யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” பற்றி வெ.சா.

(மீள்பதிப்பு)

ரொம்ப நாளாக – க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் இதைப் பற்றி பார்த்த நாளிலிருந்து – யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பிரிண்டில் இல்லை. அதிர்ஷ்டவசமாக வேங்கடகைலாசம் என்பவர் அரசி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத் தன்னுடைய தளத்தில் பதித்திருக்கிறார். மொழிபெயர்ப்பிலேயே யதுகிரி அம்மாளின் ஸ்டைல் எப்படி இருக்கும் என்று புரிகிறது. எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லாமல், ஒரு சிறு பெண்ணின் கண்ணில் பாரதி எப்படித் தென்பட்டாரோ அது அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். கிளாசிக்.

முதல் பகுதி இங்கே, இரண்டாம் பகுதி இங்கே.

இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதை விட வெங்கட் சாமிநாதன் எழுதி இருப்பதை கீழே தருகிறேன். அவருடைய கருத்தோடு நான் ஏறக்குறைய முழுமையாக இசைகிறேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை – Subramanya Bharati – a multi faceted genius – National Herald, New Delhi, Sunday, 11.9.1988 – விக்கிசோர்ஸில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து:

பாரதியின் ஆளுமை சிக்கலும் கூட்டுத் தொகுப்புமான ஒன்று. ஆனாலும் நம் மீது கொட்டப்பட்டுள்ள வண்டிச்சுமைக் குப்பை கூளத்திலிருந்து தானிய மணிகளைச் சிரமப்பட்டுப் பொறுக்கிய பின்னும் நமக்கு பாரதி என்னும் பன்முகத் தொகுப்பிலிருந்து அவரவர்க்குப் பிடித்த தேர்ந்தெடுத்த சிலவும் பின்னப்பட்டதுமே கிடைக்கும். பின் பாரதி என்ற உன்னத எழுச்சி அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் காட்சிகளின் நாடகம். வறுமைப்பட்ட ஜீவனம், என்று கைதாகலாம் என்ற பயத்தின் இடைவிடா துரத்தல், தேசீய இயக்கத்தின் அரசியலில் ஈடுபாடு, தட்டிக் கழிக்க முடியாத குடும்பப் பொறுப்பும் பாசமும், எல்லாம் கடைசியில் கஞ்சாவின் பிடியில் கொண்டு தள்ளுகிறது. பாரதி இறந்தபோது அவனுக்கு வயது 39தான்.

மலையாகக் குவிக்கப்பட்டுள்ள கூளத்திலிருந்து, ஏன் அதிலிருந்து பொறுக்கிக் கிடைத்த தானிய மணிகளிலும் கூட ஒரு வைரக்கல் கிடைக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்த வைரக்கல் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சாதாரண குடும்ப ஸ்த்ரீயிடமிருந்து. வீட்டில் கிடைத்த படிப்புதான் அவரது. இலக்கியக் கனவுகள் ஏதும் காணாதவர். தனக்கு இயல்பாக வந்த பகட்டற்ற சாதாரண தமிழில் பாரதியுடனான தன் நினைவுகளை கிட்டத்தட்ட நூறு பக்கங்களே கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

அதுவும் ஒரு புஸ்தக வெளியீட்டாளர் அவர் பாரதி பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அவருடைய தந்தையார் பாரதியோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் ஒரு சிறுமியாக பாரதியுடன் பழகிய விவரம் அறிந்து அவரை அந்நினைவுகளை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டதால் எழுதியது. யதுகிரி அம்மாள், அதுதான் அவர் பெயர், இதை எழுதியது 1939-ல், பாரதி இறந்து 18 வருஷங்களுக்குப் பிறகு. 1912-லிருந்து 1919 வரை அவர் பாரதி பற்றி அவர் நினைவில் மிஞ்சி இருந்தவற்றை எழுதியிருக்கிறார். அவர் பாரதியின் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழி. பாரதியின் வீட்டில் அவரும் ஒரு செல்லக் குழந்தை. அவருடைய தந்தையார் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், வ.வே.சு. அய்யர், பின் அவர்களுடன் பாண்டிச்சேரி வந்து சேர்ந்த அரவிந்தர், அப்போது தான் அரவிந்தர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து விடுதலை பெற்றிருந்தார், இவர்கள் எல்லோரும் பாரதியின் சகாக்கள். அப்போது நடந்தவற்றை சிறுமியான யதுகிரி உடனிருந்து பார்த்தவர்.

வேடிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளை எழுதப் பணிக்கப்பட்டபோது அவருக்கு வயது 40. அந்த சமயத்தில் தான் பாரதி திரும்பக் கண்டெடுக்கப்பட்டு, புதிதாக மதம் மாறியவனின் பக்தி வெறிபோல பாரதியைப் போற்றிப் புகழ்வதற்கும் அந்த சந்தடி சாக்கில் எழுத்தாளர்களும் தாங்கள் பாரதியை மீட்டெடுத்த தீர்க்கதரிசிகளாக தம் சுயசித்திரத்தைத் தீட்டிக் கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பத்தை இதில் கண்டார்கள். அந்த சமயத்தின் உணர்ச்சிப் பெருக்கிற்கும் உற்சாக வெள்ளத்திற்கும் பாரதியைப் பற்றிய அவர்கள் புகழாரமயமான மதிப்பீடுகள் வழியமைத்தனவே அல்லாது 1905 லிருந்து 1921 வரை அவர்கள் பாரதியை அறிந்தவற்றின் உண்மைப் பதிவாக இருக்கவில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு யதுகிரி அம்மாள் தன் இயல்பில் வரைந்திருந்த பாரதி பற்றிய நினைவுகள். அவருடைய நினைவுகளில் பதிந்திருந்தவை, தன் குழந்தைப் பருவத்திலிருந்து பதினாலோ பதினைந்தோ வயது வரையில் அவர் இதயத்தில் பாரதி பதித்துச் சென்றவைதான். அதை மீறி இப்போதைய புத்திபூர்வ அலசல்களோ சமாதானங்களோ, மிகையான சித்தரிப்போ இல்லாதவை. எனவே பாரதியின் செயல்களில் பல குழந்தை யதுகிரிக்கு புரிபடாது திகைப்பூட்டியவை. புரியாது கேட்கும் குழந்தைக்கு பதில் சொல்லும் அக்கறை பெரியவர்களுக்கும் இருப்பதில்லை. இந்த மாதிரி அசட்டுக் கேள்விகளெல்லாம் கேட்காதே என்று பெரியவர்கள் கண்டித்தது உண்டு. அவையெல்லாம் அந்த அசட்டுத்தனங்களாகவே இங்கும் பதிவு பெறுகின்றன.

பாரதியை இங்கு அவரது எல்லா உணர்ச்சி நிலைகளிலும், அதன் எதிர் எதிர் கோணங்களிலும் பார்க்கிறோம். ஒரு சமயம் அன்பே உருவான கணவனும், தந்தையுமாக. அதன் ஒரு கோடியில், தன் குழந்தைகளின் முன்னிலையிலேயே தன் மனவியுடன் காதல் மொழி பேசி கொஞ்சும் பாரதி. இதன் இன்னொரு கோடியில் தன் சொல்படி கேட்டே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சர்வாதிகாரப் போக்கு. தன் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை எவ்வளவு தரம் சொன்னாலும் புரிந்து கொள்ளாத மௌனம் சாதித்து தன் வழியே செயல்படும் மனைவியின் பழங்காலச் சிந்தனைகள். கடற்கரையில் மீனவர்கள் பாடும் பாட்டில் லயித்துப் போகும் பாரதி அவர்களிடம் சென்று அவர்களைத் திரும்பப் பாடச்சொல்லி அதை எழுதி வைத்துக் கொண்டு வீடு திரும்பிய பாரதி, தன் மனைவி குழந்தைகளிடம் சொல்வார்: “பார் இது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அலட்சியப்படுத்துகிற விஷயம் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்ற வரலாற்றையே சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் பாட்டு. வார்த்தைகள்தான் கொச்சையாக இருக்கின்றன”

அப்போதே அந்த மீனவர் பாடிய மெட்டில் தானே ஒரு பாட்டு எழுதி பின் பாடவும் செய்தார். அவரோடு குழந்தைகளும் சேர்ந்து பாடுகின்றன. யதுகிரிக்கு பாரதியின் இன்னொரு பாட்டு கிடைத்து விட்டது. இன்னொரு மெட்டும் கிடைத்து விட்டது. உடனே தன் நோட்டில் பதிவு செய்துகொள்கிறாள் சிறுமி யதுகிரி. தன் தந்தையைப் போல தன்னிடம் பாசத்தைப் பொழியும் பெரியவரிடமிருந்து இம்மாதிரி பரிசுகள் தினம் கிடைக்கும். இந்த யுகத்தின் மகா கவிஞரிடமிருந்து கிடைத்த ஒரு அமர கவிதையாக இல்லை. அந்த பிரக்ஞை யதுகிரிக்கு அப்போது இல்லை. பின்னர் தான் அது தெரியவரும். இப்போதைக்கு தான் சேகரித்துப் பாதுகாக்கும் பாடல் புத்தகத்தில் சேர்க்க இன்னும் ஒன்று. குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கும் போது, அல்லது வீட்டில் நடக்கும் சுபகாரியங்களின் போது யதுகிரியும் அவள் தோழிகளும் பாடுவார்கள். அதில் பாரதியும் சேர்ந்து கொள்வார். யதுகிரியின் சின்ன புத்தகத்தில் ஒரு இடத்தில் கூட மிகையான ஒரு சொல்லோ பொய்யான பாவனைகளோ கிடையாது.

இன்னொரு சமயம் வீட்டில் வேலைக்காரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டே நெல் குத்திக் கொண்டிருக்கிறார்கள். பாரதி அதைச் சிறிது நேரம் கேட்கிறார். பின் அவர் அந்த மெட்டில் தானும் ஒரு பாட்டு இயற்றிப் பாடத் தொடங்குகிறார். குழந்தைகள் ஆரவாரத்தோடு சூழ்ந்து கொள்கின்றனர். வேலைக்காரிகள் பாடிக்கொண்டு நெல் குத்திக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று நெல் குத்துவதை நிறுத்தி பாரதி அவர்கள் பாடுவதைக் கேலி செய்து பாடுவதாகச் சொல்லி பாரதியுடன் சண்டை பிடிக்கத் தொடங்குகின்றனர். தான் அவர்களைக் கேலி செய்யவில்லையென்றும், அவர்களிடமிருந்து அந்த மெட்டைக் கற்று தானும் பாடுவதாக அவர்களுக்கு எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கடைசியில் பாரதியின் மனைவி செல்லாம்மாள் வந்து அவர்களுக்கு விஷயத்தைச் சொல்லி சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. அந்த தின நிகழ்ச்சியும் யதுகிரியின் நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. யதுகிரி மனப்பாடம் செய்துகொள்ள இன்னொரு பாட்டு கிடைத்துவிட்டது. இம்மாதிரி பாரதி அவ்வப்போதைய தூண்டலில் உடன் இயற்றும் பாடல்கள் யதுகிரியின் பிஞ்சு மனதில் மிக ஆழமாக பதிந்துவிடுகின்றன. பல சமயங்களில் அவர் தன் நினைவில் பதிந்த பாடங்களே சரியானவை, ஏனெனில் அவை பாரதியே பாட தான் நேரில் கேட்ட பாடங்கள், பின்னர் அச்சில் வந்தவை பல இடங்களில் தவறாகப் பதிவானவை, என்று மற்ற பதிப்புகளில் உள்ள பாடபேதங்களைச் சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது.

இன்னம் சில சந்தர்ப்பங்களில், இதுகாறும் வெளிவந்துள்ள பாரதி கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறத் தவறியுள்ள பாரதி பாடல்கள் பலவற்றை யதுகிரி தன் நினைவிலிருந்து சொல்ல முடிந்திருக்கிறது. யதுகிரி மிக ஆசையோடு கவனமாக பாதுகாத்து வந்த அந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் புதுச் சேரியில் அடித்த புயலில் நாசமடைத்து போயின. அப்புயலில் புதுச்சேரி தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியது மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தண்ணீர் வற்றியதும், தமிழ் மண்ணின் இந்த நூற்றாண்டின் மகாகவி குடிசை இழந்த அந்த ஏழை ஜனங்களிடையே, அவர்கள் தென்னை மட்டைகளைக் கொண்டு திரும்பவும் குடிசை எழுப்புகிறவர்களோடு அவரும் வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு குடிசைக் கிழவி சொல்ல அவளுக்கு உதவிக்கொண்டு இருந்தார்.

பாரதிக்கு பாண்டிச் சேரி வாழ்க்கை போதும் போதும் என்றாகிவிடுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தன்னைத் தேடி வந்து துன்புறுத்தும் போலீசுக்குப் பயந்தே காலம் கழிகிறது. ஒருவருக்கும் தெரியாமல் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து தலைமறைவாகிறார். போலீசார் கையில் அகப்பட்டால் அவரைச் சிறையில் அடைத்து விடுவார்களே என்று செல்லம்மாள் பயப்படுகிறார். குழந்தைகளும் மற்ற பெரியவர்களும் செல்லம்மாளுக்கு சமாதானம் சொல்கிறார்கள். பயப்பட வேண்டாம், பாரதி ஜாக்கிரதையாக தன்னைக் காத்துக்கொள்வார் என்று. ஆனால் செல்லம்மாளுக்கு மனம் சமாதானம் அடைவதில்லை. “யார் கண்டார்கள். அவர் எதையாவது பார்த்து, திடீரென்று உற்சாகத்தில் உரக்க பாட ஆரம்பித்து விட்டால்? அவர் அகப்பட்டுக் கொள்ள மாட்டாரா? அவர் சுபாவம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே?” என்று கேட்கிறார். “அவர் இப்படிப்பட்ட சமயத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே செய்வாரா? என்றும் கேட்கிறார். சற்று நேரம் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். செல்லம்மாள் சொல்வது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். செல்லம்மாளை இப்படியெல்லாம் சொல்லி பொய் சமாதானம் செய்து வைக்க முடியாது. இம்மாதிரியான சாதாரண சம்பவங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் நாம் பாரதியின் கவித்வ ஆளுமையையும் மேதமையையும் தெரிந்து கொள்கிறோம். இந்த மாதிரி மாணிக்கச் சிதறல்களை ஒரு சிறுமியின் நினைவுகளிலிருந்துதான் பெற முடிகிறது. மிகப் படித்த அறிவாளிகள் பண்டிதர்கள் மலையாகக் குவித்துள்ள பாரதியின் கவித்வ விசாரணைகளில் மதிப்பிட்டு வார்த்தைப் பெருக்கில் காணமுடியாது.

பாரதி நினைவுகள் முடிவுறும் கடைசி வருடங்களில் யதுகிரி நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு பின் படுக்கையை விட்டு எழத் தொடங்கியதும், உடல் நிலை முற்றிலும் ஆரோக்கியமடைய, சூரியன் உதிக்கும் முன் காலை நேரத்தில் நீண்ட தூரம் நடந்து வந்தால் நல்லது என்று டாக்டர்கள் யதுகிரிக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அதன்படி யதுகிரி தன் தந்தையாரோடு காலை நேரத்தில் நடந்து செல்வார். அப்போது ஒரு நாள் தூரத்தில் யாரோ பாடுவது கேட்கிறது. அது கடற்கரையின் திசையிலிருந்து வந்தது. காலை நேர ராகமான பூபாளம் காற்றில் மிதந்து வருகிறது. பாட்டு வந்த திசையில் கடற்கரையை நோக்கி நடக்கிறார்கள். கிட்ட நெருங்க நெருங்க குரல் பரிச்சயமான குரலாக, கிட்டத்தட்ட பாரதியின் குரல் போலப் படுகிறது. கிட்ட நெருங்கினால் பாரதி ஒரு கட்டுமரத்தின் அருகே கிழக்கு நோக்கி உட்கார்ந்து கைகளை அகல விரித்து பலமாக ஆட்டிக்கொண்டும் சூரிய உதயத்தை எதிர் நோக்கிப் பாடிக் கொண்டிருக்கிறார்.

யதுகிரியின் தந்தை அங்கேயே சற்று தூரத்தில் நிற்கச் சொல்லி பாரதியின் அருகில் சென்று அவரிடம் என்னமோ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறார். பாரதியை அவர் கோபத்தோடு ஏதோ கண்டித்துப் பேசுவது போலத் தோன்றுகிறது. பின் அவர்கள் எல்லோரும் பாரதியின் வீடு நோக்கி நடக்கிறார்கள். வழி நெடுக யதுகிரியின் தந்தை பாரதியை ஆங்கிலத்தில் கடுமையாகக் கண்டித்துக் கொண்டு வருகிறார். பாரதியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது. அவர் மௌனமாகவே கேட்டுக்கொண்டு வருகிறார். எதுவும் பேசவில்லை. அப்படி பாரதி இருக்கவே மாட்டார். அது அவர் குணமல்ல. செல்லம்மாள் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு காணாமற் போன பாரதியின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். பாரதி எதுவும் பேசாமல் விரைவாக வீட்டிற்குள் நுழைகிறார். “பாரதி நேற்று இரவிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்று செல்லம்மாள் சொன்னாள். ஆனால் செல்லம்மாள் பாரதியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு பேரும் மௌனமாக இருக்கிறார்களே ஏன்? ” என்று யதுகிரி தன் தந்தையாரிடம் கேட்க, அவர் யதுகிரிக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. யதுகிரி இன்னும் சின்னக் குழந்தை. கள்ளங்கபடற்றவள். அவளிடம் இப்போது பாரதியின் தவறான நடத்தைகளையும், கஞ்சாப் பழக்கம் கொண்டிருப்பதையும் பற்றிச் சொல்லக் கூடாது. பாரதியின் குடும்பம் மிக கஷ்டத்தில் இருந்து வருகிறது. யதுகிரிக்கு கல்யாணம் நடந்து மைசூரில் இருக்கும் தன் மாமனார் வீட்டிற்குச் செல்கிறார். வெகு சீக்கிரம் பாரதியின் மரணத்தைப் பற்றிய செய்தி அவளுக்குக் கிடைக்கும்.

இந்த அழகிய சிறிய புத்தகம் ஒரு க்ளாசிக் என்று சொல்லவேண்டும். வேறு எந்த புத்தகமும், இதன் அழகிற்கும், மனதை நெகிழ்த்தும் பாவனைகளற்ற நடைக்கும், ஈடாக மாட்டாது. ஒரு குழந்தையின் மனதில் ஒரு மகா கவிஞனும் மாமனிதனும் வரைந்துள்ள சித்திரம் இது.

இந்த நினைவுகளை எழுதித் தரும்படி கேட்க யதுகிரி இதை எழுதியது 1939-ல். இந்த 100 பக்க சின்ன புத்தகம் வெளிவருவதற்கு அதன் பின் 15 ண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. கடைசியில் இது வெளிவந்தபோது, யதுகிரி உயிருடன் இல்லை. இதுதான் ஒரு மகாகவிக்கும், ஒரு க்ளாசிக்கிற்கும் தமிழ் நாட்டில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்.

சமீபத்தில் ஜெயமோகன் தமிழில் வந்த நல்ல வாழ்க்கை வரலாறுகளை பட்டியல் போடும்போது இதையும் குறிப்பிட்டிருந்தார்.

புத்தகத்துக்கு இப்போது மறுபதிப்பு வந்திருப்பதாகத் தெரிகிறது. சென்னை நியூபுக்லாண்ட்சில் கிடைக்கிறதாம். விலை முப்பத்தைந்து ரூபாய்.

வேங்கடகைலாசம் இந்தப் புத்தகம் சந்தியா பதிப்பகத்தில் கீழ்க்கண்ட விலாசத்தில் கிடைக்கிறது என்று தகவல் தருகிறார். கிடைப்பது ஆங்கில மொழிபெயர்ப்பா இல்லை ஒரிஜினலா என்று தெரியவில்லை.
Sandhya Padhipakam,
Old no. 77, New no. 57A, Behind ICICI Bank
53rd Street, Ashok nagar Channai.
Ph: 98411-91397

அரசி+வேங்கடகைலாசத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள், அரசி+வேங்கடகைலாசம்!

தொடர்புடைய சுட்டிகள்:

  • வெங்கட் சாமிநாதன் கட்டுரையின் மொழிபெயர்ப்பு – பாரதி எனும் பன்முக மேதை
  • பாரதி பற்றி அவரது மனைவி செல்லம்மாள் பாரதி
  • ஜெயமோகன் சிபாரிசு – தமிழில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகள்
  • ஜெயமோகன் பதிவு – பாரதியார் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள்
  • க. நா. சு.வின் படித்திருக்கிறீர்களா?
  • திலீப்குமார் பற்றி வெங்கட் சாமிநாதன்

    dilip_kumarதிலீப்குமார் கொஞ்சமே எழுதி இருந்தாலும் என் மனதுக்குப் பிடித்த எழுத்தாளர். ஒரு பத்து வருஷமாவது சென்னையில் அவரது புத்தகக் கடை எனக்கு ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலமாக இருந்தது. அவரைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய இந்த அறிமுகம் கண்ணில் பட்டது. தமிழ் விக்கிமூலத்தில் எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்தியதால் முடிந்த வரை பிழை திருத்தி இங்கே பதித்திருக்கிறேன். விக்கிமூலக் குழுவினருக்கு நன்றி!


    மொழிகளின் எல்லைகளைக் கடந்து – திலீப்குமார்

    வெங்கட் சாமிநாதன்

    இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலீப்குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத் தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்றுதொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும். சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்…) அப்பெயர்கள், கதாசப்தசதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன், அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ என்னவோ. ஆனால் இந்த இழையைப் பற்றிக்கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம் .

    நிகழ் காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும்தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்கள் தாம் எங்கிருந்து வந்தோம் என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய்மொழியில்தான் பேசுகிறார்கள் என்றபோதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்று தான். தமிழ் மொழி பேசுகிறவர்களானபோதிலும், டி.பி. கைலாசமும், மாஸ்தி வெங்கடேச ஐயங்காரும் கர்நாடகத்தில் வாழ்ந்ததால் கன்னடத்திலும், கேரளாவில் வாழ்ந்ததால் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் மலையாளத்திலும் எழுதுவது போலத்தான் இவர்கள் தமிழில் எழுதுவதும் இயல்பு. கடந்த பல நூற்றாண்டுகளாக, தென்னிந்திய மாநிலங்களிடையே இம்மாதிரியான இடம் பெயர்தலும் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்த வருவதனால், இது ஏதும் விசேஷமாக, புதுமையான ஒன்றாக கருதப்படுவதில்லை. வாழ்க்கையின் கதியில் மாற்றங்களில் இது இயல்பான நிகழ்வாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேடிக்கையாக இன்றைய நிகழ்வைச் சொல்லவேண்டும். இன்று தமிழில் வார்த்தைகளை அடுக்கி கவிதை எழுதுவதான பிரமையில் இருக்கும் செய்யுட்காரர்களில் பெரும்பாலோர், இன்றைய மலையாள கவிதைகளில் புழங்கும் சொற்களை தம் செய்யுட்களில் இடையிடையே கோர்த்து கேட்போரை தம் வார்த்தை ஜாலங்களால் மயக்கும் வித்தைகளில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில், ஒரு மலையாளம் பேசும் கவிஞர், சுகுமாரன், அந்த மலையாளக் கவிதைகளில் காணும் சொற்கூட்டங்களை பிரக்ஞை பூர்வமாகவே ஒதுக்கிவிடுகிறார். அவரது சாதாரண தமிழ். அந்த சாதாரண தமிழ், ஏதோ செயற்கையான அலங்காரங்களில் உயிர்ப்பின்றி மயங்கிக் கிடக்கும் சமூகத்தின் கூட்டு மனவியாதிக்கு ஒரு மாற்றாக வந்து சேர்கிறது. இது போன்ற ஒரு விசேஷமாகத்தான் திலீப்குமாரின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னேன்.

    திலீப் குமார் தமிழில் பேசி எழுதும் ஒரு குஜராத்தி என்று சொல்வது அவருடைய எழுத்துக்களைப் பற்றியோ அவரது தனித்த ஆளுமை பற்றியோ எல்லவற்றையும் சொல்லிவிடுவதாகாது. அவருடைய ஆளுமையிலும், உணர்வுகளிலும், தமிழ் நாட்டின் பொதுஜன கலாச்சாரத்திலிருந்து அவரை அந்நியப்படுத்தும் கூறுகளும் உண்டு. அதே சமயம் அவர் பிறந்து வளர்ந்த ஏழை சமுதாயத்தோடு அவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கூறுகளும் உண்டு. அவர் எழுத்துக்கள் விவரிக்கும் அடித்தள மத்திய தள ஏழை மக்களையே எடுத்துக் கொள்ளலாம். இந்த கூட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பொறுக்கி வர்க்கமும் அடங்கும். இவர்களைப் பற்றிய திலீப் குமாரின் எழுத்துக்கள், இதே மக்கள் கூட்டத்தைப் பற்றி எழுதும் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின், மற்ற வெகு ஜன பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மாறுபட்டது. முற்போக்குகள் ஏழை மக்களைப் பற்றி எழுதுவது, தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் பிரசாரத்திற்காகத் தான். அவர்கள் அந்த சித்தாந்தத்ததைத் தழுவியதும் கூட, ஒரு சௌகரியத்திற்காகவே அல்லாது, அதை அவர்கள் உறுதியோடு நம்புவதன் காரணத்தால் அல்ல. அவர்கள் எழுத்துக்களைப் பார்த்தால், அந்த ஏழை மக்களின் ஏழ்மை தொடர்வதில் தான் அவர்கள் எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் அடங்கியிருப்பது போலும், மக்களது ஏழ்மை நீங்கத் தொடங்கினால், பின் எதை எழுதுவது என்ற சங்கடத்தில் ழ்ந்து விடுவார்கள் என்றும் தோன்றும். வேறு எவருக்காக இவர்கள் தம் கண்ணீரை உகுப்பார்கள், எந்த பொருளாதார அரசியல் அமைப்பை இந்த ஏழ்மைக்கு காரணமாக கண்டனம் செய்ய முடியும்? அவர்கள் ஏழ்மையில் தொடர்வதே இவர்கள் எழுத்து வாழ்க்கைக்கு சோறு போடும்.

    முற்போக்குகள் அல்லாத வெகுஜன பிராபல்ய எழுத்தாளர்களுக்கோ, இது அவர்களது கதைகளுக்கு வெறும் காட்சி மாற்றம். ஏதோ ஒரு பின்னணி வேண்டும் அவர்களது காதல் கதைகளுக்கு. ராஜ்கபூர்ஆவாரா‘வாகி காதல் பண்ணுவது போல. இதில் வெகு சுவாரஸ்யமான விஷயம், இந்த இரண்டு வகை எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எந்த மக்களைப் பற்றி எழுதுகிறார்களோ அவர்களைப் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். ஆனால், திலீப் குமார் அவர் எழுதும் மக்களிடையே பிறந்தவர், அவர்களை தம் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர். அவர்கள் ஏழைகளாகவும், சமூகத்தில் பின் தங்கியவர்களாகவும் இருப்பது தற்செயலான விஷயம்தான். வேடிக்கையாக, குஜராத்தி என்றால் தமிழர்கள் மனதில் எழும் பிம்பம் கொள்ளைப் பணக்காரனான வியாபாரி ஆகும். அதுவும் உண்மைதான். ஆனால், திலீப்குமார் சிறு பையனாக வாழ்ந்த வாழ்க்கை, எந்த ஏழைத் தமிழனதும் போலத்தான். அவர் பள்ளி சென்று படித்தது, மத்திய பள்ளிக் கல்வி வரைதான். அதற்குள் அவர் தந்தை காலமாகிவிட்டார். விதவையாகிவிட்ட அவரது இளம் வயதுத் தாய், பரம்பரை குடும்ப சாரத்தில் தோய்ந்தவர். சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தில் எல்லா வெளி உலக சம்பந்தங்களையும் துண்டித்துக் கொண்டவர். அவ்வளவையும் மீறி தன் மகனை வளர்த்து ஆளாக்கினார். அந்த சிறு வயதிலேயே திலீப் என்னென்னவோ எடுபிடி வேளைகள் எல்லாம் செய்து தானும் சம்பாதிக்க ஆரம்பித்து, சுயமாக தன்னைப் படிப்பித்துக் கொண்டார். இம்மாதிரியான நிலையில் வளரும் பையன், சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பாமரத்தனமும் கூச்சலும் நிறைந்த தரமற்ற வெகுஜன கலாச்சாரத்துக்கு இரையாகாமல் தன் நுண்ணிய உணர்வுகளை காத்துக்கொண்டது எப்படி என்பது ஆச்சரியப்படவேண்டிய அதிசய விந்தை தான். ஸ்டாலினின் அவ்வளவு நீண்ட கால யதேச்சாதிகாரத்தையும் மீறி போரிஸ் பாஸ்டர்நாக் போன்ற கவிஞர்களும், பீட்டர் கபீட்ஸா போன்ற பௌதீக விஞ்ஞானிகளும் எப்படி உயிர் வாழ்ந்தார்கள், தம்மைக் காத்துக் கொண்டார்கள்! தமிழ் வெகுஜன கலாச்சாரத்தின் அசுர பாமரத்தனம் அப்படி ஒன்றும் குறைந்த யதேச்சாதிகாரம் இல்லை.

    திலீப்குமாரும் எழுதுகிறார். எப்போதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதே, அதனால் எழுதுகிறார். தான் எழுத்தாளராக வேண்டும் என்ற தூண்டுதலால் அல்ல. அவர் எழுதத் தொடங்கிய இது வரையான 15 வருடங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் கொஞ்சமே. அதுவும் அவர் எழுத்துக்கள் வெகு சிலரையே சேரும் சிறுபத்திரிகைகளில்தான் பிரசுரமாயின. அவர் தான் அறிந்த பழகிய மக்களைப் பற்றி, அன்றாடும் வாழ்க்கையில் உறவாடும் மனிதர்களைப் பற்றி – மத்திய தர, அல்லது ஏழை தமிழ், குஜராத்தி மக்கள் – எழுதுகிறார். ஆனால் அவர் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு, அவர் வெளிப்படுத்தும் உலகம் அவரதே. அவர்களை, அசட்டு உணர்வுகளின்றி, சித்தாந்தப் பூச்சுக்களின்றி, அவர்களது ஏழ்மை, இயலாத்தன்மையை கவர்ச்சிகரமாக்காமல், பழகிய மனிதர்களாகவேதான் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த தந்திரங்கள் ஏதும் செய்திருந்தால், அதைத் திரும்பத் திரும்பச் செய்திருந்தால், அவர் பிரபலமாகியிருப்பார். வெற்றியடைந்த எழுத்தாளராகியிருப்பார். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.

    மூங்கில் குருத்து‘ என்ற தலைப்பை கொண்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில், அத்தலைப்புக் கதையில் ஒர் கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் அவஸ்தையைச் சொல்கிறது. அவன் இறந்த தந்தையின் சிராத்த தினம் மறுநாள். அவனது தந்தைக்கு மிகவும் பிரியமானது மூங்கில் குருத்து. அது என்னவோ வெளியூரிலிருக்கும் கல்யாணமான அக்கா தந்தது வீட்டில் இருக்கிறது சிரார்த்தத்திற்கு என்று. ஆனால் சிராத்தத்திற்கு வேண்டிய அரிசி இன்னும் மற்ற பொருட்கள் எல்லாமே இனித்தான் வாங்கியாக வேண்டும். அதற்கு கடை முதலாளியிடம் ஒரு ரூபாய் அட்வான்ஸாகக் கேட்க, அவர் முதல் நாள் இரவு கடையை மூடுவதற்கு முன் வாடிக்கைக்காரர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார். அந்த நாள் முழுதும் அந்த பாக்கியை வசூல் செய்ய அலைவதிலேயே கழிகிறது. அலைந்ததுதான் மிச்சமே ஒழிய ஒரு பைசா கூட வசூல் ஆகவில்லை. வெறுங்கையோடு வீடு திரும்பியவனுக்கு அம்மாவிடம் திட்டு கிடைக்கிறது. ஆக, மறுநாள் அந்த வருட சிரார்த்தம் நடக்கப் போவதில்லை. அந்த வீட்டில் மூங்கில் குருத்து வருஷத்தில் ஒரு நாள்தான் சமைத்தாகிறது. அதுவும் அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் அவர் நினைவில் அவர் சிரார்த்த தினத்தன்றுதான் சமைக்கப்படும். அது இருந்தும் பயனில்லாது போய்விட்டது. அதை இனி தூக்கி எறியத்தான் வேண்டும்.

    இன்னொரு கதை. ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது கதைகளில் காணும் மனிதாபிமானம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது அனுதாபம், முற்போக்கு கருத்துக்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுபவர். அவருக்கும் கஷ்டகாலம். என்னென்னவோ நிறைய கெட்ட பழக்கங்கள். கையில் பணமிருப்பதில்லை. கையால் அடிக்கடி தன் பணத்தேவைக்காக அறிந்தவர் அறியாதவர் எல்லோரிடமும் கையேந்திக் கடன் வாங்குவார். அவருடைய கதைகளைப் படித்து ரசிக்கும் ஒரு புதிய வாசகரின் பரிச்சயம் கிடைக்கவே அவரிடமும் தன் அப்போதைய கஞ்சா தேவைக்காகக் கடன் கேட்கிறார். ரசிகர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி வசமாகத் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்கிறார், மனிதாபிமானக் கதைகள் எழுதும் தன் அபிமான கதாசிரியரிடம்.

    திலீப்குமார் யாரைம் குற்றம் சாட்டுவதில்லை. யாரையும் ஐயோ பாவம்! என்று இரக்கத்திற்கு உரியவராக்குவதில்லை. தீய வழிகளில் செல்கிறவர்களைக் கூட கீழ்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஏதும் சொல்வது அவர்கள் மனம் நோகச் செய்யும் என்று பயப்படுவதாகத் தோன்றுகிறது. அதைத் தான் பார்க்காதது போல இருந்து விடுகிறார். ஓவ்வொருவருக்கும் அவரவர் குறைபாடுகள், பலவீனங்கள் உண்டு. அவை வறுமையின் காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த குறைபாடுகள் எப்போதும் இருக்கப் போவதில்லை. அவை பின்னால் நீங்கிவிடக்கூடும். ஆகவே அதை வைத்துக்கொண்டு கூச்சல் போடவேண்டாம், கோஷங்கள் இட வேண்டாம், அதை வைத்துக் கொண்டு தன் பிழைப்பை நடத்தவேண்டாம். எல்லாவற்றிலும் மோசமாக அவற்றைக் கதை பண்ணி கவர்ச்சியாக்க வேண்டாம். அவற்றோடுதான் வாழவேண்டும். கடைசியில் அடிப்படையான சக மனித உணர்வுகள் மேலெழும். கண்ணாடி என்ற கதையில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். ரகளை நடக்கிறது. கடைசியில் சமாதானம் ஆகி பிரிய தம்பதிகளாகவும் இணைகின்றனர். இந்த சங்கிலித் தொடர் மாறுவதில்லை.

    திலீப்குமார் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள். தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டிலாவது. தற்கால தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வளம் சேர்ப்பவர்கள்.

    ஆங்கிலம்: ‘Crossing the Language Barriers‘- Patriot, New Delhi, ஆகஸ்ட் 13, 1989


    தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்

    இணையத்தில் திலீப்குமார் சிறுகதைகள்: மூங்கில் குருத்து, கண்ணாடி, கடிதம், தீர்வு, கானல், தடம், அக்ரஹாரத்தில் பூனை

    க.நா.சு.வும் கருணாநிதியும் – வெங்கட் சாமிநாதன் நினைவு கூர்கிறார்

    (திருத்தப்பட்ட மீள்பதிப்பு)

    இந்தப் பதிவுக்கு காரணம் ஜெயமோகனின் ‘க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி‘ என்ற கட்டுரைதான். மிகச் சிறப்பான கட்டுரை. இருந்தாலும் இந்த வாரம் வெ.சா.வுக்கு என்று ஒரு முடிவில் இருப்பதால், ஒரு பழைய பதிவைத் தேடி எடுத்தேன். (ஜெயமோகன் கட்டுரையைப் பற்றி பின்னால் எழுதத் திட்டம்) பிறகு வெ.சா. க.நா.சு.வைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் என்று விக்கிமூலத்தில் தேடிப் பார்த்தேன். கருத்தும் பகைமையும் என்ற கட்டுரையில் சொல்கிறார்:

    க.நா.சு வோடு நிறைய நான் வாதிட்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் “அப்படியும் சொல்லலாம்” என்பார். செல்லப்பாவோடும்தான். அவர் க.நா.சு. போல விட்டுவிட மாட்டார். ஆனால் இந்த காரசார விவாதங்கள் என்றுமே எங்களிடையே பகைமைக்கு இட்டுச் சென்றதில்லை. கருத்துப் பரிமாற்றம் என்பது மிகவும் கொஞ்சப் பேரிடம்தான் சாத்தியமாகியிருக்கிறது. “சாமிநாதன் விஷயத்தை என்னிடம் விட்டு விடு, அதிலெல்லாம் தலையிட வேண்டாம்” என்று க.நா.சு பதில் சொன்னது என் காதில் விழுந்திருக்கிறது. “அவனோடு உங்களுக்கு என்ன பேச்சு?” என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த மனோபாவம்தான் தமிழ் எழுத்தாள சமூகத்தில் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கிறது. தன்னைப் புகழ் மறுக்கிறானா, வாதமிடுகிறானா, அப்போ அவன் தனக்கு எதிரிதான் என்ற மனோபாவம். சகஜமான, சினேகபூர்வமான கருத்துப் பரிமாற்றம் என்பது இங்கு சாத்தியமில்லாது இருக்கிறது. ஒரு முறை வலம்புரி ஜான், க.நாசு.வின் வீட்டில் அவரைச் சந்தித்து முன்னர் அவரைப் பற்றி தன் ‘தாய்” பத்திரிகையில் வசை என்று சொல்லும் தரத்தில் தாக்கியதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார். க.நா.சு.வின் வழக்கமான பதில், “அட சர்த்தான்யா, விடும்” என்பதுதான். இது க.நா.சு.வோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்குத் தெரியும். கருத்துத் தளத்துக்கு வளம் சேர்க்கும் ஆழமான கருத்துக்கள்தான் பயனுடையவை. பரிமாறிக் கொள்ளும் இருவர் ஆளுமையையும் சிறப்பிப்பவை. க.நா.சு வை அறிந்து கொள்ள முயலும் யாரும் இன்று வலம்புரி ஜான் என்ன எழுதியினார் என்று தேடிச் செல்லப் போவதில்லை.

    க.நா.சு.வை நினவு கூர்பவர்கள் வெகு சிலரே. அவர்களும் அனேகமாக கிழங்களாக இருப்பது கொஞ்சம் வருத்தம்தான். இங்கே ஒரு சிறப்பான நினைவு கூர்தல். பகுதி 1, 2, 3

    சத்தியமான படைப்புக்கும் வாழ்க்கைக்குமான ஒரு மிகச் சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார் (தஞ்சை பிரகாஷ்). இந்த நிகழ்ச்சி க.நா.சு., தஞ்சை பிரகாஷ், கருணாநிதி மூன்று பேரின் ஆளுமையையும் கச்சிதமாகக் காட்டுகிறது.

    “கலைஞர் கருணாநிதி ஒரு தடவை, “க.நா.சு. மிகப் பெரிய, ஒரு தலை சிறந்த விமர்சகர். அவரைக் குங்குமத்திலே விமர்சனங்கள் எழுதச் சொல்லுங்க. அவரோட நாவல் கூட ரெண்டு மூணு நம்ப குங்குமத்திலே தொடரா போடலாம். அவர தொடர்ந்து குங்குமத்திலே எழுதச் சொல்லுங்க. அவர நாம ஓரளவுக்கு ஊக்கப்படுத்தலாம்” அப்படீன்னு சொல்லச் சொன்னார்.

    எனக்கு ஒரே ஆச்சரியம், என்னடா இது! திடீர்னு க.நா.சு.வை இப்படி கௌரவப்படுத்தறாங்களேன்னு. அவரும் குங்குமத்திலே கிட்டத்தட்ட 64 பேரைப் பத்தி விமர்சனம் எழுதினாரு. ஓராண்டு கழிச்சி கருணாநிதிக்கு 61-ஆவது நிறைவு விழா வருது. ஒரு ரகசியத் தகவல் பாலசுப்ரமணியம் மூலமா, “பிரகாஷைக் கூட்டீட்டு வாங்க”ன்னு எனக்கு செய்தி வருது. நான் போனேன். மாறன் இருந்தாரு அங்க. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்வாங்க. அத அனுசரிச்சு நீங்க செய்யணும்னு என்னக் கேட்டுக்கிட்டார். பாலசுப்பிரமணியம் என்னை வெளீலே அழைச்சிட்டுப் போய், “ஒண்ணுமில்ல. தொடர்ந்து நாம க.நா.சு.வுக்கு மரியாதை செய்வோம். எந்தப் பத்திரிகையும் தராத அளவுக்கு கௌரவப்படுத்துவோம். தொடர்ந்து ஒவ்வொரு இதழ்லேயும் விமர்சனம் எழுதட்டும்” அப்படீன்னு சொன்னாரு. எனக்கு ரொம்ப சந்தோஷம்! அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு, “அடுத்த மலருக்கு க.நா.சு.வோட கட்டுரை வேணும், இலக்கிய சாதனையாளர்கள்னு 60 பேரைப்பத்தி இது வரைக்கும் க.நா.சு. எழுதியிருக்கார். இந்தப் பட்டியல்லே கலைஞர் இல்ல, இந்தப் பட்டியல்ல மு.க.வோட பேரு இருக்கணும்னு ஆசைப்படறாரு. அதோட க.நா.சு. தன்னைப் பத்தி எழுதணும்னு விரும்பறாரு. அதனாலே ஏதாவது ஒரு நாவலப் பத்தி, எதையாவது பத்தி ஒரு இரண்டு பக்கத்துக்கு இருந்தாக் கூடப் போதும். அவர ஒரு சிறந்த நாவலாசிரியர் அப்படின்னு அவர கௌரவிக்கணும்னு நாங்க நினைக்கறோம். அவர் சொல்ல நாங்க விரும்பறோம். க.நா.சு.வோட வால் நீங்க. அதுனால நீங்க சொன்னாக் கேப்பாரு..” அப்படீன்னாரு.

    எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. ஒரு பக்கம் கஷ்டமா இருந்தது. இன்னொரு பக்கம் சிரிப்பா இருந்தது. இவங்க எவ்வளவு தூரம் வெல கொடுத்து வாங்கறாங்கன்னு.

    ”இதுலே நான் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க?”ன்னு நான் கேட்டேன். ‘நீங்க ஒரு கட்டுரை வாங்கிக்கொடுக்கறது உங்க பொறுப்பு. உங்களோட நாவல் கூட ஒண்ணு போட்டுடலாம். உங்களுக்கும் நல்ல சம்பளம் கொடுத்துடலாம். கலைஞர் உங்க பேர்ல நல்ல நம்பிக்கை வச்சிருக்காரு. அதனால அது ஒண்ணும் சிரமமில்லே” அப்படீன்னாங்க.

    நான் க.நா.சு. வீட்டுக்குப் போனேன். அப்போ அவருக்கு வயசு எழுபது இருக்கும். மெட்ராசுலே வந்து தங்கியிருக்காரு. அவரு கிட்டே போயி, “ஒரு விஷயம் சொல்லணும். நீங்க ஏன் மு.க. பத்தி இது வர ஒன்னும் எழுதலை?”ன்னு கேட்டேன்.

    அதுக்கு அவரு “சொல்றதுக்கு ஒண்ணும் இல்லியே. அதுதான் ஒண்ணும் எழுதலே”ன்னாரு.

    “இல்லே. நீங்க அவர் படைப்பப் பத்தி ஒரு விமர்சனம் எழுதினா நிறைய பலன் கிடைக்கற மாதிரி தெரியுது. வாரம் 5000-க்கு மேலே வருமானம் வரும் போல இருக்கு. எழுதுங்களேன்”னேன்.

    “எழுபது வயசு வரைக்கும் சத்தியத்தத் தவிர வேறு எதையும் எழுதல. இனிப் போய் இந்தக் காரியத்தச் செய்யச் சொல்றியா?”ன்னாரு.

    “இல்லே. உங்கள கௌரவப்படுத்தறதாச் சொன்னாங்க” அப்படீன்னேன். என்ன ஒரு மாதிரிப் பாத்தாரு. “இது வரைக்கும் சுத்தமா இருந்துட்டேன். என்னத்த பெரிசா கட்டிக் காத்த? எழுது ஒண்ணும் தப்புல்லேன்னு சொல்லு. நான் எழுதறேன்”னு சொன்னாரு. நான் சுதாரிச்சிட்டேன். ஆகா! நம்ம ஆழம் பாக்கறாருன்னு.

    நான் சொன்னேன். “எழுதினா எழுதுங்க. இல்ல எழுதாட்டிப் போங்க. அது உங்க விருப்பம். அவங்க சொல்லச் சொன்னாங்க. நான் சொல்லிட்டேன் அவ்வளவுதான் என் வேலை”ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். அதுக்கப்பறமா க.நா.சு.-வோட விமர்சனக் கட்டுரைகள் குங்குமத்திலே உடனே நிறுத்தப்பட்டது.

    (கூடாரம், இதழ் 3. தபால் முத்திரை தெளிவில்லை. அநேகமாக செப். 2000)

    சத்யகாம் என்று ஒரு ஹிந்திப் படம். (தமிழில் பாலசந்தர் புன்னகை என்று எடுத்தார், அதுதான் அவர் இயக்கிய படங்களில் அவருக்கு மிகவும் பிடித்ததாம்.) அதில் யாருக்கும் வளைந்து கொடுக்காத தர்மேந்திரா மரணப் படுக்கையில் இருக்கும்போது அவரது “மனைவி” ஷர்மிளா தாகூர் ஒரு பேப்பரில் கையெழுத்துப் போடு, எனக்குப் பணம் கிடைக்கும், உன் மறைவுக்குப் பிறகு நான் என்ன செய்வேன் என்பார். அந்த காட்சியை நினைவுபடுத்தியது. கீழே உள்ள யூட்யூப் இணைப்பில் கிட்டத்தட்ட 2 மணி பதினைந்து நிமிஷம் கழித்து வரும் காட்சி.

    வெ.சா.விடமிருந்து இந்தக் கட்டுரையை வாங்கிப் போட்ட தமிழ் ஹிந்து தளத்துக்கு ஒரு ஜே!


    தொகுக்கப்பட்ட பக்கம்: க.நா.சு. பக்கம்

    தொடர்புடைய சுட்டிகள்:
    க.நா.சு. பற்றி வெங்கட் சாமிநாதன் – பகுதி 1, 2, 3
    க.நா.சு.வின் தட்டச்சுப் பொறி

    வ.ரா. பற்றி வெங்கட் சாமிநாதன்

    va_raaஇந்தக் கட்டுரையையும் விக்கிமூலத்தில்தான் பார்த்தேன். “ஆ” என்ற எழுத்து மீது என்ன கோபமோ, அது எப்போதும் வெட்டப்பட்டுவிடுகிறது. உறுத்துகிறது…

    விக்கிமூலக் குழுவினருக்கு நன்றி! (அங்கும் திருத்திவிட்டேன்.)

    மொழிபெயர்ப்பு நன்றாக இல்லை என்பதை சொல்லியாக வேண்டும். இருந்தாலும் வெ.சா.வின் எழுத்துக் கூர்மை தெரிகிறது.

    கட்டுரை 1989-இல் எழுதப்பட்டது என்று தெரிகிறது. வ.ரா.வின் பல பரிமாணங்களை வெ.சா. நமக்குப் புரிய வைக்கிறார். ஆனால் பாரதிக்கு சமமான ஆகிருதி என்பது எனக்கு உயர்வு நவிற்சியாகத்தான் தெரிகிறது. அவரைப் போலவே சீரான நடை கொண்டவர்களாக திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, கல்கி என்று பலர் இருந்திருக்கிறார்கள்.

    வ.ரா.வின் “நடைச்சித்திரம்” புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மஹாகவி பாரதியார் என்ற புத்தகமும் அருமையான ஒன்று. இணையத்தில் கிடைக்கிறது.


    வ. ரா. வின் நூற்றாண்டு நினைவில்

    வெங்கட் சாமிநாதன்

    தமிழ் நாட்டைப் பீடித்திருக்கும் மிக மோசமான துர்ப்பாக்கியம், கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக தமிழ் நாடு முழுதுமையே ஆக்கிரமித்துக் கொண்டு அதை தம் தரங்கெட்ட செல்வாக்கினால் கெடுத்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும்தான். இந்த இரண்டு சக்திகளும் விளைவித்திருக்கும் கலாச்சார, அறிவார்த்த சீரழிவை தமிழ் மக்கள் மிகுந்த ஆரவாரத்தோடும் மகிழ்ச்சியோடும் வரவேற்று வருகிறார்கள். வருடங்கள் கழிகின்றன. சீரழிவும் நாளுக்கு நாள் பெருக, அதற்கேற்ப மக்களின் இன்னும் அதிக உற்சாகத்தோடு அதை வரவேற்று மகிழ்கின்றனர்.

    இந்த இரண்டு சக்திகளும் நாட்டைக் கெடுக்கின்றன. தம் சுயநலத்தைப் பேணுவதும் தம் பிம்பத்தைப் பூதாகாரமாக வளர்த்துக் கொள்வதுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கம் கலப்படமற்றது. இவர்கள் நாட்டைச் சுரண்டுகிறார்களே தவிர சமூகத்திற்கு இவர்கள் ஏதும் கொடுப்பதில்லை. பாமரத்தனமும் இரைச்சலிடும் ஆபாசமும் நிறைந்த இந்த சமயத்தில், தன் அறிவார்த்த தைரியத்திற்கும், எந்த அபத்தத்தையும் எக்காரணம் தொட்டும் சகித்துக் கொள்ளாத புரட்சியாளனுமான, 1889-ல் பிறந்த வ.ரா. என்னும் எழுத்தாளனின் நூறாண்டு நினைவு தினம் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், யாராலும் கொண்டாடப்படாமலும் வந்த சுவடு தெரியாமல் கழிந்துவிடும். இன்றைய தமிழ் சமூகத்தின் குணத்தை நாம் நன்கறிந்திருப்போமானால், வ.ரா. வை தமிழ் சமூகம் நினைவு கொண்டிருந்தால் மட்டுமே நாம் ஆச்சரியப்படவேண்டியிருக்கும்.

    சுப்பிரமணிய பாரதியை ஒரு கவிஞராக மட்டுமே அவரது நெருங்கிய நண்பர்கள் அறிந்திருந்த காலத்தில், வ.ரா. பாரதியை வியந்து போற்றியவர். பாரதி இந்த நூற்றாண்டின் ஆரம்ப பத்துக்களில் புதுச்சேரியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பி வாழ்ந்து கொண்டிருந்தபோது, பாரதிக்கு உதவியாயிருந்த இளைஞர் அப்போதைய வ.ரா. பாரதியையின் வாழ்க்கையை எழுதிய முதல் புத்தகமே வ.ரா.வினதுதான். அது வெற்று வரலாறோ விமர்சனமோ அல்ல. பாரதி என்ற ஆதர்சத்தின் மதுவுண்ட பரவசம் அது. பாரதியின் தேச பக்திப் பாடல்களுக்காகவே கவி என்ற இடத்தை அவருக்குக் கொஞ்சம் யோசனையோடு பாரதியை சிலர் அங்கீகரித்த காலம் அது. அந்தச் சூழலில் வ.ரா. பாரதி என்னும் கவிஞருக்காகப் போராடியதும் விவாதித்ததும் தேவையான ஒன்றாகத்தான் இருந்தது. எனவே அது உணர்ச்சிவசப்பட்டது. சண்டைத் தொனி மேலோங்கியது. வ.ரா. பேசக் கிடைத்த மேடைகளில் எல்லாம், இருபதாம் நூற்றாண்டின் மகா கவி பாரதி என ஸ்தாபிப்பதில் தீவிரமாக இருந்தார். இன்று அந்த விவாதங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, இந்த விஷயத்திற்கு இவ்வளவு போரும் புழுதி கிளப்பலும் தேவையாயிருந்ததா என்று ஆச்சரியப்படத் தோன்றும். தேவையாகத்தான் இருந்தது அந்தச் சூழலில்.

    வ.ரா. பிறந்தது ஒரு பிராமணக் குடும்பத்தில். அதிலும் மற்ற பிராமணர்களை விட தாம் தான் உயர்ந்தவர் என்று தீவிரமாக நம்பும் வைஷ்ணவ குலத்தில் பிறந்தார் அவர். ஆனால் அவர் ஆஸ்திகரும் அல்ல. நாஸ்திகரும் அல்ல. அது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத மனப்போக்கு உள்ளவர். சாதி, மத வித்தியாசங்கள் பற்றிய பேச்சு எழுந்தாலே முள்ளம்பன்றி சிலிர்த்தெழுவது போல சீற்றம் கொள்பவர்.

    நாற்பதுக்களில், தீவிர நாஸ்திக பிரச்சாரமும், பிராமண எதிர்ப்பு சாதி ஒழிப்புப் பிரசாரமும் செய்து வந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரைப் பாராட்டி ஒரு சிறு புத்தகமும் வ.ரா. எழுதினார். அது பிராமணர்களிடையே மட்டுமல்லாது, உயர்ஜாதி ஹிந்துக்கள் பெரும்பான்மையினரது கசப்பையும் எதிர்ப்பையும் அது சந்திக்க வேண்டி வந்தது. தமிழ்நாட்டுப் பெரியார்கள் என்ற தனது புத்தகத்தில் ஈ.வே.ரா.வையும் தமிழ் நாட்டுப் பெரியார்களின் வரிசையில் சேர்த்துப் பாராட்டி எழுதினார். இப்புத்தகம் எழுதப்பட்டது 1945-46-ல். அப்போது ஈ.வே.ரா.வின் திராவிட இயக்கம் காங்கிரஸை எதிர்த்தது, பிரிட்டீஷ் அரசாங்கத்தை ஆதரித்தது. பின் வருடங்களில் திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த பலத்த வரவேற்பு அப்போது இருக்கவில்லை. திராவிட இயக்கத்திற்கு அப்போது தமிழ் நாட்டில் தீவிர எதிர்ப்பு இருந்தது. வ.ரா.வுக்கும் ஈ.வே.ரா.வுக்கும் இடையே காணக் கூடும் ஒரு பொது நோக்கு சாதியை எதிர்த்த சமூக சீர்திருத்தமும் பழமைவாத எதிர்ப்பும்தான். இவற்றை மட்டும் பார்த்த வ.ரா.வுக்கு ஈ.வே.ரா.வின் வசைகளும். அவரது வாதங்களின் தரமற்ற குணமும், பிராமணர்களை மாத்திரம் குறி வைத்த, பார்வை குறுகிய ஜாதி எதிர்ப்பு, நாஸ்திகம் போன்ற எதையும் பார்க்கத் தவறினார். நடைமுறையில் ஈ.வே.ரா.வின் ஜாதி எதிர்ப்பும் நாஸ்திகப் பிரசாரமும் பிராமண எதிர்ப்பு என்ற அளவிலேயே இருந்தது. அவரது நோக்கமே அந்த அளவில் குறுகியதுதான். வ.ரா.வுக்கு அறுபதாண்டு நிறைந்ததை ஒட்டி, அவர் தம் வாழ்நாளில் தமிழ் இலக்கியத்திற்கும், சிந்தனைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி நடத்தப்பட்ட விழாவைப் பற்றி, ஈ.வே.ரா.வின் பிரசார தின இதழான விடுதலை அதைக் கிண்டல் செய்து தாக்கி நீண்ட தலையங்கமே எழுதியது ஈ.வே.ரா.வின், அவரது திராவிட இயக்கத்தின் சாரமான குணாம்சத்தைத்தான் வெளிப்படுத்தியது.

    வ.ரா. நாவல்கள் எழுதினார். வாழ்க்கையின் எல்லா தரப்பு, தரத்து மக்களை பற்றியும், வீட்டு வேலைக்காரிகள் முதல், அமைச்சர்கள் வரை அத்தனை பேரைப் பற்றியும் நடைச்சித்திரங்கள் என ஒரு புது வகை வடிவத்தைக் கையாண்டார். அவற்றில் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் தன் பார்வையை, விமர்சனத்தையும் தன் சிந்தனைகளையும் வெளிப்படுத்தினார். அவரை ஒரு சிருஷ்டி எழுத்தாளர் என்பதை விட சிந்தனையாளர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அவர் ஒரு கோபக்கார மனிதராக இருந்தார். அவரது கோபம் சமூகத்தின் மீதும், அவரைச் சுற்றியிருந்த மனிதர்கள் மீதும், அவர்கள் கொண்டிருந்த பழமையாகிப் போன வாழ்க்கை மதிப்பீடுகள் எல்லாம் மீதுமாக இருந்தது. அவர் காலத்திய மனிதர்கள் தம் மூதாதையர்களிடமிருந்து பெற்ற எதையும் கேள்வியற்று, அவற்றைப் பற்றி சிந்திக்காது அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கண்டு கோபம் கொண்டார். அப்படி அவர்கள் ஏற்றுக்கொண்ட பழம் மதிப்புகளும், நடைமுறைகளும் எவ்வளவு கொடுமையானவை, நியாயமற்றவை என்பது பற்றி அவர்கள் சிந்திக்காதது கண்டு கோபம் கொண்டார். அவர் நாவலோ, நடைச்சித்திரமோ எதை எழுத ஆரம்பித்தாலும், அவர் கோபம்தான் பொங்கி எழுந்து அதை அவர் கருத்துக்களுக்கான மேடையாக்கிவிடும்

    சிந்தனையாளராக, அவர் தமிழ் மண்ணில் தனித்துத் தன் பாதையில் செல்பவராக இருந்தார். அவருடைய புரட்சிகரமான, வழக்கத்துக்கு மாறான கருத்துக்களை மற்றவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது மற்றி அவர் கவலைப்பட்டவரில்லை. அவர் கருத்துக்களைச் சொல்ல அவர் கையாண்ட தமிழ் நடை, சின்னச் சின்ன அலங்காரமற்ற, எதையும் நேராக மனத்தில் உடனே பதிய வைக்கும் எளிய ஆனால் சக்தி வாய்ந்த நடை. சீண்டி விடப்பட்ட முள்ளம்பன்றி தன் உடல் சிலுப்பி முட்களை விரித்துத் தாக்கத் தயாராவது போலத்தான், வ.ரா.வின் சொற்கள் அம்புகளாகப் பாயும். அவர் எழுத்துக்களைப் பற்றிச் சொன்ன இந்த குணச்சித்திரம் வ.ரா. என்ற மனிதரைப் பற்றிச் சொன்னதாக எடுத்துக் கொண்டாலும் அதில் தவறு ஏதும் இராது. அவர் தன் எழுத்துக்களில் தன்னைத் தான் தன் சீற்றத்தைத் தான் கொட்டி அமைதி அடைந்தார். அவர் வெகு எளிதாக, அநாயாசமாக, வார்த்தைகளைத் தேட வேண்டாது, கருத்துக்களைச் சொல்வதில் சிரமமில்லாது, தயக்கம், யோசனை என்ற தடங்கல்கள் ஏதும் இன்றி ஒரு அடித்தல் திருத்தல் இல்லாது எழுதிவிடுவார். அவர் எழுத்தின் எளிமைத் தோற்றம் ஏமாற்றும். அவர் நிறைய எழுதிய இந்த நூற்றாண்டின் இருபது முப்பதுகளில், தமிழில் இவ்வளவு சாதாரண அன்றாட புழக்கத்தின் வார்த்தைகளைக் கொண்டு இவ்வளவு சக்தி வாய்ந்த வெடித்துச் சிதறும் எழுத்து சாத்தியமா என்று நினைத்துப் பார்க்கவில்லை யாரும். தன் எளிய வார்த்தைகளுக்கு அத்தகைய சக்தியை அளித்ததும் சிருஷ்டி சார்ந்த செயல்தான். இன்னும் சில விஷயங்களிலும் அவரது சிருஷ்டிகர ஆளுமை வெளிப்பட்டது. முப்பது நாற்பதுகள் நவீன தமிழ் இலக்கியத்தின், கலைகளின் மறுமலர்ச்சி காலம் என்றே சொல்ல வேண்டும். அந்த காலகட்டத்தில் மலர்ந்த எழுத்தாளர் பெரும்பாலோருக்கு (எல்லோருக்கும் என்று கூட சொல்லத் தோன்றுகிறது) அவர் தந்தை ஸ்தானம் பெற்றவராக இருந்தார். அந்த மறுமலர்ச்சி கால கட்டத்தில் தோன்றிய சிருஷ்டி எழுத்தாளர் கூட்டம் முழுதுக்குமே அவர் வழிகாட்டியாக, ஆதர்ச புருஷராக, தரவாளராக, அவர்களில் சிலரை அவரே கண்டெடுத்தவராக இருந்தார். இப்படி எழுத்துத் திறன்களை அவர் கண்டு வெளிக்கொணரும் ஒவ்வொரு சமயமும் அவர் காட்டும் உற்சாகமும் சொரியும் புகழுரைகளும் தன்னையறியாது வெளிவருவனவாக, இயல்பான ஒன்றாக இருந்த போதிலும் அதில் ஒரு நாடக பாவம் மேலோங்கியிருக்கும். நேரிலும் சரி, கடித பரிமாற்றத்திலும் சரி. இவ்வாறு நல்ல எழுத்துத் திறன் கொண்ட ஒருவரை வ.ரா. அறிய நேர்ந்து, அவரது எழுத்துத் திறன் மலர தடங்கலாக வேறு ஏதும் வேலையில் ஈடுபட்டவராக இருப்பின், அவரை அந்த வேலையை விட்டு சென்னைக்கு வந்து எழுத்திலேயே முழு நேரமும் ஈடுபடும்படி சொல்வார், வலியுறுத்துவார்.

    பின்னாட்களில் புகழ் பெற்ற, தமிழ் இலக்கியத்தில் தம் பெயர் ஸ்தாபித்த எத்தனையோ எழுத்தாளர்கள், தம்மிடம் மறைந்திருந்த எழுத்துத் திறனைக் கண்டுபிடித்ததும், அவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லி அவர்களை நம்பிக்கை கொள்ள வைத்து உற்சாகப்படுத்தியதும் வ.ரா.தான் என்று தம் நினைவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். தாம் முன்னிருந்த வேலையை விட்டு வரமுடியாத, எழுத்தை நம்பி மேற்கொள்ள இயலாது இருந்த சூழ்நிலையில் வ.ரா.வின் அயராத தூண்டுதலும், கொடுத்த உற்சாகமும்தான் அவர்கள் எழுத்துத் துறைக்கு வர காரணமாக இருந்ததென்று சொல்லியிருக்கிறார்கள்.

    உப்பு சத்தியாக்கிரஹத்தில் ஈடுபட்டதன் காரணமாக அவர் கொஞ்ச காலம் அரசியல் கைதியாக அலிப்பூர் சிறை வாசம் அனுபவித்தார். சிறைவாசம் கழிந்து வெளியே வந்ததும், இன்றைய தமிழ் இலக்கியத்தின் நவீனத்வத்திற்கு காரணமாக இருந்த, உருவாக்கிய மணிக்கொடி பத்திரிகையின் ஆசிரியராகச் சேர்ந்தார். மணிக்கொடி பத்திரிகை தமிழ் மக்களிடையே தேசீய சுதந்திர உணர்வைப் பேணுவதற்கு என்று ஒரு அரசியல் மேடையாகத்தான் அது திட்டமிடப்பட்டது, தொடங்கப்பட்டது. ஆனால் வ.ரா. அதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றதும், தேசிய உணர்வும் சுதந்திரப் பிரக்ஞையும், வெடித்துச் சிதறி அதன் தீக்கங்குகளை, சமூகம், இலக்கியம், கலை என எல்லாத் தளங்களிலும் வீசி பொறி பற்றச் செய்தது. இது வரை காணாத திசைகளில் எல்லாம், அப்பொறி பற்றியது. அவ்வாறு பொறி தெரித்து விழுந்தது சிருஷ்டி இலக்கியத்திலும்.

    பின்னர் இது மணிக்கொடி காலம் என்றே அறியப்பட்டது. 1910-20 இருபதுகளில் பாண்டிச்சேரியில் இருந்த காலத்தில் பாரதியின் கவிதா மண்டலத்தில் தான் கண்ட பாரதிதாசன் என்னும் அப்போது மலர்ந்து வந்த கவிஞனை தன் வழக்கமான சுபாவத்திற்கேற்ப, சென்னைக்கு வரத் தூண்டி அவரை மணிக்கொடி எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, மணிக்கொடியில் அவர் கவிதைகளையும் வெளியிட்டார். பின் வருடங்களில் பாரதிதாசன், திராவிட கழகப் பிரசாரகராக மாறி பிராமணரையும் காங்கிரஸ் கட்சியையும் எதிர்த்து பிரசார கவிதைகள் எழுதினார் என்பது தனிக்கதை. இருப்பினும் வ.ரா. தன் பார்வையிலும் நம்பிக்கைகளிலும் உறுதியாகவே இருந்தார். தளர்ந்தவரில்லை. தன் கருத்துக்களுக்குத் தானே பொறுப்பேற்றார். அவர் எவரிடமிருந்தாவது ஆதர்சம் பெற்றார் எனில் அவர் பாரதியைத்தான் சொல்வார். அவரது பார்வையும் கருத்துக்களும் அவரதே.

    தமிழ் நாட்டில் வெவ்வேறு துறைகளில் சிறப்பாகத் தம் பங்களிப்பைத் தந்தவர்கள் என்று பொது வாழ்க்கையில் கண்ட பத்துப் பேரைப் பற்றிய வ.ரா.வின் மதிப்பீடுகள் கொண்ட ஒரு புத்தகம் தமிழ் நாட்டுப் பெரியார்கள். இது வெளிவந்தது நாற்பதுகளில். இது என்ன அவ்வளவு சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயமா என்று தோன்றலாம். விஷயம் என்னவென்றால், வ.ரா. வின் பெரியார்கள் என்ற மதிப்பீட்டில் ஒருவர் ஈ.வே. ராமசாமி நாயக்கர். திராவிட கழத்தைத் தோற்றுவித்த அக்கழகத்தின் தலைவர். தமிழ் நாடு முழுதும் தேசீய உணர்வு பெருகிப் பொங்கி எழுந்த கால கட்டத்தில், வேண்டாத ஒரு உறுத்தலாக இருந்தவர். என்.எஸ். கிருஷ்ணன் என்ற சினிமா நகைச்சுவை நடிகர். கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்த பஃபூன் என்ற சித்திரம்தான் அக்காலத்தில் என்.எஸ். கிருஷ்ணன் பற்றி எழுந்திருக்கும். கே.பி. சுந்தராம்பாள் இன்னொருவர். நாடகங்களில் பாட ஆரம்பித்து சினிமாவிலும் பாடிக்கொண்டிருந்த நடிகை. எவரிடமும் சிட்சைஷயின்றி தானே சங்கீதம் கற்றவர். உச்ச ஸ்தாயியில் ஆயிரம் பேர் கேட்க பிசிறில்லாமல் பாட வல்லவர். சுதந்திரத்திற்கு முந்திய அக்கால காங்கிரஸ் கட்சியின் பிரசார மேடைகளில் தேசீய பாடல்களைப் பாடுபவர். இன்று கூட, கே.பி.சுந்தராம்பாள், என். எஸ். கிருஷ்ணன் போன்றாரை தமிழ் நாட்டுப் பெரியார்கள் என்று சொல்வதா என்று கேட்பவர்கள் கட்டாயம் இருப்பார்கள். ஆனால் 45 ஆண்டுகளுக்கு முன் வ.ரா. அவர்களைத் தமிழ் நாட்டுப் பெரியார்களாக கணித்து அது பற்றி எழுதவும் செய்தார். அதுதான் வ.ரா.

    இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு பத்துக்களில் பாரதி பெரிய இலக்கிய சக்தியாகத் திகழ்ந்தார் என்றால், அடுத்த இரண்டு பத்துக்களில் பாரதிக்கு வாரிசாகக் கருதப்படவேண்டியவர் வ.ரா. கலாச்சாரத்தின் எல்லாத் துறைகளிலும் அவர் ஒரு தூண்டும் சக்தியாக இருந்தார். தமிழ் நாடு அவருக்கு மிகவும் கடன்பட்டுள்ளது. ஆனால் இன்றைய தமிழ் நாட்டின் பாச கலாச்சாரச் சீரழிவில், வ.ரா.வின் முக்கியத்துவமோ, தமிழ்நாடு அவருக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறது என்பதோ அது அறிந்திருக்கவில்லை. இரைச்சலிடும் சுவர் வாசகங்களும், சினிமா சுவரொட்டிகளுமாகக் காட்சியளிக்கும் தமிழ் நாட்டிற்கு அரசியல்வாதிகளும் சினிமா நட்சத்திரங்களும்தான் தெய்வங்கள்.

    வ.ரா. 1951-ல், தனது 62வது வயதில் இறந்து விட்டார். அவர் கண்டெடுத்த வளர்த்த எழுத்தாளர்களில் இருவர்தான் இப்போது நம்மிடையே உள்ளார்கள். சிட்டி என்று அறியப்படும், பெ.கொ.சுந்தரராஜனும், சி.சு. செல்லப்பாவும். தமது எழுபதாவது வயதை எட்டியுள்ள இவர்கள் இருவரும்தான் வ.ரா.வின் இந்த நூற்றாண்டு தினத்தில் அவரை நினைவு கொள்பவர்கள், அவரோடு பழகியவர்கள். இவர்களுக்குப் பின் வ.ரா.வின் பெயரை யாரும் கேட்கப் போவதில்லை.

    ஈ.வே.ரா வின் வழிவந்தவர்கள், அவர்கள் சொல்லிக் கொள்ளும் கொள்கைகளுக்கு உண்மையாகவிருப்பின், வ.ரா.வை தமிழ் நாடு மறக்காது நினைவுபடுத்துவர்களில் முன்னிற்பவர்களாக இருந்திருக்க வேண்டும். வ.ரா வின் எழுத்துக்களை வரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துச் செல்பவர்களாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் திராவிடக் கழகத்தினரும் அல்லது அதிலிருந்து பிரிந்துள்ள மற்ற கழகத்தினரும் ஜாதி வேற்றுமைகளையும் பிராமணப் பழமை வாதத்தையும் எதிர்த்த அளவு வ.ரா.வும் எதிர்த்துக் கண்டனம் செய்தவர்தான். திராவிட கழகத்திலிருந்து பிரிந்த கழகங்களில் ஒன்றல்லது மற்றது 1967 லிருந்து தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்துள்ளது.

    ஆனால் உண்மை என்னவென்றால் கழகங்கள் எதிர்த்த ஜாதீயம் பிராமணர்களை மாத்திரம் குறி வைத்ததுதான். உயர்ஜாதி ஹிந்து வகுப்பினரின் ஜாதீயம் பற்றி யாருக்கும் நினைப்பில்லை அது தொடப்படாமலேயே இன்று வரை சீரும் சிறப்புமாக வளர்ந்துள்ளது. இன்று வ.ரா.வின் ஜாதீய எதிர்ப்பையும் ஆஸ்திக எதிர்ப்பையும் நினைவு கொள்வது சங்கடமான காரியம். ஏனெனில், வ.ரா. ஒரு பிராமணராகிப் போனது; அவர் ஒரு கலைஞனின் அறிஞனின் மொழியில் பேசியது.

    ஆங்கிலம்: A Rebel against Orthodoxy: Patriot, New Delhi 15.10.1989.


    தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

    அம்பையைப் பற்றி வெங்கட் சாமிநாதன்

    (திருத்தப்பட்ட மீள்பதிப்பு)

    வெ.சா.வின் இன்னொரு கட்டுரையும் கண்ணில் பட்டது. அம்பையைப் பற்றிய நல்ல அறிமுகம். முன்பு திண்ணையில் வந்த சில சுட்டிகளோடு சேர்த்து மீண்டும் பதித்திருக்கிறேன்.

    அம்பையைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய இந்த தொடர்பதிவு (பகுதி 1, பகுதி 2)கண்ணில் பட்டது. சுவாரசியமான கட்டுரை. படியுங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

    பெண்ணிய எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் அம்பைதான். அம்பையின் “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” சிறுகதைத் தொகுப்பு எனக்கு ஒரு eye-opener. ஆணும் பெண்ணும் சமம் என்று எத்தனை பேசினாலும் அப்படி இல்லைதான். வாழ்நாளில் எத்தனை தோசை சுட்டாள் என்ற கேள்வி இன்று பலராலும் கேலி செய்யப்படுகிறது. ஆனால் அதில் கேலி செய்ய என்ன இருக்கிறது?

    அம்பையின் சிறுகதைகளில் எனக்குப் பிடித்தவை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, மல்லுக்கட்டு. அம்மா ஒரு கொலை செய்தாள் கதை சிலாகிக்கப்படுகிறது, ஆனால் அது எனக்கு ஒரு cliche ஆகத் தெரிகிறது. என்றாவது மீள்வாசிப்பு செய்துவிட்டு எழுத வேண்டும்.

    தொகுக்கப்பட்ட பக்கம்: அம்பை பக்கம்

    லா.ச.ரா. பற்றி வெங்கட் சாமிநாதன்

    ‘விடுமுறையில்’ – வெங்கட் சாமிநாதன் லா.ச.ராவைப் பற்றி எழுதிய ஒரு பிரமாதமான அறிமுகம் ஒன்று கண்ணில் பட்டது. ஆனால் மலிந்து கிடந்த எழுத்துப் பிழைகளால் படிக்க ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்குத் தெரிந்தவரை திருத்தி இங்கே பதித்திருக்கிறேன். (இப்போது விக்கியிலும் சேர்ந்து அங்கும் திருத்திவிட்டேன்.)



    டச்சு சைத்ரீகர் வான்கோ தனது சகோதரர் தியோவுக்கு எழுதிய கடிதங்கள் ஒன்றில் ஜப்பானிய உகியோ-யி கலைஞர்களைப் பற்றி எழுதுகிறார்: “தன் வாழ்க்கை முழுதும் அவன் ஒரு புல் இதழைத்தான் ஆராய்கிறான்: ஆனால் எல்லா தாவரங்களையும், மிருகங்களையும், பட்சிகளையும், மனித உருவங்களையும் அவனால் வரைந்துவிட ஒரு புல் இதழின் ஆராய்வில் சாத்யமாகிறது. இதற்குள் அவன் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. அவனுடைய ஆராய்ச்சி மேற்செல்லமுடியாது வாழ்க்கை முடிந்து விடுகிறது. ஏனெனில் வாழ்க்கை மிகக் குறுகியது.”

    ரவீந்திரநாத் டாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தைச் சுற்றிவந்து காணும் ஆசையில் ஒருவன் மேற்கொண்ட நீண்ட பயணத்தில் எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங்கள் கடந்து கடைசியில் களைப்புற்று தன் வீடு திரும்புகிறான். திரும்பியவன் கண்களில் முதலில் பட்டது, அவன் குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் படிந்து இருந்த பனித்துளி. அதில் அவன் சுற்றி வந்த உலகம் முழுதையும் கண்டு அவன் ஆச்சரியப்பட்டுப் போகிறான். சுற்றிய உலகம் முழுதும் அவன் காலடியிலேயே காணக் கிடைக்கிறது.

    La_Sa_Raலா.ச. ராமாம்ருதம் எழுத ஆரம்பித்த முப்பதுக்களின் பின்பாதியிலிருந்தே, இடைப்பட்ட நாற்பத்தைந்து வருட காலத்தில் அவரது எழுத்துலகம் அவரது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியே கால் வைத்ததில்லை. அவர் எழுதியதெல்லாம் அந்த குடும்ப எல்லைக்குட்பட்ட உலகைப் பற்றித்தான். அதன் என்றென்றுமான குடும்ப பாசங்களும், உறவுகளும் குழந்தைகள் பிறப்பும், வீட்டில் நிகழும் மரணங்களும், சடங்குகளும், பெண்களின் ஆளுமை ஓங்கி உள்ள உறவுகளும்தான் அவரது கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. அம்மாக்களும் மாமியார்களும் நிறைந்த உலகம் அது. அந்த மாமியார்களும் அம்மாக்களாக உள்ளவர்கள்தான். ராமாம்ருதத்திற்கு இந்த வட்டத்திற்கு அப்பால் உள்ள உலகம் இல்லாத உலகம்தான். இந்த வட்டத்திற்கு வெளியே சமூகத்தில், வெளி உலகில் நிகழ்ந்துள்ள, நிகழும் எதுவும் – சமூக மாற்றங்கள், தேசக் கிளர்ச்சிகள், போர்கள், புரட்சிகள் எதையும் – ராமாம்ருதமோ, அவர் கதைகளின் பாத்திரங்களோ, கேட்டிருக்கவில்லை போலவும் அவற்றோடு அவர்களுக்கு ஏதும் சம்பந்தமில்லை போலவும் அவர்கள் உலகில் காலம் உறைந்து விட்டது போலும் தோன்றும். ஆனால் அவர் கதைகளில் குடும்ப பாசங்கள், தளைகள், பிரிவுகள் என்ற குறுகிய உலகினுள்ளேயே நாம் காலத்தின் ப்ரவாஹத்தையும் பார்க்கிறோம்.

    முப்பதுகளிலிருந்து அவருடைய கதைகளில் திரும்பத் திரும்ப வரும் காட்சிகளும், பாத்திரங்களும் 1890களைச் சேர்ந்தவைகளாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்த உறவுகளின் உணர்வுகளையும், பாசங்களையும், ராமாம்ருதம் தனது தூரிகையில் தீட்டிவிடுகையில், அவற்றிலிருந்து எழும் மன உலகத் தேடல்களும் தத்துவார்த்தப் பிரதிபலிப்புகளும் 1990களில் வாழும் நம்மைப் பாதிக்கின்றன. 2090-ல் வாசிக்கக்கூடும் ஒரு வாசகனின் மன எழுச்சிகளும் அவ்வாறுதான் இருக்கும் என்று நாம் நிச்சயித்துக்கொள்ளலாம். கண்கள் ப்ரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாம்ருதம் நம்மைக் கேட்கக் கூடும், “ருஷ்யப் புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித்துளிதான் உலகத்தில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபில்லிலிருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் பிரதிபலிக்கத்தான் தவறிவிட்டதா?” இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலை வணங்கித்தான் ஆகவேண்டும். இத்தனிமை கலைஞனாக சுய ஆராய்வில் தனது ஆளுமைக்கும் நேர்மைக்கும், ஏற்ப அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டது. ஏனெனில் ராமாமிர்தம் அவர் காலத்திய சரித்திர நிகழ்வுகளோடும் இலக்கிய நிகழ்வுகளோடும் வாழ்பவர். அவர் தனது மத்திய தர பிராமண குடும்ப பிணைப்புகளையும் பாசங்களையும் பற்றியே எழுதுபவராக இரூக்கலாம். ஆனால் அவர் அறிந்த அவருக்கு முந்திய சமஸ்க்ருத, ஆங்கில, தமிழ் செவ்விலக்கியங்களுக்கெல்லாம் அவர் வாரிசான காரணத்தினால் அவற்றிற்கெல்லாம் அவர் கடமைப்பட்டவர். லா.ச. ராமாம்ருதம் பிதுரார்ஜிதமாகப் பெற்ற இந்த குறுகிய கதை உலகத்தை அவர் மிகக் கெட்டியாக பற்றிக் கொண்டுள்ள தகைமையைப் பார்த்தால் அதை ஏதோ மதம் என எண்ணிப் பற்றியுள்ளது போல் தோன்றும். அவர் எழுத்தில் காணும் நனவோடை உத்தி ஜேம்ஸ் ஜாய்ஸிடமிருந்து பெறப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ராமாம்ருதம் ஜாய்ஸின் எழுத்தையும் உத்தியையும் ஆபாசம் என்று உதறி விடுவார். அது போக ஜாய்ஸின் நனவோடை உத்தி துண்டாடப்பட்ட சப்த நிலையில் காண்பதற்கு எதிராக ராமாம்ருததின் நனவோடை உருவகங்களின், பிம்பங்களின் சப்த பிரவாஹம் எனக் காணலாம். (புத்ர ப. 9-10).

    க.நா. சுப்ரமண்யம் லா.ச. ராமாம்ருதத்தின் எழுத்துக்களைப் பற்றி ஒரு விசேஷமான கருத்து ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அதாவது, ராமாம்ருதம் இவ்வளவு வருஷங்களாக ஒரே கதையைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று க.நா.சு. சொல்கிறார். ராமாம்ருதமும் இதை சந்தோஷத்துடன் ஒப்புக்கொள்வார். “நான்தான் நான் எழுதும் கதைகள், என்னைப் பற்றித்தான் இவ்வளவு நாளும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறேன் நான்,” என்பார். சாஹித்திய அகாடமி பரிசு வாங்கிய சிந்தாநதிக்கு இணை என்று சொல்லத் தக்க, அதற்கு முந்திய புத்தகமான பாற்கடல் மிகவும் குறிப்பிடத்தக்க விசேஷமான புத்தகம். லா.ச. ராமாம்ருதம் பாற்கடலை தன் குடும்பத்தைக் குறிக்கும் உருவகமாகப் பயன்படுத்துகிறார். பாற்கடல் ராமாம்ருதத்தின் குடும்பத்தினதும் அவர் மூதாதையரதும் மூன்று தலைமுறை வரலாற்றை, காலவரிசையில் அல்ல, அவ்வப்போது நினைவு கூறும் பழம் சம்பவத் துணுக்குகளாக எழுதிச் செல்கிறார். அதில் அவர் நமக்கு அறிமுகப்படுத்தும் ஆண்கள், பெண்கள் எல்லோரும் நம்மில் வெகு ஆழமாக பதிபவர்கள். அவர்கள் எல்லோர்களுக்கிடையில் அவரது பாட்டனாரும் விதவையாகிவிட்ட அத்தைப் பாட்டியும்தான் காவிய நாயகர்கள் எனச் சொல்லத் தக்கவர்கள். பாற்கடல் ராமாமிர்தத்தின் வாலிப வயது வரையான நினைவுகளைச் சொல்கிறது.

    இதற்குப் பிந்திய கால நினைவுகளைத் தொகுத்துள்ள சிந்தாநதி ராமாமிர்தம் தன் எல்லா எழுத்துக்களிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தினரைப் பற்றியுமே எழுதி வந்துள்ளார் என்பதற்கு சாட்சிமாக நிற்கிறது. அவர்கள் எல்லோருமே அவரது போற்றுதலுக்கும் வணக்கத்துக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள். அவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் பலவும் ஒரு தேர்வில் அதில் இடம் பெறுகின்றன. இவற்றைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ராமாம்ருதம் பெரும் திகைப்புக்கும் ஆச்சர்யத்துக்கும் உள்ளாவார். நாற்பது வருடங்களாக அவர்களைப் பற்றி, கிட்டத்தட்ட நூறு கதைகளிலும், மூன்று நாவல்களிலும் எழுதிய பிறகும் கூட, இன்னமும் அவர்களைப் பற்றிய அவரது சிந்தனை வற்றிவிடவில்லை, அப்பிரமையிலிருந்து அவர் இன்னும் விடுதலை பெறவில்லை என்றுதான் அவருக்குத் தோன்றுகிறது. மற்ற எவரையும் விட, அவரது குடும்ப தெய்வமான பெருந்திரு, அவருடைய தாத்தா, கொள்ளுப் பாட்டி, பின் அவரது பெற்றோர்கள், இவர்களனைவரும் அவர் மீது அதிகம் செல்வாக்கு கொண்டுள்ளனர். இவர்கள்தான் அவருக்கு ஆதர்சமாக இருக்கின்றனர். இவர்களிலும் கூட குடும்ப தெய்வமான பெருந்திருவும் அவருடைய பாட்டியும்தான் அவர் சிந்தனைகளை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவரது தாத்தா ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். அவர்களது குடும்ப தெய்வம் பெருந்திரு பற்றி அவருக்குத் தோன்றியதையெல்லாம் அவர் கவிதைகளாக எழுதி நிரப்பிய நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவரைத் தவிர வேறு யாரும் அவற்றைத் தொடுவது கிடையாது. எழுதுவது என்ற காரியம், இன்னொருவருக்குச் சொல்ல என்று இல்லாமல், அதை ஒரு தியானமாகக் கருதுவது, எழுதுவதை கவிதைப் பாங்கில் எழுதுவது, சக்தி பூஜையும், வாழ்வையும் மரணத்தையும் கொண்டாடுவது போன்ற ராமாம்ருதத்தின் இயல்புகள் அனைத்தும் அவரது பாட்டனாரிடமிருந்து அவர் பெற்றார் போலும். இதை சாதாரணமாகச் சொல்லி விடக் கூடாது. அடிக்கோடிட்டு வலியுறுத்த வேண்டிய விஷயம் இது.

    ராமாம்ருதத்தின் எழுத்தில் காணும் அனேக விசேஷமான அவருக்கே உரிய குணாம்சங்களை அது விளக்கும். ராமாம்ருதம் தான் எவ்வளவு பக்தி உணர்வு கொண்டவர் என்பதோ, அதை எவ்வளவுக்கு வெளியே சொல்வார் என்பதும் நமக்குத் தெரியாது. ஆனால், அவரது கதைப் பாத்திரங்கள் மற்றவரையும் தம்மையும் உக்கிர உணர்ச்சிவசப்பட்ட வேதனைக்கு ஆட்படுத்துவது, ராமாமிருதத்தின் பேனாவிலிருந்து கொட்டும் வெப்பமும் சக்தியும் மிகுந்த வார்த்தைகள், குடும்பத்தைத் தாங்கிக் காக்கும், அதற்கு உயிர் கொடுக்கும், குடும்பத்தின் ஏற்றம் இறக்கங்களுக்கெல்லாம் தாம்தான் அச்சு போன்றும் இயங்கும் பெண் பாத்திரங்களின் சித்தரிப்பு (ராமாம்ருதம் தன் உள்மன ஆழத்தில், தென்னிந்திய சமூகமே அதன் நடப்பிலும் மதிப்புகளிலும் இன்னமும் தாய்வழிச் சமூகம் தான் என்ற எண்ணம் கொண்டவராகத் தெரிகிறது) அவரது ஆழ்மனதிலிருந்தே வெளிப்பட்டிருக்க வேண்டும்.

    திரும்பத் திரும்ப அவர் கதைகளில் காட்சி தரும் புஷ்பங்கள், குங்குமம், சடங்கு வழிப்பட்ட ஸ்நானங்கள், அக்னி, சாபங்கள், ஆசீர்வாதங்கள், நமஸ்காரங்கள் எல்லாமே சக்தி ஆராதனை சம்பந்தப்பட்ட படிமங்கள். இவை அவர் எழுத்துக்களில் நிறைந்து காணப்படுவதை வைத்துப் பார்த்தால் அவரது குடும்பத்தின் தேவி வழிபாடு தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வருவதன் இலக்கிய வெளிப்பாடுதான் ராமாமிருதத்தின் எழுத்து என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது எழுத்துக்களில் மிகச் சக்தி வாய்ந்ததும், பரவலாகக் காணப்படுவதுமான கருப்பொருள் மரணம்தான். இந்த சக்தி வாய்ந்த கரு அவரை மிகவும் கவர்ந்துள்ளது போலும். அவர் இந்த விஷயத்திற்குத்தான் தன் எழுத்துக்களில் அவர் திரும்பத் திரும்ப வருகிறார், இந்த நித்திய உண்மை அவரை ஆட்கொள்ளும் போதெல்லாம் அவர் தன்னை இழந்தவராகிறார். முரணும் வேடிக்கையும் என்னவென்றால், மரணத்தில்தான் ஒருவன் வாழ்க்கையின் மகத்துவத்தை அறிந்துகொள்கிறான்.

    ராமாம்ருதம் கதை சொல்லும் பாங்கே அவருக்கேயான தனித்துவம் கொண்டது. அவருடைய பாத்திரங்கள் நிச்சயம் நாம் அன்றாட சாதாரண வாழ்க்கையில் காணும் சாதாரண மனித ஜீவன்கள்தான். ஆனால் ராமாம்ருதம் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் கொதிநிலையில் அறிமுகமாகிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் நேர் எதிர்முனை நிலைகளில்தான் வாழ்கிறார்கள். அது சந்தோஷம் தரும் வேதனைகளும், வேதனைகள் தரும் சந்தோஷமும்தான். பெரும்பாலும் பின்னதே உண்மையாகவும் இருக்கும். எல்லாம் தடித்த கோடுகளில் வரையப்பட்ட சித்திரங்கள். இத்தகைய அறிமுகத்திற்குப் பிறகு ராமாம்ருதம் நம்மை அப்பாத்திரங்களின் மனப் பிரக்ஞைகளின் பாதைகளுக்கு, அவை அகன்ற சாலைகளோ, குறுக்கு ஒற்றையடிப்பாதைகளோ, சந்துகளோ, அவற்றின் வழி அவர்தான் இட்டுச்செல்கிறார். இவை கடைசியில் பிரபஞ்ச விஸ்தாரத்திற்கு இட்டுச் சென்று அவற்றின் இயக்கத்தின் அங்கங்களாகத் தான் மனித ஜீவன்களின் மற்ற உயிர்களின் இயக்கங்களும் சொக்கட்டான் காய்களாக விதிக்கப்பட்டுள்ளன, விதிக்கப்பட்டதை ஏற்று அனுபவிப்பதுதான் என்று சொல்கிறார் போலும். இந்லையில் ராமாம்ருதத்தின் பாத்திரங்களின் உணர்வுகளின் மனச் சலனங்களின் குணத்தையும் வண்ணங்களையுமே பிரபஞ்சப் பின்னணியும் ஏற்பதாகத் தோன்றுகிறது. இதில் எது எதன் பின்னணி, எது எதன் பிரதிபலிப்பு என்று சொல்வது கடினமாகி விடும். இது ஒரு பிரும்மாண்ட அளவிலான சலனங்களின், உணர்வுகளின் இசைத்தொகுப்பு.

    தரங்கிணி என்னும் அவரது ஒரு சிறுகதைத் தொகுப்பை ‘பஞ்சபூதக் கதைகள்‘ என்கிறார் ராமாமிர்தம். அதன் ஒவ்வொரு கதையிலும் பிரதானமான ஒரு பெண்ணின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது, அதன் ஒவ்வொரு முக்கிய திருப்பத்தையும் பின்னிருந்து பாதித்து மறைமுகமாக நடத்திச் செல்வது பஞ்சபூதங்களில் ஒன்று. ஒவ்வொரு கதையிலும் ஒன்று, நீர், அக்னி, ஆகாயம், பூமி, காற்று இப்படி. அந்தந்தக் கதையில் திரும்பத் திரும்ப வரும் படிமம், பெண்ணின் அலைக்கழிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையின் ஒவ்வொரு அடிவைப்பையும் தீர்மானிக்கும் சக்தி அந்த பூதங்களில் ஒன்றாக இருக்கும். இத்தொகுப்பு, ராமாம்ருதத்தின் எழுத்துத் திறனுக்கும், தரிசனத்திற்கும் சிறந்த அத்தாட்சி. ஆனால் இந்த குணங்களை ராமாம்ருதத்தின் எல்லா எழுத்துக்களிலும் காணலாம். நினைவலைகள், சொற்சித்திரங்கள், படிமங்கள் எல்லாம் அவருடைய கதை சொல்லும் வழியில் வெள்ளமெனப் பெருக்கெடுக்கும். அவை மனித பிரக்ஞை நிலையின் வெவ்வேறு அடுக்குகளில், படிகளில், முன்னும் பின்னுமாக, மேலும் கீழுமாகப் பாயும். அடிமன நினைவோட்டமாக ஒரு கணம் இருக்கும் ஒன்று அடுத்த கணம் விஷம் கக்கும் சொல்லம்புகளாக பிரக்ஞை நிலையில் உருக்கொள்ளும். அன்றாட வாழ்க்கையின் மனிதமன தர்க்கத்திற்கும், காரண காரிய சங்கிலித்தொடர் புரிதலுக்கும், சாவதானமான நின்று நிதானித்த மன ஆராய்ச்சிகளுக்கும் இங்கு இடம் இருப்பதில்லை. பிரக்ஞை நிலையில் அவர்கள் இரு கோடிகளில் எதிரும் புதிருமாக நின்று வெறி பிடிஒத்துக் கனல் கக்குவதைப் பார்க்கிறோம். ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? ஒரே பதில், அவர்கள் அப்படித்தான் விதிக்கப்பட்டிருக்கிறார்கள். கிரேக்க துன்பியல் நாடக பாத்திரங்களைப் போல. விதிக்கப்பட்ட அந்த முடிவுக்குத் தான் அவர்கள் விரைந்து கொண்டிருப்பார்கள். ராமாமிர்தத்தின் உலகம் தரும் அசாதாரண மாயமும் மிகுந்த பிரயாசையில் சிருஷ்டிக்கப்பட்ட வார்த்தைகளுமான உலகில், சாதாரண அன்றாட சம்பவங்கள் கூட வாழ்க்கையின் மிக முக்கிய திருப்பங்களாகின்றன, வெடித்துச் சிதறும் நாடகார்த்த விசேஷம் கொள்கின்றன. சாதாரண மனித பாத்திரங்கள், காவிய ரூபம் தரித்துக் கொள்கின்றன. சாதாரண அன்றாட வார்த்தைகள் தெய்வ அசரீரி வாக்குகளாக மயிர் கூச்சலெரியும் சக்தி பெற்றுவிடுகின்றன. எல்லோருமே ஏதோ பேய் பிடித்தவர்களைப் போல, பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். அம்மன் கோயில்களில் காணும் காட்சி போல. தலை விரித்த பெண் கால் சம்மட்டியிட்டு தரையிலமர்ந்திருக்கும் விரித்த தலையும் உடலும் வெறி பிடித்து ஆடக் காணும் காட்சி.

    ஏன், ராமாமிர்தமே கூட, எழுதும் போதும், நண்பர்களுடன் பேசும்போதும், சின்ன கூட்டங்களில் கிட்ட நெருக்கத்தில் பேசும்போதும் அவர் உணர்வு மேல் நிலைப்பட்ட மனிதர் தான். அவர் தன் எழுத்தக்கள் பற்றிப் பேசும்போது கூட அவரிடமிருந்து வரும் வார்த்தைகள் அவர் கதைகளின் பாத்திரங்கள் பேசும் பாணியில் தான் இருக்கும். ஒரே சமயத்தில் பயப்படுத்தும், ஆசீர்வதிக்கும், அன்பு பொழியும், அழகிய சிருஷ்டி மனத்தில் இருக்கும் ஊர்த்துவ தாண்டவம்தான் அது. அட்டகாசமான, உடைகளும் தோற்றமும் கொண்டு தன்னை மறந்த உணர்ச்சி வசப்பட்டு ஆடும் தெய்யம் போல. அல்லது உயர்த்திப் பிடித்த நீண்ட வாளுடன் தாக்கத் தயாராக வந்தது போன்று கோயில் இருளில் அங்குமிங்கும் பலத்த அடி வைப்புகளுடன் எண்ணெய் விளக்கின் ஒளியில் பகவதி அம்மனின் முன் நடந்து வரும் வெளிச்சப்பாடு போல. வெளித்தோற்றத்தில் பயமுறுத்தும் உடைகளும் ஆட்டமும் கொண்ட தெய்யம்தான் பக்தி கொண்டு சூழும் மக்களை ஆசீர்வதிக்கும் தெய்யம், தாயின் மடியிலிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு கனிவோடு ஆசீர்வதிக்கும் தெய்யமும். உணர்வு திரும்பிய வெளிச்சப்பாடு, பழைய சாதுவான மனிதன்தான். ராமாமிர்தமும் சிரித்த முகத்துடன் மெல்லிய குரலில் பேசும் சாது மனிதர்தான். அவர் எழுத்துக்களை மாத்திரம் படித்து மனதில் கற்பனை செய்து கொண்டிருக்கும் மனிதரா இந்த ராமாமிர்தம் என்று வியக்கத் தோன்றும். அவரது குலதெய்வம் பெருந்திருவும் அவரது கொள்ளுப்பாட்டி லக்ஷ்மியும் இன்னும் அவரைப் பிடித்தாட்டத் தொடங்கவில்லை. இரண்டு உணர்வு நிலைகளில் நாம் காணும் வெளிச்சப்பாடு போலச் சாதுவாக சிரித்த முகத்துடன் காணும் ராமாமிர்தம்.

    என்னதான் உணர்ச்சிகளின் வெப்பங்களும், சில்லிட வைக்கும் படிமங்களும் ராமாமிர்தத்தின் எழுத்துக்களில் நிறைந்திருந்த போதிலும் அவர் எழுத்து அதன் சாரத்தில் மனிதனையும் அவனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் நினைப்புகளையும் கொண்டாடும் எழுத்துத்தான்.

    கடந்த ஐம்பது வருடங்கள் நீண்ட தன் எழுத்து முயற்சிகளில் ராமாமிர்தம் தனக்கென ஒருமொழியையும் நடையையும் சிருஷ்டித்துக் கொண்டுள்ளார். அது அவரை மற்ற எல்லா எழுத்தாளர்களிடமிருந்து வேறுபடுத்தும். அவ்ரது கதை ஏதும் ஒன்றின் ஆரம்ப சில வரிகளின், வாக்கியத்தின் சொற்களையும் சொற்றொடர்களையும் படித்த மாத்திரத்திலேயே அவற்றை எழுதியது யாரென்று தெரிந்துவிடும். படிப்பவருக்கு ராமாமிர்தத்தைப் பிடிக்கிறதா இல்லையா எனபது ஒரு பிரச்சினையே இல்லை. படிக்கத் தொடங்கியதுமே அவரது நடையும் மொழியும் அவரை அடையாளப் படுத்தி விடும். ஒரு பாரா எழுதி முடிப்பதற்கு ராமாமிர்தத்திற்கு சில மணி நேரமாவது ஆகிவிடும். ஒரு கதை எழுதி முடிக்க சில மாதங்கள். அவரது ஐம்பது ஐம்பத்தைந்து வருடங்கள் நீளும் அவரது எழுத்து வாழ்க்கையில் இதுகாறும் அவர் எழுதியிருப்பது ஒரு நூறு கதைகளே இருக்கும். ஆனால் அவருக்கென ஒரு வாசகர் கூட்டம், அவரை வழிபடும் நிலைக்கு வியந்து ரசிக்கும் ஒரு வட்டம் அவருக்கு உண்டு. அவருடைய சொல்லாட்சிக்கும் மொழிக்கும் மயங்கி மதுவுண்ட நிலையில் கிறங்கிக் கிடக்கும் வட்டம் அது. ராமாமிர்தத்தின் கதைகளை மொழிபெயர்த்தல் என்பது சிரமமான காரியம்தான். அவரது மொழியும் நடையும் அவருக்கே உரியதுதான். மொழிபெயர்ப்பவர் எத்தனை திறமைசாலியாக இருந்தாலும் மொழிபெயர்ப்பு செயற்கையாகத்தான் இருக்கும். ராமாமிருதத்திற்கு மொழி என்பது ஒரு கருத்து வெளியீட்டுச் சாதனம் மாத்திரம் அல்ல, கருத்தை வெளியிட்ட பிறகு அது ஒன்றுமில்லாமல் போவதற்கு. அவருக்கு ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வடிவம், ஒரு ஆளுமை, கலாச்சார உறவுகளும் காட்சிப் படிமமும் கொண்ட ஒன்று. அதை ராமாமிர்தம் த்வனி என்கிறார். இவ்வளவு சிக்கலும் கலவையுமான சிருஷ்டிக்கப்பட்டுள்ள சொல் எப்படி இன்னொரு மொழியில் பெயர்க்கப்படும்? மொழிபெயர்ப்பில், ராமாமிர்தத்தின் தமிழ்ச்சொற்கள் அதன் மற்ற பரிமாணங்களை, அதன் முழு ஆளுமையை இழந்து நிற்கும். இதன் விளைவு, மொழிபெயர்க்கப்பட்ட ராமாமிர்தம் அதன் சாரத்தில் தமிழர் அறிந்த ராமாமிர்தமாக இருக்கப் போவதில்லை.

    ராமாமிர்தத்தின் உரைநடை எவ்வகைப்படுத்தலுக்கும் அடங்காதது. அதை உரைநடை என்று கூறக் காரணம் அது உரைநடை போல் எழுதப்பட்டிருக்கும் காரணத்தால்தான். இல்லையெனில் அதை கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். அதில் நிறைந்திருக்கும் படிமங்கள், குறியீடுகள், உருவகங்கள், பின் அது இயங்கும் சப்தலயம் காரணமாக அதை கவிதை என்று சொல்லவேண்டும். ஆனால் லயம் என்பது சங்கீதத்தின் லயமாகவும் இருக்கக் கூடும். ஏனெனில் அனேக சமயங்களில் அவர் சிருஷ்டிக்கும் நிழல் இசை உணர்வை எழுப்பும் அவரது உரை இசையின் லயத்தை உணர்த்திச் செல்கிறது. ஒரு வேளை மொழி யந்திரத்தனமாக அர்த்தமற்ற உபயோகத்தினால் நச்சுப்படுத்தப்பட்டதால், அதன் இழந்த அர்த்தச் செறிவையும் உக்கிரத்தையும் அதற்குத் திரும்பப் பெற்றுத் தர ராமாமிர்தம் எடுத்த முயற்சியாகவும் இருக்கலாம்.நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து போக வேண்டும் என்று கூட அவர் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

    திரும்ப பல இடங்களில் அவர் சொற்கள் வேதங்களின் மந்திர உச்சாடனம் போல ஒரு நிலைக்கு உயர்கிறது. குறிப்பாக ரிக்வேதம். அதன் கவித்வ சொல்லாட்சியும், இயற்கையும் மனிதனும் அதில் கொண்டாடப்படுவதும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான பரஸ்பர பிணைப்பை உணர்த்துவதும், அது தரும் பிரபஞ்ச தரிசனமும், இவை எல்லாவற்றோடும் அதில் முழுதுமாக விரவியிருக்கும் கவித்வமும். ராமாமிருதம் சமஸ்கிருதம் அறிந்தவரில்லை. பின் இவை அத்தனையையும் அவர் எங்கிருந்து பெற்றார்? நிச்சயமாக அவரது தாத்தாவிடமிருந்து, குடும்ப பாரம்பரியத்தில் வந்த பிதிரார்ஜிதம்.

    ராமாமிருதத்தின் எழுத்துக்களில் புராணங்களும் தொன்மங்களும் நிறைந்திருக்கும். காப்ரியேல் கார்சியா மார்க்வெசின் நாவல்களிலும் பாப்லோ நெருடாவின் கவிதைகளிலும் மச்சுப் பிச்சுவின் சிகரங்கள் தெரிவத்து போல. ஆனால் ராமாமிருதத்தின் எழுத்தில் அது ரிக்வேத உச்சாடனமாகத் தொனிக்கும். வெளித்தோற்றத்தில் ஏதோ பாட்டி கதை போலவிருக்கும் ஒன்றில் ஒரு கலாச்சாரத்தின் பிரவாஹத்தையே கதை என்னும் சிமிழுக்குள் அவர் எப்படி அடைத்துவிட முடிகிறது! அதுதான் ராமாம்ருதத்தின் கலை செய்யும் மாயம்.

    ராமாமிருதம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரு பிடிவாதத்தோடு சொல்லி வரும் இக்கதைகள், ஒரு பாமர நோக்கில் நவீனத்துமற்றதாக, ஃபாஷனற்றதாகத் தோன்றலாம். ஆனால் ராமாமிருதம் இம்மாதிரியான கவலை ஏதும் இல்லாதே தொடர்ந்து எழுதி வருகிறார். சமீப தமிழ் இலக்கியத்தில் பாட்டி கதைகள் என்ற தோற்றம் தரும் ஃபாஷன் அற்ற எழுத்துக்களைப் பிடிவாதமாக ஐம்பதாண்டுகள் எழுதிக்கொண்டு, வழிபாடு என்றே சொல்லத்தக்க ஒரு ரசிகர் கூட்டத்தை மது உண்ட கிறக்கத்தில் கிடக்கும் வாசகர் கூட்டத்தை வேறு எந்த எழுத்தாளரும் பெற்றது கிடையாது.

    கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது பற்றி ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மேற்கத்திய சிற்ப, சித்திர வரலாற்றில் தாயும் குழந்தையும் என்றென்றும் தொடர்ந்து வரும் படிமம். இன்றைய ஹென்றி மூர் வரை. நாம் வரலாற்றுக்கு முந்திய காலத்திற்கும் அதன் தெரிய வந்த ஆரம்பங்களுக்கே கூட திரும்பிப் போகலாம். ஆஃப்ரிக்க மரச் சிற்பங்களானாலும் சரி, மொஹஞ்சாதாரோவின் சுதை மண் சிற்பங்களானாலும் சரி. மனித மனத்தின் ஆழங்களில் உறைந்திருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு எத்தனையோ ரூபங்களில் தொடர்கிறது, 1990களில் கூட.

    ஆங்கில மூலம்: Indian Literature, No. 138, July-August, 1990 Sahitya Akademi, New Delhi



    தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா பக்கம்

    மீண்டும்…

    வேலைகள் முடியாவிட்டாலும் விடுமுறையை முடித்துக் கொள்ளலாமா என்று ஒரு யோசனை. நாளையிலிருந்து சுட்டிகள், அடுத்தவர் எழுதியதை மீள்பதிப்பது என்று லைட்டாக ஆரம்பிக்கிறேன்.