சுஜாதா இலக்கியவாதி இல்லையா?

sujathaயார் சொன்னது? ஜெயமோகன்தான். அவரது சமீபத்திய பதிவு ஒன்றில் சொல்கிறார்:

சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார். நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கியவாசகனும் அல்ல

மனிதர் நாலு வரி எழுதிவிட்டார். அதைப் படித்ததும் எங்கேயோ எனக்கு இடித்தது, ஆனால் சரியாகவும் இருந்தது. எங்கே, என்ன என்று துல்லியமாக கண்டடைய நாலு நாள் ஆகிவிட்டது. 🙂

 1. சுந்தர ராமசாமியும் சரி, ராஜமார்த்தாண்டனும் சரி தீவிர இலக்கியத்தின் சின்னங்கள். சுஜாதா அப்படி அல்ல. – சரிதான். சுஜாதா என்னதான் இலக்கியம் படைத்திருந்தாலும், இலக்கியத்தின் பெரிய ரசிகராக இருந்தாலும் அவர் தீவிர இலக்கியத்தின் சின்னம் அல்லர். கமலஹாசன் கலைப்படங்களின் சாயல் உள்ள சில படங்களில் நடித்திருக்கிறார், ஆனால் கமல் கலைப்படங்களின் சின்னம் அல்லர். அது போலத்தான்.
 2. அவர் நல்ல கதைகள் சிலவற்றை, சில நல்ல நாடகங்களை எழுதியிருக்கிறார்– சரிதான். அவருடைய மொத்த அவுட்புட்டில் நல்ல சிறுகதைகள், நாவல்களை விட வணிக எழுத்துக்களின் சதவிகிதம் மிக அதிகம்.
 3. நவீன உரைநடையில் அவருக்கு பங்களிப்பு உண்டு. – இது அவரை குறைத்து மதிப்பிடுவது. “முக்கிய பங்களிப்பு” என்றாவது எழுதி இருக்க வேண்டும். சுஜாதாவின் உரைநடையின் பாதிப்பு இல்லாத தமிழ் எழுத்தாளன் இல்லை என்று ஜெயமோகனே எங்கோ குறிப்பிட்டிருக்கிறார்.
 4. ஆனால் அவர் இலக்கியவாதி அல்ல. அப்படிச் சொல்பவன் இலக்கிய வாசகனும் அல்ல. – இடிப்பது இந்த வரிதான். ஜெயமோகன் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால் அவருடைய கருத்து எனக்கு இசைவானது அல்ல. சுஜாதா இலக்கியவாதியே என்று சுமார் நாலு வருஷங்களுக்கு முன்பு இங்கே ஒரு பெரிய பதிவே – சுஜாதாவின் மூன்று முகங்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது இடமும் – எழுதி இருக்கிறேன். அதை எழுதத் தூண்டுதலாக இருந்ததும் இப்படி ஜெயமோகன் கொளுத்திப் போட்ட சில வரிகள்தான் –

  இலக்கியவாதி என்பதைக் காட்டிலும் வணிக எழுத்தாளர்தான். உங்கள் தேவை சுவாரசியம் என்பதல்லாமல் ஆன்ம பரிசோதனையோ, அறிவார்ந்த தேடலோ, உணர்வுகளின் அனுபவமோ என்றால் உங்களுக்கு சுஜாதா பெரிதாகப் படமாட்டார். சுஜாதாவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத் தரத்திலேயே நின்றுவிட்டவர்கள்

ஜெயமோகன் முன்வைக்கக் கூடிய ஒவ்வொரு tangible வாதத்துக்கும் என்னால் எதிர்வாதம் புரிய முடியும். இலக்கியவாதி என்பதை எப்படி நிர்ணயிப்பது? எத்தனை கதைகள் இலக்கியம் என்பதை வைத்தா? வேறுவேறு களங்களை நம் முன் கொண்டு வரவேண்டுமா? வணிகப் பத்திரிகைகளில் எழுதி இருக்கக் கூடாதா? கிருஷ்ணன் நம்பிக்கு பத்து சிறுகதைகள் இலக்கியம் என்று தேறினால் அதிகம். லா.ச.ரா. ஒரே கதையைத்தான் திரும்பத் திரும்ப எழுதினார். அசோகமித்திரன் கூட குமுதத்தில் எழுதி இருக்கிறார். வளர்த்துவானேன்? சுஜாதாவின் குறை என்று சொல்லப்படும் எதுவும் இலக்கியவாதி என்று ஜெயமோகனே அங்கீகரிக்கும் இன்னொரு இலக்கியவாதியிடம் இருக்கத்தான் செய்கிறது.

jeyamohanஜெயமோகனின் இலக்கிய விமர்சனங்கள் பொதுவாக எனக்கு இசைவுடையவை. சில விஷயங்களில் மட்டுமே மாறுபடுகிறேன். சுஜாதாவின் இலக்கிய இடம் அதில் ஒன்று. சுஜாதா தமிழின் முதன்மையான இலக்கியவாதி என்றோ, புதுமைப்பித்தனுக்கு சமமான மேதை என்றோ, ஜெயகாந்தனுக்கு இணையான சாதனையாளர் என்றோ நான் கருதவில்லை. என் பெரிய பதிவில் எழுதியதை paraphrase செய்கிறேன் – சுஜாதாவின் தாக்கம், முன்னோடி முயற்சிகள் (அறிவியல் புனைவுகள், அறிவியல் அறிமுகம், தரமான சாகசக் கதைகள்) எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் நான் சுஜாதாவை தமிழ் இலக்கியவாதிகளின் இரண்டாம் வரிசையில்தான் வைப்பேன். ஆனால் முதல் வரிசையில் மிஞ்சி மிஞ்சிப் போனால் பத்து இருபது பேர் இருந்தால் அதிகம். ஜெயமோகனுக்கு இரண்டாம் வரிசை என்று ஒன்று இருக்கிறதா என்பது சந்தேகம்தான்.

ஜெயமோகனின் தீர்ப்பு subjective ஆனது. அதனால்தான் சுஜாதா இலக்கியம் படைத்திருந்தாலும் அவர் இலக்கியவாதி என்று கருதத் தேவையான அளவில், சதவிகிதத்தில் – முக்கியமாக தரத்தில் – இலக்கியம் படைக்கவில்லை என்று தீர்ப்பளிக்கிறார். இதில் விவாதிக்க ஒன்றுமில்லை, தர நிர்ணய அளவுகள் மாறுபடுகின்றன அவ்வளவுதான்.

பின்குறிப்பு: பாலகுமாரன் இலக்கியம் படைத்திருந்தாலும் அவர் இலக்கியவாதி என்று கருதத் தேவையான அளவில், சதவிகிதத்தில் – முக்கியமாக தரத்தில் – இலக்கியம் படைக்கவில்லை என்பது என்னுடைய உறுதியான கருத்து. நான் சுஜாதா பற்றி உணர்வது போலவே சில வாசகர்கள் பாலகுமாரனைப் பற்றி நினைக்கலாம். 🙂 பாலகுமாரனின் எழுத்தால் ஒரு காலத்தில் கவரப்பட்டு அதைத் தாண்ட முடியாதவர்கள் என்றுதான் நான் அவர்களைப் பற்றி நினைப்பேன். ஜெயமோகன் சுஜாதாவின் எழுத்தால் ஒரு காலத்தில் கவரப்பட்டு அதைத் தாண்ட முடியாதவன் என்று என்னைப் பற்றி நினைக்கலாம். 🙂

எனக்கு சுஜாதாவின் எழுத்தின் மீது நிறைய நாஸ்டால்ஜியா உண்டு என்பதைப் பதிவு செய்கிறேன். (சுஜாதா என்ன, இரும்புக்கை மாயாவி காமிக்ஸ், வாண்டு மாமா மீது கூட உண்டு.)

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

9 thoughts on “சுஜாதா இலக்கியவாதி இல்லையா?

 1. Sujatha had brevity and exquisite expressions in his writings which
  none(that I am aware of ) possessed. Jayamohan is good for volumes and i am
  told, writes very fast.His works may not survive, even during his lifetime,
  when his coterie vanishes or they find better writers to follow.
  I grant him(JM) the right, to write his assessment of Sujata and some
  more might agree with him.But Sujata has an unique place whether he wrote
  for literary recognition or not.

  Like

 2. யார் இலக்கியவாதிகள் என்பதை வரையறை செய்வது மிகவும் கடினமான ஒரு விஷயம். காரணம் ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவுகோல். சுஜாதாவை முற்றிலும் நிராகரிக்கும் பலருக்கு அவரின் புகழ் மீது இருக்கும் எரிச்சல்தான் காரணம். ஆனால் ஜெயமோகன் அவரை என்றும் முற்றிலும் நிராகரிப்பதில்லை, அவரை ஒரு பெரிய முன்னோடியாகத்தான் வைக்கின்றார்.

  சுஜாதாவை முற்றிலும் நிராகரித்துவிட்டு தமிழலக்கியத்தை பேச முடியமா என்ன? சுஜாதாவை வாத்தியார் வாத்தியார் என்று சிலாகிக்கும் பலருக்கு அவர் ஒரு ஹீரோ. அவர்களின் ரசனை பெரும்பாலும் சுஜாதாவின் நடை, அவரது இளமை துள்ளலான எழுத்துக்களிடம் மட்டுமிருப்பது போன்று தெரிகின்றது. சுஜாதா ரசிகர்கள் பெரும்பாலும் பேசுவது அவரது நாவல்கள் பற்றியே. அவை பெரும்பாலும் தொடர்கதையாக வந்தவை என்பதால் அதற்குண்டான விலையை பெற்றே இருக்கின்றது. அவரது உண்மையான சாதனை அவரது சிறுகதைகளே என்பது என் அபிப்ராயம். கணேஷ் – வசந்த் நாவல்கள் தவிர்த்த சில சிறந்த குறுநாவல்களையும் எழுதியிருக்கின்றார்.

  சுஜாதா பெரை கெடுப்பது அவர் ரசிக கண்மணிகளே என்பது. யாராவது கொஞ்சம் கேலி கிண்டலாக, ஒரு குதித்தோடும் நடையில் எழுதிவிட்டால் உடனே அங்கு ஓடிப் போய், ‘தல அப்பிடியே வாத்தியார் ஸ்டைல்’ என்று எழுதிவைப்பது. கேபிள் சங்கர் சினிமா விமர்சனம் எல்லாம் சுஜாதா ஸ்டைல் என்றால் என்ன செய்வது. எழுதும் அனைவரிடமும் அவர் பாதிப்பு இருக்கின்றது. அவரை போலி செய்ய அனைவரிடமும் ஒரு முயற்சி தெரியும். ஆனால் அது மட்டும்தான் அவர் என்றால் என்ன செய்வது. இரா.முருகன் கூட எங்கோ அவரை போல எழுத முயற்சி செய்யாமல் அவரை விடுங்கள் ஒரு கருத்தை எழுதியிருந்தார், பாவம் அதைக்கூட அவர் சுஜாதாவை போலத்தான் எழுதியிருந்தார்.

  சுஜாதாவே கூறுவது போல அவர் எழுத்தை அவர் தன் மூச்சு என்றெல்லாம் கருதவில்லை. முடிந்த வரை வாரப்பத்திர்க்கைகாரர்களும் கெடுத்துவிட்டனர். அவர் எழுதிக்குவித்ததில் இலக்கிய வரையறை என்று ஒருவர் கருதும் வகையாறாவில் ஏகப்பட்டதை எழுதியிருக்கின்றார். இருந்தும் அவரை கொண்டாடுபவர்களும், வெறுப்பவர்களும் பேசுவது அவரது கமர்ஷியல் எழுத்துக்களைதான். அவர் ஒரு இலக்கியவாதி என்று நிறுவ முயற்சிப்பவர்களில் பெரும்பாலனவர்கள் செய்வது அவரது

  புத்திசாலித்தனத்தனமான எழுத்து, அவரிடம் வெகு எளிதாக கிளம்பும் இளமையான மொழி, துள்ளி ஓடும் எழுத்து நடை இதையே பெரிய சாதனையாக முன் வைத்து, அவரது கமர்ஷியல் கதைகளை பற்றியே பேசுகின்றனர். வெகு அரிதாகவே அவரது உண்மையான சாதனைகளை பற்றி பேசுகின்றனர். அதில் முக்கியமானவர் ஜெயமோகன். அவர் சுஜாதா பற்றி எழுதிய மொத்த பதிவுகளை சேர்த்து படித்தால் அவர் எங்கும் அவரை இறக்குவது போன்று தெரியவிலை. அவரை பெரிதும் உயர்த்தியே எழுதிவருகின்றார். ஆனால் சுஜாதா மட்டுமே பெரியாள் என்று யாராவது சொறிந்து விட்டால் பொங்கிவிடுகின்றார். எனக்கென்னவோ அவர் கோபம் அவர்களிடம்தான், சுஜாதாவிடமல்ல என்று தோன்றுகின்றது. அவரது பல சிறந்த சிறுகதைகளை பற்றி எல்லாம் எழுதியிருக்கின்றார்.

  எல்லாம் சரி, ஒரு எழுத்தாளரை தாண்டுவது என்றால் என்ன?? இன்றும் எனக்கு கல்கி பெரிய எழுத்தாளர்தான், படிக்கும் பழக்கத்தை உண்டாக்கியவர். சுஜாதா அதை மேலும் தீவிரப்படுத்தியவர். ஒரு சிலரை படிக்க முடிகின்றது, ஒரு சிலரை படிக்க முடியவில்லை. அவ்வளவுதான் எனக்கு தெரிகின்றது. அசோகமித்திரனை படிக்க முடிந்த என்னால் இந்திரா பார்த்தசாரதியை படிக்க முடியவில்லை. பாலகுமாரனையும் படிக்க முடியவில்லை. முன்னவரின் நாவல் எரிச்சல் பின்னது ஆயாசம் (நன்றாக படியுங்கள், தவறாக எதுவும் கூறவில்லை).

  தேங்கி நிற்பது எழுத்தாளை சார்ந்தது அல்ல. பலருக்கு புத்தகம் என்பதே ஏதாவது ஒரு வகையில் சேதி சொல்ல வேண்டும், நீதி போதனை இருக்க வேண்டும். அவர்களுக்கு பாலகுமாரனே சரி. சிலருக்கு பொழுது போகவேண்டும் ராஜேஷ்குமார் போதும். என்னுடைய நண்பன் ஒருவனுக்கு அர்த்தமுள்ள இந்துமதம் மட்டும் போதும். ஆனால் அவர்கள் அதோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. வேறு சிலதும் உள்ளது என்று நம்ப மறுக்கும் போதுதான் பிரச்சினை.

  Like

 3. நீங்கள் சொல்வது புரிகிறது. எண்ணிக்கையில் சுஜாதா எழுதிய இலக்கியம் பிறரோடு ஒப்பிடும் அளவுக்கு இருக்கலாம் தான். ஆனால் எண்ணிக்கை இலக்கிய மதிப்பைத் தீர்மானிக்க முடியுமா?
  நாம் ஒரு எழுத்தாளனிடம் எதை நாடிப் போகிறோம் என்பதை வைத்து ஒருவன் இலக்கியவாதி என்பதை நிர்ணயம் செய்தோமானால் சுஜாதா இலக்கியவாதி இல்லை. எனக்குத் தெரிந்த அத்தனை பேரும் (நானும் தான்) சுஜாதாவிடம் அவரது வசீகர எழுத்து நடை, நகைச்சுவை, நுண்ணிய உணர்வுகளை அப்படியே பதிவு செய்தல் போன்றவற்றுக்காகவே சுஜாதாவை வாசிக்கிறார்கள். இவை இலக்கிய அடையாளம் என்று சொல்ல முடியுமா? அதுவும் கணேஷ் வசந்த் எல்லாம் பெரும்பாலும் கிளுகிளுப்புக்காகவே வாசிக்கப்படுகிறது. சுஜாதாவும் அதைத் தான் கொடுக்க விரும்பினார். அவர் தீவிர இலக்கியம் எழுதி ஒரு ஆயிரம் பேர் வாசித்தால் போதும் என்று நினைக்கவில்லை. வாசகனின் அற்ப உணர்வுகளுக்கும் தீனி போட வேண்டும் என்ற அவா அவர் எல்லாக் கதைகளிலும் வெளிப்படுவது எரிச்சல் தரும் விஷயம் (அதையும் தாண்டி அவர் எழுதிய இலக்கியம் நிச்சயம் உண்டு). இலக்கியம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவன் கூட சுஜாதாவை வாசித்து சிலாகிக்க முடியும் (நானும் தான்). சுஜாதா இலக்கியவாதி என்றால் அந்த வாசகனை இலக்கிய வாசகன் என்று ஒத்துக்கொள்ள நீங்கள் தயாரா?

  Liked by 1 person

 4. சுஜாதா ஏன் இல்லகியவாதி அல்ல :
  1. அவருடைய எழுத்துகளின் தேடல் பொழுதுபோக்கு சார்ந்தே உள்ளது.
  2. அவருடைய எழுத்துகளின் ஆழத்தையும் அகலத்தையும் அவற்றின் சுவாரச்யதன்மையே தீர்மாநிகிரதாக தோன்றுகிறது.
  3. அவருடைய பெண் பாத்திரங்கள் எளிய ஆண்களின் ஆழ்மன பிம்பங்களே.
  4.அவருடைய எழுத்துக்களின் நோக்கம் இலக்கிய வட்டத்துக்கு வெளியே உள்ளன .
  5. அவர் அவரை கதை எழுதாளராகவே நிறுவினார். கனமான விஷயங்களை கதைகளில் அறிமுகம் செய்யலாம் விரிவாக எழுத முடியாதென நினைத்திருக்கலாம்.

  சுஜாதா ஏன் இலக்கியவாதி :

  1. அவர் படைப்பூக்கமிக்க புதிய கதைகளை புதிய கோணத்தில் எழுதினார்.
  2. அவருடைய சில கதை மாந்தர்கள் இலக்கிய தகுதி மிகுந்தவர்கள்.
  3. தமிழ் வொர்கிங் கிளாஸ் இவருடைய உலகம், இவருடைய எழுத்து அந்த மாந்தர்களுக்கு இலக்கியமே.
  4. கதை எழுதுவது ‘இலக்கிய’ எழுத்தாளர்களுக்கு ஏளனமே. கதை யோடு கதைக்காக கதை எழுதுவது ஒரு இலக்கிய வகையே. சொம்மேர்செட் மாம், ஸ்விப்ட், டிகின்சண், ப்ரொண்டே , வரிசை பெரியது.
  5. இலக்யத்தின் அத்தனை சாத்தியங்களையும் சோதித்து பார்த்தவர்.

  அகவே கணம் ஜெயமோகன் அவர்களே…

  Like

 5. சுஜாதா பலரிடம் தம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது மட்டுமே நிஜம். சாமர்த்தியமான எழுத்து வசீகரமான நடை என்பதற்கு அவரது படைப்புகள் எடுத்துக்காட்டுகள். எல்லாவற்றிலும் நல்லது கெட்டது இருப்பது போல இலக்கியத்திலும் இருக்கின்றன. நல்ல இலக்கியம் என்பது மனிதனைப் பண்படுத்துவதே ஆகும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வோம். சுஜாதாவுக்கும் அவருடைய இடத்தைக் கொடுப்போம். அவருடைய இடத்தை மட்டுமே கொடுப்போம்.

  மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பாகத் தேறி அடுத்த மேல் வகுப்புக்குப் போவதைப்போல நாமும் சுஜாதாவைப் படித்துவிட்டு மேல் வகுப்பிற்குப் போகலாம், விரும்பினால்! அப்படிப் பயணித்தால் எவ்வளவோ சிறப்பான விஷயங்கள் இலக்கியத்தில் இருக்கின்றன. அப்படிச் சிலதை அவரே நன்றாக அறிமுகமும் செய்துவைத்திருக்கிறார். ஆனால் தாமும் அவ்விடங்களுக்குப் போக ஆசைப்பட்டுத்தானோ என்னவோ ‘ஆழ்வார்கள் அறிமுகம்’ , திருக்குறள் உரை’ ‘பிரம்மசூத்திர உரை’ போன்ற சிலவற்றை தன் இடத்திற்கும் சக்திக்கும் மீறி முயற்சித்திருக்கிறார். வாழ்நாளெல்லாம் பண்பட்டதைப் படைக்காமல் பின்னாட்களில் வருந்தியதன் விளைவாக இது இருக்கலாம். சக மனிதர் என்பதால் இரக்கப்படுவதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

  Like

 6. சர்வ நிச்சயமாக அவர் இலக்கியவாதி இல்லை தான். ஜெ வின் சமீபத்திய பதிவு அவரை இலக்கியத்தின் ஒரே அடையாளமாகக் கட்டமைத்து அவர் பெயரால் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருதை முன்னிறுத்தியே. வழங்கப்பட்டவர்களும் இனிமேல் இலக்கியவாதிகளாக அடையாளம் காணப்படுவதின் அபத்தத்தைப் பற்றி. எனக்கு சில நாட்களுக்கு முன் granta இலக்கிய இதழின் இந்தியா பகுதியில் சுபாவின் ஓர் துப்பறியும் கதை தான் தமிழின் இலக்கியமாக அறிமுகப் படுத்தப் பட்டிருந்த அபத்தம் தான் நினைவுக்கு வருகிறது. அத்தகைய ஓர் அபத்தத்திற்கு இவ்விருதும் வழி கோலும் என்றே நினைக்கிறேன். மாறாக சுஜாதா பெயரில் சிறந்த வணிக எழுத்திற்கான ஓர் விருதை அறிவித்து அதை முறையாகச் செய்தால் தமிழில் வாசிப்பாவது கூடும். இன்றளவும் அவரின் இடம் நிரப்பப்படாமலேயே உள்ளது. இன்று எழுதிக் குவிக்கப்படும் பெரும்பாலானவை அவரை மலினமாக நகலெடுப்பவையே.

  இங்கே பெரும்பாலானவர்கள் வாசிப்பைக் கண்டடைந்ததே சுஜாதா வழியாகவே. இன்றளவிலும் தமிழின் உரைநடையில், ஒருவகையில் பாரதிக்குப் பின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அவர் தான். இதை ஜெ வும் முக்கியமாக அடையாளப் படுத்தியிருக்கிறார். அவரின் இந்த பங்களிப்பே அவரை தமிழின் முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது. அவரை இன்னும் பொருட்படுத்தி விவாதிக்கச் செய்கிறது. அவர் தான் சிறுகதை உலகத்தின் எல்லைகளை பல திசைகளுக்கும் விஸ்தரித்தார்.

  வணிக எழுத்து என்பது தரம் குறைந்தது என்ற நினைப்பே ஒருவர் சிறந்த வணிக எழுத்தாளர் என்ற அடையாளத்தை ஏற்கவும் தடையாக இருக்கிறது. நிச்சயம் அது ஓர் தவறான எண்ணம் தான். உலகில் அனைவரும் Phd முடித்து விட முடியாது. அப்படி Phd முடிப்பவர்களும் பன்னிரெண்டாம் வகுப்பு தாண்டாமல் வந்து சேர முடியாது. அப்படியிருக்கும் போது Phd தான் சிறந்தது, பன்னிரெண்டாம் வகுப்பு தாழ்ந்தது என்பதெல்லாம் பொருளற்ற வாதங்கள். அதைப் போலவே நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படிப்பேன் என்பதும், அது மட்டுமே சிறந்தது என்பதும், மற்றவையெல்லாம் வீண் வேலை என்பதும் எவ்வித பலனையும் தராத வெட்டி வாதங்களே. இவ்வாறு பேசுபவர்கள் அனைவருமே உள்ளூர தங்கள் மேல் கொண்டிருக்கும் தாழ்வுணர்ச்சியையே இவை காட்டுகின்றன.

  Like

 7. விடுமுறைதான், இருந்தாலும் இன்று இதைப் பார்த்தபோது பதில் எழுதத் தோன்றியது.

  பாலா சொல்வது – // But Sujata has an unique place whether he wrote for literary recognition or not. // உண்மையே சுஜாதாவிற்கு தமிழ் இலக்கிய சாதனையாளர்கள் பட்டியலில் இரண்டாம் வரிசையில் ஒரு இடம் உண்டு என்று இதைத்தான் நானும் வேறு வார்த்தைகளில் சொல்கிறேன்.

  ரெங்கா, உங்களுக்கும் எனக்கும் (கேசவமணிக்கும்) ஏறக்குறைய ஒரே wavelength! வாசக மும்மணிகள் என்று நமக்கு யாராவது விருது கொடுத்தால் பரவாயில்லை. (சுப்ரமணி, ரெங்கசுப்ரமணி, கேசவமணி!) விடுமுறை முடியும்போது உங்கள் மறுமொழியை ஒரு பதிவாகவே போடத் திட்டம்.

  ப்ருந்தாபன், // ஆனால் எண்ணிக்கை இலக்கிய மதிப்பைத் தீர்மானிக்க முடியுமா? // எது தீர்மானிக்கிறது என்பதுதான் கேள்வி. இதைக் கறாராக வரையறுக்க முடியுமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. நான் பார்த்தவற்றில் எனக்கு ஏற்கக் கூடிய வரையறை ஜெயமோகனுடையது – // நல்ல படைப்பு முதலில் ஒரு மெய்நிகர் வாழ்க்கையனுபவத்தை வாசகனுக்கு அளிக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் புற யதார்த்தத்தைக் கற்பனையால் மீறி இன்னும் பல யதார்த்தங்களில் அவன் வாழச் செய்கிறது. அதன் வழியாக அவனை அது ஒரு சுயதரிசனத்துக்கு, வாழ்க்கைத் தரிசனத்துக்கு, பிரபஞ்ச தரிசனத்துக்குக் கொண்டு செல்கிறது // என்கிறார். அப்படிப்பட்ட படைப்புகளை எனக்குப் “போதுமான” எண்ணிக்கையில் சுஜாதா எழுதி இருக்கிறார். சுஜாதாவின் அப்படிப்பட்ட படைப்புகள்தான் எனக்கு முக்கியமாக்த் தெரிகிறது, அதனால்தான் நான் அவரை இலக்கியவாதி என்று அடித்துச் சொல்கிறேன். அப்படி இல்லாத படைப்புகளையும் சுஜாதா நிறைய எழுதிக் குவித்திருக்கிறார், அவையே உங்களுக்கு முக்கியமாகத் தெரிகின்றன, அதனால்தான் நீங்கள் (ஜெயமோகனும்) அவரை இலக்கியவாதி இல்லை என்று கறாராக மதிப்பிடுகிறீர்கள்.

  டேவிட் ராஜேஷ், பிரமாதம்!

  சந்தானம், சுஜாதா மீது இரக்கம் காட்டும்படி அவர் என்ன செய்துவிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. அவருடைய இடத்தை மட்டுமே கொடுப்போம் என்பதை நூறு சதவிகிதம் ஆமோதிக்கிறேன்.

  மகராஜன் அருணாசலம், எனக்குப் புரியவில்லை // அப்படியிருக்கும் போது Phd தான் சிறந்தது, பன்னிரெண்டாம் வகுப்பு தாழ்ந்தது // உயர்படிப்பும் “மத்திய நிலை” படிப்பும் எப்படி சமமாகும்?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.