ஸ்காட் டூரோவின் “The Laws of Our Fathers” (1996)

scott_turowஸ்காட் டூரோவின் இன்னொரு நல்ல த்ரில்லர்.

டூரோவின் களம் எப்போதுமே கிண்டில் மாவட்டத்தின் நீதித்துறைதான். இப்போது மாநில செனட்டர் எட்கரின் மனைவி ஒரு கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்படுகிறாள். கொலை செய்யச் சொன்னது அவர்களின் மகன் நைல் எட்கர்தான் என்று கேஸ் நடக்கிறது. கேசை விசாரிக்கும் நீதிபதி, நைல் எட்கரின் வக்கீல், மற்றும் பலர், எட்கர் குடும்பத்தோடு ஒரு காலத்தில் நெருங்கிப் பழகியவர்கள். என்ன நடந்தது, என்ன மர்மம் என்பதுதான் கதை.

டூரோவின் பலம் அவர்து கதைப்பின்னல்தான். உரிக்க உரிக்க வரும் வெங்காயம் போல முடிச்சுகள் ஒன்றன்பின் ஒன்றாய் அவிழ்ந்து கொண்டே போவது அவரது ட்ரேட்மார்க் பலம். இதிலும் அப்படித்தான். முடிச்சுகளை படிப்பதுதான் சுகம், விவரிப்பதற்கில்லை.

அவரது வழக்கமான இன்னொரு பலம் – நீதித்துறை எப்படி இயங்குகிறது என்ற நம்பகத்தன்மை நிறைந்த விவரணைகள், சிஸ்டத்தின் பலவீனங்கள், அந்த பலவீனங்களைத் தாண்டி குத்துமதிப்பாக நீதி நிறுவப்படுவது போன்றவை மிகச் சிறப்பாக விவரிக்கப்படுகின்றன.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்