ஜான் லெ காரே எழுதிய “Looking Glass War”

john_le_carreஜான் லெ காரேவின் இன்னொரு சிறந்த படைப்பு. புத்தகம் 1965-இல் வந்திருக்கிறது.

உளவுத்துறை என்றால் நம்மில் அனேகருக்கு முதலில் நினைவு வருவது ஜேம்ஸ் பாண்ட்தான். சாகசங்கள், வன்முறை, உலகை மாற்றி அமைக்கக் கூடிய பெரும் ரகசியங்கள் என்றுதான் முதலில் நமக்கு ஒரு பிம்பம் கிடைக்கிறது. ஆனால் சாமர்செட் மாம் (ஆஷண்டன்), எரிக் ஆம்ப்ளர், க்ரஹாம் க்ரீன், ஜான் லெ காரே என்று ஒரு பரம்பரையே அதை மீண்டும் மீண்டும் கட்டுடைத்திருக்கிறது. அதிலும் லெ காரேவின் இந்தப் புத்தகத்தை ஒரு farce என்றே சொல்லலாம்.

looking_glass_warலெ காரேவின் பல கதைகளில் மீண்டும் மீண்டும் வரும் ஒரு கரு எப்படி உளவுத் துறையானது ஒரு அரசுத் துறை bureaucracy போலத்தான், அதிகாரப் போட்டி எப்படி நாட்டின் நலத்துக்கான முடிவுகளில் தாக்கம் செலுத்துகிறது என்பது. அதை எப்போதுமே அவர் மிகச் சிறப்பாக விவரிப்பார். இந்தக் கதையிலும் அப்படித்தான் – மெதுமெதுவாக தன் முக்கியத்துவத்தை இழந்து கொண்டிருக்கும் உளவுத்துறையின் ஒரு டிபார்ட்மெண்ட்டுக்கு திடீரென்று ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. எங்கோ கிழக்கு ஜெர்மனியில் ராக்கெட்டுகள் இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், மேற்கு ஜெர்மனி போன்ற நாடுகள் மீது குறி வைப்பதாக யாரோ ஒரு ஜெர்மானியன் பார்த்ததாக சொல்வது இவர்கள் காதுக்கு வந்து சேர்கிறது. டிபார்ட்மெண்டின் தலைவர் லெக்ளர்க் இதை மீண்டும் எதிரி நாடுகளில் ஒற்றர்களை சேர்த்து அவர்களை வழிநடத்துவது, இதனால் தன் டிபார்ட்மெண்டின் பட்ஜெட் அதிகரிப்பது, இப்போது உச்சத்தில் இருக்கும் “கண்ட்ரோல்” தலைமை வகிக்கும் டிபார்ட்மெண்டுக்கு இணையாக உயர்வதற்கான ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறார்.

லெக்ளர்க் விமானத்திலிருந்து அந்த இடத்தை ஃபோட்டோ எடுக்க ஏற்பாடு செய்கிறார். அந்த ஃபோட்டோக்களை வாங்க ஃபின்லந்து வரை செல்லும் அனுபவம் இல்லாத ஒருவன் “விபத்தில்” இறந்து போகிறான். அது விபத்தா இல்லையா என்பது தெளிவாகத் தெரியாது, ஆனால் அது விபத்து இல்லை என்றுதான் இவர்கள் எல்லாரும் நம்ப விரும்புகிறார்கள். இறந்தவன் உடலை இங்கிலாந்துக்கு மீட்கவும் ஃபோட்டோக்களை கொண்டு வரவும் லெக்ளர்க்கின் கீழ் வேலை செய்யும் அவரி போகிறான். இறந்து போனவனின் போலி பாஸ்போர்ட், அவரியின் fragile cover story எல்லாம் இதில் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. அடுத்தபடி கிழக்கு ஜெர்மனிக்கு ஒரு “ஒற்றனை” – லெய்சர் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்காக ஒற்று வேலை செய்த போலந்துக்காரன், ஜெர்மன் மொழி பேசத் தெரிந்தவன் – தயார் செய்து ஜெர்மனிக்கு அனுப்புகிறார்கள். இப்போது உச்சத்தில் இருக்கும் இன்னொரு டிபார்ட்மெண்ட் லெய்சருக்கு training-இல் அரை மனதாக உதவி செய்கிறது. லெக்ளர்க் எப்படியாவது உடனடியாக ஒற்றனை அனுப்ப வேண்டும் என்ற அழுத்தத்தால் லெய்சருக்கு கொஞ்சம் பழைய கருவிகளில் பயிற்சி கொடுத்தாலும் பரவாயில்லை, அவன் கிளம்பினால் போதும் என்று பல சமரசங்களை செய்து கொள்கிறார். பழைய கருவிகளால் ஒற்றன் மாட்டிக் கொள்ள, இங்கிலாந்துக்கு பெரிய அவமானம் வந்துவிடாமல் காக்கும் பொறுப்பு “கண்ட்ரோலுக்குத்” தரப்படுகிறது. ஒற்றனை கைகழுவிவிடுகிறார்கள், கண்ட்ரோலின் டிபார்ட்மெண்ட் இன்னும் உயர்கிறது, லெக்ளர்க்கின் டிபார்ட்மெண்ட் இன்னும் தாழ்கிறது.

இந்தக் கதையிலும் ஜார்ஜ் ஸ்மைலிக்கு ஒரு சின்ன ரோல் உண்டு. ஸ்மைலியைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.

புத்தகத்தின் முதல் பலம் அதன் நம்பகத்தன்மை. என்னவோ பெரிய பெரிய யோசனைகளால் அரசுகள் நடத்தப்படுகின்றன என்று நினைப்பவர்களுக்கு உண்மை நிலவரம் எப்படி இருக்கிறது என்று புரிய வைக்கிறது. இந்த அதிகாரப் போட்டிகள், சின்னத்தனம், சூழ்ச்சிகள் இவற்றையெல்லாம் எந்தக் குழுவிலும் பார்க்கலாம். கல்லூரிகளில் முக்கியத்துவம் பெற நினைக்கும் குழுக்கள், அலுவலகங்களில், ஏன் குடும்பங்களில் கூடப் பார்க்கலாம். அதற்காகவே இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ரால்ஃப் ரிச்சர்ட்சன், ஆண்டனி ஹாப்கின்ஸ் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
ஜான் லெ காரே எழுதிய Spy Who Came in from the Cold
ஜான் லெ காரே எழுதிய Our Kind of Traitor
லெ காரேவின் தளம்