மாறியது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாது.

நாவலில் சிறப்பான விஷயங்களாக நான் கருதுவது பாவாத்தாவின் படுத்திருக்கும் மண்சிலை, மச்சானும் காளியும் தனியாக உட்கார்ந்து பேச, குடிக்க, சாப்பிடச் செல்லும் பாறைகளின்/குகைகளின் விவரிப்புதான். அறுபதாம்படி முருகன், கல்லை ஏரியின் ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு எறிந்த நாச்சிமுத்துக் கவுண்டர், பாண்டீஸ்வரர் கோவில் என்று அவர் இன்னும் நிறைய எழுதி இருக்கலாம். இது யூகம்தான். ஆனால் “சாமி கொடுத்த பிள்ளை” என்ற சொற்றொடருக்கு ஒரு மறைபொருள் இருக்கிறது என்று கேட்டவுடன் அதை மட்டும் வைத்துக் கதை எழுத முயன்றிருக்கிறார், கதை முழுதாக உருவாவதற்குள் deadline அழுத்தத்தால் என்னத்தையோ எழுதி ஒப்பேற்றி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

நாவலைப் பாதி படித்திருந்தபோது எனக்கு என்னைப் பற்றி ஒரு விஷயம் திடீரென்று புரிந்தது. நண்பர் ராஜன் அவ்வப்போது பெருமாள் முருகனைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் நீ ஏன் ஹெ.ஜி. ரசூலைப் பற்றி எழுதுவதில்லை என்று கேட்பார். நான் பெரிய சோம்பேறி. எனக்குப் புத்தகம்தான் முக்கியம். மாதொருபாகனை முன்னாலேயே படித்திருந்தால் இதை எல்லாம் எதிர்த்து ஒரு போராட்டம், ஆதரித்து நான் எழுதத்தான் வேண்டுமா என்று ஒரு கணமாவது என் சோம்பேறித்தனம் என்னை யோசிக்க வைத்திருக்கும். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பதிவு எழுதி இருப்பேனோ என்னவோ. பெ. முருகன் உன்னதமான நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதுதான் நான் எழுதுவதில் பைசா பிரயோஜன்ம் இல்லை என்று தெரிந்தாலும் எனக்கு நீட்டி முழக்க ஊக்கம் தந்தது. தஸ்லிமா நஸ் ரீன் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று தெரிந்து கொள்ளாமல் லஜ்ஜா நாவலுக்காக பொங்குவது எனக்குக் கஷ்டம். என்னை யாராவது கூப்பிட்டு கருத்து கேட்டால், கருத்து சுதந்திரம் என்றெல்லாம் பேசத்தான் செய்வேன், ஆனால் அப்படி ஒரு உந்துவிசை இல்லாமல் (ஹெச்.ஜி. ரசூலின் ஃபேஸ்புக் பதிவு போல) நானாக எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டம். டாவின்சி கோட் தடை செய்யப்பட்டதைப் பற்றி என்னால் ஒரு முழுப்பதிவு எழுத முடியாது. என்றாவது டான் பிரவுனைப் பற்றி எழுதினால் அந்தப் பதிவில் இந்தப் புத்தகம் ஒரு தண்டம், ஆனால் இதைத் தடை செய்வது மஹா முட்டாள்தனம் என்று இரண்டு வரி மட்டும்தான் எழுத முடியும்.

பெருமாள் முருகன் மீண்டும் ‘உயிர்த்தெழுந்து’ ஏற்கனவே அடைந்த உச்சங்களைத் தாண்ட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஆனால் இந்தப் புத்தகம் அவருக்கு சாதனை அல்ல, ஏதோ முயற்சி செய்திருக்கிறார் அவ்வளவுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பெருமாள் முருகன் பக்கம்

சாஹித்ய அகாடமி விருது பற்றிய ஜெயமோகனின் ஒற்றைப் பரிமாணக் கோணம்

jeyamohanசாஹித்ய அகாடமி விருது பற்றி ஜெயமோகனுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. அது “மிகச் சிறியவர்களுக்கான மிகச் சிறிய விளையாட்டு”, தான் அதை முக்கியமாகக் கருதவில்லை, வருஷாவருஷம் விருது அறிவிக்கப்படும்போது அவரது நலம் விரும்பிகள் அவரை அழைத்து “உங்களுக்கு இந்த வருஷம் கிடைச்சிரும்னு நினைச்சேன்” என்று ஆதங்கப்படுவதை தனக்கு அவமதிப்பாக உணர்கிறேன் என்று எழுதி இருக்கிறார். என் கருத்து வேறு. அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது

கலைமாமணி விருது பெற்றால் கௌரவமா? இல்லை. ஏனென்றால் அது இலக்கிய மதிப்பீட்டை சுட்டவில்லை. நீக்கப்பட்ட பெயர் பெற்ற விருது நமக்கு கிடைக்கும்போது நாம் கீழே போகிறோம். சாகித்ய அகாதமி அப்படி ஆகிவிட்டது. அதைப் பெறுவது எந்த இலக்கிய மதிப்பையும் சுட்டவில்லை. அதை பெற்றவர்களால் அது கீழே கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அதன் மூலம் உள்ள லாபம் விளம்பரம்தான். அது இன்றைய நிலையில் எனக்குத் தேவை இல்லை. ஆனால் தகுதியானவர்களுக்குத் தரப்படுவதன் மூலம் கௌரவம் மிக்க விருதுகள் உண்டு. எந்த விருதும் அதை முன்னால் பெற்றவர்கள் எவர் என்பதனால்தான் முக்கியமானது. அது உருவாகும் ஒரு வரிசையால்

என்று சொன்னார்.

அவர் சொல்வதில் எனக்கு மாற்றுக் கருத்து எதுவுமில்லை. ஆம் சாஹித்ய அகாடமி விருதுகள் பல தரம் தாழ்ந்த படைப்புகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றனதான். ஒரு காலத்தில் இலக்கியம் என்று நினைத்திருக்குக் கூடிய சாத்தியக்கூறு உள்ள அலை ஓசை, அகிலனின் எழுத்து எல்லாவற்றையும் honest mistake என்று விட்டுவிட்டாலும் கோவி. மணிசேகரன் போன்றவர்களுக்கும் சாஹித்ய அகாடமி விருது, ஜெயமோகனுக்கும் சாஹித்ய அகாடமி விருது என்றால் அவர் இது எனக்கு கௌரவம்தானா என்று யோசிப்பதில் வியப்பொன்றுமில்லை.

ஆனால் யானை என்றால் துதிக்கை மட்டுமே என்ற கோணம் இது. யானைக்குத் துதிக்கை பிரதானம்தான், ஆனால் அதன் பின்னால் பெரிய உடலும் இருக்கிறது. விருதுகளின் முக்கியத்துவம் எழுத்தாளனை கௌரவப்படுத்துவது மட்டுமல்ல. எழுத்தாளனை இன்னும் ஒரு பெரிய அளவில் அறிமுகப்படுத்துவதும் கூடத்தான். என்னுடைய இலக்கிய வாசக நண்பன் மனீஷ் ஷர்மாவுக்கு ஜெயமோகனைப் பற்றித் தெரிந்திருக்க நான் மட்டுமே காரணம். டெல்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் ஏன் அமெரிக்காவிலும் அண்டார்க்டிகாவிலும் வாழும் பிற மனீஷ்கள் அவரைப் பற்றியும் எந்த விருதும் பெறாத புதுமைப்பித்தனைப் பற்றியும் எப்படித் தெரிந்து கொள்ள? சாஹித்ய அகாடமி விருதோ ஞானபீட விருதோ பெறாத எத்தனை பிற இந்திய மொழி எழுத்தாளர்களைப் பற்றிய பிரக்ஞை நமக்கு இருக்கிறது?

துருக்கிய மொழியில் எழுதும் எத்தனை பேரை நமக்குத் தெரியும்? ஒர்ஹான் பாமுக் என்ற ஒற்றைத் துருக்கிய எழுத்தாளரைத் தவிர்த்து வேறு யாரைப் பற்றியும் தெரியாதது ஏன்? Bridge on Drina, Woman in the Dunes பற்றி நமக்கு எப்படித் தெரிய வருகிறது? அந்த நோபல் பரிசு அவர்களை கௌரவப்படுத்த மட்டுமல்ல – இப்படி ஒரு படைப்பாளி இந்த மொழியில் எழுதுகிறார், இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்துப் படியுங்கள் என்று நமக்குப் பரிந்துரைக்கவும்தான்.

சாஹித்ய அகாடமி தகுதி இல்லாத மனிதர்களால் வழிநடத்தப்படலாம். மீண்டும் மீண்டும் தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம். நாளை கருணாநிதிக்குக் கூட விருது கொடுக்கலாம். ஆனால் பல மொழிகள் நிறைந்த இந்த நாட்டில் ஒரு மொழியின் இலக்கிய முயற்சிகளைப் பற்றி இன்னொரு மொழியினர் தெரிந்து கொள்ள சாஹித்ய அகாடமியும் ஞானபீடமும் அவசியமாகின்றன. அதை சரியான பாதையில் வழிநடத்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர அவற்றை நான் நிராகரிக்கிறேன், அவற்றுக்கு நான் மேலானவன் என்று ஜெயமோகன் சொல்வது வெறும் மேட்டிமைவாதமாகவே எனக்குத் தெரிகிறது.

மேலும் சாஹித்ய அகாடமி விருது தகுதி அற்றவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது. இ.பா., கி.ரா., அழகிரிசாமி, ஜெயகாந்தன், தி.ஜா., சா. கந்தசாமி, எம்விவி, அசோகமித்ரன், பூமணி போன்றவர்கள் தகுதி அற்றவர்களா என்ன? குத்துமதிப்பாக ஒரு ஐம்பது சதவிகிதமாவது நல்ல படைப்பாளிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்காதா என்ன? கன்னடத்திலும், மலையாளத்திலும், வங்காளத்திலும் இப்படி தகுதி அற்றவர்களுக்கு விருது கொடுக்கப்படுகிறது என்ற குரல் எழுவதாகத் தெரியவில்லை. தமிழின் அரசியல் சூழ்நிலை அப்படி இருக்கிறது. அதை மாற்ற வேண்டியது அவசியம். வரிசையாக ஜெயமோகன், கண்மணி குணசேகரன், ஆ. மாதவன், பிஏகே, முத்துலிங்கம், எஸ்ரா, சுப்ரபாரதிமணியன், அம்பை, பெருமாள் முருகன் என்று பத்து பேருக்குக் கொடுத்தால் பதினொன்றாவதாக குரும்பூர் குப்புசாமிக்கு கொடுப்பது கஷ்டம்.

இயல் விருது மேல் விமர்சனங்களை வைத்த ஜெயமோகனுக்கு இன்று இயல் விருது கொடுக்கப்பட்டு அவரும் ஏற்றுக் கொண்ட மாதிரி சாஹித்ய அகாடமி விருது மட்டும் நாளை உருப்பட வாய்ப்பே இல்லையா என்ன? அதற்கு இன்னும் சில நாஞ்சில்களையும், ஜோ டி க்ருஸ்களையும் கௌரவிக்க வேண்டும். ஜெயமோகன் அது எனக்கு கௌரவக் குறைச்சல் என்று சொன்னால் அது அவருக்குக் கிடைப்பது கஷ்டம். சாஹித்ய அகாடமி உருப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

குறிப்பு: நான் இந்தத் தளத்தில் politically correct ஆக இருக்க வேண்டும் என்று முயற்சிப்பதில்லை. ஜெயமோகன் என்னை விடவும் மோசம். 🙂 இருந்தாலும் அவர் குறிப்பிட்ட நபர் – “அவர் பெற்ற விருது எனக்கும் கொடுக்கப்படுவது எனக்கு அவமானம்” யாரென்று அவர் அனுமதி இல்லாமல் வெளியிடுவதற்கில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம், விருதுகள்

தொடர்புடைய சுட்டி: சாஹித்ய அகாடமி விருது, தான் விமர்சித்த இயல் விருதை இன்று ஏன் ஏற்றுக் கொள்கிறேன் என்று ஜெயமோகன் விளக்குகிறார்.