திரைப்படப் பரிந்துரை – Theory of Everything

theory_of_Everythingஸ்டீஃபன் ஹாக்கிங்கைப் பற்றி கேள்விப்படாதவர் இல்லை. அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக ஆக்கி இருக்கிறார்கள்.

ஹாக்கிங் கல்லூரியில் அதிபுத்திசாலி மாணவராக இருக்கும் காலகட்டத்தில் திரைப்படம் தொடங்குகிறது. தன் எதிர்கால ஆராய்ச்சியின் குவியம் என்ன என்று அவருக்குத் தெரிந்துவிடுகிறது. ஜேன் என்ற பெண்ணுடன் உறவும் ஏற்படுகிறது. அப்போதுதான் அவருக்கு தன் தசைகள் செயலிழந்து போகும் ஒரு அபூர்வ வியாதி இருப்பது தெரிய வருகிறது. மருத்துவர்கள் இரண்டு வருஷத்துக்குள் இறந்துவிடுவார் என்று சொல்லி விடுகிறார்கள்.

ஜேன் இரண்டு வருஷமாயிருந்தாலும் சரி, உன்னைத்தான் மணப்பேன் என்று உறுதியாக நின்று ஸ்டீஃபனை மணக்கிறார். ஸ்டீஃபனின் ஆராய்ச்சிகள் அவருக்கு பேரையும் புகழையும் பெற்றுத் தருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக தசைகள் செயலிழந்து கொண்டிருந்தாலும் ஸ்டீஃபன் பல வருஷங்கள் தாக்குப் பிடிக்கிறார். தசைகள் செயலிழப்பது உடலுறவுக்கு பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதில்லை, அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன.

ஒரு கட்டத்தில் ஸ்டீஃபனுக்கு குரல் போய்விடுகிறது. இந்த காலகட்டத்தில்தான் ஸ்டீஃபன் புகழ் பெற்ற Brief History of Time புத்தகத்தை எழுதுகிறார். அவருக்கு நர்சாக வரும் எலெய்னுக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. ஜேனுக்கும் குடும்ப நண்பரான ஜோனதனுக்கும் நீண்ட நாட்களாகவே ஈர்ப்பு இருக்கிறது. விவாகரத்து. ஆனால் ஜேனும் ஸ்டீஃபனும் தங்கள் குழந்தைகளில் நிறைவைக் காண்கிறார்கள்.

ஹாக்கிங்கின் வாழ்க்கை சுவாரசியமானது. ஒரு மேதை தன்னைக் கட்டுப்படுத்தும் உடலை எப்படி மீறுகிறார் என்பதிலும், அவருக்குப் பின்னால் இருக்கும் ஜேனின் அர்ப்பணிப்பிலும் மாபெரும் நாயகத் தன்மை இருக்கிறது. அதை எட்டி ரெட்மெய்ன், ஃபெலிசிடி ஜோன்ஸ் இருவரும் மிகச் சிறப்பாக நடித்துக் காட்டி இருக்கிறார்கள். ரெட்மெய்னுக்கு 2014-இன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. ஃபெலிசிடி ஜோன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். சிறந்த திரைப்படத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது. ஜேம்ஸ் மார்ஷ் இயக்கி இருக்கிறார்.

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
திரைப்படத்தின் தளம்
ஐம்டிபி குறிப்பு
ஹாக்கிங் பற்றிய விக்கி குறிப்பு