Skip to content

பாரதி மகாகவியா இல்லையா?

by மேல் மே 3, 2015

bharathiஎனக்கு ஒரு இருபது இருபத்திரண்டு வயது இருக்கும்போது எனது நெருங்கிய மலையாளி நண்பன் ஸ்ரீகுமார் பாரதி பாரதி என்று தமிழர்கள் கொண்டாடுகிறீர்களே, எனக்கு ஒரு கவிதையை மொழிபெயர்த்து சொல்லேன் என்று கேட்டான். எனக்கு சட்டென்று நினைவு வந்த எல்லா கவிதைகளும் மொழிபெயர்த்தால் கவித்துவம் இழப்பதை ஒரு க்ஷணத்தில் உணர்ந்தேன். கூலி மிகக் கேட்பான், சூதர் மனைகளிலே, வெள்ளை நிறத்திலொரு பூனை என்று முயற்சி செய்து பார்த்து சரிப்படாது என்று அவனிடம் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன். மொழியைத் தாண்ட முடியாதது நல்ல கவிதையா, நல்ல இலக்கியமா என்று முதன்முதலாக யோசனை வந்தது அப்போதுதான். பாரதி மகாகவியா இல்லையா என்ற சந்தேகம் வந்ததும் அந்த நொடியில்தான்.

ஆனால் பாரதி மகாகவியா இல்லையா என்று பேசும் மனநிலையும் அறிவு நிலையும் எனக்கில்லை. பாரதியின் கவிதைகளை என்னால் அறிவுபூர்வமாக அலச முடிவதில்லை. எனக்கு பாரதி பிடித்தமான கவிஞர், அவ்வளவுதான் சொல்ல முடியும்.

ஜெயமோகன் ரொம்ப நாளைக்கு முன்னால் (“என்னது? இந்திரா காந்தி செத்துட்டாரா!” அளவுக்கு முன்னால்) பாரதி மஹாகவிதானா என்று ஒரு விவாதத்தைத் தொடங்கினார். எனக்கு கவிதையே ததிங்கிணத்தோம்; இரண்டாவதாக உணர்வு பூர்வமான தாக்கம் உள்ள பாரதி பற்றி விவாதம். பற்றாக்குறைக்கு முன்னால்jeyamohan சொன்ன மாதிரி எனக்கே ஒரு சந்தேகமும் உண்டு. வாயை மூடிக் கொண்டிருந்துவிட்டேன்.

சரி நமக்குத்தான் கவிதை ததிங்கிணத்தோம், கவிதையை ரசிக்கும் எத்தனையோ பேர் இருக்கிறார்களே, அவர்களெல்லாம் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்று அப்போது இணையத்தில் அங்கும் இங்கும் மேய்ந்தபோது விட்டேனா பார் உன்னை, பாரதியை குறைத்து மதிப்பிட நீ யார், உன் அலெக்சா ரேட்டிங்கை உயர்த்தத்தான் இந்த வேலை செய்கிறாய், பாரதி மகாகவி என்று விளக்க வேண்டிய துரதிருஷ்டம் தமிழனுக்கு மட்டும்தான் என்று சில எதிர்வினைகள் கண்ணில் பட்டன. என்னைப் போலவே உணர்வுபூர்வமான அணுகுமுறை உள்ளவர்களோ என்று நினைத்தேன்.

இத்தனை காலம் கழித்து ஒன்றை உணர்ந்தேன். பாரதியின் கவிதைகளைத்தான் என்னால் அறிவுபூர்வமாக அலச முடியாது, அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களின் அடிப்படையை – விமர்சனங்களை அல்ல, விமர்சனத்தின் தியரியை – அலசுவதில் ஒரு பிரச்சினையுமில்லை.

மகாகவி என்றால் என்ன நீங்கள் என்ன பொருள் கொள்கிறீர்கள்? பாரதி பெரும்பாலான தமிழர் கண்களில் உலக மகாகவி ஆக இருப்பதும் பாரதிதாசன் பாண்டிச்சேரிக் கவி கூட ஆகாததும் ஏன்? “பாரதி மகாகவியா இல்லையா?” என்று விவாதம் ஆரம்பித்தால் இதுதானே ஆரம்பப் புள்ளி? பாரதி மகாகவி என்பது axiomatic என்ற லெவலில் வாதிடுவது வெறும் hero worship. அது என்னவோ தமிழர்கள் தங்கள் நாயகர்களை icon-களாக மாற்றி அவர்களுக்குப் பின்னால் ஒரு ஒளிவட்டத்தை அழுத்தமாக அமைத்துவிடுகிறார்கள். அட அரசியல் காரணங்களுக்காக ஈ.வெ.ரா., அண்ணாதுரை, எம்ஜிஆர் பின்னால் இப்படி ஒரு ஒளிவட்டத்தைப் பொறுத்தினால் புரிந்து கொள்ள முடிகிறது. பாரதி, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமலஹாசன், இளையராஜாவுக்கெல்லாம் ஏன்?

ஜெயமோகன் மஹாகவி என்பதற்கு ஒரு வரையறையைத் தருகிறார். அந்த வரையறையை வைத்து ஒரு தர வரிசையை உருவாக்குகிறார். அந்தத் தர வரிசைப்படி கம்பனுக்கு முதல் இடம், அவன்தான் மகாகவி, பாரதி இல்லை என்கிறார். அந்த வரையறையை ஏற்கமுடியாது, வேறு வரைமுறைதான் சரி; இல்லாவிட்டால் அந்த வரையறைப்படி பார்த்தாலும் பாரதி மகாகவிதான் என்று வாதாடுவது எதிர்வினை. நீ யாரடா பாரதியை மகாகவி இல்லை என்று சொல்ல என்பது எதிர்வினை இல்லை. அவரது கருத்தை மறுக்கலாம். அணுகுமுறையை எப்படி மறுக்க முடியும்?

ஜெயமோகனின் கருத்துகளோடு நீங்கள் வேறுபடலாம். கருத்து வேறுபாடு சர்வசாதாரணமான விஷயம். ஆனால் ஒரு மகாகவியிடம் நான் இன்னின்ன எதிர்பார்க்கிறேன், அவற்றை பாரதி எனக்குத் தரவில்லை (அல்லது தருகிறார்) என்ற அணுகுமுறையில் என்ன குறை காண்பது? என் எதிர்பார்ப்புகள் வேறு (அல்லது அதே எதிர்பார்ப்புகள்தான்), ஆனால் நீங்கள் சொல்லும் எல்லாவற்றையும் பாரதி எனக்குத் தருகிறார் என்று வாதிடுங்கள். அறிவுபூர்வமாக வாதிட முடியாத என் போன்றவர்களும் அடுத்த லெவலுக்குப் போக உதவியாக இருக்கும். நீ யாரடா பாரதியைப் பற்றிப் பேச, சினிமாவுக்கு வசனம் எழுதும் புல்லனே என்பதெல்லாம் ஒரு வாதமா?

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயமோகனின் கருத்தை மறுக்கவோ அல்லது ஏற்கவோ என்னால் முடியாது. ஏனென்றால் பாரதி என்று வந்தால் அங்கே என் தர்க்க அறிவு வேலை செய்வதில்லை. ஆனால் அவரது அணுகுமுறையை தர்க்கரீதியாக ஏற்றுத்தான் ஆக வேண்டும். என்ன, என் வரையறை வேறு. மகாகவி என்றால் எனக்கு என் மனதைத் தொடும் கவிதைகளை எழுதியவர், அவ்வளவுதான். இது மிகவும் subjective ஆன அணுகுமுறை. என் மனதைத் தொடும் கவிதை உங்கள் மனதைத் தொடாமல் போகலாம். “வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்” என்பது உங்கள் மனதை இன்னும் ஆழமாகத் தொடலாம். இந்த வரையறையை வைத்து அறிவுபூர்வமாகப் பேசுவதும் விவாதிப்பதும் கஷ்டம். எனக்கு மஹாகவி (அல்லது இல்லை), உனக்கு எப்படி இருந்தால் எனக்கென்ன என்று போக வேண்டியதுதான்.

புள்ளியியல் அணுகுமுறையை வைத்து நிறைய பேர் மனதைத் தொட்டிருக்கிறது, அதனால் பாரதி மகாகவி என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால் பாப்புலாரிட்டி என்பது மட்டுமே அளவுகோலானால் ரமணி சந்திரனுக்கு ஞானபீட விருது கொடுக்க வேண்டி இருக்கும். எனக்கு மகாகவி, நிறைய பேர் என்னைப் போலவே உணர்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அது முக்கியமான அணுகுமுறையே; ஆனால் அது ஒரு ஆரம்ப கட்ட அணுகுமுறையாக மட்டுமே இருக்க முடியும்.

உயர்ந்த கவிதை என்றால் மொழி என்ற எல்லையைத் தாண்ட வேண்டும் என்று வரையறுத்தால் பாரதி ஃபெயில்தான். ஆனால் யார் பாஸ்? ஜெயமோகன் கம்பன் பாஸ் என்கிறார். நான் கம்பனை எல்லாம் விரிவாகப் படித்தவன் இல்லை. வாரணம் பொருத மார்பும் என்று சில சமயம் மேற்கோள் காட்டுவதற்கே ததிங்கினத்தோம். ஆனால் எனக்கு நினைவு வரும் நாலு வெண்பாக்களை மொழிபெயர்த்தால் – he looked, she looked என்றால் – அதில் எந்தக் கவித்துவமும் எனக்குத் தெரியவில்லை. பாரதிக்காவது அவரது வசன கவிதையை கவித்துவம் கெடாமல் மொழிபெயர்க்க முடியும்.

எனக்கு கவிதையின் கற்பூர வாசனை தெரியாது என்பதை இன்னொரு முறை அழுத்திச் சொல்கிறேன். என் வரையறை எனக்கு, ஜெயமோகனின் வரையறை அவருக்கு. என் வரையறைப்படி எனக்கு பாரதி மஹாகவி; அவர் வரையறைப்படி அவருக்கு அப்படி இல்லை. இதில் என்ன பிரச்சினை?

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்

Advertisements

From → Bharathi

3 பின்னூட்டங்கள்
 1. David Rajesh permalink

  தமிழர்களுக்கு பொதுவாக காரண பெயர்களின் அர்த்தங்கள் முக்கியமில்லை அல்லது புரிவதில்லை. எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒவ்வொரூ அட்சரமும் அர்த்தமாஹவேண்டும்.

  மகா கவி என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ஞானக் கவி என்று குறிபிட்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை என நான் நினைக்கிறேன்.

  முதன் முதலில் அடைமொழி கொடுப்பவர்கள் கவனமாக இறுக்க வேண்டும். தமிழர்கள் கொடுக்க விடுவார்கள் எடுக்க விடுவதில்லை.

  Like

 2. சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  Like

Trackbacks & Pingbacks

 1. எனக்குப் பிடித்த கவிதை | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: