சுஜாதா இலக்கியவாதி இல்லையா?

sujathaயார் சொன்னது? ஜெயமோகன்தான். அவரது சமீபத்திய பதிவு ஒன்றில் சொல்கிறார்:

சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல

மனிதர் நாலு வரி எழுதிவிட்டார். அதைப் படித்ததும் எங்கேயோ எனக்கு இடித்தது, ஆனால் சரியாகவும் இருந்தது. எங்கே, என்ன என்று துல்லியமாக கண்டடைய நாலு நாள் ஆகிவிட்டது. 🙂

  1. சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. – சரிதான். சுஜாதா என்னதான் இலக்கியம் படைத்திருந்தாலும், இலக்கியத்தின் பெரிய ரசிகராக இருந்தாலும் அவர் தீவிர இலக்கியத்தின் சின்னம் அல்லர். கமலஹாசன் கலைப்படங்களின் சாயல் உள்ள சில படங்களில் நடித்திருக்கிறார், ஆனால் கமல் கலைப்படங்களின் சின்னம் அல்லர். அது போலத்தான்.
  2. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார்– சரிதான். அவருடைய மொத்த அவுட்புட்டில் நல்ல சிறுகதைகள், நாவல்களை விட வணிக எழுத்துக்களின் சதவிகிதம் மிக அதிகம்.
  3. நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. – இது அவரை குறைத்து மதிப்பிடுவது. “முக்கிய பங்களிப்பு” என்றாவது எழுதி இருக்க வேண்டும். சுஜாதாவின் உரைநடையின் பாதிப்பு இல்லாத தமிழ் எழுத்தாளன் இல்லை என்று ஜெயமோகனே எங்கோ குறிப்பிட்டிருக்கிறார்.
  4. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கிய வாசகனும் அல்ல. – இடிப்பது இந்த வரிதான். ஜெயமோகன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவருடைய கருத்து எனக்கு இசைவானது அல்ல. சுஜாதா இலக்கியவாதியே என்று சுமார் நாலு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெரிய பதிவே – சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும் – எழுதி இருக்கிறேன். அதை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் இப்படி ஜெயமோகன் கொளுத்திப் போட்ட சில வரிகள்தான் –

    இலக்கியவாதி என்பதைக் காட்டிலும் வணிக எழுத்தாளர்தான். உங்கள் தேவை சுவாரசியம் என்பதல்லாமல் ஆன்ம பரிசோதனையோ, அறிவார்ந்த தேடலோ, உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப் படமாட்டார். சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத் தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்

ஜெயமோகன் முன்வைக்கக் கூடிய ஒவ்வொரு tangible வாதத்துக்கும் என்னால் எதிர்வாதம் புரிய முடியும். இலக்கியவாதி என்பதை எப்படி நிர்ணயிப்பது? எத்தனை கதைகள் இலக்கியம் என்பதை வைத்தா? வேறுவேறு களங்களை நம் முன் கொண்டு வரவேண்டுமா? வணிகப் பத்திரிகைகளில் எழுதி இருக்கக் கூடாதா? கிருஷ்ணன் நம்பிக்கு பத்து சிறுகதைகள் இலக்கியம் என்று தேறினால் அதிகம். லா.ச.ரா. ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதினார். அசோகமித்திரன் கூட குமுதத்தில் எழுதி இருக்கிறார். வளர்த்துவானேன்? சுஜாதாவின் குறை என்று சொல்லப்படும் எதுவும் இலக்கியவாதி என்று ஜெயமோகனே அங்கீகரிக்கும் இன்னொரு இலக்கியவாதியிடம் இருக்கத்தான் செய்கிறது.

jeyamohanஜெயமோகனின் இலக்கிய விமர்சனங்கள் பொதுவாக எனக்கு இசைவுடையவை. சில விஷயங்களில் மட்டுமே மாறுபடுகிறேன். சுஜாதாவின் இலக்கிய இடம் அதில் ஒன்று. சுஜாதா தமிழின் முதன்மையான இலக்கியவாதி என்றோ, புதுமைப்பித்தனுக்கு சமமான மேதை என்றோ, ஜெயகாந்தனுக்கு இணையான சாதனையாளர் என்றோ நான் கருதவில்லை. என் பெரிய பதிவில் எழுதியதை paraphrase செய்கிறேன் – சுஜாதாவின் தாக்கம், முன்னோடி முயற்சிகள் (அறிவியல் புனைவுகள், அறிவியல் அறிமுகம், தரமான சாகசக் கதைகள்) எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நான் சுஜாதாவை தமிழ் இலக்கியவாதிகளின் இரண்டாம் வரிசையில்தான் வைப்பேன். ஆனால் முதல் வரிசையில் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து இருபது பேர் இருந்தால் அதிகம். ஜெயமோகனுக்கு இரண்டாம் வரிசை என்று ஒன்று இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

ஜெயமோகனின் தீர்ப்பு subjective ஆனது. அதனால்தான் சுஜாதா இலக்கியம் படைத்திருந்தாலும் அவர் இலக்கியவாதி என்று கருதத் தேவையான அளவில், சதவிகிதத்தில் – முக்கியமாக தரத்தில் – இலக்கியம் படைக்கவில்லை என்று தீர்ப்பளிக்கிறார். இதில் விவாதிக்க ஒன்றுமில்லை, தர நிர்ணய அளவுகள் மாறுபடுகின்றன அவ்வளவுதான்.

பின்குறிப்பு: பாலகுமாரன் இலக்கியம் படைத்திருந்தாலும் அவர் இலக்கியவாதி என்று கருதத் தேவையான அளவில், சதவிகிதத்தில் – முக்கியமாக தரத்தில் – இலக்கியம் படைக்கவில்லை என்பது என்னுடைய உறுதியான கருத்து. நான் சுஜாதா பற்றி உணர்வது போலவே சில வாசகர்கள் பாலகுமாரனைப் பற்றி நினைக்கலாம். 🙂 பாலகுமாரனின் எழுத்தால் ஒரு காலத்தில் கவரப்பட்டு அதைத் தாண்ட முடியாதவர்கள் என்றுதான் நான் அவர்களைப் பற்றி நினைப்பேன். ஜெயமோகன் சுஜாதாவின் எழுத்தால் ஒரு காலத்தில் கவரப்பட்டு அதைத் தாண்ட முடியாதவன் என்று என்னைப் பற்றி நினைக்கலாம். 🙂

எனக்கு சுஜாதாவின் எழுத்தின் மீது நிறைய நாஸ்டால்ஜியா உண்டு என்பதைப் பதிவு செய்கிறேன். (சுஜாதா என்ன, இரும்புக்கை மாயாவி காமிக்ஸ், வாண்டு மாமா மீது கூட உண்டு.)

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்