Skip to content

திரைப்படப் பரிந்துரை – Selma

by மேல் செப்ரெம்பர் 9, 2015

selmaவருஷம் – 1965.

அமெரிக்க உள்நாட்டுப் போரில் தெற்குப் பகுதி தோற்று நூறு வருஷங்களாகி விட்டன. சட்டத்தின் முன் கறுப்பர்களுக்கு ஏறக்குறைய சம உரிமைதான். நடைமுறை அப்படி இல்லை.

ஒரு சிம்பிளான உதாரணம் – அலபாமா என்ற தெற்கு மாகாணத்தில் கறுப்பர்களுக்கு ஓட்டுரிமை இல்லை. அலபாமா சட்டப்படி ஓட்டுரிமை வேண்டுமென்றால் கறுப்பர்கள் வெள்ளையர்கள் எலாரும் ஒரு அரசு அலுவலகத்தில் தங்கள் பேரை பதிவு செய்ய வேண்டும். அங்கே ஓர் வெள்ளை அதிகாரி முன் நின்று தாங்கள் ஓட்டுப் போடும் அளவுக்கு அரசியல் அறிவு உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதற்காக அவர் சில கேள்விகள் கேட்பார். எதிரே நிற்பவர் கறுப்பர் என்றால் அரசியல் சட்டத்தில் 37ஆவது உட்பிரிவின் இரண்டாவது பாராவில் 28ஆவது வார்த்தை என்ன என்று கேட்பார். எதிரே நிற்பவர் வெள்ளையர் என்றால் உனக்குப் பிடித்த நிறம் என்ன என்று கேட்பார். ஆயிரத்தில் ஒரு கறுப்பருக்கு ஓட்டுரிமை இருந்தால் அதிகம்.

செல்மா அலபாமாவில் உள்ள ஒரு நகரம். அங்கே இது நீண்ட காலமாக நடக்கும் விஷயம். மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் இதை எதிர்த்து கறுப்பர்கள் ஊர்வலமாக செல்மாவிலிருந்து அலபாமாவின் தலைநகரமான மாண்ட்கோமரிக்கு நடந்து ஊர்வலமாகச் செல்கிறார்கள். இப்படி ஊர்வலமாக செல்வது சட்ட விரோதம் அல்ல. அதனால் ஊர்வலத்தில் சில வெள்ளையர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அலபாமாவின் கவர்னரும், நிறவெறியருமான ஜார்ஜ் வாலஸ், போலீஸ் எல்லாரும் இதை கடுமையாக எதிர்க்கிறார்கள். முதல் ஊர்வலத்தின்போது செல்மாவின் எல்லையில் ஒரு பாலத்தைத் தாண்டும்போது கடுமையான அடிதடி, ஒருவர் இறந்து போகிறார்.

கிங் மத்திய அரசிடமிருந்து ராணுவ பாதுகாப்பைக் கோருகிறார். கிடைக்கவில்லை. இரண்டாவது முறை அவரே ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்துகிறார், ஆனால் ரிஸ்க் எடுக்காமல், பாலத்தைத் தாண்டாமல் திரும்பிவிடுகிறார்.

மூன்றாவது ஊர்வலத்தின்போது ஊர்வலமாகச் செல்ல எல்லா உரிமையும் இருக்கிறது என்று நீதிமன்றம் உத்தரவு போடுகிறது. ராணுவ பாதுகாப்பு கிடைக்கிறது. கிங் ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்.

இந்த வரலாற்று நிகழ்ச்சிகளைத்தான் பிரமாதமான படமாக எடுத்திருக்கிறார்கள்.

திரைப்படம் கிங் 1964-இல் நோபல் பரிசு பெறுவதோடு ஆரம்பிக்கிறது. அடுத்தபடியாக பர்மிங்ஹாம் என்ற அலபாமா நகரத்தில் கறுப்பர்களுக்கான ஒரு சர்ச்சில் குண்டு வெடிப்பு – நான்கு சிறுமிகள் இறக்கிறார்கள். அடுத்தபடி ஒரு (கற்பனைக்) காட்சி – ஓட்டுரிமைக்காக பதிவு செய்ய வந்திருக்கும் ஒரு கறுப்புப் பெண்மணி – கேள்விகளுக்கெல்லாம் சரியாக பதில் சொல்லிக் கொண்டே போகிறார். கடைசியில் அலபாமாவின் நீதிபதிகள் அத்தனை பேரையும் சொன்னால்தான் ஓட்டுரிமை என்றதும் முடியாமல் எழுந்து போகிறார்.

ஜனாதிபதி ஜான்சனிடம் கிங் ஓட்டுரிமை சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கும்படி கேட்கிறார்; ஜான்சனுக்கும் மனதளவில் சம்மதம்தான். ஆனால் இப்போது இது நிறைவேறாது, நடக்கக் கூடிய வேறு விஷயங்களில்தான் நான் முதலில் கவனம் செலுத்தப் போகிறேன், அப்புறம்தான் இதெல்லாம் என்கிறார்.

கறுப்பர்கள் பல இயக்கங்களாகப் பிரிந்திருக்கிறார்கள். கிங் ஏறக்குறைய காந்தி வழியில் செல்லும் மிதவாதி – மால்கம் எக்ஸ் (மகத்தான ஆளுமைகளில் ஒருவர்) கொஞ்சம் தீவிரவாதி, வன்முறையைத் தவிர்க்க முடியாது என்று நினைப்பவர். கிங் பத்திரிகையில் பேர் வரவேண்டும் என்பதை முக்கியமாக கொண்டவர் என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதான் என்றே கிங்கே ஒத்துக் கொள்கிறார் – நீங்கள் கறுப்பர்களை இணைத்து ஒரு சக்தியாக ஆக்கப் போராடுகிறீர்கள், நான் வெள்ளையர்களின் மனசாட்சியை எழுப்பப் போராடுகிறேன், அதற்கு பத்திரிகைகளில் பேர் வந்தால்தான் முடியும் என்கிறார். செல்மாவில் ஒரு கூட்டத்தை ஓட்டுரிமை பதிவுக்கு அழைத்துச் செல்ல அங்கே தடியடி நடக்கிறது.

கடைசியில் முன்னால் சொன்ன ஊர்வலங்களைக் காட்டுகிறார்கள். மூன்றாவது ஊர்வலத்துக்கு முன்பாக ஜனாதிபதி ஜான்சன் கிங் விரும்பியபடி ஓட்டுரிமை சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க ஒரு சட்டம் கொண்டு வருகிறார். வெற்றிகரமான ஊர்வலத்தோடு படம் முடிகிறது.

சிறு வேடங்களில் நடித்திருக்கும் டிம் ராத் (ஜார்ஜ் வாலஸ்), க்யூபா குட்டிங் ஜூனியர், ஓப்ரா வின்ஃப்ரேயைத் தவிர வேறு எந்த நடிகரையும் எனக்கு அடையாளம் தெரியாது. ஆனால் எல்லாருமே சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார்கள். வின்ஃப்ரே, கிங் வேடத்தில் நடித்த டேவிட் ஒயெலோவோ ஆகியோரைக் குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

திரைப்படத்தின் சிறந்த காட்சிகள் இரண்டுமே அந்த பாலத்தில் நடக்கின்றன. தடியடியும் சரி, மேலே போகலாம் என்று சொன்ன பிறகும் தயங்கி திரும்பும் காட்சியும் சரி பிரமாதமானவை. இயக்குனர் ஆவா டுவர்னே.

2014-இன் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் கிடைக்கவில்லை.

கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
திரைப்படத்தின் தளம்
செல்மா – மாண்ட்கோமரி நடைப்பயணம் – விக்கி குறிப்பு
செல்மா திரைப்படம் – ஐம்டிபி குறிப்பு
லிண்டன் ஜான்சன்

Advertisements

From → Films

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: