ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதை

indira partthasarathiஇ.பா.வை நான் அவ்வளவாக ரசித்ததில்லை. அவருடைய பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆவது சில சமயம்தான். புகழ் பெற்ற நாவல்கள் – குருதிப்புனல், ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன, கிருஷ்ணா கிருஷ்ணா, தந்திரபூமி, சுதந்திரபூமி, ஏசுவின் தோழர்கள் – எல்லாம் எனக்கு குறைபட்ட நாவல்களாகவே தெரிகின்றன. அவருடைய நாவல்களில் inside joke அதிகம் என்று நினைக்கிறேன். டெல்லி வாழ் தமிழ் அறிவுஜீவிக் கூட்டம் இது யார் அது யார் என்று புரிந்துகொண்டு அவற்றை ரசித்திருக்கலாம். இவற்றை எல்லாம் விட அறிவுஜீவித்தனம் அவ்வளவாக வெளிப்படாத அவருடைய முதல் நாவலான காலவெள்ளம் இயற்கையாக இருந்தது, எனக்குப் பிடித்திருந்தது.

அவருடைய நாடகங்களைப் பார்க்க வேண்டும், படிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். நந்தன் கதையைப் படித்தபோது இப்படி கொக்கு தலையில் வெண்ணெய் வைப்பானேன் என்றுதான் தோன்றியது. ஆனால் அதை பார்த்தது – இத்தனைக்கும் வீடியோவில் பார்த்தது – ஒரு நல்ல அனுபவம். ராமானுஜர், அவுரங்கசீப் எல்லாவற்றையும் என்றாவது பார்க்க வேண்டும்.

இப்படி குறை சொல்லிக் கொண்டே இருந்தாலும் இ.பா. என் கண்ணிலும் இலக்கியவாதிதான். அவர் படைப்பது இலக்கியம்தான். எல்லாவிதமான இலக்கியமும் எனக்கு பிடித்துவிடுவதில்லை என்பதை நான் அவர் மூலம் அறிந்து கொண்டேன், அவ்வளவுதான். அவர் மேல் மரியாதை இருக்கிறது, ஆனால் அவரது படைப்புலகம் எனக்கானதல்ல. அவரது வாரிசு என்று சொல்லக் கூடிய ஆதவனின் படைப்புலகமோ, ஆஹா, என்னுடையது, என்னுடையது, என்னுடையதேதான்!

ஜெயமோகன் அவரது ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன நாவலை சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும், குருதிப்புனல், தந்திரபூமி, சுதந்திரபூமி ஆகியவற்றை இரண்டாம் வரிசைத் தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஒரு கப் காப்பி, குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும், இளஞ்செழியன் கொடுத்த பேட்டி ஆகியவற்றை சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் வைக்கிறார். (Disclaimer: இந்த சிறுகதைகள் அவரது அழகியல் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை அல்ல, ஒரு திறனாய்வாளனின் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்று என்னிடம் சொல்லி இருக்கிறார்.) எஸ்ரா குருதிப்புனல் நாவலை சிறந்த நூறு தமிழ் நாவல்கள் பட்டியலிலும், ஒரு கப் காப்பியை சிறந்த நூறு தமிழ் சிறுகதைகள் பட்டியலிலும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஒரு கப் காப்பியை பற்றி எழுதத்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். அது எங்கெல்லாமோ போய்விட்டது.

இ.பா. பிராண்ட் நகைச்சுவை எனக்கு அப்பீல் ஆகும் சிறுகதை இது. கொடுமையான வறுமையில் வாழும் பிராமணக் குடும்பம். குடும்பத் தலைவன் ராஜப்பாவுக்கு புரோகிதம் செய்ய மந்திரம் தெரியாது. கல்யாணத்திலும், கருமாதியிலும் பிராமணர்களுக்கு சாப்பாடு போட வேண்டும் என்ற நம்புபவர்களை வைத்து பிழைக்கிறார்கள். அதற்காக ராஜப்பாவுக்கு குடுமி, ஸ்ரீசூர்ணம், பஞ்சகச்சம் என்று வெளிவேஷம். ஒரு நாள் காலை எழுந்ததும் வீட்டில் காப்பிப்பொடி இல்லை, வாங்கப் பணமும் இல்லை, பக்கத்து, எதிர்வீட்டில் இனி மேல் இரவல் வாங்கவும் முடியாது. எதிர்பாராமல் பால்ய சினேகிதனை சந்தித்தால் அவன் ராஜப்பாவின் வெளிவேஷத்தைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி ஒரு பரம வைதிகன் ஹோட்டல் காப்பி குடிப்பானா என்று காப்பி வாங்கித்தர மாட்டேன் என்கிறான்! கொடுமையான வாழ்க்கையை சித்தரிக்கும்போதும் புன்னகைத்துக் கொண்டே இருந்தேன்.

போன பாராவைப் திருப்பிப் படித்தால் இந்தக் கதையை எல்லாம் விவரிக்க முடியாது என்று புரிகிறது, படித்துக் கொள்ளுங்கள்! இ.பா. படைப்பது இலக்கியம்தான் என்பதில் எனக்குக் கூட கொஞ்சமும் சந்தேகம் இல்லை என்றால் அதற்கு இதைப் போன்ற சிறுகதைகளும் இன்னொரு காரணம்.

கத்தி போலக் கூர்மையான வரிகளில் ஒன்று:

காலத்தை அனுசரித்து கோயிலில் பெருமாளுக்கு காலையில் காப்பி நைவேத்தியம் பண்ணக்கூடாதா? ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதருக்கு ரொட்டி தருகிறார்கள். இந்த ஊர்ப் பெருமாளுக்கு காப்பி குடிக்கும் ஒரு நாச்சியார் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? கோயிலில் தினம் காப்பிப் பிரசாதம் கிடைத்திருக்கும்.

இதே மாதிரி ஒரு கருவை வைத்து பதினைந்து வருஷம் முன்னால் நானும் ஒரு கதை எழுதினேன். மனதிற்குள் நல்ல கதை எழுதிவிட்டேன் என்று பெருமை வேறு. அதற்கப்புறம் இந்தக் கதையைப் படித்தேன். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு என் கதையை வெளியே விடுவது என்று கம்மென்றிருக்கிறேன்.

Irony-க்காகத்தான் அடிக்கடி முயற்சிக்கிறார் என்று தோன்றுகிறது. அவஸ்தைகள் சிறுகதையிலும் அப்படித்தான் தோன்றுகிறது.

அவருடைய தேவர் வருக சிறுகதையைப் பற்றி தனியாக எழுத முடியாது, அவ்வளவு worth இல்லை. விஷ்ணு பதினோராவது அவதாரம் எடுக்கிறார் – அரசியல்வாதியாக! தவிர்க்கலாம். இதுவாவது பரவாயில்லை, தொலைவு போன்ற சிறுகதைகளில் என்னதான் சொல்ல வருகிறார்?

தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்