ஜெயமோகனின் ஒரு பழைய பதிவில் இருந்து:
(ஹெச்.ஆர்.பேட்டின் திருநெல்வேலி கெஜட்டியர் புத்தகத்தில்) நாயக்கராட்சியின் இறுதியில் சந்தா சாகிபின் படைகள் நெல்லையையும் அதன் வழியாக குமரியையும் சூறையாடிய சித்திரம் ஏராளமான தகவல்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கட்டபொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை. பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையப்பட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெஃப். ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச் செல்லும் வழியில் கட்டபொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச் செல்கிறார்.
கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் தானாபதி சுப்ரமணியப் பிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவி கொண்டு கட்டபொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.
ஹெச்.ஆர்.பேட்டின் சித்தரிப்பில் நமக்குக் கிடைப்பது நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகள் எவ்விதமான நியதியுமில்லாமல் பரஸ்பரம் போரிட்டு மக்களைக் கொள்ளையடித்து அட்டூழியம் செய்த ஒரு சித்திரம். பல்வேறு நாட்டார் இலக்கியங்களும் இதை உறுதி செய்கின்றன. இந்த அராஜகநிலையை பயன்படுத்திக்கொண்டு வெள்ளையர் காலூன்றுகின்றனர். அவர்கள் உருவாக்கிய உறுதியான நிர்வாகம் மக்களிடையே பேராதரவு பெற்று அவ்வாதரவு வ.உ. சிதம்பரனார் காலத்து சுதந்திரப்போராட்டம் வரை அப்படியே நீடித்தது. நாம் அறியும் பாஞ்சாலங்குறிச்சி கதை சில சில நாட்டுப்புற வீரகதைப் பாடல்களில் இருந்து மாயாண்டி பாரதி பின்னர் ம.பொ. சிவஞான கிராமணி போன்றோரால் உருவாக்கபபட்டு சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக முன்வைக்கப்பட்ட சித்திரமாகும்.
கட்டபொம்மன் திரைப்படத்தை பார்க்காதவர் இருக்க முடியாது. இப்போது அதிலிருந்து ஒரு க்விஸ்.
1. வயலுக்கு வந்தாயா நாற்று நட்டாயா என்று வீர வசனம் பேசும் கட்டபொம்மன் ஜாக்சன் துரையிடமிருந்து தப்பி சென்ற பிறகு ஆங்கிலேயர் ஏன் அவன் மீது உடனே படை எடுக்கவில்லை?
2. அப்போது படை எடுக்காமல் சமாதானமாகப் போன ஆங்கிலேயர் ஏன் ஒரு வருஷம் கழித்து மேஜர் பானர்மன் தலைமையில் படை எடுத்தனர்?
கட்டபொம்மன் தப்பி சென்றபிறகு தூத்துக்குடி டேவிட்சன் துரை என்பவர் உதவியால் ஆங்கிலேயருடன் சமாதானமாகப் போகிறான். பழைய வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. புதிதாக வரி கட்ட கட்டபொம்மன் ஒப்புக்கொள்கிறான். அதனால்தான் ஆங்கிலேயர் அவன் மீது படை எடுக்கவில்லை. (படை எடுக்கும் நிலையில் ஆங்கிலேயர் அப்போது இல்லாமலும் இருந்திருக்கலாம், அதனால்தான் சமாதானம் என்ற பேச்சே வந்திருக்கலாம். அதே போல வரி கட்டும் காலம் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று கட்டபொம்மனும் நினைத்திருக்கலாம்.)
ஒரு வருஷம் கழித்து கட்டபொம்மனின் மந்திரி தானாபதிப் பிள்ளை யாரோ ஒருவரின் நெல் களஞ்சியத்தை தாக்கி தானியங்களை கவர்கிறார். ஆங்கிலேயர் இது எங்கள் பிரதேசத்தில் நடந்த கொள்ளை இது, அதனால் பிள்ளையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். கட்டபொம்மன் மறுக்கவே போர் மூள்கிறது.
இந்த இரண்டும் திரைப்படத்தில் இருக்கின்றன, ம.பொ.சி. போன்றவர்களும் அப்படி ஒன்றும் கட்டபொம்மன் கொள்ளை அடித்ததையோ, இல்லை சமரசம் செய்து கொண்டதையோ மறைக்கவில்லை. ஆனால் அவர் முன்னிறுத்துவது கட்டபொம்மன் விடுதலைக்காகப் போராடினான் என்ற பிம்பத்தைத்தான். ஆனால் கட்டபொம்மனுக்கு பக்கத்து எட்டயபுரம் பாளையப்பட்டே அன்னிய நாடாகத்தான் தோற்றமளித்திருக்க வேண்டும், கட்டபொம்மன் வேண்டிய விடுதலை பாஞ்சாலங்குறிச்சியின் எல்லைகளைத் தாண்டி இரண்டு மைல் போயிருந்தால் அதிகம்.
ம.பொ.சி.க்கு அந்த பிம்பம் ஏற்பட மூலகாரணம் கட்டபொம்மனைப் பற்றிய நாட்டுப்பாடல்களாக இருந்திருக்க வேண்டும். அதிகாரத்தை எதிர்த்த நாயகனின் வீர பிம்பம் அழியாத கவர்ச்சி உடையது. காத்தவராயன், மதுரை வீரன், தேசிங்கு ராஜா, கட்டபொம்மன் ஏன் ஜம்புலிங்க நாடார் வரைக்கும் கூட அது நாட்டுப்பாடல்களாக, வாய்மொழி வரலாறாக வெளிப்பட்டிருக்கிறது.
கட்டபொம்மன் வரி தர மறுத்தது, ஜாக்சனை சந்தித்தபோது ஏற்பட்ட சிறுகலகம், டேவிட்சன் உதவியால் ஏற்படும் சமாதானம், தானாபதிப் பிள்ளை கொள்ளை அடித்தது, அதனால் மூண்ட போர் என்று ஒரே நிகழ்ச்சிகளைத்தான் ஹெச்.ஆர். பேட், ம.பொ.சியின் புத்தகம், வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் ஆகிய மூன்றும் காட்டுகின்றன. – ஆனால் ஜெயமோகனுக்குக் கிடைக்கும் சித்திரம் “நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகள் எவ்விதமான நியதியுமில்லாமல் பரஸ்பரம் போரிட்டு மக்களைக் கொள்ளையடித்து அட்டூழியம் செய்வது”. ம.பொ.சி.க்கு கிடைத்த சித்திரமோ நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகளில் சில தங்கள் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள ஆங்கிலேயரோடு போரிடுவது. இரண்டு பக்கமும் உண்மை உண்டு என்று நினைக்கிறேன். ஆனால் இன்று கட்டபொம்மன் என்ற தொன்மத்தின் கவர்ச்சி, ம.பொ.சி. மற்றும் சிவாஜி கணேசன் ஏற்படுத்தி இருக்கும் பிம்பத்தின் கவர்ச்சி சுலபமாக கட்டுடைக்க முடியாதது!
தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்
தொடர்புடைய சுட்டிகள்: வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட விமர்சனம் – ஆர்வியின் விமர்சனம், விகடனில் திரைப்படம் வந்தபோது எழுதப்பட்ட விமர்சனம்