1775இல் எழுதப்பட்ட தமிழ் உரைநடைக் கதை

அடுத்த தீமாக முன்னோடி முயற்சிகளை வைத்துக் கொள்கிறேன்.

venkat_swaminathanபரமார்த்த குரு கதைக்குப் (1740) பிறகு தமிழ் உரைநடையில் கதை என்றால் பிரதாப முதலியார்தான் என்று நினைத்திருந்தேன். வெ.சா.வின் ஒரு கட்டுரையின் மூலம் முத்துக்குட்டி ஐயர் 1775-ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று ஒரு உள்ளூர் ராஜா தூங்காமல் இருக்க ஒரு கதையை சொல்லி இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். இரா. முருகன் அந்தக் கட்டுரையை மீள்பதித்திருக்கிறார். அருமையான கட்டுரை. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

1775-இல் சிவகங்கை அரசர் தன் சமஸ்தானப் புலவர் முத்துக்குட்டி ஐயரை சிவராத்திரி அன்று இரவு விழித்திருக்க ஒரு கதை சொல்லும்படி சொன்னாராம். அது வாய்மொழியாகவும் சுவடிகளாகவும் தலைமுறைகளைக் கடந்திருக்கிறது. சிட்டி-சிவபாதசுந்தரம் தங்கள் ‘தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சி‘ (1977)-இல் இதைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். வெ.சா. இதைப் பதிப்பிக்க விரும்பி இருக்கிறார், கடைசியில் சிட்டியே இதை “கண்டெடுத்த கருவூலம்” (2006) என்ற தொகுப்பில் வெளியிட்டிருக்கிறார்.

பெருமாள் முருகன் இதைப் பற்றி எழுதிய கட்டுரையில் சொல்கிறார்:

இந்த நூலைக் கண்டுபிடித்தவர் ஈழத்தைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் அவர்கள். கிரௌன் வடிவில் 76 பக்கங்களைக் கொண்டிருந்த இந்நூலை ஈழத்தில் பழைய புத்தகக் கடை ஒன்றில் சிதைந்த நிலையில் அவர் வாங்கினார். தம் உதவியாளரைக் கொண்டு உடனடியாகப் படி எடுத்தும் வைத்தார். மூலக்கதையை மட்டுமே அவ்வாறு எழுதி வைத்தார். அந்நூலில் இருந்த முக்கியத்துவம் வாய்ந்த சாற்றுகவிகள், முன்னுரைகள் ஆகியவற்றைப் படி எடுக்க இயலவில்லை. அவரும் அவருடன் இணை சேர்ந்து நூல் எழுதுபவரான சிட்டி என்னும் பெ.கோ.சுந்தர்ராஜனும் இந்நூலைப் பதிப்பிக்க எண்ணி 1980ஆம் ஆண்டே முன்னுரை எழுதித் தயார் செய்துள்ளனர். ஆனால் நூல் வெளியிடப்படவில்லை. சிவபாதசுந்தரத்தின் இறப்பிற்குப் பிறகு அவருடைய நினைவுக்குக் காணிக்கையாக்கி இந்நூலையும் சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் கட்டுரைத் தொகுப்பையும் இணைத்துக் ‘கண்டெடுத்த கருவூலம்’ (வாணி பதிப்பகம், கோவை) என்னும் தலைப்பில் 2004ஆம் ஆண்டு சிட்டி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

வெ.சா. ‘கண்டெடுத்த கருவூலம்’ 2006இல் வெளி வந்தது என்கிறார், பெ.மு. 2004-இல் என்கிறார். எது சரியோ தெரியவில்லை.

வசதிக்காக வெ.சா.வின் கட்டுரையை மீண்டும் இங்கே பதித்திருக்கிறேன். கடைசியில் சில வரிகளைக் காணவில்லை.

‘தமிழ் நாவல் நூறாண்டு வளர்ச்சி’ என்ற நூல் 1977இல் வெளிவந்தது, தமிழின் முதல் நாவல் என்று கருதப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் வெளியான ஆண்டு 1876 என்ற கணிப்பில், தமிழ் நாவல் இலக்கியம் பிறந்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. அது மிக முக்கியமான நூல். சிட்டியும் சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதியது. அது பல முக்கியமான, அன்று வரை தெரிந்திராத பல நீண்ட உரைநடை நூல்களைப் பற்றிய தகவல்களையும் வெளிக்கொணர்ந்தது. அவற்றில் மிக முக்கியமானது, மிகவும் சுவாரஸ்யமானது, முத்துக் குட்டி ஐயர் என்னும் சிவகங்கை மன்னரின் ஆஸ்தான புலவர் வாய்மொழியாகச் சொன்ன கதை. இது நடந்தது 1775ஆம் ஆண்டு ஒரு சிவராத்திரி இரவு. சிவகங்கை மகாராஜா, இரவிகுல முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர் (1750þ1780) தம் சமஸ்தானப் புலவர் முத்துக்குட்டி ஐயரை அழைத்து, சிவராத்திரி அன்று தாமும் சமஸ்தானாதிபதிகளும் இரவு முழுதும் விழித்திருக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்றுபணித்தார். அக்கதை அதற்கு முன் யாரும் சொல்லப்படாததாக இருக்க வேண்டும், தெய்வ பக்தி உணர்வும், சிவராத்திரி முக்கியத்துவம் உணர்த்துவதாகவும், 56 தேசங்களும், அவற்றின் இடங்களும் தாவரங்களும் விலங்குகளும் இடம்பெறுவதாக அக்கதை இருக்க வேண்டும் என்பதும் சிவகங்கை மன்னரின் நிபந்தனைகள்.
மகாராஜா கதை கேட்க விரும்பியதோ, அதற்கு தம் ஆஸ்தானப் புலவரைப் பணித்ததோ, நிபந்தனைகளோ நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் அல்ல. எல்லாம் மரபுப்படிதான் நடந்துள்ளன. ஆனால் முத்துக்குட்டி ஐயர் மன்னரின் நிபந்தனைகளையும் நிறைவேற்றினார், அத்தோடு கேட்ட கதையையும் தம் வழியில்தான் சொன்னார். அந்த வழியும் அக்கதையின் சொல்முறையும் கதை பெற்ற வடிவமும் தமிழ் மரபில் முன்னும் இருந்ததில்லை. பின்னும் இருக்கவில்லை. மரபு சார்ந்து புதுமை செய்யும் சமாச்சாரமாகத்தான் அது இருந்தது. இத்தகைய ஒரு புதுமை நோக்கு, சிவகங்கை சமஸ்தானத்தின் இன்று நாட்டரசன்கோட்டை என்று அறியப்படும் அந்நாளைய தென்பளசை என்னும் கிராமத்து முத்துக்குட்டி ஐயருக்கு 1775 அந்த சிவராத்திரி இரவில் எப்படித் தோன்றியது?
விவரமாகச் சொல்லவேண்டும். சிவகங்கை, ராமநாதபுரம் எல்லாம் என்றென்றைக்கும், முத்துக் குட்டி ஐயரின் காலத்திலிருந்து இன்று வரை கூட வறட்சிக்கும், மழை பொய்ப்பதற்கும், வறுமைக்கும் பெயர் போனது. பஞ்சம் பிழைக்க, பின் நூற்றாண்டுகளில் இப்பகுதி மக்கள், இலங்கை,மலேசியா, ஃபிஜி, கயானா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கரும்பு, தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யக் கடல் கடந்து சென்றது நமக்குத் தெரியும். முத்துக்குட்டி ஐயரின் காலத்தில் ஏற்பட்ட வறட்சியையும் மக்கள் தவிப்பையுமே தம் கதைப் பொருளாக்கினார் புலவர். அவ்வறட்சியை நேராகக் கதை சொல்லும் சமாச்சாரம் ஆக்கவில்லை புலவர்.
அவரது கதையில் தாவரங்கள், மேகங்கள், புல் பூண்டு, விலங்குகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் மனித உடலின் பாகங்கள் எல்லாமே மனித கதாபாத்திரங்களாகின்றன. வருட மழை பொழிதல், மேகவண்ண சேர்வைக்காரன் (மேகங்கள்) செலுத்தும் வருஷக் கட்டளையாகிறது. மன்னனிடம் சென்று மக்கள் தம் கஷ்டங்களை முறையிடுகிறார்கள். ஒப்பந்தப்படி கட்டளை செலுத்தத் தவறிய மேகவண்ண சேர்வைக்காரனைச் சிறையிலடைக்க மன்னர் உத்தரவிடுகிறார். மேகவண்ணச் சேர்வைக்காரன் கட்டளை தவறியதற்கு காரணங்கள் தயாராக இருக்கின்றன. அவனது மேல்காரியகர்த்தாக்களான ஆதித்தமய்யன் (சூர்யன்), சோமசுந்தரமய்யன் (சந்திரன்) இருவருக்கும் அவர்களது கஷ்டங்கள்: ஆதித்தமய்யனுக்கு கரியமாணிக்கம் (சனி) என்றொரு புத்திரன் அவன் யாரை வந்து பற்றினாலும் படாதபாடெல்லாம் படுத்திப் பின்னர் சந்தோஷப்படுத்துவார். சோமசுந்தரனுக்கு அடுத்த வீட்டுக்காரன் மங்களேஸ்வய்யர் (செவ்வாய்) குரூர புத்திக்காரன்… இப்படி போகிறது கதை
இனி சொல்முறையைக் கவனிக்க வேண்டும்: மாதிரிக்கு சில வரிகள்;
“இப்படியிருக்கிறபடியினாலே ஆதித்தமய்யன் முதல் ஒன்பது வீட்டுக்கார கிரஹஸ்தாளும் ஒன்றுக்கொண்று விகாரத்தால் வக்கரித்துக்கொண்டிருக்கையில் இவர்களை மிஞ்சி நாம் அங்கே போகக்கூடாதென்று மேல மேற்குடி மேகணன் சேர்வைக்காரன் புறம் சற்றே பின்னுக்கு வாங்கியிருக்கிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் விரோதமில்லாமல் அவரவர் எதாஸ்தானங்களில் வந்து சுபிட்சமானதன் பேரில், அனுபவித்துக் கொள்வோம் என்று மேகணன் சேர்வைக்காரன் இந்தத் தவணைக்கு வராமலிருகிறானென்று அவ்விடத்துக் காரியம் சீக்கிரத்திலே சமரஸத்துக்கு வரும், அதற்குப் பிறகு வருவானென்று வேதியங்குடியார் சொன்னார்கள்.”
கிரகங்கள் சரியில்லாததன் காரணத்தால், இந்த தோஷங்கள் நீங்கியபின் பார்த்துக்கொள்ளலாமென்று இருந்த காரணத்தால் இந்த வருடம் மழை பெய்யவில்லை என்று அரண்மணை ஜோஸ்யர்கள் சொன்னார்கள் என்பது பொருள்.
இது பற்றி சிட்டியின் “தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்” புத்தகத்தில் இது கண்டெடுக்கப்பட வரலாறும் செய்திகளும் சொல்லப்பட்டிருக்கின்றன.
‘வசன சம்பிரதாயக் கதை’ என்ற பெயரில் இப்போது அறியப்படும் இக்கதை, 1775 ஆண்டு சிவராத்திரி இரவு வாய்மொழியாக முத்துக்குட்டி அய்யரால் மன்னர் பின் அவதானிகள் முன்னிலையில் சொல்லப்பட்டது. இதற்கு முன் வசன வடிவில் எழுதப்பட்டது, 1740ஆம் ஆண்டு வீரமாமுனிவரின்அவிவேக பரமார்த்த குருவும் சீடர்களும்” ஆனால் அது அச்சில் வெளியிடப்பட்டது 80 வருடங்கள் கழித்து 1820இல்.
முத்துக்குட்டி ஐயரின் காலத்தில் வீரமாமுனிவரின் நூல் ஐயருக்குக் கிடைத்திருக்குமா என்பது தெரியாது. ஆனாலும், வீரமா முனிவரின் நேரிய எளிய கதை சொல்லும் முறையும், முத்துக் குட்டி அய்யரின் உருவக வடிவிலான கதை சொல்லலும் முற்றிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. மேலும், வீரமாமுனிவரின் இத்தாலிய ரோமன் கதோலிக்க கிறிஸ்துவம் அவர் காலத்திய குருகுல கல்வி முறையைக் கேலி செய்யஅவிவேக பரமார்த்த குரு கதையை சிருஷ்டித்தது.
முத்துக்குட்டி ஐயர் சம்பிரதாயத்தில் மூழ்கியிருப்பவர். உலகப் பார்வை மட்டுமல்ல, அவரவர் கையாண்ட தமிழ் வசனமும் வேறுபட்டது. எது என்னவாக இருந்தாலும், முத்துக்குட்டி ஐயருக்கு மட்டுமல்ல, வெகு காலத்திற்குப் பரமார்த்த குரு கதை தமிழருக்குத் தெரியாமலேயே இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். பிறகு ஒரு வசன கதை உருவாக்கம் கிடைக்க 1879இல் வேதநாயகம் பிள்ளை பிரதாப முதலியார் சரித்திரம் வெளிவரும்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதுவும் நகைச்சுவையில் தோய்த்து எடுக்கப்பட்ட கதைதான். ரொம்ப காலத்திற்குத் தமிழனைச் சிரிக்க வைத்தால்தான் அவன் கதை கேட்கச் சம்மதிப்பான் போலத் தோன்றுகிறது. முத்துக்குட்டி ஐயர், தான் கதை பண்ணும்போது இந்த மசாலாவைச் சேர்க்க மறக்கவில்லை.
—————-
கதையை முத்துக் குட்டி ஐயரிடம் வாய் மொழியாகக் கேட்டவர் அதைச் சுவடிகளில் எழுதி வைத்தனர். சமஸ்தான ஊழியத்தில் இவர்களும் இருப்பார்கள்தானே. பின்னர் அது காணாமல் போயிற்றாம். ஆனால் நாகுபாரதி என்பவர் இவர் இசைப் புலவர் குஞ்சர பாரதியின் சகோதரர் முத்துக்குட்டி ஐயர் சொன்னபடியே மனப்பாடமாக நினைவில் வைத்திருந்தவர். அவரிடமிருந்து அக்கதை முழுதும் கேட்டுப் பிரதி செய்து, தமது நண்பர் ராமசாமி தீட்சிதரின் உதவியுடன் வசன சம்பிரதாயக் கதை என்ற தலைப்பில் 1895ஆம் ஆண்டு திருவையாற்றில் வெளியிட்டார் என்று தகவல் தருகிறார் சிட்டி. ஆக, வாய்மொழியாகச் சொல்லப்பட்ட கதை ஒன்று அச்சில் பதிவாக, 120 வருடங்கள் ஆயிருக்கின்றன. அதன் பின்னரும் அது பற்றி யாரும் பேசியதில்லை. அறிந்ததில்லை. கடைசியில் அது பற்றி நாம் அறிய சிட்டியும் சிவபாத சுந்தரமும் அதை வரலாற்றின் ஆழ்குழியிலிருந்து தேடி வெளிக்கொணர இன்னம் ஒரு 85 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன.
‘தமிழ் நாவல்: நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ புத்தகத்தில் இந்த விவரங்களோடு கதையிலிருந்து இரண்டு பாராக்களும் மாதிரிக்குக் கொடுக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு அந்த நூல் முழுதையும் வெளியிடவேண்டும் என்று தோன்றிற்று. அப்போது என் பொறுப்பில் ‘யாத்ரா’ என்ற பத்திரிகை இருந்தது. நான் சிட்டிக்கு எழுதினேன். வசன சம்பிரதாயக் கதைப் புத்தகத்தின் பிரதியை அவர் அனுப்பிவைக்கக் கூடுமானால், அது முழுதையும் யாத்ரா பத்திரிகையில் வெளியிடலாம், இனியும் அது யாரும் அறியாத, படித்திராத, மாயப் பொருளாக இருக்க வேண்டியதில்லை என்று கேட்டிருந்தேன். அப்போது சிட்டிக்கு அது புத்தகமாக வெளிவரும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகச் சொன்னார். இது நடந்தது 1980களில். அது துரதிருஷ்டவசமாக நடக்கவில்லை. பெரும்பாலான சாத்தியக் கூறுகள் தமிழ் சமூகத்தில் எழுத்தாளன்முன் கைக்கெட்டும் தூரத்துக்கு சற்று அப்பால் தொங்கும் காரட்தான். இதில் நான் செய்யக்கூடியது ஏதும் இல்லை.
கடைசியாக ‘கண்டெடுத்த கருவூலம்‘ என்ற தலைப்பில் வசன சம்பிரதாயக் கதையும் அது போன்று 1898இல் ஞானபோதினி என்ற இதழில் பி. ஏ. பிரணதார்த்திஹரசிவ ஐயர், பி.ஏ. எல்.டி. அவர்கள் எழுதிய சிலப்பதிகார ஆராய்ச்சி என்னும் இதுவரை வெளித்தெரியாத சிலப்பதிகார ஆராய்ச்சி நூலையும் சேர்த்துப் பிரசுரிக்க முடிந்திருக்கிறது சிட்டியினால். ஆக, பிரதி கிடைத்த பிறகும் வசன சம்பிரதாயக் கதையை அச்சிட ஒரு தமிழ் பிரசுரம் தேடிக் கண்டுபிடிக்க 25 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகார ஆராய்ச்சிக்கோ 106 ஆண்டுகள் தவமாக அது நீண்டுள்ளது. வாழ்க தமிழ்! வளர்க தமிழரின் ஞானத் தேட்டை!
இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயம், உ.வே. சாமிநாதய்யரது சிலப்பதிகாரப் பதிப்பு அச்சான வருடம் 1872, அதன் பின் நமக்குத் தெரிய வந்த முதல் ஆராய்ச்சி நூல் பிரணதார்த்திஹரசிவ ஐயரது தான். அது பற்றி நமது முனைவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளில் இதன் தலைப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர யாரும் இதைப் படித்தவரில்லை. அது படிக்கக் கிடைத்திருப்பது இப்போது 106 ஆண்டுகளுக்குப் பிறகு,சிட்டியின் முயற்சியின் பேரில், அவரது 94ஆவது வயதில். இதுதான் அவரது ள்ஜ்ஹய் ள்ர்ய்ஞ். இன்று அவர் இல்லை. சில நாட்கள் முன்பு அவர் மறைந்துவிட்டார்.
இது வெளியானதும், சிட்டி எனக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்து, எழுதுகிறார். “இந்த முயற்சியின் ஆரம்பத்திலிருந்தே வசன சம்பிரதாயக் கதையில் ஆர்வம் காட்டிய வெங்கட் சாமிநாதனுக்கு, அன்புடன் சிட்டி” என்று எழுதி அனுப்பியுள்ளார். 26 வருடங்களுக்கு முன் அவரிடம்இது பற்றித் தொடர்பு கொண்டதை நினைவில் வைத்திருந்து, தனது 95ஆவது வயதில் கைப்பட எழுதுகிறார் சிட்டி.
இப்போது வசன சம்பிரதாயக் கதை முழுதும் என் கையில். முன்னர் இரண்டு பாராக்களே கிடைத்த இடத்தில் இப்போது புத்தகம் முழுதும்.
கதையைச் சுருக்கமாக சொல்லலாம். வறட்சி பற்றிய செய்தி கிடைத்ததும், அதற்கான பரிகாரங்கள் செய்ய வேண்டியது என்ன என்று விசாரித்து அப்பரிகாரங்கள் செய்து, சமஸ்தானத்தில் மழை பெய்கிறது. பயிர்கள் செழித்து, மக்களும், ஆடு மாடுகளும் வயிறார உண்டு மகிழ்ச்சி அடைகின்றன. இப்படிக் கதை கேட்கக் கூடாது. முத்துக் குட்டி ஐயரின் வாய் மொழியாக அவர் பாஷையில் கேட்கவேண்டும். பஞ்சம் பற்றியும் மக்கள் தவிப்பும், வறட்சியும், பின்னர் மழை பொழிவது, மக்கள் மகிழ்ச்சியும். கடைசியாக இவ்வளவு சுபிட்சத்தையும் கடாட்சித்த மன்னரின் புகழ் பாடப்படுகிறது. இது சுமார் ஒன்றரைப் பக்கத்துக்கு நீள்கிறது. மாதிரிக்குச் சில வரிகள்:
“அடியேங்களை இந்தப்படி வரிசைகுடிகளாக வைத்து ஆதரிக்கிற இராஜவர்க்கங்கள் மகாவிஷ்ணு பிம் பமென்கிறது சுபாவமே. அதுவல்லாமல் ஒருநிதானத்திலே எங்கள் துரையவர்கள் ஸ்ரீமது ராஜமானிய ராஜ ஸ்ரீ சிவகங்கை கர்த்தாக்கள் தங்களுக்கு அதிகமென்று சொல்லலாம். அதெப்படியென்றால் தாங்கள் ஆதி பரமேஸ்வரனை நோக்கித் தபசு பண்ணுகிறபோது போன கண்ணுக்குப் பொற்கண் வெகுமதி வாங்கினீர்கள். அடியேங்கள் துரையவர்கள் அந்தப் பரமேஸ்வரனுக்கு கண்ணுக்குக் கண்ணாயிருக்கிற சூரிய வங்கிஷத்திலே பிறந்தவர்களானதினாலே எங்கள் துரையவர்கள் அதிகம். ….
இந்த மாதிரியாக, சிவகங்கை சமஸ்தானாதிபதி இரவிகுல முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர், பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் சிவனுக்கும், இன்னம் உள்ள தேவர்கள் தேவதைகளுக்கெல்லாம் பெரியவர், ஒப்பீட்டில் இந்த கடவுளர்கள் எல்லாம் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவருக்கு சிறியவர்கள்தாம் என்பதை ஒன்றரைப் பக்கத்துக்குக் காரணங்களை அடுக்கிச் செல்கிறார் முத்துக்குட்டி ஐயர்.
கடைசியில், “இத்தனை பேரும் எங்களுக்குச் சகாயமானபடியினாலே அடியேங்களும் சுகமாயிருக்கிறோம். சுவாமியவர்கள் பரிநாமத்திலே இருக்கிற சேதிக்கும் அடியேங்கள் செய்யும் பணிவிடை ஊழியத்திற்கும் இது புத்தியென்று திருமுகம் பாலிட்டருள கட்டளையிட்டருள வேண்டியது. ஆகையாலே விண்ணப்பம்.”
மற்றவை எப்படியோ, இந்த கடைசி தோத்திரமாலை நம் இரண்டாயிர வருட மரபு சார்ந்ததே. சங்கப் பாடல்களில் கணிசமானஎண்ணிக்கையில் இப்படி புலவர் பெருமக்கள் பரிசு வேண்டி மன்னரைப் புகழ்ந்து பாடுதற்கு ஒரு எல்லை இருந்ததில்லை. அது முத்துக்குட்டி ஐயரிடமும் காணப்படுகிறது, ஒரு மரபு சிறப்பாகப் பேணப்பட்டு வருவதையே சாட்சியப்படுத்துகிறது. இந்த மரபு சிறிது சிதைவுறாமல், இன்று வரை, அதாவது 2006


தொகுக்கப்பட்ட பக்கம்: References

2 thoughts on “1775இல் எழுதப்பட்ட தமிழ் உரைநடைக் கதை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.