அப்துல் கலாம் – அஞ்சலி

abdul_kalamஅப்துல் கலாம் என்ற பேரை நான் முதன்முதலாக கேட்டபோது அவர் ஹைதராபாத் DRDO-வில் மூத்த அதிகாரியாக பணி புரிந்து கொண்டிருந்தார். அங்கே வேலை செய்த நண்பர்கள் கலாமைப் புகழ்ந்து பேசி கேட்டிருக்கிறேன். அவர் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே, பெரிய விஞ்ஞானி எல்லாம் இல்லை என்ற விமர்சனத்தையும் கேட்டிருக்கிறேன். ஒருங்கிணைப்பின் முக்கியத்துவம் புரிய ஆரம்பித்திருந்த காலம் அது. அது முக்கியமான அம்சம் என்று நண்பர்களிடம் வாதாடி இருக்கிறேன். ஆனால் அவர் ஜனாதிபதி எல்லாம் ஆவார் என்று நாங்கள் யாரும் கனவு கூட கண்டதில்லை.

ஒரு முன்னுதாரணமாக, மரியாதைக்குரிய மூத்தவராக, சாதனையாளராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் புதிய சிந்தனைகளை ஏற்படுத்திவிடவில்லை. ஆனால் vision எவ்வளவு முக்கியமானது என்பதை நன்றாக உணர்ந்திருந்தார், அதை மற்றவர்களுக்கு – குறிப்பாக இளைஞர்களுக்கு – உணர்த்தவும் செய்தார். அதுவே அவரது மாபெரும் சாதனை என்று நான் கருதுகிறேன்.

பி.ஏ. கிருஷ்ணன் என்னை விட சிறப்பாக சொல்லி இருக்கிறார் – அவரது வார்த்தைகளோடு நான் நூறு சதவிகிதம் உடன்படுகிறேன்.

Yes, he was not a great scientist. Yes, he was not even an ordinary thinker. Yes, he supported a strong and armed India. Yes, he supported Kudankulam and the neutrino projects. Yes, he wrote excruciatingly bad poetry.Yes, he advocated fancy schemes and dreamy projects which had no chance of success in the real world. But to the ordinary people of our country (and not just the middle class, as some ‘wise’ persons would like us to believe), who were in search of reliable icons, he was a pleasant,incorruptible, icon. A far, far better icon than the ones whose flags are being held aloft by some of the intellectuals of Tamil Nadu who could never be accused of having a strong sense of proportion, but who, today, appear more feeble minded than they ever did – if that is possible.


நண்பர் முத்துகிருஷ்ணனிடமிருந்து ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி:

அரசியல் செய்திகளில் அம்மாவிற்கும் தங்கைக்கும் ஆர்வம் இல்லாமல் போய் பல நாட்களாகின்றன. அம்மாவிற்கு இவையெல்லாம் எப்போதும் இப்படி தான் நடக்கிறது என தோன்றிவிட்டது, தங்கையை பொறுத்த வரை பெத்த ரெண்டு வானர கூட்டத்த மேய்ச்சு, ஸ்கூலுக்கு அனுப்புறதே தினந்தோறும் நடக்கும் ஒரு நுண்ணரசியல் சதிராட்டம் என்ற நிலையில் யார் வந்தா என்ன, யார் வராட்டா என்ன என்ற ஒரு நினைப்புதான்.

கடந்த வருடம் லோக் சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கையில் வீட்டில் தான் இருந்தேன். எதிர்பாராத அரசியல் திருப்பத்தை முகநூல் நண்பர்களிடன் ஆன்லைனில் பேசி ஆர்வத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் வீட்டில் ஒரு சலனமும் இல்லை, முதல் ஆச்சரியத்திற்க்கு பிறகு. மல்லி பொடி அரைக்கணும், தேங்காய் உரிக்கணும், உங்க அப்பா காலைல 11 மணிக்கு முன்னாடி வந்து சாப்பிட்டா எனக்கு அடுத்த வேலய பாக்கலாம் என வேலை போய்கொண்டிருந்தது. அதற்கு மேல் அரசியலுக்கும், சமூக நிகழ்வுகளுக்கும் ஒரு சராசரி வீட்டில் உள்ளவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைத்துக் கொண்டேன். அப்பா தினமும் நியூஸ் பார்ப்பதால் தினசரி செய்திதாள் வாங்குவதை நிறுத்தி ரொம்ப காலம் ஆகிவிட்டது. நான் ஊருக்கு போகும் போது எனக்காக வாங்கி வருவார். அவர் மேலோட்டமாக வாசித்து வைத்துவிடுவார்.
வாட்ஸ் ஆஃப் தங்கை என்னிடம் பிள்ளைகளுக்கு பல்லு விழுந்த போட்டோ, அவர்கள் legoவில் செய்த பொம்மைகள் செய்த படம், தினசரி அழுத்தத்தை போக்க என்னை வம்பிற்கிழுத்து நக்கல் emoticons அனுப்புவதற்கான ஒரு சேவை மட்டுமே என உபயோகித்து வருகிறாள், கடந்த இரு வருடங்களாக.

நேற்று காலை வேலைக்கு வந்தவுடன் அவளிடமிருந்து தொலைக்காட்சியில் திரு.அப்துல் கலாம் அவர்கள் காலமான செய்தியை அலைபேசியில் படம் எடுத்து அனுப்பினாள். அந்த படத்தை பார்த்தவுடன் இனம் புரியாத தனிமை கொஞ்ச நேரம் மனதை அப்பிக் கொண்டது. பிறகு தான் அதைக் குறித்து அவள் எதுவும் பேசவில்லை என்றும் உறைத்தது. அந்த படம் மட்டும் தான், வேறு ஒரு வார்த்தை அவளிடமிருந்து வரவில்லை. ஒரு அவசர பகிர்தல், பிறகு மௌனம் என்று தோன்றியது. நான் இருந்த மனநிலையில் அப்படி ஒரு அதீதமான நோக்கத்தை அவளின் செய்கைக்கு கொடுத்தேனா என தெரியவில்லை. ஆனால் இது முதல் முறை என என்னால் சொல்ல முடியும்.

அன்றைய தினம் வேலையில் ஓடி, இரவு அம்மாவை தொலைபேசியில் அழைத்தேன். அந்த நேரத்தில் திரு கலாம் மனதில் ஓரத்தில் போய்விட்டார். முகநூலை திறக்கும் போது பார்க்கும் நண்பர்களின் பதிவுகளின் மூலம் நியாபகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தார் ஆனால் விலகிக் கொண்டும் இருந்தார். அம்மாவிற்கு உடல்நிலை தற்காலிகமாக சரியில்லை. இப்போ எப்படி இருக்கு உடம்பு என நான் கேட்டவுடன் அவரிடமிருந்து வந்த பதில், “பெரியவர் போயிட்டாருடா”. எனக்கு அந்த வார்த்தையிலிருந்து நூலை பிடித்து புரிந்து கொள்ள ஒரு கணம் எடுத்தது. இதுவரை அரசியல் செய்திகளை, தலைவர்களை குறிக்கையில் ஒரு அக்கறையின்மை இன்றி அம்மா பேசியதில்லை (ராஜீவ் காந்தியை தவிர, அது என்றும் நிலைத்திருக்கும் குற்றவுணர்வு என தோன்றுவதுண்டு…) திரு. கலாம் எப்படி காலமானார் என எனக்கு தெரியாததை சொல்லி கொடுப்பதை போல செய்திகளை சொன்னார்கள். சமீபத்தில் குடும்பத்தின் மூத்த பெரியவர் ஒருவர் இறந்து விட்டார். தலை சீவிக் கொண்டிருக்கும் போது அப்படியே உட்கார்ந்து உயிர் பிரிந்துவிட்டது. அம்மாவிற்கு அவர் தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் இருந்தவர் எனலாம். அவருடைய இறப்பையும், திரு. அப்துல் கலாமின் இறப்பையும் ஒன்றின் அடுத்து ஒன்றாக வைத்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அளவில் நல்ல விதத்தில் இருவரும் போய் சேர்ந்த்தார்கள். தான் நம்பும் ஒரு தெய்வம் தன் இருப்பை நிறுவிச் சென்றது போன்ற ஒரு நிகழ்தல். பெரியவர் வழியாக இன்னொரு பெரியவரிடம் மனதளவில் அணுகி சென்ற ஒரு தருணம்.

திரு. அப்துல் கலாம் ஜனாதிபதியாக பத்விக்காலத்தை முடித்த பிறகு அவரைக் குறித்த எந்த செய்தியும், வீட்டின் தினசரி அவசரகதியின் திரையை கிழித்து உள்ளே வந்ததாக எனக்கு தினைவில்லை. மேன்மக்களை குறித்து செய்திகள் வந்தாலும் சரி, பேசப்படாவிட்டாலும் சரி ஏதோ ஒரு வழியில் அவர்களை மனிதர்கள் உணர்ந்து கொண்டேயிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் இழப்பை தங்களுடைய இழப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள்.

அம்மா இன்னொன்றும் சொன்னார்கள். அப்பா இன்று காலை கடைக்கு சென்று செய்திதாளை வாங்கி முழுவதும் வாசித்துக் கொண்டிருந்தார்.


கலாமின் மதம் அவரது தனிப்பட்ட விஷயமாகவே இருந்தது ஒரு நல்ல முன்னுதாரணம். தீவிர ஹிந்துத்துவர்கள் கூட அவரைப் பற்றி குறை சொல்ல முடியவில்லை. அதிதீவிர ஹிந்துத்துவரான ராஜனின் அஞ்சலி கீழே.

அப்துல் கலாம் தனது எளிமையினாலும் இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது கனவுகளினாலும் அதை இந்தியாவின் இளைஞர்களிடம் கொண்டு சேர்த்த முயற்சிகளினாலுமே இன்று தேசம் முழுவதும் தங்கள் சொந்த உறவினர் ஒருவரின் இழப்பாகக் கருதி மக்கள் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள். இந்தியாவின் ராக்கெட் தொழில் நுட்பத்தின் முன்னேற்றங்களிலும், அணு சோதனைகளிலும் அவரது பங்களிப்புகளும் முக்கியமானவையே ஆனால் அவை பொது மக்களின் அறிவுக்கு எட்டாதவை. அவர் ஜனாதிபதியான பின்னர் அவர் காட்டிய அடக்கமும், எளிமையும், மக்களிடம் கொண்ட தொடர்புகளுமே அவருக்கு தேசம் முழுவதும் இவ்வளவு பெரிய பிராபல்யத்தையும் அன்பையும் பெற்றுத் தந்துள்ளன. இன்று அவர் இறந்த நாளிலும் கூட அவரைப் பற்றி குறையாக ஒரு வார்த்தை பேசிய பின்னரே இரங்கல் தெரிவிப்பதை நமது pseudo-secularவாந்திகள் மரபாகக் கொண்டிருக்கிறார்கள். அவரைப் பற்றி பாராட்டி பேசினால் அது அவர்களின் மதச்சார்பின்மைக்குக் குந்தகம் விளைவித்து விடும் என்று நம்புகிறார்கள். இந்தியாவில் இவரைப் போன்ற தலைவர்கள் அதிலும் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பப் பின்ணணியில் இருந்து வரும் தீர்க்கதரிசனம் கொண்ட தலைவர்கள் அபூர்வமாகவே தோன்றுகிறார்கள்.


செக்கு மாட்டை வண்டியில் கட்டினால் சுற்றி சுற்றித்தான் வரும் என்று ஒரு பழமொழி உண்டு. சிலிகான் ஷெல்ஃபில் என்னதான் அஞ்சலி கிஞ்சலி என்று ஆரம்பித்தாலும் புத்தகங்களில்தான் வந்து முடிகிறது. கலாமின் சுயசரிதையான அக்னிச் சிறகுகள் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. கலாமின் சிறு வயதில் பலதரப்பட்ட மதத்தினர், ஜாதியினர் அவருக்கு உதவி இருக்கிறார்கள், இணக்கமாக இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதி என்னை ஓரளவு கவர்ந்தது. மற்றபடி பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. தவிர்த்துவிடலாம். கலாம் இளைஞர்களை ஊக்குவிக்க தன் எண்ணங்களை “இளைஞர் காலம்” என்ற பேரில் எழுதி இருப்பதும் தமிழகத்தில் ஓரளவு பிரபலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால் ஓரளவாவது சுவாரசியம் உள்ள புத்தகம் “Turning Points“-தான். அவர் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தை கொஞ்சம் ஆவணப்படுத்துகிறது. அவரது புத்தகங்களை ஒதுக்கிவிடலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:
இன்னொரு அதிதீவிர ஹிந்துத்துவரான ஜடாயுவின் அஞ்சலி
ஜெயமோகனின் அஞ்சலி