எம்எஸ்வி அஞ்சலி – ராணிமைந்தன் எழுதிய “மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.”

எம்எஸ்வி என் உள்ளம் கவர்ந்த இசையமைப்பாளர். அவருக்கு கொஞ்சம் தாமதமான அஞ்சலியாக இந்த பழைய பதிவை மீள்பதிக்கிறேன்.

எனக்குத் தெரிந்த இசை சினிமாப் பாட்டுதான். அதுவும் பழைய தமிழ் பாட்டு என்றால் உயிர். என் பதின்ம வயதுகளில் தனியாக மொட்டை மாடியில் ஒரு நாப்பது வாட் பல்ப் வெளிச்சத்தில் படிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு சென்னை ஒன்று ரேடியோ ஸ்டேஷனில் இரவு பத்திலிருந்து பதினொன்று வரைக்கும் பழைய தமிழ் சினிமா பாட்டு கேட்டது இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கிறது. ஜி. ராமநாதன், கே.வி. மகாதேவன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சுதர்சனம், அப்போது உச்சிக்குப் போய்க் கொண்டிருந்த இளையராஜா எல்லாரையும் ரசித்துக் கேட்டாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்பினேஷன்தான் எனக்கு first among several equals. அதிலும் எம்எஸ்விதான் ட்யூன், ஆர்க்கெஸ்ட்ரேஷன் எல்லாவற்றுக்கும் பொறுப்பு என்று தெரியவந்தபோது எம்எஸ்வி ரொம்பவும் பிடித்துவிட்டது. சின்ன வயதில் ஒன்று மனதில் அழுந்திப் பதிந்துவிட்டால் அது மாறுவது கஷ்டம். இளையராஜா, பின்னால் ரஹ்மான் எல்லாரும் மேதைகள்தான், ஆனால் என் மனதில் எம்எஸ்விக்குத்தான் முதல் இடம். ராணிமைந்தன் இந்தப் புத்தகத்தில் அவருடைய ஆரம்ப கால வாழ்க்கை, அவர் பட்ட கஷ்டங்கள், அவருக்கு பாடல் எழுதும் கவிஞர்கள், நடிப்புலக ஸ்டார்கள், இயக்குனர்கள், பாடகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாருடனும் இருந்த உறவு, சுவையான சம்பவங்கள் எல்லாவற்றையும் புத்தகமாக எழுதி இருக்கிறார். இசையைப் பற்றிய டெக்னிகல் விஷயங்களோ, இல்லை குறை நிறை இரண்டையும் பார்க்கக் கூடிய வாழ்க்கை வரலாறோ இல்லை. எம்எஸ்வி இசைப் பாரம்பரியம் எதுவும் இல்லாதவர். ஆனால் சின்ன வயதிலேயே இசைப் பைத்தியம் பிடித்துவிட்டது. சினிமாப் பாட்டு கேட்பதற்காக டெண்டு கோட்டையில் முறுக்கு விற்றிருக்கிறார். சங்கீதம் சொல்லிக் கொடுக்கும் வித்வானிடம் எடுபிடி வேலை பார்த்திருக்கிறார். சினிமாவில் சேர படாத பாடு பட்டிருக்கிறார். சுப்பையா நாயுடு இவரது மெட்டுக்களை எடுத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அதே நாயுடுதான் இவருக்கு சிபார்சு செய்து சான்சும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். கண்ணதாசனோடு ஒரு ஸ்பெஷல் பந்தம் இருந்திருக்கிறது. வாலியைக் கை தூக்கி விட்டிருக்கிறார். எம்ஜிஆர் சினிமா ஃபார்முலாவின் முக்கிய பங்களிப்பாளர். சிவாஜி, இயக்குனர் ஸ்ரீதரோடு நல்ல உறவில் இருந்திருக்கிறார். ஹிந்தி இசை அமைப்பாளர் நௌஷத்தின் பாராட்டுக்காக ஏங்கி இருக்கிறார். ராணிமைந்தன் சுவாரசியமான பல நினைவுகளை இந்தப் புத்தகத்தில் பதிந்திருக்கிறார். இந்தப் புத்தகம் வாழ்க்கை வரலாறு இல்லை. இது எம்எஸ்வியின் புகழ் பாடும் புத்தகம். ஆனாலும் அவருடைய ஆளுமை வெளிப்படுகிறது. ஒரு சிம்பிளான, நன்றி உணர்வு மிகுந்த, இசை மட்டுமே தெரிந்த, அதை மட்டுமே தெரிந்து கொள்ள விரும்பியவர் என்பது புரிகிறது. சினிமா பிரியர்களுக்கு மட்டும்தான்.