பொருளடக்கத்திற்கு தாவுக

மேற்குலக நாடகங்கள்

by மேல் ஏப்ரல் 6, 2015

நண்பர் முத்துகிருஷ்ணன் மேற்குலக நாடகங்கள் பற்றி கேட்டிருந்தார். மேற்குலக நாடகங்களின் பரிணாமம் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.

மேலை நாடகங்கள் க்ரீஸ் நாட்டிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. அப்போதெல்லாம் க்ரீஸ் நாட்டில் வருஷாவருஷம் ஒரு நாடகப்போட்டி நடக்குமாம். சோக நாடகங்களுக்கு என்று ஒரு போட்டி, சிரிப்பு நாடகங்களுக்கு என்று ஒன்று. இந்த சூழலில் நாடகங்கள் தழைத்திருக்கின்றன.

கிரேக்க நாடகங்களின் தனி அடையாளம் கோரஸ் (chorus). ஊர்க்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு. “அய்யய்யோ உனக்கு இவ்வளவு கஷ்டமா”, “என்னம்மா இப்படிப் பண்றீங்க”, “பிரச்சினை வரப் போகிறதே!” என்று சொல்லி கதையை முன் நகர்த்தும் உத்தி. முதன்முதலாகப் படித்தபோது கோரஸ் வெறும் gimmick ஆகத்தான் தெரிந்தது. ஆனால் என் இருபதுகளில் காஷிராம் கொத்வால் என்ற நாடகத்தைப் பார்த்தேன். நான் பார்த்த முதல் நாடகம் அதுதான். எஸ்.வி. சேகர் ஜோக்குகளைத் தொகுத்துப் போடுவதெல்லாம் நாடகம் இல்லை என்பது அதைப் பார்த்த பிறகுதான் புரிந்தது. கோரஸ் என்பது எத்தனை பலம் உள்ள உத்தி என்பதையும் அதைப் பார்த்துத்தான் புரிந்து கொண்டேன்.

முதல் “நாடகங்களில்” எல்லாம் இந்த கோரஸ் வந்து கதையைச் சொல்லுமாம், அவ்வளவுதான் நாடகம். நம்மூர் வில்லுப்பாட்டு மாதிரி இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெஸ்பிஸ் என்பவர்தான் முதன்முதலாக ஒரு நடிகனை உள்ளே கொண்டு வந்தாராம். இந்த நடிகன் – obviously, அவன்தான் கதாநாயகன் – கோரஸ் சேர்ந்து கதையை நடத்திச் செல்வார்களாம். Thespian என்ற ஆங்கில வார்த்தையே தெஸ்பிஸிலிருந்து உருவானதுதான். இன்று ஈஸ்கைலஸ், சோஃபோக்ளிஸ், யூரிபைடிஸ் ஆகிய மூவர் சோக நாடகங்களின் சாதனையாளர்களாகவும் அரிஸ்டோஃபனஸ் சிரிப்பு நாடகங்களின் சாதனையாளராகவும் அறியப்படுகிறார்கள்.

aeschylusஈஸ்கைலஸ்தான் மேற்குலகின் முதல் நாடக ஆசிரியராக அறியப்படுகிறார். சோக நாடகங்களைத்தான் எழுதி இருக்கிறார். கிட்டத்தட்ட நூறு நாடகங்களை எழுதி இருந்தாலும் இன்று ஏழு நாடகங்கள்தான் கிடைக்கின்றன. இன்று நடிக்க முடியுமோ என்னவோ தெரியவில்லை, ஆனால் படிக்க முடியாத போரடிக்கும் நாடகங்களைத்தான் அவர் எழுதி இருக்கிறார். அவரது Persians என்ற நாடகம்தான் இன்று கிடக்கும் மிகப் பழைய மேலை நாடகமாம். என் இருபதுகளில் நான் முதன்முதலாக இவற்றைப் படித்தபோது அந்தக் காலத்தில் எழுதப்படாவிட்டால் இவற்றை எவனு(ளு)ம் சீந்தமாட்டான்(ள்) என்றுதான் நினைத்தேன், நினைக்கிறேன். ஈஸ்கைலசின் முக்கியத்துவம் என்னவென்று பின்னாளில் அறிந்து கொண்டேன். அப்போதெல்லாம் நாடகங்களில் ஒரு நாயகன், கோரஸ் மட்டும்தான் இருக்குமாம். இவர் இன்னொரு பாத்திரத்தை கொண்டு வந்தாராம். அதாவது ஒரு protaganist, ஒரு antagonist. இன்றைய மொழியில் சொன்னால் ஹீரோ மட்டுமே நாடகத்தின் ஒரே பாத்திரமாக இருந்த காலத்தில் ஒரு வில்லனையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறார். பெரிய மாற்றம்தான், ஆனால் இன்று இதை எல்லாம் we take it for granted, இல்லையா? என்னைக் கேட்டால் இவரது நாடகங்களைத் தவிர்த்துவிடலாம்.

sophoclesஈஸ்கைலஸுக்கு அடுத்தபடி வந்தவர் ஸோஃபோக்ளிஸ். இவரும் சோக நாடகங்களைத்தான் எழுதினார். ஸோஃபோக்ளிசின் நாடகங்கள் – குறிப்பாக ஈடிபஸ் நாடகங்கள் – இன்றும் நம்மை பொட்டில் அறையக்கூடிய சக்தி உள்ளவை. இன்று பத்து நாடகங்கள் கிடைக்கின்றன. ஈடிபஸ் நாடகங்களை (Oedipus the King, Oedipus at Colonus, Antigone) படித்துப் பாருங்கள், பிடித்தால் மிச்சத்தையும் படியுங்கள். சோஃபோக்ளிஸ் கொண்டு வந்த முன்னேற்றம் – protaganist, antagonist தவிர இன்னொரு பாத்திரத்தையும் நுழைத்திருக்கிறார்.

euripidesயூரிபைடிஸ் மூன்றாமவர். எனக்கு மிகவும் பிடித்தவர் இவர்தான். ஆனால் இவரது நாடகங்கள் அன்றைய எழுதப்படாத விதிகளை மீற முயற்சிக்கின்றன. He followed the letter of those unwritten rules, but not the spirit. உதாரணமாக நாடகங்கள் எப்போதுமே க்ரேக்கத் தொன்மங்களை அடிப்படையாக வைத்துத்தான் எழுதப்பட வேண்டும் என்பது ஒரு விதி. இவரும் அப்படித்தான் எழுதினார், ஆனால் பிரபு குடும்பத்தவரை விட்டு வெளியே வந்திருப்பார். அல்செஸ்டிஸ், மீடியா இரண்டு நாடகங்களையும் பரிந்துரைக்கிறேன். யூரிபைடிஸ் நாடகங்களில் ஒரு முன்னுரை (prologue), மற்றும் கடைசியில் ஏதாவது ஒரு கடவுள் வந்து தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பது (dues ex machina) என்று இரண்டு உத்திகளைப் பார்க்கலாம்.

aristophanesஆனால் இவர்களை விட நான் ரசித்துப் படித்தது அரிஸ்டோஃபனசின் சிரிப்பு நாடகங்களைத்தான். இவை அன்றைய topical நிகழ்ச்சிகளை கலாய்க்கும் satirical நாடகங்கள். இவற்றின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான். இவற்றில் கொஞ்சம் crudity உண்டு. (ஈஸ்கைலஸ், சோஃபோக்ளிஸ் இருவரிலும் crudity-யைப் பார்க்கவே முடியாது). Lysistrata, Clouds ஆகிய நாடகங்களை பரிந்துரைக்கிறேன்.

அரிஸ்டோஃபனஸ் பல நாடகங்களில் க்ளியான் என்ற அரசியல் தலைவரைப் போட்டு தாக்கி இருப்பார். நான் என்ன கிரேக்க வரலாற்று ஆய்வாளனா க்ளியான் பற்றிய நக்கல்களை சுலபமாகப் புரிந்து கொள்ள? எனக்கு க்ளியான் பற்றி தெரிய வந்ததே இவரது நாடகங்கள் மூலம்தான். அரிஸ்டோஃபனசை நான் சோவுடன் ஒப்பிடுவேன். இந்திரா காந்தி, திராவிட இயக்கம் பற்றி தெரியாதவர்கள் முகமது பின் துக்ளக்கை எவ்வளவு ரசிப்பார்கள்? அரிஸ்டோஃபனசுக்கும் அதே பிரச்சினைதான்.

ரோமானிய நாடகங்களில் ப்ளாட்டஸ் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ஆனால் நான் படித்த ஓரிரு நாடகங்களை வைத்துப் பார்த்தால் எனக்கு அப்படி ஒன்றும் முக்கியமானவராகத் தெரியவில்லை.

பிறகு பல வருஷம் தாண்டி நேராக மொலியருக்கு வந்துவிடலாம். மொலியரே சிறந்த ஃப்ரெஞ்ச் நாடகாசிரியராகக் கருதப்பட்டாலும் எனக்கு அவரது நாடகங்கள் அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தெரியவில்லை. Tartruffe, Misanthrope, Miser ஆகிய நாடகங்கள் அவர் எழுதியதில் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

shakespeareஅப்புறம் நேராக ஷேக்ஸ்பியருக்கு வந்துவிடலாம். அவர் காலத்தில் க்ரிஸ்டோஃபர் மார்லோ, பென் ஜான்சன் எல்லாருக்கும் மார்க்கெட் இருந்தாலும் இன்று அவர்கள் எல்லாம் மறக்கப்பட்டவர்கள்தான். இடைக்கால ஆங்கில நாடக ஆசிரியர்களில் ஷெரிடன் (School for Scandal), ஆஸ்கார் வைல்ட் (Importance of Being Earnest) மட்டும்தான் எனக்குக் குறிப்பிட வேண்டியவர்களாகத் தெரிகிறார்கள். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கூட நாடகங்கள் பெரிதாக சிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். செகாவ் மட்டுமே விதிவிலக்கு. மற்றவர்களில் எட்மண்ட் ரோஸ்டாண்ட் எழுதிய சைரனோவை விட்டால் வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. நாடகங்கள் தேக்கம் அடைந்திருந்தன.

ibsenஇந்த நிலையை மாற்றியவர் இப்சன். இப்சனின் A Doll’s House-இன் லெவலே வேறாக இருந்தது. எனக்கு ஸ்ரிண்ட்பெர்கை அவ்வளவாகப் பிடிக்காது என்றாலும் அவரும் நாடகத்தை அதன் melodrama வணிகப் பாணியிலிருந்து மாற்றியவர் என்று கருதப்படுகிறார். காலவரிசைப்படி அடுத்ததாக பெர்னார்ட் ஷா. ஷாவின் நாடகங்கள் புத்திசாலித்தனமானவை. Paradox-ஐ அவரை விட சிறப்பாக யாரும் பயன்படுத்தியதில்லை. அவரது பல நாடகங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்றாவது விரிவாக எழுத வேண்டும். இருபதாம் நூற்றாண்டில் யூஜீன் ஓ’நீல், பிராண்டெல்லோ, டென்னசி வில்லியம்ஸ், ஆர்தர் மில்லர், சாமுவெல் பெக்கெட், யூஜீன் அயனெஸ்கோ என்று பலர் குறிப்பிட வேண்டியவர்கள். சமகாலத்தவர்களில் டேவிட் மாமெட்டையும் ஆரன் சார்கினையும் நண்பர் பாலாஜி பரிந்துரைக்கிறார்.

ஒரு காலத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியவையே வணிக நாடகங்களாகத்தான் கருதப்பட்டிருக்கும். இப்சனுக்குப் பிறகுதான் வணிக நாடகம், இலக்கிய நாடகம் என்ற பிரிவு தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். வணிக நாடகங்களில் எஸ்.வி. சேகர் டைப் ஜோக் தோரணங்களும் உண்டு. இசை நாடகங்களும் இவற்றில் அடக்கம். குறிப்பாக அமெரிக்காவின் ப்ராட்வேயில் நீண்ட “வணிக நாடக” பாரம்பரியம் உண்டு. ஆனால் அவற்றுக்குள்ளும் புத்திசாலித்தனமான நாடகங்களுக்கு உதாரணமாக Arsenic and Old Lace, You Can’t Take It with You போன்றவற்றை சொல்லலாம். இந்த genre-இல் முக்கியமானவர்கள் என்று இந்த நிமிடத்தில் தோன்றுவது பீட்டர் பானை எழுதிய ஜே.எம். பாரி, நோயல் கவர்ட், ஜார்ஜ் எஸ். காஃப்மன், நீல் சைமன். இசை நாடகங்களுக்கு கில்பர்ட்-சல்லிவன் எழுதிய “Pirates of Penzance”, Mikado, போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். பல இசை நாடகங்கள் திரைப்படமாக நமக்கு முதலில் அறிமுகம் ஆகிவிடுகின்றன – Sound of Music இத்யாதி.

இன்று சினிமாவின் வளர்ச்சியால் நாடகங்களுக்கும் சினிமாவுக்கும் உள்ள எல்லைக் கோடுகள் மங்க ஆரம்பித்திருக்கின்றன. அதைப் பற்றி இன்னொரு சமயம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

From → Plays

One Comment
  1. excellent.keep it up. bala

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: