நானும் நாடகங்களும்

நண்பர் முத்துகிருஷ்ணன் மேற்குலக நாடகங்கள் பற்றி கேட்டிருந்தார். அப்போது நாடகம் பார்த்த படித்த என் அனுபவங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன், அதையே ஒரு பதிவாகவும் எழுதுகிறேன்.

எனக்கு நாடகத்தைப் பார்த்த அனுபவம் எல்லாம் சென்னை சபா வட்டங்களில் பதினேழு-பதினெட்டு வயதுக்குள் ஒரு நாலைந்து வருஷம் பார்த்தது மட்டும்தான். உறவினர்களுக்குள் நாலைந்து சபா memberships இருந்ததால் ஏதோ சில நாடகங்களைப் பார்க்க முடிந்தது. அப்போதுதான் மௌலி, ஒய்.ஜி.பி. எல்லாருக்கும் வயதாகிக் கொண்டிருந்தது. ஆனால் சோவுக்கு மவுசு இருந்தது. க்ரேசி மோகன், எஸ்.வி. சேகர் போன்றவர்களுக்கு ஏறுமுகம். நான் நாடகங்களை சீரியசாகப் படிக்க ஆரம்பித்தபோது எனக்குத் தெரிந்த நாடக உலகம் இது மட்டும்தான். வேண்டுமென்றால் ஒரு ஏழெட்டு வருஷம் கிராமங்களில் வருஷத்துக்கு ஒரு கூத்து பார்த்ததையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பதினைந்து வயதுக்கு முன் நான் படித்த தமிழ் நாடகங்களோ (பாரதிதாசனின் பிசிராந்தையார், பள்ளி ஆண்டு விழாவில் எப்போதும் நடிக்கப்படும் சி.பி. சிற்றரசின் சாக்ரடீஸ் நாடகம் (விஷக்கோப்பை), சில பல சிறுவர் நாடகங்கள்) எதுவும் எனக்கு அப்போதே தேறவில்லை. என் அப்பா ஆங்கில இலக்கியம் M.A. படித்துக் கொண்டிருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த நாடகங்களோ (பென் ஜான்சனின் Volpone the Fox, ஜான் வெப்ஸ்டரின் Duchess of Malfi) தம் கட்டித்தான் படிக்க வேண்டி இருந்தது. போரடித்தன. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலமோ அந்தக் காலத்தில் ஒத்துவரவில்லை.

நாடகத்தின் சாத்தியங்களைப் பற்றி நான் முதலில் புரிந்து கொண்டது பெர்னார்ட் ஷாவிடமிருந்துதான். ஷாவின் நாடகங்களைப் பார்க்கலாம், ஆனால் படித்தால் ஒன்றும் குறைந்துவிடாது. மேலும் நாடகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகள் எனக்கு ஓரளவு பிடிக்கும், அவற்றை படிக்கத்தான் முடியும். ஷாவிடமிருந்து இப்சன், டென்னசி வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர், பெர்டோல்ட் ப்ரெக்ட் ஆகியோரைக் கண்டடைந்தேன். அவர்களிடமிருந்துதான் ஷேக்ஸ்பியருக்கு மீண்டும் போனேன். அங்கிருந்து கிரேக்க நாடகங்களுக்குத் தாவினேன். அதற்குப் பின்னால் பலரைக் கண்டடைந்தாலும் (செகாவ், ஆஸ்கார் வைல்ட், அயனஸ்கோ, பெக்கெட், லுயிஜி பிராண்டெல்லோ…) இன்னும் ஷா, இப்சன், வில்லியம்ஸ், மில்லர், ப்ரெக்ட், ஷேக்ஸ்பியர்தான் எனக்கு முதல் வரிசையில் இருக்கிறார்கள்.

மேற்குலகமே எனக்கு நாடகத்தில் சாத்தியங்களைக் காட்டியது என்றாலும் இந்தியர்களுக்கும் நீண்ட நாடக பாரம்பரியம் இருக்கிறது. மிருச்சகடிகம் உலகின் தலை சிறந்த நாடகங்களில் ஒன்று. ஆனால் முத்ராராக்ஷசம் எல்லாம் அந்தக் காலத்தில் ஜேம்ஸ் பாண்ட் படம் பார்ப்பது போல இருந்திருக்கும். (காளிதாசனை நான் இன்னும் படிக்கவில்லை, ரொம்ப வர்ணனையாக இருக்கும் என்று ஒரு நினைப்பு) ஆனால் நடுவில் எங்கேயோ மறைகழன்று போய் மத்தவிலாசப் பிரகடனம் மாதிரி எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். (இது எல்லா ஊரிலும் நடந்திருக்கிறது. மேற்குலகில் harlequin என்று சில நூற்றாண்டுகளுக்கு முன் கழுத்தை அறுத்திருக்கிறார்கள்). அதற்குப் பிறகு பாதல் சர்க்காரும் (ஏவம் இந்த்ரஜித்) விஜய் டெண்டுல்கரும் (ஷாந்ததா! கோர்ட் சாலு ஆஹே! மற்றும் காஷிராம் கொத்வால்) கிரிஷ் கார்னாடும் (துக்ளக், நாகமண்டலா, ஹயவதனா) வந்துதான் நாடகத்தை மீட்டிருக்கிறார்கள். இது குருஜாதா அப்பாராவ் (கன்யாசுல்கம்) போன்ற முன்னோடிகளை குறைத்து மதிப்பிடுவதல்ல, கறாராக மதிப்பிடுவது.

மிருச்சகடிகத்தின் சிறந்த திரைப்பட வடிவம் – கிரிஷ் கார்னாட் இயக்கத்தில் ரேகா, சஷி கபூரி, சேகர் சுமன், நீனா குப்தா, சங்கர் நாக் நடித்த உத்சவ் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

கார்னாடின் துக்ளக் நாடகத்தை இங்கே பார்க்கலாம். (மெட்ராஸ் ப்ளேயர்ஸ் நடித்தது)

ஹிந்தி நாடகங்களைப் பற்றி பெரிதாகப் பேசுகிறார்கள் (உதாரணம் – தரம்வீர் பாரதி) ஆனால் நான் படித்ததில்லை.

தமிழில் உலகத் தரத்தில் மூன்றே பேர்தான் நாடகங்கள் எழுதி இருக்கிறார்கள். (சங்கரதாஸ் ஸ்வாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் முக்கியமான முன்னோடிகள் மட்டுமே.) சுஜாதா, சோ ராமசாமி மற்றும் இந்திரா பார்த்தசாரதி. சுஜாதா, இ.பா. முக்கியமான தமிழ் நாடக எழுத்தாளர்கள் என்றால் யாரும் பெரிதாக ஆட்சேபிக்கப் போவதில்லை, ஆனால் சோவா என்று புருவம் தூக்குபவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். சோ ஒரு கோமாளி என்ற நினைப்பு பரவலாக இருக்கிறது, அதில் உண்மையும் இருக்கிறது. சோவின் நாடகங்களைக் கெடுப்பதே அவர் தனக்கென்று உருவாக்கிக் கொள்ளும் கோமாளி பாத்திரம்தான். ஆனால் சென்னை சபா வட்டாரத்தில் அவர் நாடகங்கள் வெற்றி பெற அதுதான் முக்கியமான காரணம். அவருக்கே அந்த கோமாளி பாத்திரம்தான் தனது நாடகங்களைக் கெடுக்கிறது என்ற பிரக்ஞை இருக்கிறதா என்று சந்தேகம்தான். ஆனால் பெரிதும் கொண்டாடப்படும் அரிஸ்டோஃபனசின் தரத்தில்தான் அவர் சில நாடகங்களையாவது – உண்மையே உன் விலை என்ன, யாருக்கும் வெட்கமில்லை, முகமது பின் துக்ளக், சாத்திரம் சொன்னதில்லை – எழுதி இருக்கிறார். குறிப்பாக சாத்திரம் சொன்னதில்லை எனக்கு மிகவும் பிடித்த நாடகங்களில் ஒன்று. ந. முத்துசாமியின் நாடகங்கள் எல்லாம் (நாற்காலிக்காரன்) எனக்கு கொஞ்சம் செயற்கையாகத் தெரிகின்றன. ஒரு வேளை பார்த்தால் என் எண்ணம் மாறுமோ என்னவோ. விட்டுப்போன ஒரு பெயர் ஜெயந்தன். ஆனால் கணக்கன் போன்ற நாடகங்கள் எல்லாம் மங்கலாகத்தான் நினைவிருக்கின்றன. என்றாவது மீண்டும் படிக்க/பார்க்க முடிந்தால்தான் என் எண்ணங்கள் உறுதிப்படும்.

முஹமது பின் துக்ளக் திரைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

ஆனால் என்னதான் படித்தாலும் நாடகங்களைப் பார்த்தால்தான் நாடகம் என்றால் என்னவென்று உண்மையில் புரிந்து கொள்ள முடியும். காஷிராம் கொத்வால் நாடகத்தை (மோஹன் அகாஷே நடித்து) பார்க்கும் வரையில் எனக்கு நாடகம் என்றால் என்னவென்ற புரிதல் முழுமையாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். எஸ்.வி. சேகர் நாடகங்களைத்தான் சிறந்த நாடகங்கள் என்று நினைத்திருந்தவனுக்கு அது பெரிய கண்திறப்பு. எப்படி விளக்குவது என்றே தெரியவில்லை. காலமெல்லாம் சஹாரா பாலைவனதத்தில் தொண்டை வறட்சியோடு வளர்ந்த ஒருவனை; தொண்டை வரண்டிருக்கிறது என்ற பிரக்ஞை கூட இல்லாமல் அதுவே இயல்பு நிலை என்று உணர்ந்திருக்கும் ஒருவனை; திடீரென்று நயாகராவின் நடுவில் இறக்கிவிட்டது போன்ற கண்திறப்பு அது. இன்று வரையில் நான் பார்த்திருக்கும் வெகு சில நாடகங்களில் சிறந்தது காஷிராம் கொத்வாலே. அதைப் பின்னால் படித்தும் பார்த்தேன், சிறந்த படைப்புதான், ஆனால் நாடகத்துக்கும் புத்தகத்துக்கும் நடுவே தூரம் அதிகம்.

இந்த அனுபவம் பல முறை நிகழ்ந்திருக்கிறது. கிரிஷ் கார்னாடின் தலேதண்டா, நாகமண்டலா ஆகியவற்றையும் எனக்கு படித்தத்தை விட பார்ப்பதுத்தான் பிடித்திருந்திருந்தது. இ.பா.வின் நந்தன் கதையைப் பார்த்த பிறகுதான் என்னால் அதன் நாடக சாத்தியங்களை உணர முடிந்தது. ஒதெல்லோ நாடகம் படித்துப் பார்க்கும்போது போரடித்தது; ஆனால் ஓம்காரா என்ற திரைப்படத்தைப் பார்த்ததோ மறக்க முடியாத அனுபவம். பொதுவாக ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. Comedy of Errors-உம் அப்படித்தான். ஆனால் அதன் திரைப்பட வடிவான அங்கூர் நான் பார்த்த சிறந்த திரைப்படங்களில் ஒன்று.

காஷிராம் கொத்வால் நாடகத்தை இங்கே பார்க்கலாம்.

சினிமாவுக்கும் நாடகங்களுகும் நடுவே உள்ள எல்லைகள் மழுங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாடகங்களில் வசனமும் நடிப்பும் மகா முக்கியம். சினிமாவில் visual ஆக கதையை நகர்த்த வேண்டும், நாடகத்தில் வசனம்-நடிப்பு மூலம்தான் அதை நகர்த்த முடியும். அதனால் கொஞ்சம் மிகை நடிப்பு அவசியமாக இருக்கிறது. மேலும் சினிமாவில் இல்லாத பல constraints நாடகங்களில் உண்டு. அவற்றை எவ்வளவுக்கவ்வளவு புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்களோ அத்தனைக்கத்தனை நாடகம் சிறக்கிறது. உதாரணமாக முகமூடிகள் இந்த constraints-ஐ புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகின்றன (கமல் மாதிரி எல்லா வேஷத்தையும் தானே போட வேண்டுமென்றால் சுலபமாகச் செய்யலாம்). காஷிராம் கொத்வாலில் அரண்மனைக் கதவை காட்ட வேண்டுமா, கோரஸிலிருந்து இரண்டு பேர் கையைத் தூக்கி இணைத்துக் கொள்ள அவர்கள் நடுவே போக வேண்டும் அதுதான் கதவு. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் அமெரிக்காவைப் பொறுத்த வரை நாடகம் கொஞ்சம் பணக்காரர்களுக்கான விஷயம். வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நியூ யார்க் பிராட்வேயில் குடும்பத்தோடு ஒரு இசை நாடகம் (musical) – Once – பார்த்தோம். ஏறக்குறைய சொத்தையே எழுதி வைத்துத்தான் ஆறு டிக்கெட் வாங்க வேண்டி இருந்தது. டிக்கெட்டுக்கு கிட்டத்தட்ட நூறு டாலர் கொடுத்து கடைசி வரிசையில் உட்கார்ந்து பார்த்தோம். நாள் முழுதும் நியூ யார்க் நகரத்தில் நடந்த களைப்பில் நான் நன்றாகத் தூங்கிவிட்டேன். இடைவேளையில் எழுந்து “என்னாச்சு?” என்று விஜய் சேதுபதி ஸ்டைலில் கேட்டதை என் இரண்டு பெண்களும் இன்னும் என்னைக் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பணம் கொடுத்து நாடகம் பார்ப்பானேன், Glengarry Glen Ross, A Few Good Men எல்லாம் சினிமாவாகப் பார்த்த மாதிரி பேசாமல் சினிமாவாக வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது!

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

9 thoughts on “நானும் நாடகங்களும்

  1. தமிழில் அடுத்த தலைமுறைக்கு நாடகங்களை எடுத்துச் செல்பவர் யார்? கிரேஸி, எஸ்வி சேகர் ஆகியோருக்கு வயதாகி விட்டதே.

    Like

    1. பாண்டியன், க்ரேசி மோகனும் சேகரும் இந்தத் தலைமுறைக்கே நாடகங்களை எடுத்துச் செல்லவில்லை, இதுதான் நாடகம் என்ற ஒரு பிம்பத்தை உண்டாக்கிவிட்டார்கள் என்றுதானே இந்தப் பதிவுகளில் குறை சொல்லிக் கொண்டிருக்கிறேன்?

      Liked by 1 person

    1. பாலா, “Equus” நாடகத்தைப் பற்றி குறிப்பிடுகிறீர்களா? “Sleuth” நினைவில் இல்லை. “Hippopotamus”? “Rhinoceros” என்று சொல்ல வந்தீர்களா?

      Like

  2. பிங்குபாக்: நாடகங்கள்
  3. ஆம் ஆர்வி. உங்கள் கருத்துக்கள் எனக்கும் உடன்பாடானதே. நாடகத்துக்கான சில மிகைகள் தேவை. நாடகம் சினிமா ஆகக் கூடாது.நான் பல்லக்குதூக்கிகள், கமலா, நாகமண்டலா, சாட்சியின்மையை தோண்டியெடுத்தல், முருகபுபதியின் ஓரிரு நாடகங்கள் பார்த்திருக்கிறேன். சமீபமாக யானைகாணாமலாகிறது. சோ ஒய்ஜி கிரேசி விசு வகை சபா நாடகங்கள். கேளிக்கை அல்லது உபதேசம். சுஜாதா ஓரளவு அதே தளத்தில் இருந்து கொஞ்சம் மேலெழும்ப முயன்றார் (அப்பா ஊஞ்சல்). ஆனால நவீன நாடகங்கள் மேற்சொன்ன பார்வையார்களுக்கானது அல்ல. கொஞ்சம் எவால்வுடு பார்வையாளர்களுக்கானது. ஒவ்வொருக்கும் ஒரு பாணி இருக்கிறது. அதன் சட்டகங்களில் இருந்து பார்க்கும்போதுதான் அந்த நாடகப்பிரதிகளின் சாரமும் அவை வெளிப்பட்ட வெற்றிவிகிதமும் அறியமுடியும். ஆனால் நாடகம் உயிர்ப்பான மணித்துளிகளால் ஆனவை. அதன் வெளி தனி.

    Like

  4. இந்த பழைய பதிவு இப்போதுதான் கண்ணில் படுகிறது!

    ‘The Winslow Boy’ என்ற நாடகம் எனக்குப் பிடித்த நாடகங்களில் ஒன்று. Terence Rattigan 1946-ல் எழுதியது. (சினிமாவாக எடுத்திருக்கிறாரகள்)

    கதைக் களம் இங்கிலாந்து நாடு. 1908 வாக்கில் நடந்த ஓர்் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப் பட்டது. நம்மூரில் மிக வயதான தாத்தாக்கள் ‘இங்கிலீஷ் காரர்களை சிலாகித்துப் பேசுவதை நினைவு படுத்தும் கதை.

    Like

ரமேஷ் கல்யாண் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.