அறிவியல் சிறுகதை – A History Lesson

என்னைக் கவர்ந்த சில சிறுகதைகளைப் பற்றி இந்த வாரம் தொடர்கிறேன்.

arthur_c_clarkeஆர்தர் சி. க்ளார்க்கின் புத்திசாலித்தனமான சிறுகதை ஒன்று – A History Lesson.

இது நன்றாக எழுதப்படவில்லை. அமெச்சூர்தனமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது எழுப்பும் கேள்வி மிக முக்கியமானது. அறிவியல் சிறுகதைகளின் கவர்ச்சியே அவை எழுப்பும் கேள்விகள்தான். நாம் வரலாற்று ஆதாரங்கள் என்று நம்பும் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் எவ்வளவு உண்மை, எத்தனை பொய், எத்தனை நம் தப்புக்கணக்கு?

பக்கத்து ஊரில் பத்து பேரோடு சண்டை போட்டு வென்றவனை காந்தளூர்ச்சாலை களமறுத்தறுளியவன் என்று கல்லில் பதித்தால் கூட பத்து மரக்கால் நெல் கிடைக்கும் என்று சிற்பி கணக்கு போட்டிருக்கலாம். நாளை உலகம் அழிந்து சென்னையில் அறிவாலயம் மட்டும் மிஞ்சினால் பின்னால் வரும் சந்ததிகள் தமிழினத்தில் ஒரே தலைவர் கருணாநிதி என்று வரலாற்றை எழுதலாம். சிலப்பதிகாரம் சேரன் செங்குட்டுவன் கனகவிஜயரை வென்று அவர்கள் மீது இமயத்தின் கற்களை ஏற்றிக்கொண்டு வந்து கண்ணகி கோவிலைக் கட்டினான், கரிகாலச் சோழன் இமயத்தை வென்றான் என்கிறது. கனகவிஜயன் என்று எந்த மன்னனையும் என் வடநாட்டு நண்பர்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் மன்னர்கள்தானா இல்லை கோவிலைக் கட்டிய வடநாட்டு மேஸ்திரிகளா? இல்லை உ.வே.சா.வுக்குக் கிடைத்த சிலப்பதிகாரப் பிரதிகளில் யாராவது பிற்காலப் புலவர் நாலு வரியைச் சேர்த்துவிட்டாரா? இந்த மாதிரி யோசிக்க வைப்பதுதான் இந்தக் கதையின் வெற்றி.

தொகுக்கப்பட்ட பக்கம்: அறிவியல் புனைவுகள், எழுத்துக்கள்