இலக்கியத்தில் எல்லைகள்

இலக்கியத்தில் எல்லைகள்

நண்பர்களே,

யதார்த்த வாழ்வின் நான்கு சம்பவங்களை முதலில் பார்ப்போம்.

ரயில் பயணம் ஒன்றில் சிறு குழந்தை ஒன்று தன் சகோதரன் வைத்துக்கொண்டிருந்த கைபேசியை கேட்டு தொடர்ந்து அழுதுக் கொண்டிருக்கிறது. சகோதரன் கைப்பேசியை சிறிது கொடுக்கிறான். சமாதானமான குழந்தையிடமிருந்து சில மணித் துளிகள் சென்றபின் கைபேசியை மீண்டும் பறித்துக் கொள்கிறான். குழந்தை மீண்டும் கதறி அழத் தொடங்குகிறது. சற்று சென்றபின் மீண்டும் கொடுத்து மீண்டும் பறித்துக் கொள்கிறான். குழந்தை மீண்டும் அழுகிறது. இந்தச் நிகழ்ச்சி அடுத்த 40 நிமிட இரயில் பயணத்தை நிறைக்கிறது.

யோஸமிட்டே அருவியின் மூலத்தை அடைய பார்வையாளர்களுக்கு மலைப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாக மூன்று மணி நேரம் மலை ஏறினால் உச்சியில் தடாகம் போன்ற அந்த இடத்தை அடையலாம். அங்கே மலைகளில் பனி உருக்கில் பற்பல வழிகளில் வந்த நீர் தடாகத்தின் மையத்தில் சற்றே அமைதி கொண்டு தேங்குவது போல் தோற்றமளிக்கிறது. மேலும் இடைவிடாது வரும் நீரினால் உந்தப்பட்டு வேகம் கொண்டு தாழ்வான பகுதியை நோக்கி நகர்ந்து ஒரு வெள்ளப் பெருக்கு உருவாகிக் கொண்டிருக்கிறது. பின்னர் தாழ்வான ஒரு பகுதியில் மேலும் வேகமும் சுழற்ச்சியும் கொண்டு முப்பது அடி அகல விளிம்பு ஒன்றினை அடைந்து தன்னுள் தேக்கிய சக்தி அனைத்தும் அதன் நுனியில் ஒருசேர விடுவிக்கப்பட்டு ஒரு பெரும் அருவியாக ஐம்பது அல்லது அறுபது அடி கீழே பாய்கிறது. பாயும் அருவியில் ஏற்படும் நீர் திவாலைககளும் சாரல்களும் ஒரு இருநூறு அடி ஆரத்தில் இருக்கும் மனிதர்களையும் மற்றும் அனைத்தையும்  நனைக்கின்றது. அருவியின் மேலே அமைந்த தடாகத்தை பாதுகாப்பு கம்பித் தடுப்புகள் வைத்து பார்வையாளர்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கிறார்கள். ஆண்கள் பெண்களாக பலரும் பார்த்து கொண்டிருந்த ஒரு பதின்ம வயது மாணவர் குழு அங்கே வருகின்றது. உறசாகத்தினால் பரவசமடைந்து கம்பித்தடுப்பின் நடுவில் நுழைந்து தண்ணீரில் நான்கைந்து மாணவர்கள் இறங்குகிறார்கள். தண்ணீரின் சுழற்ச்சி வெளியே தெரியாமல் கண்களை ஏமாற்ற நொடியில் மாணவர்கள் அதில் சிக்கித் தத்தளிக்கிறார்கள். பார்வையாளர்கள் முகத்தில் திகிலும் தண்ணீர்ல் சிக்கிய மாணவர்கள் முகத்தில் பீதியும் அறைய பாயும் தண்ணீர் அவர்களை வேகமாக விளிம்பை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தது. எங்கும் கூக்குரல்கள். அலறல்கள். அழுகைகள். தண்ணீரின் விளிம்பின் வழியாக அம்மாணவர்கள் ஒவ்வொருவராக கண்களிலிலிருந்து மறைய இரத்தம் உறைய செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள் பார்வையாளர்கள்.

மாபெறும் சபை ஒன்று. கல்வி கேள்விகளில் தேர்ந்தவர்கள் கூடும் சபை. பிரச்சனை ஒன்றுக்கு விடைத் தேடும் வகையில் உரையாடல் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. திடீரென்று ஒருவர் வெகுண்டு எழுகிறார். தன் காலணியை எடுத்து ஒருவரை நோக்கி எறிகிறார். ஃபைல்கள் பறக்கிறது. மைக் உடைகிறது. மேஜை எடைகற்கள் வீசப்படுகின்றன. இரத்தம் சிந்தப்படுகிறது. மறுநாள் தினசரிகள் தலைப்பு செய்திகளை தாங்கி வருகிறது. ‘சட்டசபையில் அமளி துமளி’.

நான்காவதாக இரு சகோதரர்கள் ஒரு தொழில் செய்கிறார்கள். தம்பி தமையனை தெய்வமாக வணங்குபவர். தம்பிக்கு ஒரு மகன். தமையன் நேர்மையானவர். ஆனால் முன்கோபி. உறவினர்களுக்கு அவர்கள் தினப் பிரச்ச்னைகளை தன் கையிலெடுத்து முடித்துக் கொடுத்து பாதுகாப்பு அளிப்பவர். அவருக்கென்று குழந்தைகள் கிடையாது. நாற்பது ஆண்டுகளாக தம்பி அண்ணனின் நிழலாக, வார்த்தையை கட்டளையாக ஏற்று நடப்பவர். அண்ணன் அவராக கொடுப்பதை தம்பி தன் வருமானமாக கொள்பவர். மக்கள் செல்வம் இல்லாத அண்ணன் தம்பியின் மகனை தன் மகனாக பாவித்து செல்லம் கொடுத்து வளர்த்து வருகின்றார். வாலிப வயதில் மகன் பெரியவரின் எதிர்பார்ப்பிலிருந்து தவறுகிறான். அவன் மேல் மிகுந்த சினம் கொள்கிறார் த்மையனார். தமையனுக்கு அந்திமக் காலம் நெருங்குகிறது. ஒரு நாள் வக்கீலை வர வழைக்கிறார். தொழிலில் எந்தவிதத்திலும் சம்பந்தமில்லாத ஒரு உறவினருக்கு தன் சொத்துக்களை உரிமையாக்குகிறார். தன்னையும் அவரிடமே ஒப்படைக்கிறார். தமையனை என்றுமே தட்டிக் கேட்டிராத தம்பி அமைதியாக காட்சியிலிருந்து விலகுகிறார். ஊரில் மிகுந்த மரியாதையுடன் வாழ்ந்து வந்த அண்ணனிடம் பலரும் பழகுவதை நிறுத்திக் கொண்டனர். அவரும் தன் உயிர் போகும் வரையிலும் வீட்டிலிருக்கப் பிடிக்காமல் பெரும்பகுதி அருகிலிருந்த கோவில் மண்டபத்திலேயே வாழ்ந்து இறந்தார்.

இலக்கியத்திற்கு எந்த எல்லைகளிருக்க கூடாது?

கடந்த நூற்றாண்டுகளில் ஐரோப்பிய சூழ்நிலைகள் வரையப்பட்ட பல ஓவியங்கள் கண்டனத்திற்கு உட்படுத்தப்பட்டது. மிகவும் பரவலாக அரியப்படும் ’லாஸ்ட் ஸப்பர்’ சங்கேத பாஷைகள் பேசுவதாக வதந்திகள் இருந்தன. மைக்கலேஞ்சலோ தயக்கத்துடனும் முழுச் சுதந்திரமற்ற சூழலில் ஓவியம் வரைந்ததாக அறியப்படுகிறது. பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் ஓவியம் பற்றிய புத்தகம் படிக்கிறோம். பி.ஏ.கே அவர்கள் தன் ஆய்வுக்கு என்ன ஓவியங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது வாசகர்களும் பொது மக்களும் ஆணையிட வேண்டுமா இல்லை அது அவரது விருப்பமா? பொது மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு வாதத்திற்கு எடுத்து கொண்டால் கூட அதன் சாத்தியக்கூறு மட்டுமே அது எத்தனை நடைமுறைக்கு ஒவ்வாத்தது என்பது புரியும். மேலும் ஓவியங்களை, ஓவியர்களின் திறமைகளையும் சிலாகித்தி எழுதும் ஒரே நோக்கத்திற்கு பல நோக்கம கற்பிப்பது நியாமாகாது. அவரின் அகவயமான விமர்சனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தினால் ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கலாம் அல்லது ஏற்புடையது அல்லாததாக இருக்கலாம். அது வாசகர்களின் ரசனை, வாசிப்பு மற்றும் மன விசாலங்களை பொறுத்தது.  மேலும் நேர்மையான எழுத்து எனப்து பிறரை திருப்தி அடைய செய்யும் முயற்சி அல்ல.  அவரால் அவர் எழுதும் புத்தகத்திற்கு எவ்வளவு உண்மையாக இருக்கவேண்டும் என்பதே. வாசகர்களுக்கு அவர் கருத்துக்களை விவாதிக்க உரிமையுண்டு. ஆனால் அவரை இப்படிதான் எழுதவேண்டும் என்று கட்டுப்படுத்த உரிமை கிடையாது.

நான் ஒரு கதாசிரியன் என்னும் பட்சத்தில் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதை தீர்மானிப்பவன் நானாகத்தானே இருக்க வேண்டும்? ஜெயமோகன் வெண்முரசில் இதை பற்றி எழுத வேண்டும், அதைப் பற்றி எழுத வேண்டும் என்றும் இதை எழுதக்கூடாது அதை எழுதக் கூடாது என்றும், ஏன், இவர் மகாபாரதத்தை பற்றி எப்படி எழுதலாம்? என்றும் பல்வேறு சராசரி விமரிசனங்கள் வைக்கப்படுகின்றன. முதலில் ஜெயமோகன் எதை எழுதலாம், எதை எழுதக் கூடாது என்று தீர்மானிப்பது அவராக மட்டும் அல்லவா இருக்க வேண்டும். இரண்டாவது எழுத்தாளர்களுக்கு எழுதச் சொல்லி கொடுப்பது போன்ற செயல்களை நாம் இன்னும் துணிச்சலாகவே செய்து கொண்டிருக்கிறோம். எத்தகைய அசட்டுத்தனம்  என்றுகூட புரிந்துக் கொள்ள முடியாத அசட்டுதனம் அல்லவா அது?

இலக்கியம் என்பது பல் பரிமாண கண்ணாடி பட்டகம். இலக்கியம் என்பது ஆழ்மனதின் உரையாடல்கள் செவ்வனே வார்த்தைகளால்  செதுக்கப்பட்ட ஒர் வாசக இன்பம். இலக்கியம் என்பது சிக்கலான நுண்ணுணர்வுகள் கடைந்தெடுக்கப்பட்ட ஒரு சித்திரம். இலக்கியம் என்பது நாம் நித்திய வாழ்வில் அறிந்திராத, சிந்தித்திராத கோணங்களை நமக்கு அறிமுகம் செய்து நம்மை அதன் எல்லைக்குள் அனுமதித்து  மேலும் நம் சிந்தனைகளை விரிக்கும், வளர்த்தெடுக்கும் ஒரு சிந்தனை தூண்டி. இலக்கியம் என்பது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகளையும், கண்டிறாத களங்களையும் நம் முன் வளமான மொழியினால் படைத்து பரவசப்படுத்தும் ஒரு மென் போதை வஸ்து.  இலக்கியம் என்பது வரலாறு பதிவு செய்யாத, வரலாறு பதிவு செய்யமுற்படாத, வரலாறு பதிவு செய்ய முன்வராத, வரலாற்றால் பெரும்பாலும் செய்தியாக மட்டுமே பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் ஆழத்தின் மறைவில் இருக்கும் மனித உணர்வுகளை படம்பிடித்து அவற்றிர்க்கு  தகுந்த வெளியை உருவாக்கும் ஒரு தளம். இலக்கியம் என்பது வரலாறும் காலமும் விட்டுச் செல்லும் இடைவெளிகளை நிரப்பும் ஒரு மாபெரும் தொடர் முயற்சி.

ஜெயமோகனின் சமீப ஆக்கங்களிலோ, பிஏகே அவர்களின் ஆக்கங்களிலோ இந்த உணர்வு இடைவெளிகள் பூர்த்தி செய்யப்படும் பொழுது அவை சிறந்த இலக்கியப் படைப்புகளாக உருவாகி நம்மிடம் வந்தடைகின்றன. இப்படி சிறந்த படைப்புகளை ஒரு கலைஞன் உருவாக்க வேண்டுமென்றால் அவனுடைய சிந்தனைகள் தங்கு தடையின்றி திரள வேண்டும். அந்த எண்ண ஓட்டங்கள் தடையின்றி மொழியாக செதுக்கப்பட வேண்டும். மாறாக அவன் படைக்கும் ஒவ்வொரு சிந்தனையும், வார்த்தையும், ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பத்தியும், ஒவ்வொரு பக்கமும் அவனுக்கு வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று கவலை கொடுக்குமானால் அவனுடைய சிந்தனையில் மையக்கருத்து முதன்மை பெறாமல் லௌகீக விருப்பு வெறுப்புகள் அல்லவா ஆக்கிரத்திருக்கும்? அப்படியென்றால் அவனால் எப்படி சிறந்த இலக்கியம் படைக்க முடியும்? அப்படி வாசகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வசதியாகவும், அவர்கள் மனம் கோணாமலும் எழுதவேண்டுமென்றால் அது வணிக எழுத்தாக நம் முன் நகைக்குமே அன்றி பேரிலக்கியமாக ஒரு பொழுதும் உருவாகாது. மேலும் அப்படி எழுதுவது அந்த எழுத்துக்கு நியாமாக இருக்காது.

இலக்கியம் வடிக்க பல ஆற்றல்கள் வேண்டும். பல்வேறு அனுபவங்கள் வேண்டும். அதாவது ஆழ்மனதை, சிக்கலான நுண்ணுணர்வுகளை, சிந்தனை கோணங்களை, காட்சிகளை, களங்களை, வரலாறு தவறவிட்ட உணர்வு மூலை முடுக்குகளை நம் முன் இலக்கிய வடிவில் படைப்பதில் ஜெயமோகன், பிஏகே போன்ற இலக்கியவாதிகள்  துறை வல்லுனர்கள்.  மிகுந்த ஞானம் கொண்டவர்கள். இத்தகைய கருவிகளை ஒருசேர அடைந்த பின்னரே, பல ஆராய்ச்சிகளுக்கு பின்னரே, பல அனுபவத்திற்கு பின்னரே, தீர்க்கமான சிந்தனைக்கு பின்னரே வெண்முரசு என்ற ஒரு மாபெரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜெயமோகன். இவருடைய இலக்கியத்தின் எல்லையை நாமா நிர்ணயிப்பது?

சரி. இலக்கியத்தின் எல்லை தான் என்ன? நாம் பள்ளியில் தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும் (Survival of the fittest) என்று உயிரியல் விஞ்ஞானியின் கூற்றைப் பற்றி படித்திருக்கிறோம். அதுஎந்த சூழலில், எதற்க்காக அப்படி சொல்லப்பட்டது, எதற்கு அது பொருந்தும் என்று சற்றும் புரிந்துக் கொள்ளாமல்
, அதனை அலட்சியமாக துர்பிரயோகம்
செய்கிறோம். ஹெர்பர்ட் ஸ்பென்ஸர், தாமஸ் மால்தூஸ், ரிச்சர்ட் ஹோஃப்ஸ்டேடர் போன்ற அறிவு ஜீவிகள் நேச்சுரல் செலக்‌ஷன் என்பதை பொருளாத உலகிற்காக உருமாற்றி ’சமூக டார்வினிஸம்’ என்று அழைக்க அதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் நம் வசதிக்கு அடித்துப் பிடுங்கும் கீழ் நிலை செயல்களை ’டார்வினே சொல்லிவிட்டார்’ என்று கூறி நியாயப்படுத்த முயற்சிக்கிறோம். அதாவது பொருந்தாதவற்றிற்க்கு போலி வாதங்களை பொருத்தி ’தகுதி உள்ளது தப்பி பிழைக்குமென்று டார்வினே சொல்லியிருக்கிறாரே’ என்று கூவி நாம் மனித நேயத்தை பணயம் வைக்கிறோம்.

இப்படிதான் நம் கருத்து உரிமையையும் கையாண்டுள்ளோம். சாக்ரடிஸ் வாழ்ந்த பொழுது நினைத்ததை பேசிவிட முடியாது. அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசும் உரிமை, அரசை தட்டிக் கேட்கும் உரிமை மட்டும் தான் கருத்துரிமை. பின் வந்த காலத்தில் விவாதத்தின் மூலமாகவும், உயிரை பணயம் கேட்கும் போராட்டத்தின் மூலமாகவும் மேலும் சில விரிவான உரிமைகளை அதில் அடக்கி தற்போதை புரிதல்களுக்கு வந்தடைந்துள்ளாம். அந்தப் பாதையில் எங்கோ உள்ளே வந்துள்ள ‘எதை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எவருக்கு எதிராகவும்’ பேசும் முழுமையான கருத்துரிமையை கேட்க முனைகிறோம். அதாவது நாம் பிறரையோ, அவர்கள் கொள்கைகளையோ, நம்பிக்கைகளையோ வசை பாட, ஏளனம் செய்ய அவ்வுரிமையை கையில் எடுத்துக் கொண்டும் கருத்துரிமை வேண்டும் என்று கூவுகிறோம். எதற்க்காக இவ்வுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பதை சிந்திக்கத் தவறி அதன் துர்பிரயோகத்தில் இரங்கியுள்ளோம்.

முதலில் குறிப்பிடபட்ட நான்கு சம்பவங்களை எடுத்துக் கொள்வோம். கைப்பேசியை அடைய விரும்பும் குழந்தை சிந்தனை என்னும் faculty வளர்வதற்கு முன்னரே இயற்க்கையாக உணர்வுகள் என்ற facultyஐ பெற்று கதறி அழுகிறது. சிந்தனை முழுமையாக வளராத பதின்ம வயது நிலையில் அருவி மூலத்தில் அமைந்த தடாகப் பெருக்கிலிறங்கிய இளைஞர் கூட்டம் அபாயம் என்று தெரிந்திருந்தும் இயற்கையான கட்டுப்பாடற்ற உணர்வுகளின் உந்துதல்களின் காரணமாக தங்கள் முடிவை அதி பயங்கரமாக சந்திக்கின்றனர். மாபெரும் சபையில் நன்கு சிந்திப்பதறகு பயிற்சி பெற்ற, சட்டங்களை இயற்றும் மக்கள் பிரதிநிதிகள் இயற்கையான ஆவேசம், ஆத்திரம் என்ற உணர்வுகளின் உந்துதல்களினால் வன்முறையை கடைபிடிக்கின்றனர். சிந்தித்து சிந்தித்து தன் உறவுகளை காத்துவந்த சகோதரர் எந்த தவறும் இழைக்காத தன் இளைய சகோதரரை இயல்பான ஏமாற்றம், மற்றும் கோபம் என்ற உணர்வுகளின் உந்துதல்களினால் இளைய சகோதரரின் வாழ்க்கைக்கும் மிகவும் அவசியப்படும் கால கட்டத்தில் அவரை கைவிடுகிறார்.

இப்படி அணைத்துக் காலகட்டங்களிலும்,   வாழ்க்கை கூறுகளிலும் மனிதனை உந்துவது இயற்கையான உணர்வுகள். சிந்தனை பின்னரே செயற்கையாக தோன்றுகிறது அல்லது வளர்த்தெடுக்கப்படுகிறது. அதாவது உணர்வுகள் என்பது இயற்க்கை. சிந்தனை என்பது செயற்கை. உணர்வுகள் தானாகவே கட்டுபாடற்று முன்னால் ஓடி வருவது. சிந்தனை மெதுவாக கட்டுப்படுத்தப்பட்டு நம்மாலும், பிறராலும் நம்மில் திணிக்கப்படுவது.

எல்லையற்ற கருத்துரிமைக்கு இடம் உண்டு என்று சொல்லும் மேற்கத்திய சமூகத்திலேயே அதன் போலி முகம் வெளிப்படுகிறது. 2001ல் செப்டம்பர் 12 அன்று உலகம் முழுவதும் பத்திரிக்கைகள் ஒருசேர முந்தைய தினம் நடந்த அதி பயங்கர சம்பவத்தை மிகவும் கவலையுடனும் வேதைனயுடனும் விவரித்தன. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றிலிருந்து வந்த ஒரு அரசு பத்திரிக்கை மட்டும் விமானம் சொருகப்பட்டு எரிந்துக்கொண்டிருக்கும் இரட்டை கோபுரம் ஒன்றின் புகைப்படத்துடன் முதல் பக்க எட்டு பத்தி தலைப்பாக ‘கடவுளின் தண்டனை’ என்று கேலியுடன் கொக்கரித்தது. இது பத்திரிக்கை கருத்துரிமை தானே என்று கருத்துரிமையை ஆதரிக்கும் சமூகங்கள் அலட்சியப்படுத்தியிருக்கலாம் அல்லவா? அணு குண்டை வீசவேண்டும் என்பது போன்ற விஷம் கக்கும் வெறுப்பு பேச்சுகளை நான் நேரடியாகவே கருத்துரிமை ஆதரிக்கும் சராசரி மக்கள் கூற கேட்டிருக்கிறேன். ஒரு தனிமனிதனின் துன்பத்திலோ, ஒரு சமூகத்தின் துன்பத்திலோ, ஒரு நாட்டின் துன்பத்திலோ பிறர் இன்பம் காண்பது எத்தனை மட்டமான ஸாடிஸம் என்பது நமக்கு தெரியாததல்ல. ஆனால் அதே சமயம் கருத்துரிமையை ஆதரிப்பவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களால் கருத்து கூறியதற்க்காக அந்த நாடே சின்னாபின்னமாக ஆக்கப்பட்டது நாம் அறிந்ததே.

சராசரி வாழ்விலே, நண்பர்களுடன், உறவினர்களுடன், அலுவலக சகாக்களுடன் நாம் ஒவ்வொரு நொடியிலும் உணர்வு ரீதியாகவே உந்தப்படுகிறோம். கற்றவர்கள் மற்றவர்கள் என்று பாகுபாடெல்லாம் இதில் இல்லை. இன்னும் இதனை புரிந்துக் கொள்ளமுடியாதவர்கள் ஊதிய மறுக்கப்படும் தருணத்தில் வருத்தம், கவலை, கோபம், இயலாமை என்று பல்வேறு உணர்வுகளால் நாம் அலைகழிக்கப்படுவதையாவது புரிந்துக் கொள்ளமுடியும்.

கட்டற்ற உணர்வுகளால் ஒருவர் உந்தப்படும் பொழுது அவரை கட்டுப்படுத்துவது அவரது சிந்தனை. உணர்வுகளையும் சிந்தனையையும் ஒன்றுக்கு ஒன்று முரணாக செயல்பட அனுமதித்து தெளிவான நிலையை எடுப்பதென்பது முழு வாழ்வின் மனப் பயிற்சி.  இந்தப் பயிற்ச்சிக்கு தன்னை அன்றாடம் உட்படுத்திக் கொள்பவர்கள் மிகச் சிலரே. எல்லையில்லா இலக்கியமோ அல்லது அபுணைவுகளோ அல்லது கார்ட்டூண்களோ இந்தச் சிலரின் ஜீரணிப்புக்கு பொருந்தும். ஆனால் நம்மில் பலர் இப்படியெல்லாம் பகுத்துப் பார்க்கும் பயிற்சி அற்றவர்கள். எளிமையானவர்கள். பெரும்பாலும் சிந்திக்கப் பயிற்சி பெற்றவர்களே படைப்புகளை உருவாக்குகிறார்கள். சிந்திக்க பயிற்சி பெறாதவர்களும் இந்த படைப்புகள் உருவாக்கப்படும் உலகத்தில் தேர்ந்த வாசக்ர்களுடன் வலம் வருகிறார்கள். எழுத்துகளில் எல்லைகள் மீறப்பட்டோ எலலைகள் மீறப்படுவதாக உணரப்பட்டோ இந்தப் பெரும்பான்மையான எளியவர்களின் உணர்வுகள் கொந்தளிப்படைகின்றன. எல்லை மீறப்பட்ட படைப்புகளின் படைப்பாளிகளுக்கு கொந்தளிப்பவர்களின் வன்முறை எல்லை மீறல்கள் பதிலாக அமைகின்றன. இந்த சம்பவங்களால் சிந்தனையாளர்கள் ஆவேசம் அடைகிறார்கள். முற்போக்குப் பாசறைக்கு பங்கம் வந்துவிட்டாதாக பரிதவிக்கிறார்கள். அதாவது இறுதியில் அவர்களும் உணர்வுகளில் சிக்குகிறார்கள். ஆகவே உணர்வுகள் உயிர் இருக்கும் வரையிலிருக்கும். உணர்வுக்கு எதிராக அறகூவல் விடுவது பேதமை.

மேலும் சிந்திக்க தெரியாதவர்கள் நிராயுதபாணிகள். சிந்திக்கத் தெரிந்தவர்கள் தங்கள் செயல்களை நியாப்படுத்த சிந்திக்கத் தெரியாதவர்களை சிந்திக்க அறைகூவல் விடுவது சம தள விளையாட்டரங்கத்தில் அல்ல. ஆச்சர்யம் என்னவென்றால் எல்லாவற்றையும் சிந்திக்க பயிற்சி பெற்றவர்கள் இந்த அடிப்படைகூட புலப்படாமல் அடம் பிடிப்பது தான். இது புரிந்தால் சார்லி ஹெப்டோக்களும், பெருமாள் முருகன்களும் தவிர்க்கப் பட்டிருக்கலாம். சரி. இதற்கு தீர்வு என்ன? திட்டதுடனோ, அரசியல் நோக்கிலோ எல்லைகள் மீறப்பட்டால் அதற்கு அவர்களே பொறுப்பு. ஆனால் விபத்தாக மீறப்பட்டால் நிச்சயம் அதற்கு வழியிருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா ’கருப்பு சிகப்பு வெளுப்பு’ என்ற தன்னுடை சரித்திர நாவலில் ஒரு வரியில் ஒரு சமூகத்தை சார்ந்த பெண்ணை வர்ணிக்க அது அந்தச் சமூகத்தில் பலரை கொந்தளிக்கச் செய்தது. சுஜாதா மிகவும் பண்பானவராக நடந்துக் கொண்டார். வருத்தம் தெரிவித்து அந்த சரித்திர தொடரை நிறுத்திக் கொண்டார். சமூகம் அதை ஏற்றுக் கொண்டது. இது தானே யதார்த்தம்?

ஜெயமோகன், பிஏகே போன்றவர்கள் பல கட்டுரைகளையும், இலக்கியங்களையும் மிகப் பொறுப்பாக படைத்துள்ளனர். மக்கள் உணர்வுகளை நன்றாக புரிந்துக் கொண்டதானால் தான் எல்லை மீற வேண்டிய வெளியில் எல்லைகளை மீறியும் எல்லை மீறப்படக்கூடாத வெளியில் மிகப் பொறுப்பாகவும் கவனச் சிதறல்கள் இல்லாமல் அவர்களால் வெண்முரசு, மேறகத்திய ஓவியங்கள் போன்ற மகத்தான பணிகளை செய்ய நமக்கு அளிக்க முடிகிறது. காப்பியத்தின் வெவ்வேறு வடிவங்களாகவே மகாபாரதத்தை பார்த்து கொண்டிருந்த நமக்கு முதல் முறையாக முழு இலக்கியமாக வெண்முரசு வெளிவரும் இந்த சமகாலத்தில் நாம் வாழ்வது ஒரு இலக்கிய அதிர்ஷ்டம் அல்லவா? ஆதாலால் நாம் தொட்டால் சிணிங்கியாக இல்லாமல் அவர்களுக்கு முழு ஆதரவு அளித்து அவர்களது பணியை தொடர விடுவோம்.

நன்றி.

(இது பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சியில் ஜூலை 2015ல் நான் ஆற்றிய -அல்லது ஆற்ற முயன்ற- உரை. ஒரு சில காரணங்களால் இந்த உரையை நான் முழுமையாகவும் செவ்வனேயும் ஆற்ற முடியவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்தவர்களுக்கு தெரியும்.)

திரைப்படப் பரிந்துரை – Birdman

நேற்று Birdman திரைப்படத்தின் மூலக்கதையை பதித்திருந்தேன். இந்த வாரம் அப்படியே திரைப்படங்களைப் பற்றி தொடர்கிறேன்.

birdmanBirdman திரைப்படத்தின் பின்புலம் நாடக உலகம் – அமெரிக்க ப்ராட்வேயின் நாடக உலகம். நாடகம் பற்றிய சீரிசில் இதையும் பதித்தால் பாந்தமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது திரைப்படங்கள் வாரத்தில்தான் பதிக்க முடிந்திருக்கிறது.

ரத்தினச் சுருக்கமாக: திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

சிம்பிளான கதை. ரிக்கன் ஒரு காலத்தில் புகழ் பெற்ற சினிமா ஹீரோ. சூப்பர்மான் மாதிரி ஒரு சூப்பர்ஹீரோவாக – Birdman – பெரும் வெற்றிப்படங்களில் நடித்தவர். அந்தத் திரைப்படங்களில் பறவை முகமூடி அணிந்து வரும் அவரால் பறக்க முடியும், பொருள்களை தன் மனோசக்தியால் நகர்த்த முடியும் இத்யாதி. இன்று அவர் காலம் போய்விட்டது. ஆனால் தானும் ஒரு சீரியஸ் நடிகன் என்று நிறுவ வேண்டும் என்ற தாகம். தன் சொந்தப் பணத்தைப் போட்டு ரேமண்ட் கார்வரின் What Do We Talk about When We Talk about Love என்ற புகழ் பெற்ற சிறுகதையை நாடகமாக இயக்கி நடிக்கிறார். இந்த சூழலை – ரிக்கன், நாடகத்தில் இணை-நாயகனாக நடிக்கும், எல்லாரையும் dominate செய்யும் மைக், போதை மருந்துப் பழக்கத்திலிருந்து இப்போதுதான் விடுபட்டிருக்கும் அவருடைய மகள் சமந்தா, விவாகரத்துக்குப் பிறகும் நல்ல நட்போடு இருக்கும் ரிக்கனின் மனைவி, நாடகத்தின் முக்கிய பாத்திரமாக நடிக்கும் ரிக்கனின் இன்னாள் காதலி, நாடகம் நடத்துவதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் ரிக்கனின் நண்பர் ஜேக், நாடகம் வெற்றியா தோல்வியா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி உடைய விமர்சகர் தபிதா போன்றவர்களின் interaction-ஐத்தான் இந்தத் திரைப்படம் பிரமாதமாக, தத்ரூபமாகக் காட்டுகிறது.

birdman-2ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் உண்டு – ரிக்கன் ஒரு இரட்டை மனிதராக இருக்கிறார், ஒன்று ரிக்கன், ஒன்று பேர்ட்மான். இருவரும் அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள், பேர்ட்மான் இந்த நடிப்பு கிடிப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ரிக்கன் மீண்டும் சூப்பர்ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். மைக் நாடகத்தை தன்னிஷ்டத்துக்கு வளைக்கிறார். அதனால் முன்னோட்டங்கள் (preview) கேலிக்கூத்துகளாக முடிகின்றன. ரிக்கன் மீது அவருக்கு மெலிதான இளக்காரம் உண்டு. உண்மையான மைக் ரிக்கனின் மகள் சமந்தாவோடு பேசும்போது மட்டுமே வெளிப்படுகிறார். விமர்சகி தபிதாவுக்கு ரிக்கன் ஒரு கௌரவப் பிரச்சினை, சும்மா மசாலா ஹாலிவுட் நடிகன் எல்லாம் வந்து இப்படி சீரியசாக நாடகம் நடித்தால் எப்படி என்று ஆங்காரம். இவை எல்லாமே சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

birdman_riggan_times_squareரிக்கன் உள்ளாடையோடு டைம்ஸ் ஸ்க்வேரில் நடக்கும் காட்சி – ஆஹா!

2014க்கான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, மற்றும் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கார் விருதுகளைப் பெற்றிருக்கிறது. இயக்குனர் இனாரிட்டு. படத்தில் எல்லோருமே சிறப்பாக நடித்திருந்தாலும் மைக்காக நடிக்கும் எட் நார்டன் அபாரம்! அவருக்கு ஆஸ்கார் விருது கிடைக்காதது ஆச்சரியம்தான். ரிக்கன்-பேர்ட்மானாக நடிக்கும் மைக்கேல் கீட்டன் கலக்கிவிட்டார். அவர் Batman திரைப்படத்தில் சூப்பர்ஹீரோவாக நடித்தவர் என்ற உண்மை இந்த திரைப்படத்துக்கு ஒரு special charm-ஐத் தருகிறது.

திரைப்படத்தைப் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்