ஸ்காட் டூரோவின் “Presumed Innocent”

scott_turowஸ்காட் டூரோ த்ரில்லர் எழுத்திலேயே இலக்கியத் தரமாக எழுதுபவர் என்று சொல்லலாம். ஜான் லெ காரேவின் தரத்தில் எழுதுகிறார். தனிப்பட்ட பல நாவல்கள் த்ரில்லர் என்ற அனுபவத்தை கொஞ்சமே தாண்டுகின்றன. ஆனால் மொத்தமாக வைத்துப் பார்த்தால் – கிண்டில் மாவட்டம் (Kindle county), அதன் கோர்ட், வக்கீல்கள், போலீஸ் அமைப்பை மிக அருமையாக கொண்டு வந்திருக்கிறார். பெரும்பாலும் வெள்ளையர்கள் வாழும் ஒரு மாவட்டத்தின் சட்டத் துறையில் பண்பாட்டு பின்புலத்தை காட்டுகிறார். அமெரிக்க நீதித்துறை எப்படி அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, பணம் எப்படி எல்லாவற்றையும் ஆட்டி வைக்கிறது என்பதைப் புரிய வைத்துவிடுகிறார்.

Presumed Innocent (1987) அவரது மிகச் சிறந்த நாவல். அபாரமான கதைப் பின்னல். ஒரு சாதாரணக் கொலையும், அதற்காக தொடரப்படும் வழக்கும்தான் கதை. அந்த வழக்கில் ஓடும் பல சரடுகளே இதை த்ரில்லர் என்ற நிலையைத் தாண்டி இலக்கியம் ஆக்குகின்றன.

presumed_innocentஅமெரிக்காவில் பல சட்ட நிர்வாகிகள் – சர்க்கார் தரப்பு வக்கீல்கள், நீதிபதிகள் – மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். அப்படி ஒரு சர்க்கார் தரப்பு வக்கீல் ரேமண்ட் ஹோர்கன். ஹோர்கன்தான் எந்தெந்த வழக்குகள் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும், எந்தெந்த வழக்குகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டும் (கொஞ்சம் குறைந்த தண்டனை, ஆனால் கேஸ் நடக்காது), எந்தெந்த வழக்குகளை கைகழுவிவிட்டுவிட வேண்டும் (சாட்சியங்கள் பலமாக இல்லாமல் இருக்கலாம்) என்றெல்லாம் முடிவு செய்பவர். ஹோர்கனின் முதன்மை உதவி வக்கீல் ரஸ்டி சாபிச். அவருக்குக் கீழே பல வக்கீல்கள், உதவியாளர்கள், சில பல போலீஸ் அதிகாரிகள் பணி புரிவார்கள்.

ஹோர்கனுக்குத் தேர்தல் நேரம். அவரிடம் வேலை செய்த நிக்கோ பலமான போட்டியாளராக இருக்கிறார். இந்த நேரத்தில் ஒரு சர்க்கார் உதவி வக்கீல் – கரோலின் போல்ஹெமஸ் – கொல்லப்படுகிறாள். கரோலினை யாரோ கற்பழித்து கொலை செய்துவிட்ட மாதிரி இருக்கிறது. தன்னிடம் வேலை செய்பவளை கொலை செய்தது யாரென்று கூட கண்டுபிடிக்க முடியாவிட்டால் ஹோர்கனுக்குத் தேர்தலில் பின்னடைவு ஏற்படும். ரஸ்டியை மும்முரமாகத் துப்பறியச் சொல்கிறார். ஒரு சிக்கல் இருக்கிறது – கரோலினுக்கும் ரஸ்டிக்கும் சில மாதங்கள் முன்பு வரை பாலியல் தொடர்பு இருந்திருக்கிறது. ரஸ்டி மணமானவர், அவர் மனைவி பார்பாராவிடம் தொடர்பு முடிந்து போனதும் இதை ஒத்துக் கொள்கிறார். ரஸ்டிக்கு கரோலின் ஒரு obsession ஆகவே இருந்திருக்கிறாள். இருந்தாலும் ரஸ்டி professional ஆக நடந்து கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் கேஸ் நகரவில்லை.

ஹோர்கன் தோற்கிறார். கரோலினின் வீட்டுக்கு கொலை நடந்த அன்று ரஸ்டி போயிருப்பதாக சந்தர்ப்ப சாட்சியங்கள் அமைகின்றன. ஜெயிக்கும் நிக்கோ ரஸ்டிதான் கொலைகாரன் என்று வழக்கு தொடுக்கிறார். ரஸ்டியின் வீட்டு தொலைபேசி எண்ணிலிருந்து கரோலினுக்கு சென்றிருக்கும் அழைப்புகள், கரோலினிம் உடலில் இருக்கும் விந்து ரஸ்டியுடையதாக இருக்கும் சாத்தியக்கூறு என்று சர்க்கார் தரப்பில் பல வலுவான துருப்புச்சீட்டுகள் உள்ளன. (அலைபேசிகளும், DNA சோதனைகளும் இல்லாத காலத்தில் எழுதப்பட்ட புத்தகம்)

ரஸ்டியின் வக்கீல் சாண்டி ஸ்டெர்ன். ஸ்டெர்ன் ஒரு பிரமாதமான பாத்திரம். ரஸ்டியின் கைரேகை உள்ள கண்ணாடிக் குவளை முக்கியமான சாட்சியம், ஆனால் அதை சர்க்கார் தரப்பில் தொலைத்துவிடுகிறார்கள். பல வருஷங்களுக்கு முன்னால் யாரோ ஒரு சட்ட அதிகாரி லஞ்சம் வாங்கிய கேஸ் ஒன்று அவ்வப்போது குறிப்பிடப்படுகிறது. ரேமண்ட் ஹோர்கன் சர்க்கார் தரப்பு சாட்சியாக வருகிறார், ரஸ்டி முழுமனதாக இந்தக் கேசை விசாரிக்கவில்லை என்று சாட்சி சொல்கிறார். கடைசியில் ரஸ்டி விடுவிக்கப்படுகிறார்.

ஆனால் யார் கொலை செய்தது? சிறந்த மர்ம முடிச்சு.

அருமையான கதாபாத்திரங்கள் – ஸ்டெர்ன், ரஸ்டி, ரஸ்டியின் நண்பன் லிப்ரான்சர் என்று பல பிரமாதமான சித்தரிப்புகள். அருமையான சரடுகள், முடிச்சுகள். கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். என் நூலகத்துக்காக கட்டாயம் வாங்குவேன்.

இது ஹாரிசன் ஃபோர்ட் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

இதன் தொடர்ச்சியாக Innocent (2010): என்றும் ஒரு நாவல் வந்திருக்கிறது. விடுவிக்கப்பட்ட ரஸ்டி சாபிச் இப்போது ஜட்ஜ். மாநில அளவிலான உயர்நீதிமன்றத்துக்கு தேர்தலில் நிற்கப் போகிறார். (அமெரிக்காவில் ஒரு லெவல் வரைக்கும் நீதிபதிகள் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.) அவருடைய மனைவி பார்பாரா இப்போது கொஞ்சம் மெண்டல். முதல் பக்கத்தில் அவள் இறந்துவிடுகிறாள். ரஸ்டி போலீசுக்கு சொல்லாமல் பிணத்துக்கு அருகேயே 24 மணி நேரம் உட்கார்ந்திருக்கிறார். ஏன்?
இந்த கேள்வியை போலீஸ் துறையும் கேட்கிறது. ரஸ்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதை கண்டுபிடிக்கிறது. ஆனால் அந்தப் பெண் யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. (அவள் அவருடைய முன்னாள் அசிஸ்டண்ட்) மனைவியை கொலை செய்ததாக கேஸ் போடுகிறது. ரஸ்டி சிறு குற்றத்தை (சாட்சியங்களை மறைத்தது பொய்யான தகவல்களை உருவாக்கியதாக) ஒத்துக் கொண்டு குறைந்த ஜெயில் தண்டனையை ஏற்றுக் கொள்கிறார். அவர் பொய்யான தகவல்களை உருவாக்கவில்லை என்று தெரிகிறது. பிறகு ஏன் ஒத்துக்கொண்டார்? பொய்த் தகவல்களை உருவாக்கியது யார்?
ரஸ்டியின் மகனும், ரஸ்டி உறவு கொண்ட பெண்ணும் காதல் வயப்படுகிறார்கள். ரஸ்டிக்கு தெரிய வருகிறது. என்ன செய்யப் போகிறார்?
உறுத்துவது ஒரே விஷயம்தான். Presumed Innocent நாவலின் முடிச்சுகள் அவிழ்ந்த பின்னால் ரஸ்டியும் பார்பாராவும் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இதை ஒரு புதிய நாவலாகவே படித்தால் உறுத்தாதோ என்னவோ.
கொஞ்சம் ஸ்லோவாகப் போனாலும் சுவாரசியமான முடிச்சுகள். ஆனால் Presumed Innocent அளவுக்கு இல்லைதான். இருந்தாலும் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
டூரோவின் தளம்