(மீள்பதிப்பு)
ரொம்ப நாளாக – க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா புத்தகத்தில் இதைப் பற்றி பார்த்த நாளிலிருந்து – யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். புத்தகம் பிரிண்டில் இல்லை. அதிர்ஷ்டவசமாக வேங்கடகைலாசம் என்பவர் அரசி என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத் தன்னுடைய தளத்தில் பதித்திருக்கிறார். மொழிபெயர்ப்பிலேயே யதுகிரி அம்மாளின் ஸ்டைல் எப்படி இருக்கும் என்று புரிகிறது. எந்தவிதமான மிகைப்படுத்தலும் இல்லாமல், ஒரு சிறு பெண்ணின் கண்ணில் பாரதி எப்படித் தென்பட்டாரோ அது அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். கிளாசிக்.
முதல் பகுதி இங்கே, இரண்டாம் பகுதி இங்கே.
இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதுவதை விட வெங்கட் சாமிநாதன் எழுதி இருப்பதை கீழே தருகிறேன். அவருடைய கருத்தோடு நான் ஏறக்குறைய முழுமையாக இசைகிறேன். அவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை – Subramanya Bharati – a multi faceted genius – National Herald, New Delhi, Sunday, 11.9.1988 – விக்கிசோர்ஸில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து:
பாரதியின் ஆளுமை சிக்கலும் கூட்டுத் தொகுப்புமான ஒன்று. ஆனாலும் நம் மீது கொட்டப்பட்டுள்ள வண்டிச்சுமைக் குப்பை கூளத்திலிருந்து தானிய மணிகளைச் சிரமப்பட்டுப் பொறுக்கிய பின்னும் நமக்கு பாரதி என்னும் பன்முகத் தொகுப்பிலிருந்து அவரவர்க்குப் பிடித்த தேர்ந்தெடுத்த சிலவும் பின்னப்பட்டதுமே கிடைக்கும். பின் பாரதி என்ற உன்னத எழுச்சி அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் காட்சிகளின் நாடகம். வறுமைப்பட்ட ஜீவனம், என்று கைதாகலாம் என்ற பயத்தின் இடைவிடா துரத்தல், தேசீய இயக்கத்தின் அரசியலில் ஈடுபாடு, தட்டிக் கழிக்க முடியாத குடும்பப் பொறுப்பும் பாசமும், எல்லாம் கடைசியில் கஞ்சாவின் பிடியில் கொண்டு தள்ளுகிறது. பாரதி இறந்தபோது அவனுக்கு வயது 39தான்.
மலையாகக் குவிக்கப்பட்டுள்ள கூளத்திலிருந்து, ஏன் அதிலிருந்து பொறுக்கிக் கிடைத்த தானிய மணிகளிலும் கூட ஒரு வைரக்கல் கிடைக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் இந்த வைரக்கல் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு சாதாரண குடும்ப ஸ்த்ரீயிடமிருந்து. வீட்டில் கிடைத்த படிப்புதான் அவரது. இலக்கியக் கனவுகள் ஏதும் காணாதவர். தனக்கு இயல்பாக வந்த பகட்டற்ற சாதாரண தமிழில் பாரதியுடனான தன் நினைவுகளை கிட்டத்தட்ட நூறு பக்கங்களே கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.
அதுவும் ஒரு புஸ்தக வெளியீட்டாளர் அவர் பாரதி பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அவருடைய தந்தையார் பாரதியோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் ஒரு சிறுமியாக பாரதியுடன் பழகிய விவரம் அறிந்து அவரை அந்நினைவுகளை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டதால் எழுதியது. யதுகிரி அம்மாள், அதுதான் அவர் பெயர், இதை எழுதியது 1939-ல், பாரதி இறந்து 18 வருஷங்களுக்குப் பிறகு. 1912-லிருந்து 1919 வரை அவர் பாரதி பற்றி அவர் நினைவில் மிஞ்சி இருந்தவற்றை எழுதியிருக்கிறார். அவர் பாரதியின் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழி. பாரதியின் வீட்டில் அவரும் ஒரு செல்லக் குழந்தை. அவருடைய தந்தையார் மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரியார், வ.வே.சு. அய்யர், பின் அவர்களுடன் பாண்டிச்சேரி வந்து சேர்ந்த அரவிந்தர், அப்போது தான் அரவிந்தர் அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து விடுதலை பெற்றிருந்தார், இவர்கள் எல்லோரும் பாரதியின் சகாக்கள். அப்போது நடந்தவற்றை சிறுமியான யதுகிரி உடனிருந்து பார்த்தவர்.
வேடிக்கையான ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளை எழுதப் பணிக்கப்பட்டபோது அவருக்கு வயது 40. அந்த சமயத்தில் தான் பாரதி திரும்பக் கண்டெடுக்கப்பட்டு, புதிதாக மதம் மாறியவனின் பக்தி வெறிபோல பாரதியைப் போற்றிப் புகழ்வதற்கும் அந்த சந்தடி சாக்கில் எழுத்தாளர்களும் தாங்கள் பாரதியை மீட்டெடுத்த தீர்க்கதரிசிகளாக தம் சுயசித்திரத்தைத் தீட்டிக் கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பத்தை இதில் கண்டார்கள். அந்த சமயத்தின் உணர்ச்சிப் பெருக்கிற்கும் உற்சாக வெள்ளத்திற்கும் பாரதியைப் பற்றிய அவர்கள் புகழாரமயமான மதிப்பீடுகள் வழியமைத்தனவே அல்லாது 1905 லிருந்து 1921 வரை அவர்கள் பாரதியை அறிந்தவற்றின் உண்மைப் பதிவாக இருக்கவில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு யதுகிரி அம்மாள் தன் இயல்பில் வரைந்திருந்த பாரதி பற்றிய நினைவுகள். அவருடைய நினைவுகளில் பதிந்திருந்தவை, தன் குழந்தைப் பருவத்திலிருந்து பதினாலோ பதினைந்தோ வயது வரையில் அவர் இதயத்தில் பாரதி பதித்துச் சென்றவைதான். அதை மீறி இப்போதைய புத்திபூர்வ அலசல்களோ சமாதானங்களோ, மிகையான சித்தரிப்போ இல்லாதவை. எனவே பாரதியின் செயல்களில் பல குழந்தை யதுகிரிக்கு புரிபடாது திகைப்பூட்டியவை. புரியாது கேட்கும் குழந்தைக்கு பதில் சொல்லும் அக்கறை பெரியவர்களுக்கும் இருப்பதில்லை. இந்த மாதிரி அசட்டுக் கேள்விகளெல்லாம் கேட்காதே என்று பெரியவர்கள் கண்டித்தது உண்டு. அவையெல்லாம் அந்த அசட்டுத்தனங்களாகவே இங்கும் பதிவு பெறுகின்றன.
பாரதியை இங்கு அவரது எல்லா உணர்ச்சி நிலைகளிலும், அதன் எதிர் எதிர் கோணங்களிலும் பார்க்கிறோம். ஒரு சமயம் அன்பே உருவான கணவனும், தந்தையுமாக. அதன் ஒரு கோடியில், தன் குழந்தைகளின் முன்னிலையிலேயே தன் மனவியுடன் காதல் மொழி பேசி கொஞ்சும் பாரதி. இதன் இன்னொரு கோடியில் தன் சொல்படி கேட்டே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் சர்வாதிகாரப் போக்கு. தன் சமூக சீர்த்திருத்த கருத்துக்களை எவ்வளவு தரம் சொன்னாலும் புரிந்து கொள்ளாத மௌனம் சாதித்து தன் வழியே செயல்படும் மனைவியின் பழங்காலச் சிந்தனைகள். கடற்கரையில் மீனவர்கள் பாடும் பாட்டில் லயித்துப் போகும் பாரதி அவர்களிடம் சென்று அவர்களைத் திரும்பப் பாடச்சொல்லி அதை எழுதி வைத்துக் கொண்டு வீடு திரும்பிய பாரதி, தன் மனைவி குழந்தைகளிடம் சொல்வார்: “பார் இது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அலட்சியப்படுத்துகிற விஷயம் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்ற வரலாற்றையே சுருக்கமாகச் சொல்கிறது இந்தப் பாட்டு. வார்த்தைகள்தான் கொச்சையாக இருக்கின்றன”
அப்போதே அந்த மீனவர் பாடிய மெட்டில் தானே ஒரு பாட்டு எழுதி பின் பாடவும் செய்தார். அவரோடு குழந்தைகளும் சேர்ந்து பாடுகின்றன. யதுகிரிக்கு பாரதியின் இன்னொரு பாட்டு கிடைத்து விட்டது. இன்னொரு மெட்டும் கிடைத்து விட்டது. உடனே தன் நோட்டில் பதிவு செய்துகொள்கிறாள் சிறுமி யதுகிரி. தன் தந்தையைப் போல தன்னிடம் பாசத்தைப் பொழியும் பெரியவரிடமிருந்து இம்மாதிரி பரிசுகள் தினம் கிடைக்கும். இந்த யுகத்தின் மகா கவிஞரிடமிருந்து கிடைத்த ஒரு அமர கவிதையாக இல்லை. அந்த பிரக்ஞை யதுகிரிக்கு அப்போது இல்லை. பின்னர் தான் அது தெரியவரும். இப்போதைக்கு தான் சேகரித்துப் பாதுகாக்கும் பாடல் புத்தகத்தில் சேர்க்க இன்னும் ஒன்று. குடும்பத்தினர் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கும் போது, அல்லது வீட்டில் நடக்கும் சுபகாரியங்களின் போது யதுகிரியும் அவள் தோழிகளும் பாடுவார்கள். அதில் பாரதியும் சேர்ந்து கொள்வார். யதுகிரியின் சின்ன புத்தகத்தில் ஒரு இடத்தில் கூட மிகையான ஒரு சொல்லோ பொய்யான பாவனைகளோ கிடையாது.
இன்னொரு சமயம் வீட்டில் வேலைக்காரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாடிக்கொண்டே நெல் குத்திக் கொண்டிருக்கிறார்கள். பாரதி அதைச் சிறிது நேரம் கேட்கிறார். பின் அவர் அந்த மெட்டில் தானும் ஒரு பாட்டு இயற்றிப் பாடத் தொடங்குகிறார். குழந்தைகள் ஆரவாரத்தோடு சூழ்ந்து கொள்கின்றனர். வேலைக்காரிகள் பாடிக்கொண்டு நெல் குத்திக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று நெல் குத்துவதை நிறுத்தி பாரதி அவர்கள் பாடுவதைக் கேலி செய்து பாடுவதாகச் சொல்லி பாரதியுடன் சண்டை பிடிக்கத் தொடங்குகின்றனர். தான் அவர்களைக் கேலி செய்யவில்லையென்றும், அவர்களிடமிருந்து அந்த மெட்டைக் கற்று தானும் பாடுவதாக அவர்களுக்கு எவ்வளவு சமாதானம் சொல்லியும் அவர்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். கடைசியில் பாரதியின் மனைவி செல்லாம்மாள் வந்து அவர்களுக்கு விஷயத்தைச் சொல்லி சமாதானம் செய்ய வேண்டி வருகிறது. அந்த தின நிகழ்ச்சியும் யதுகிரியின் நோட்டுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. யதுகிரி மனப்பாடம் செய்துகொள்ள இன்னொரு பாட்டு கிடைத்துவிட்டது. இம்மாதிரி பாரதி அவ்வப்போதைய தூண்டலில் உடன் இயற்றும் பாடல்கள் யதுகிரியின் பிஞ்சு மனதில் மிக ஆழமாக பதிந்துவிடுகின்றன. பல சமயங்களில் அவர் தன் நினைவில் பதிந்த பாடங்களே சரியானவை, ஏனெனில் அவை பாரதியே பாட தான் நேரில் கேட்ட பாடங்கள், பின்னர் அச்சில் வந்தவை பல இடங்களில் தவறாகப் பதிவானவை, என்று மற்ற பதிப்புகளில் உள்ள பாடபேதங்களைச் சுட்டிக் காட்ட முடிந்திருக்கிறது.
இன்னம் சில சந்தர்ப்பங்களில், இதுகாறும் வெளிவந்துள்ள பாரதி கவிதைத் தொகுப்புகளில் இடம் பெறத் தவறியுள்ள பாரதி பாடல்கள் பலவற்றை யதுகிரி தன் நினைவிலிருந்து சொல்ல முடிந்திருக்கிறது. யதுகிரி மிக ஆசையோடு கவனமாக பாதுகாத்து வந்த அந்த நோட்டுப் புத்தகங்கள் எல்லாம் புதுச் சேரியில் அடித்த புயலில் நாசமடைத்து போயின. அப்புயலில் புதுச்சேரி தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கியது மரங்கள் வேரோடு சாய்ந்தன. குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தண்ணீர் வற்றியதும், தமிழ் மண்ணின் இந்த நூற்றாண்டின் மகாகவி குடிசை இழந்த அந்த ஏழை ஜனங்களிடையே, அவர்கள் தென்னை மட்டைகளைக் கொண்டு திரும்பவும் குடிசை எழுப்புகிறவர்களோடு அவரும் வேலை செய்துகொண்டிருந்தார். ஒரு குடிசைக் கிழவி சொல்ல அவளுக்கு உதவிக்கொண்டு இருந்தார்.
பாரதிக்கு பாண்டிச் சேரி வாழ்க்கை போதும் போதும் என்றாகிவிடுகிறது. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து தன்னைத் தேடி வந்து துன்புறுத்தும் போலீசுக்குப் பயந்தே காலம் கழிகிறது. ஒருவருக்கும் தெரியாமல் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து தலைமறைவாகிறார். போலீசார் கையில் அகப்பட்டால் அவரைச் சிறையில் அடைத்து விடுவார்களே என்று செல்லம்மாள் பயப்படுகிறார். குழந்தைகளும் மற்ற பெரியவர்களும் செல்லம்மாளுக்கு சமாதானம் சொல்கிறார்கள். பயப்பட வேண்டாம், பாரதி ஜாக்கிரதையாக தன்னைக் காத்துக்கொள்வார் என்று. ஆனால் செல்லம்மாளுக்கு மனம் சமாதானம் அடைவதில்லை. “யார் கண்டார்கள். அவர் எதையாவது பார்த்து, திடீரென்று உற்சாகத்தில் உரக்க பாட ஆரம்பித்து விட்டால்? அவர் அகப்பட்டுக் கொள்ள மாட்டாரா? அவர் சுபாவம் எல்லாருக்கும் தெரிந்ததுதானே?” என்று கேட்கிறார். “அவர் இப்படிப்பட்ட சமயத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டுமே செய்வாரா? என்றும் கேட்கிறார். சற்று நேரம் எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். செல்லம்மாள் சொல்வது உண்மைதான். அது எல்லோருக்கும் தெரிந்ததுதான். செல்லம்மாளை இப்படியெல்லாம் சொல்லி பொய் சமாதானம் செய்து வைக்க முடியாது. இம்மாதிரியான சாதாரண சம்பவங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் நாம் பாரதியின் கவித்வ ஆளுமையையும் மேதமையையும் தெரிந்து கொள்கிறோம். இந்த மாதிரி மாணிக்கச் சிதறல்களை ஒரு சிறுமியின் நினைவுகளிலிருந்துதான் பெற முடிகிறது. மிகப் படித்த அறிவாளிகள் பண்டிதர்கள் மலையாகக் குவித்துள்ள பாரதியின் கவித்வ விசாரணைகளில் மதிப்பிட்டு வார்த்தைப் பெருக்கில் காணமுடியாது.
பாரதி நினைவுகள் முடிவுறும் கடைசி வருடங்களில் யதுகிரி நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு பின் படுக்கையை விட்டு எழத் தொடங்கியதும், உடல் நிலை முற்றிலும் ஆரோக்கியமடைய, சூரியன் உதிக்கும் முன் காலை நேரத்தில் நீண்ட தூரம் நடந்து வந்தால் நல்லது என்று டாக்டர்கள் யதுகிரிக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அதன்படி யதுகிரி தன் தந்தையாரோடு காலை நேரத்தில் நடந்து செல்வார். அப்போது ஒரு நாள் தூரத்தில் யாரோ பாடுவது கேட்கிறது. அது கடற்கரையின் திசையிலிருந்து வந்தது. காலை நேர ராகமான பூபாளம் காற்றில் மிதந்து வருகிறது. பாட்டு வந்த திசையில் கடற்கரையை நோக்கி நடக்கிறார்கள். கிட்ட நெருங்க நெருங்க குரல் பரிச்சயமான குரலாக, கிட்டத்தட்ட பாரதியின் குரல் போலப் படுகிறது. கிட்ட நெருங்கினால் பாரதி ஒரு கட்டுமரத்தின் அருகே கிழக்கு நோக்கி உட்கார்ந்து கைகளை அகல விரித்து பலமாக ஆட்டிக்கொண்டும் சூரிய உதயத்தை எதிர் நோக்கிப் பாடிக் கொண்டிருக்கிறார்.
யதுகிரியின் தந்தை அங்கேயே சற்று தூரத்தில் நிற்கச் சொல்லி பாரதியின் அருகில் சென்று அவரிடம் என்னமோ நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்கிறார். பாரதியை அவர் கோபத்தோடு ஏதோ கண்டித்துப் பேசுவது போலத் தோன்றுகிறது. பின் அவர்கள் எல்லோரும் பாரதியின் வீடு நோக்கி நடக்கிறார்கள். வழி நெடுக யதுகிரியின் தந்தை பாரதியை ஆங்கிலத்தில் கடுமையாகக் கண்டித்துக் கொண்டு வருகிறார். பாரதியின் கண்களிலிருந்து நீர் வடிகிறது. அவர் மௌனமாகவே கேட்டுக்கொண்டு வருகிறார். எதுவும் பேசவில்லை. அப்படி பாரதி இருக்கவே மாட்டார். அது அவர் குணமல்ல. செல்லம்மாள் வீட்டு வாசற்படியில் நின்று கொண்டு காணாமற் போன பாரதியின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். பாரதி எதுவும் பேசாமல் விரைவாக வீட்டிற்குள் நுழைகிறார். “பாரதி நேற்று இரவிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்று செல்லம்மாள் சொன்னாள். ஆனால் செல்லம்மாள் பாரதியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இரண்டு பேரும் மௌனமாக இருக்கிறார்களே ஏன்? ” என்று யதுகிரி தன் தந்தையாரிடம் கேட்க, அவர் யதுகிரிக்கு பதில் ஏதும் சொல்லவில்லை. யதுகிரி இன்னும் சின்னக் குழந்தை. கள்ளங்கபடற்றவள். அவளிடம் இப்போது பாரதியின் தவறான நடத்தைகளையும், கஞ்சாப் பழக்கம் கொண்டிருப்பதையும் பற்றிச் சொல்லக் கூடாது. பாரதியின் குடும்பம் மிக கஷ்டத்தில் இருந்து வருகிறது. யதுகிரிக்கு கல்யாணம் நடந்து மைசூரில் இருக்கும் தன் மாமனார் வீட்டிற்குச் செல்கிறார். வெகு சீக்கிரம் பாரதியின் மரணத்தைப் பற்றிய செய்தி அவளுக்குக் கிடைக்கும்.
இந்த அழகிய சிறிய புத்தகம் ஒரு க்ளாசிக் என்று சொல்லவேண்டும். வேறு எந்த புத்தகமும், இதன் அழகிற்கும், மனதை நெகிழ்த்தும் பாவனைகளற்ற நடைக்கும், ஈடாக மாட்டாது. ஒரு குழந்தையின் மனதில் ஒரு மகா கவிஞனும் மாமனிதனும் வரைந்துள்ள சித்திரம் இது.
இந்த நினைவுகளை எழுதித் தரும்படி கேட்க யதுகிரி இதை எழுதியது 1939-ல். இந்த 100 பக்க சின்ன புத்தகம் வெளிவருவதற்கு அதன் பின் 15 ண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. கடைசியில் இது வெளிவந்தபோது, யதுகிரி உயிருடன் இல்லை. இதுதான் ஒரு மகாகவிக்கும், ஒரு க்ளாசிக்கிற்கும் தமிழ் நாட்டில் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும்.
சமீபத்தில் ஜெயமோகன் தமிழில் வந்த நல்ல வாழ்க்கை வரலாறுகளை பட்டியல் போடும்போது இதையும் குறிப்பிட்டிருந்தார்.
புத்தகத்துக்கு இப்போது மறுபதிப்பு வந்திருப்பதாகத் தெரிகிறது. சென்னை நியூபுக்லாண்ட்சில் கிடைக்கிறதாம். விலை முப்பத்தைந்து ரூபாய்.
வேங்கடகைலாசம் இந்தப் புத்தகம் சந்தியா பதிப்பகத்தில் கீழ்க்கண்ட விலாசத்தில் கிடைக்கிறது என்று தகவல் தருகிறார். கிடைப்பது ஆங்கில மொழிபெயர்ப்பா இல்லை ஒரிஜினலா என்று தெரியவில்லை.
Sandhya Padhipakam,
Old no. 77, New no. 57A, Behind ICICI Bank
53rd Street, Ashok nagar Channai.
Ph: 98411-91397
அரசி+வேங்கடகைலாசத்தின் முயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள், அரசி+வேங்கடகைலாசம்!
தொடர்புடைய சுட்டிகள்:
இணைப்புக்கும் இப்பதிவுக்கும் நன்றி. பாரதியை அருகிலிருந்து பார்த்த நிறைவு.
புத்தகம் வாங்கவும் பதிவு செய்துவிட்டேன். 35 ரூபாய்க்கு இதைவிட அருமையான ஒன்று உலகில் எங்கேனும் கிடைக்குமா? தமிழிலும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஒரு திருத்தம் : மொழிபெயர்த்தவர் அரசி.
LikeLike
கண்ணன், அரசி என்பது வேங்கடகைலாசத்தின் புனைபெயர் என்று நினைத்துவிட்டேன். திருத்தியதற்கு நன்றி!
LikeLike
ம். யதுகிரி அம்மாளின் இந்த நூல் வெளிவரக் கூடாது என்று அக்காலத்தில் சிலர் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றனர். ஆம். யதுகிரி அம்மாளின் மறைவுக்குப் பிறகே இந்நூல் வெளியானது. பாரதி இருக்கும் போது மட்டுமல்ல; அவர் இறந்த பிறகும் கூட ”பாரதி மகாகவி அல்லர்” என்று சிலர் பேசி, எழுதி, பரப்பி மகிழ்வில்லையா, என்ன?
LikeLike
// யதுகிரி அம்மாளின் இந்த நூல் வெளிவரக் கூடாது என்று அக்காலத்தில் சிலர் திட்டமிட்டு அதில் வெற்றியும் பெற்றனர். // ரமணன், கேள்விப்பட்டதில்லை. ஏனாம்?
LikeLike
சரியான காரணம் இன்னதென்று தெரியவில்லை. பாரதியின் மீது பலருக்கு, ஏன் அவரது சொந்த சாதியான பார்ப்பனர்களுக்கே பயங்கரக் காழ்ப்பு இருந்தது. அந்தக் காழ்ப்பினால்தான் பாரதி ஒரு ’மகா கவி’ என்று தெரிந்திருந்தும் கூட, அவரது இறப்பைப் புறக்கணித்து, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்தனர். (இத்தனைக்கும் அவர் வாழ்ந்த/ இறந்த திருவல்லிக்கேணி பிராமணர்கள் அதிகம் வசித்த பகுதியும் கூட) நாம் அறியாத, நமக்குப் புரியாத பல விஷயங்கள் இருந்திருக்கக் கூடும். அவற்றைச் சொல்பவர்கள் தான் யாரும் இல்லை.
LikeLike
This book is available at:
Sandhya Padhipakam,
Old no. 77
New no. 57A,
Behind ICICI Bank
53rd Street,
Ashok nagar Channai.
Ph.
9841191397
LikeLike
என்ன ஒரு அற்புதமான புத்தகம்! அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
LikeLike
பந்து, நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது வேங்கடகைலாசம் மற்றும் அரசிக்கு. என் பங்கு மிகச் சிறியது.
வேங்கடகைலாசம், விவரங்களுக்கு நன்றி!
LikeLike
ஆர். வி – ஜடாயுவிடம் வாங்கி படித்தேன். பாரதியின் வேறு ஒரு பரிமாணத்தை உணர முடிந்தது.
LikeLike
அருணா, பாரதியின் ஆளுமை மிக சுவாரசியமானது. அது பொதுவாக எழுதப்படும் hagiography-களில் வெளிப்படுவதில்லை. உதாரணமாக வ.ரா. பாரதிக்கு வழுக்கை, அதனால்தான் முண்டாசு கட்டாமல் வெளியே போகமாட்டார் என்று குறிப்பிடுகிறார். பாருங்கள், அது என்னை பாரதிக்கு நெருக்கமாக உணரச் செய்கிறது. 🙂
LikeLike
ஆர். வி – ஆமாம். நமக்கு எளிதாக கிடைக்கும் பாரதியின் பிம்பத்தை விட இது போன்ற பதிவுகள் அவரை ஒரு மனிதராக, ஒரு context ல் புரிய வைக்கிறது. சென்னையில் ரோஜா முத்தையா அரங்கில் அவரை பற்றிய ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியின் அறிவிப்பு இங்கே. உங்களால் வர முடியாது என்று தெரியும். வேறு யாருக்கேனும் பயன் பெறலாமென.
Dear Friends,
Roja Muthiah Research Library cordially invites you for the monthly lecture. Please forward this to your friends.
——————————————————-
Prof. M. Anandakrishnan Endowment Lecture Series 3
Roja Muthiah Research Library
invites you for a lecture on The “Great Poet” Debate: Mahakavi Yaar?
by
Mr. K. R. A. Narasiah
Writer
Date: 20th January 2012
Time: 5.00 p.m.
Venue:
Roja Muthiah Research Library
3rd Cross Road, Central Polytechnic Campus
Taramani, Chennai 600 113
Telephone: 2254 2551 / 2254 2552
Tea will be served at 4.30 p.m.
——————————————————-
Summary of the talk:
In 1935 there was a wordy duel between two literary groups – one that of Manikkodi and the other that of Kalki Krishnamurthi of Anandavikatan. It all started with V Ramaswami Iyengar then editor of Veerakesari in Colombo and former editor of Manikodi, declaring that Subramania Bharati as a Great Poet, whereas the Kalki group felt that Bharati was a good national poet and not a Great poet.
The talk focuses on the letters and essays written by both the groups declaring their views. However, it must be noted that the debate, while generating a lot of heat and light, did not create any ill-feelings among the individuals. In fact, they all remained friends and respected each other!
The speaker, K R A Narasiah, biographer of Chitti Sundararajan – one of the important participants of the debate – has the original letters written by some of the stalwarts of that day and is now presenting the lot available with him to show the level of the debate and the important Dramatis Personae in their learned correspondence.
Profile:
Mr. K. R. A. Narasiah was born in Berhampur, Orissa, into a Telugu family. After completing his early education in Tamilnadu, he became a marine engineer and sailed in the naval vessels for ten years and, later, for three years in the merchant navy. During his naval time he was deputed to the Harland & Wolff Shipyard in Belfast, North Ireland, for standing by the construction of I N S Vikrant, Navy’s first aircraft carrier and took over as its Fight Deck Chief. He joined the port of Visakhapatnam in 1965 and retired in 1991 as its Chief Mechanical Engineer. While in Port Service his services were requisitioned by the Navy during the Bangladesh liberation war. Later he was invited by the World Bank as a consultant for the emergency rehabilitation in Cambodia. He was also a consultant to the Asian Development Bank.
Mr. Narasiah took to writing early in his life and has published more than 100 short stories in Tamil that have come out in four volumes. Four of his works have been given Tamil Nadu State Literary Awards. He writes in English as well. He is a regular reviewer of books for The Hindu.
LikeLike
சில மாதங்களுக்கு முன்னால் கணையாழியில் நரசய்யா இது பற்றி சில ஆதாரங்களுடன் எழுதியிருந்தார். நேரமிருப்பின் அவசியம் கலந்து கொள்கிறேன்.
LikeLike
பாரதியைப் பற்றிய உணர்வுபூர்வமான நெருக்கமான சித்திரத்தை மூன்று நூல்களில் காணலாம். அவற்றில் முதன்மையானது இந்த நூல் தான். மற்றவை – பாரதியார் சரித்திரம் (செல்லம்மா பாரதி), என் குருநாதர் பாரதியார் (ரா.கனகலிங்கம்). அவையும் சமீபத்தில் மறுபதிப்புகளாக வந்துள்ளன.
LikeLike
How about va.ra’s book?
LikeLike
பிரபு, நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் முந்திக் கொண்டீர்கள். ஜடாயு, பிரபு சொல்வது போல வ.ரா.வின் புத்தகத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். மற்ற இரண்டையும் நான் படித்ததில்லை. மின்பிரதி ஏதாவது கிடைக்குமா?
LikeLike