திரைப்படப் பரிந்துரை – Nightcrawler

2014-இல் வந்த Nightcraler திரைப்படத்தைப்nightcrawler பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

இரவில் நடைபெறும் விபத்துக்கள், குற்றங்கள் ஆகியவற்றை சுடச்சுட வீடியோ எடுத்து தொலைக்காட்சி செய்திகளில் காட்டுவதற்காக சுற்றிக் கொண்டிருப்பவர்களை slang ஆக nightcrawler என்று அழைப்பார்களாம். அப்படிப்பட்ட ஒருவனைப் பற்றிய கதை இது.

ஜேக் ஜில்லன்ஹால் நாயகன். படத்தில் அவன் பெயர் லூயிஸ். ஆரம்பத்தில் சின்னச் சின்னத் திருட்டுக்கள். பிறகு nightcrawler ஆக முயற்சிக்கிறான். விபத்து, குற்றங்கள் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது? போலீஸ் தங்களுக்கு வயர்லெஸ்ஸில் பேசிக் கொள்வதை ஒட்டுக் கேட்கிறான். அங்கே எவ்வளவு சீக்கிரம் போகமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் வீடியோ எடுக்கிறான். எடுக்கும் வீடியோக்களில் எத்தனைக்கெத்தனை ரத்தம் ஓடுகிறதோ அத்தனைக்கத்தனை பணத்துக்கு விற்கலாம் என்பதைப் புரிந்து கொள்கிறான். நீனா என்ற ஒரு செய்தி “தயாரிப்பாளரோடு” தொழில்முறை உறவு ஏற்படுகிறது. தனக்கு லாஸ் ஏஞ்சலசின் சாலைகளில் வழிகாட்ட ஒரு உதவியாளனை அமர்த்திக் கொள்கிறான்.

லூயிஸ் விபத்தில் இறந்தவனை போலீஸ் வருவதற்கு முன் வீடியோ நன்றாக வருவதற்காக கொஞ்சம் நகர்த்தத் தயக்கமே காட்டுவதில்லை. தன் போட்டியாளனின் காரில் எதையோ பிடுங்கிவிட்டு அவன் விபத்துக்குள்ளாவதையும் வீடியோ எடுக்கிறான். ஒரு வீட்டில் 3 பேர் கொல்லப்படுவதைப் பற்றி போலீஸ் பேசுவதைக் கேட்கிறான். அங்கே “அதிர்ஷ்டவசமாக” போலீஸ் வருவதற்கு முன் போய்விடுகிறான். கொலையாளிகள் தப்புவதை வீடியோ எடுக்கிறான். வீட்டுக்குள் நுழைந்து இறந்தவர்களை வீடியோ எடுக்கிறான். போலீஸ் கேசைப் பற்றி உருப்படியாக விசாரிப்பத்ற்குள் காலை செய்திகளில் சுடச்சுட நியூஸ்! ஆனால் கொலையாளிகள் தப்பும் காட்சிகளை விசாரிக்க வரும் போலீஸ் உட்பட யாருக்கும் கொடுக்கவில்லை. தப்பும் கார் நம்பரை வைத்து அடுத்த நாள் இரவு கொலையாளிகளைப் பின் தொடர்கிறான். அவன் திட்டப்படியே அவர்கள் ஒரு பொது இடத்தில் – உணவகத்தில் – இருக்கும்போது போலீசுக்கு தகவல் கொடுக்கிறான். போலீஸ் வர, துப்பாக்கி சண்டை நடக்கிறது. கொலையாளிகள், போலீஸ்காரர்கள் உட்பட நாலைந்து பேர் இறக்கிறார்கள். இறப்பவர்களில் ஒருவன் இவனுடைய உதவியாளன் – உதவியாளன் போலீசிடம் உண்மைகளை மறைத்தாய் என்று போட்டுக் கொடுத்துவிடுவேன் என்று ப்ளாக்மெய்ல் செய்வதால் திட்டமிட்டு அவனையும் கொலையாளி ஒருவனால் சுட்டுவிட வைக்கிறான்.

jake_gillenhall_nightcrawlerபடத்தின் பெரிய பலம் நடிப்பு. ஜேக் ஜில்லன்ஹால், தொலைக்காட்சி அதிகாரியாக நடிக்கும் ரெனே ரூஸ்ஸோ, உதவியாளனாக வரும் ரிஸ் அஹமத் எல்லாரும் கலக்குகிறார்கள். அதுவும் ஜில்லன்ஹாலின் wooden dialog delivery மிகக் கச்சிதம். எப்போதும் management cliche-க்களை உதிர்த்துக் கொண்டு வலம் வருகிறான். வசனங்கள் பிரமாதம்!

படத்தில் இயக்குனர் டான் கில்ராய். திரைக்கதையும் அவரே. இவர் ரெனே ரூஸ்ஸோவின் கணவர். இதற்கு முன்னால் சில படங்களுக்கு திரைக்கதை எழுதி இருக்கிறார், ஆனால் இதுதான் அவர் இயக்கிய முதல் படம்.

கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்