அஞ்சலி – ஜெயகாந்தனின் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”

ஜெயகாந்தன் மறைந்தார் என்று கேட்டதும் மனதில் முதலில் தோன்றிய எண்ணம் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” எழுதிய சிங்கம் மறைந்துவிட்டார் என்பதுதான். இப்போதிருக்கும் “அடடா! போயிட்டாரே!” மனநிலையில் ஜெயகாந்தனின் நூல்கள், தாக்கம் பற்றி எல்லாம் எழுதுவதற்கில்லை. இப்போதைக்கு ஒ.ம.ஒ.வீ.ஒ. உலகம் பதிவை அவர் நினைவாக மீண்டும் பதிக்கிறேன்.


இந்த புத்தகம் எனக்கு பொய்த்தேவுவை நினைவுபடுத்துகிறது. ஏனென்று விளக்க முடியவில்லை, ஆனால் படித்ததும் நிறைவாக இருந்தது.

ஜெயகாந்தனின் புத்தகங்களில் இது பெரிதும் கொண்டாடப்படுவது. சில நேரங்களில் சில மனிதர்களை விட பாராட்டப்படுவது. நான் சமீபத்தில்தான் படித்தேன். சிறு வயதில் படித்திருந்தால் கதை, கதைப் பின்னல் (plot) என்று ஒன்றும் இல்லாததுதான் தெரிந்திருக்கும். ஒண்ணுமே நடக்கலியே என்றுதான் சொல்லி இருப்பேன். இப்போது ஹென்றி என்ற கதாபாத்திரம் தெரிகிறது, பாசம், பந்தம் எல்லாம் இருந்தும், இறந்து போன தன அப்பாவின் உறவினர்களை தேடிக்கொண்டு அவன் வந்தபோதும் அவன் ஒரு துறவி என்பது தெரிகிறது. துறவியை மதிப்பது என்பது நம் ரத்தத்திலேயே ஊறிவிட்டதோ?

என்ன கதை? ஹென்றியின் அப்பா பச்சைத் தமிழர். அவர் அவரது கிராமத்திலிருந்து ஓடி விடுகிறார். அவருடைய தத்துப் பிள்ளை வெள்ளைக்கார ரத்தம் ஓடும் ஹென்றி. அப்பா இறந்தபிறகு அவரது பூர்வீக கிராமத்துக்கு ஹென்றி தன் “வேர்களைத்” தேடி வருகிறான். அங்கே அவனுக்கு தேவராஜுடன் நட்பு ஏற்படுகிறது. தன் “சித்தப்பாவை” சந்திக்கிறான். பாகப்பிரிவினை நடக்கிறது. வீட்டை புதுப்பிக்கிறான். விலகி இருக்கும் தேவராஜின் மனைவி மீண்டும் ஒன்று சேர்கிறாள். சம்பந்தமே இல்லாமல் கொஞ்சம் பைத்தியமான ஒரு பெண் கதையில் வந்து போகிறாள். மணியக்காரர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார். என்னவெல்லாமோ நடக்கிறது. நடப்பது எதுவும் முக்கியமில்லை.

அந்த பாகப்பிரிவினை சீன் உன்னதமானது. ஹென்றியின் அப்பாவின் சொத்துகளை அவனது சித்தப்பாதான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இப்போது வாரிசுதாரர் வந்தாயிற்று. ஊர் பெரிய மனிதர்கள் எல்லாம் இத்தனை நாள் எல்லாவற்றையும் கட்டி காப்பற்றிய சித்தப்பாவுக்கு இருக்கும் உரிமைகளைப் பற்றி யோசிக்கிறார்கள். சித்தப்பாவுக்கு அது ஒரு பொருட்டே இல்லை. ஹென்றிக்கோ தன்னை சொத்துக்கு உரியவன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம், சொத்து இல்லை.

யோசித்துப் பார்த்தால் ஜெயகாந்தனின் லட்சியவாதம், மனிதர்கள் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இதில் வெளிப்படுகிறது. புத்தகம் விவரிக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது ஒரு மன எழுச்சி ஏற்படுகிறது. இப்படியும் வாழ முடியும், வாழ்க்கை என்பது வெறும் பிரச்சினைகளால் ஆனதில்லை, தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னச் சிறுகதைகள் பேசி வாழ்வதில்லை, உயர்ந்த எண்ணங்களுக்கு அதில் இடம் இருக்கிறது என்ற விழிப்புணர்வு ஏற்படுகிறது. அதுதான் இந்தப் புத்தகத்தின் பலம்.

1973-இல் பதிக்கப்பட்ட புத்தகம்.

ஜெயமோகன் சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இந்த நாவலை சேர்க்கிறார். மரபின் சாராம்சமான உள்வலிமையை தனக்குள் வாங்கிக் கொண்ட முற்போக்குப் படைப்புகளை உருவாக்கிய படைப்பாளிகளில் ஜெயகாந்தன் முக்கியமானவர் என்றும் அப்படி அவர் எழுதிய படைப்புகளில் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் முதன்மையான படைப்பு என்றும் அவர் சொல்கிறார். மேலும் அவரது வார்த்தைகளில்

மதமற்ற துறவு என்ற ஓர் இலட்சிய நிலை நோக்கி ஹென்றி எனும் வெள்ளையக் கதாபாத்திரத்தை ஏவுகிறார் ஜெயகாந்தன்….
தன் படைப்பியக்கம் மூலம் ஜெயகாந்தன் எப்போதுமே தேடிவந்த இலட்சியப் புரட்சியாளனின் சித்திரம் முழுமைபெறும் நாவல் இது. அனைத்திலும் குழந்தைத்தனமான குதூகலத்துடன் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு ஈடுபடும் ஹென்றி அவை எதிலும் ஈடுபடாமல் விலகியிருக்கும் ஆழம் ஒன்றையும் கொண்டிருப்பதை சகஜமாக கூறிச்செல்கிறது இப்படைப்பு. கர்மத்துக்கும் மோட்சத்துக்கும் பூரண ஒத்திசைவு கூடிய ஓர் புள்ளியில் அமர்ந்திருக்கிறான் ஹென்றி.

எஸ்.ரா.வும் நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் இதை சேர்க்கிறார்.

பிற்சேர்க்கை: ஜெயகாந்தன் இந்த நாவல் பற்றி திண்ணை தளத்தில் அளித்த பேட்டியில் சொன்னது:

முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது. ஆனால் எழுதத் தொடங்கியவுடன், அதை விடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான் என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத்தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வதுதான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான்தான் ஹென்றி என்று உணர்வு கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி, எப்படி எழுதுவது என்று முடிவாகவில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது. முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவதுதான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக்காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்துவிட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது: இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி – மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி, பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

 • ஜெயகாந்தனைப் பற்றி ஜெயமோகன் – பகுதி 1, பகுதி 2
 • ஜெயகாந்தனின் திண்ணை பேட்டி
 • பொய்த்தேவு
 • ஜெயகாந்தனின் ஜயஜய சங்கர – பகுதி 1 , பகுதி 2, ஈஸ்வர அல்லா தேரோ நாம்
 • சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் பற்றி பக்ஸ், ஆர்வி, சாரதா
 • ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவல் பற்றி ஆர்வி, திரைப்படம் – சாரதா விமர்சனம்
 • ஜெயகாந்தனின் “தர்க்கத்துக்கு அப்பால்” சிறுகதையும் என் புலம்பலும்
 • ஜெயகாந்தனின் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” சிறுகதை, சி.சு. செல்லப்பாவின் “வாழ்க்கை” சிறுகதை, பிதாமகன் திரைப்படம் ஆகியவற்றில் ஒரே அடிப்படைக் கருத்து
 • 20 thoughts on “அஞ்சலி – ஜெயகாந்தனின் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்”

  1. ஜெயகாந்தன் எழுத்துக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை இதுதான்.

   நான் ஸ்கூல் படிக்கும் போது வரும் இறுதி பரீட்சை கால விடுமுறை காலங்களில் முதலில் படிக்கும் புத்தகம் இதுவாகத்தான் நிறைய தடவை இருந்து இருக்கிறது.

   அதுவும் அந்த கிராமம், ஹென்றி பிள்ளை மறக்க முடியாதது.

   அதிலும், ஹென்றி பிள்ளையும் அவருடைய நண்பனும் (தேவு என்று நினைக்கிறன், பெயர் சரியாக நினைவில் இல்லை) ஆற்றில் குளிக்கும் போது, சோப்பு கைதவறி ஆற்றில் விழுந்து விடும். அப்போது அவர்கள் இருவரும் சோப்பு எங்கே ? என்று பார்த்து விட்டு , பின்பு
   சோப்பெங்கப்பா ? சோப்பெங்கப்பா ?
   என்று ஒரு ஆட்டம் போடுவார்கள். மறக்க முடியாத சீன் அது.

   மேலும் ஆனந்த விகடனில் வெளி வந்த அந்த கதை, அப்படியே எடுத்து BIND பண்ணி புக் வடிவில் எங்களிடம் உள்ளது.

   ஓவியம் கோபுலு என்று நினைக்கிறன்.

   அதுவும் ஹென்றியுன் படம் சற்று நீளமான மூக்குடன் வித்தியாசமாக இருக்கும்.

   இதை எழுதும் போதே மீண்டும் ஒரு முறை படிக்க தோன்றுகிறது.

   நினைவு படுத்திய RV-க்கு நன்றி.

   Like

   1. விமல், நீங்கள் சொல்வது போல சோப்பெங்கப்பா ஒரு நல்ல காட்சி. கோபுலுவின் படங்களோடு ஒரு பதிப்பு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

    Like

  2. SOCIALOGIST களுக்கு ஜெயகாந்தன் நாவல்களில் சில பயனுள்ள தகவல்கள் கிடைக்கும்.தமிழ்நாட்டில் எல்லா சாதியிலும் உள்ள தீவிர வைணவர்களை பற்றி (இவர்கள் நாராயணனை தவிர வேறு தெய்வங்களை வணங்காத ராமானுஜ தாசர்கள்)இந்த நாவலில் குறிப்பிட்டு இருப்பார். இதில் வரும் வாத்தியார் தேவராஜன் அந்த மாதிரி பிரிவை சேர்ந்தவன் என்று சொல்லும்போது, வாசகனுக்கு அதைப்பற்றி தெரிந்து கொள்ள மேலும் ஆவல் உண்டாகும்.ஹென்றியின் சித்தப்பன் துரைக்கண்ணு குணங்குடி மஸ்தான் பாடல்களை பாடியதை பார்த்து தான் நான் குணங்குடியாரின் பாடல்களை தேடிபிடித்து படித்தேன்.

   Like

  3. “சம்பந்தமே இல்லாமல் கொஞ்சம் பைத்தியமான ஒரு பெண் கதையில் வந்து போகிறாள்”

   மறு வாசிப்பில் இது புலப்பட நேரிடலாம். அறிமுகத்திற்கு நன்றி!

   Like

  4. ஆர். வி.

   இப்போ தான் படித்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. நீங்கள் சொன்னதை போல் பாகப்பிரிவினை தான் நாவலின் உச்சம்.

   Like

  5. அது என்னவோ தெரியவில்லை. எனக்கு இந்த ஒ.வீ.ஒ.உ – வசீகரமாக இல்லை. இதைப் பற்றிய பாராட்டுரைகளைப் படித்தபின் அதிக எதிர் பார்ப்புடன் போனதாலோ என்னவோ எனக்கு அப்படி தோன்றியது. இலக்கண ரீதியாக ‘ஓர்’ என்றில்லாமல் ‘ஒரு உலகம்’ என்பதே சற்று ஆர்வத்தை அதிகப் படுத்தியது.(இப்படித்தான் பால குமாரனின் இரும்பு(க்)குதிரைக்கும் போனேன் ) ஹென்றி பாத்திரத்தை இன்றைக்கு படிக்கையில் நன்றாக இருக்கிறது. ஆனால் பெரிதாகப் பேசப் படும் அளவிற்கு இல்லை அல்லது பேசப்பட்ட அளவிற்கு பெரிதாக இல்லை. எனக்கு பிடித்த விஷயமே அந்த கதையில் வந்து போகும் மனப்பிறழ்வுள்ள அந்தப் பெண்தான். நிர்வாணத்திலும் அவனிடம் அன்பு பெற வந்த அவள் அவனுடைய தாயின் குறிப்போ என்று தோன்றியது.

   Like

   1. ரமேஷ் கல்யாண், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்ததாலோ என்னவோ ஒ.வீ. ஒ.உ. ஒ.ம. எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    Like

  6. ஜெயகாந்தனின் மற்ற கதைகளை படித்திருந்தாலும், இது அவைகலை விட சிறப்பானது என்றே தோன்றுகின்றது. காரணம் இதில் காட்டப்படும் உலகம். எல்லாரும் நல்லவர்கள். எனக்கு புத்தகங்களை அறிமுகம் செய்தவர் எனது மாமா. பூந்தளிர், கோகுலம்த்தில் ஆரம்பித்து கிரைம் நாவல், பாரதம் என பலவும் எனக்கு படிக்க தந்தவர். ஆனால் அவருக்கு ஜெயகாந்தனை பிடிக்காது. காரணம் அவர் ஒரு பிராமணதுவேஷி, பிராமணர்களைப் பற்றி தவறாக எழுதுபவர் என்று கூறுவார். என் அலுவலகத்தில் வேலைபார்க்கும் பெண்ணின் தந்தை ஒரு பழைய புத்தக வியாபாரி. அவரும் பிராமணர்தான், அந்த பெண்தான் இந்த புத்தகத்தை தந்தாள். அவள் கூறியது, தந்தது என் தாயார், அவருக்கும் ஜெயகாந்தனை பிடிக்காது, ஆனாலும் இது நல்ல புத்தகம் என்று கூறினார் என்றாள். அதே போல் எனது பக்கத்து வீட்டில் ஒரு பெண், அவரும் இதை என் கையில் கண்டவுடன், உடனே பறித்து கொண்டு போய்விட்டார். அதைக் கண்டவுடன் அவரிடம் தோன்றிய மகிழ்ச்சி, ஏதோ புதையலை கண்டவர் போல்

   இது வழக்கமான ஜெயகாந்தன் கதைகள் போலில்லாமல், முழுக்க முழுக்க நல்ல மனிதர்களை காட்டும் தளம். அக்கம்மா, துரைக்கண்ணு, அந்த க்ளீனர் பையன். கதையின் உச்சம் அந்த பஞ்சாயத்துதான். மனிதர்கள் அனைவரும் இக்கதையில் வருபவர்கள் போல் இருக்க வேண்டாம், ஒரு குறைந்த பட்ச நியாய உணர்வு இருந்தால் கூட போதும்.

   அந்த பெண்ணைப் பற்றி கதையிலேயே வரும். அந்த ஆசிரியர் ஹென்றியையும் அந்த பெண்ணையும் ஒப்பிடும் காட்சி.

   கோபுலுவின் படங்களுடன் உள்ள பைண்டிங் செய்யப்பட்ட பிரதிதான் நான் படித்தது. கூர்மையான மூக்கு எனக்கு துப்பறியும் சாம்புவைத்தான் நினைவுபடுத்தியது.

   Like

   1. ரெங்கசுப்பிரமணி,

    ஒரு மனிதன் ஒ. வீ. ஒ. உ. ஒரு உன்னதமான படைப்பு. நல்ல மனிதர்களே வரும் பிற நாவல்களும் உண்டு – நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள் (வெங்கு மாமாவை நான் கெட்டவராகக் கருதவில்லை), ஜயஜய சங்கர இத்யாதி. ஆனாலும் இது தனித்தே நிற்கிறது.

    Like

  7. You are honest enough to confine your obituary remarks within the walls of one single novel of the writer. On your part, such confinement is somewhat correct too. Because, one should have read at least more than 50 % of his oeuvre to write about him upon his death as a literary personality. I haven’t read the novel. But I haven’t heard anyone rating this novel over and above his other novels. But some say (Muthunilavan) his fame rests more on his short stories than his novels. I have very little time to squeeze in novel reading. I read only one novel, for the plain reason that the book is thin enough to squeeze into my timelines: Cinemaavukku Pona Sithaalu and a short story: Guru Peedam now because his fans unfailingly mention it as his masterpiece along with other one: agnipravesham. The novel is never spoken of by them. I reserve my comments on both. I wait for an obituary proper in your blog. Nevertheless, one comment is worth putting in now:

   Now that he is dead, his writings in all genres – novel, short stories and political and social essays – will be wrangled out of the hands of his fans and will be judged without fanfare. Jeyakanthan awaits his fair minded critics.

   Like

  மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.