காலின் டெக்ஸ்டர் எழுதிய “Last Bus to Woodstock”

colin_dexterகாலின் டெக்ஸ்டரின் புகழ் பெற்ற படைப்பு இன்ஸ்பெக்டர் மோர்ஸ். மோர்ஸ் ஆங்கிலக் காவல் துறையில் சீஃப் இன்ஸ்பெக்டர். கொஞ்சம் eccentric. நிறைய குசும்பு, கொஞ்சம் தீசத்தனம் உடையவர். மோர்சுக்கு வாட்சனாக இருப்பவர் சார்ஜெண்ட் லூயிஸ். மோர்ஸ் அவ்வப்போது லூயிசையே போட்டு வாட்டி எடுப்பார்.

last_bus_to_woodstockமுதல் புத்தகம் Last Bus to Woodstock (1975). இதைத்தான் இந்த சீரிசில் சிறந்த புத்தகமாகக் கருதுகிறேன். இருபது இருபத்தைந்து வருஷங்களுக்குப் பின்னால் சமீபத்தில் மீண்டும் படித்தேன். சிறந்த கதைப்பின்னல் என்று அப்போது நினைத்தது ஊர்ஜிதமாயிற்று.

மாலை நேரத்தில் இரண்டு பெண்கள் வுட்ஸ்டாக் செல்ல ஒரு பஸ்ஸுக்கு காத்திருக்கிறார்கள். அங்கே வரும் கொஞ்சம் வயதான ஒரு பெண் இனி மேல் வுட்ஸ்டாக் செல்ல பஸ் கிடையாது என்கிறாள். (தவறான தகவல்). வரும் கார்கள் ஏதாவது ஒன்றில் லிஃப்ட் கேட்கலாம் என்கிறாள் ஒருத்தி. இன்னொருத்தி தயங்க, முதல் பெண் “Come on, we will have a giggle about this in the morning” என்கிறாள். பிறகு இருவரும் லிஃப்ட் கேட்க சாலையில் நடந்து செல்கிறார்கள்.

அன்றிரவு அவர்களில் ஒருத்தி – சில்வியா – கற்பழித்துக் கொல்லப்படுகிறாள். இறந்த இருவரும் ஒரு சிவப்பு காரில் ஏறிச் சென்றதைப் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். மோர்ஸும் லூயிசும் கூட வந்த பெண் யாரென்று கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆனால் கூடச் சென்ற பெண் தான்தான் மற்றவள் என்று முன்வரவில்லை. பஸ் கிடையாது என்று சொன்ன பெண்மணி மூலம் அந்த giggle பற்றிய பேச்சு தெரிய வருகிறது. காலையில் இதைப் பற்றி சிரிப்போம் என்றால் மற்றவள் சில்வியாவோடு வேலை செய்பவளாக இருக்க வேண்டும் என்று மோர்ஸ் யூகிக்கிறார். கூட வேலை செய்யும் ஜென்னிஃபர் கோல்பிக்கு ஒரு ரகசிய வேண்டுகோளோடு வந்திருக்கும் கடிதம் ஒன்றைக் கண்டுபிடித்து மோர்ஸ் ஜென்னிஃபர் மீது சந்தேகப்படுகிறார், ஆனால் ஜென்னிஃபர் அசைக்க முடியாத பதில்களைச் சொல்கிறாள், நான் அவளில்லை என்று மறுக்கிறாள்.

பெண்ணைக் கண்டுபிடிக்க முடியாத மோர்ஸ், லிஃப்ட் கொடுத்தது யாரென்று கண்டுபிடிக்க முயல்கிறார். ஒரு சிறந்த பகுதி இங்கே – சில பல hypothesis-களைக் கொண்டு தான் தேடும் பகுதியில் ஒரே ஒருவர்தான் தான் நினைக்கும் குணாதிசயங்களுடன் சிவப்பு கார் ஓட்டுகிறார் என்று முடிவுக்கு வருகிறார். அப்படி கார் ஓட்டும் ஆக்ஸ்ஃபோர்டில் பேராசிரியராக இருக்கும் பெர்னார்ட் க்ரௌதரை நெருங்குகிறார். க்ரௌதர் தான்தான் லிஃப்ட் கொடுத்தேன், ஆனால் இறக்கிவிட்டுவிட்டேன் என்று ஒத்துக் கொள்கிறார். மனைவிக்குத் தெரியாமல் அன்று தன் கள்ளக் காதலியை சந்திக்க சென்றதால் இது வரை தானே முன்வந்து உண்மையைச் சொல்லவில்லை என்கிறார்.

க்ரௌதரின் மனைவி மார்கரெட் கள்ளக் காதலைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகவும், கோபத்தில் சில்வியாவை தான்தான் கொன்றேன் என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். மனைவி இறந்ததும் பெர்னார்டுக்கு ஹார்ட் அட்டாக். கள்ளக் காதலியை அன்று பார்க்க முடியாததால் சில்வியாவோடு உறவு கொண்டதாகவும், சில்வியா மிரட்டியதால் அவளைக் கொன்றதாகவும் சொல்லிவிட்டு அவரும் இறக்கிறார். மோர்ஸ் இருவருமே கொலை செய்யவில்லை, கொன்றது இன்னொருவர் என்கிறார். மிச்சத்தை படித்துக் கொள்ளுங்கள்.

க்ளூக்களை புத்தகம் முழுதும் இறைத்திருக்கும் விதம், சின்ன சின்ன ஒட்டைகளை அடைக்கும் விதம் இரண்டிலும் டெக்ஸ்டரின் திறமை தெரிகிறது. ஆனால் முக்கியமான giggle க்ளூவைப் படித்தபோது என்னடா மோர்ஸ் ஒரு obvious பகுதியைக் கோட்டை விடுகிறாரே என்று ஒரு நிமிஷம் தோன்றியது, ஆனால் கதையின் சுவாரசியம் அதை விரைவிலேயே மறக்கடித்துவிட்டது.

நல்ல மர்ம நாவல் எழுதுவது கஷ்டம். மர்ம நாவலின் ஃபார்முலாக்களை மீறாமல் சிறந்த கதைப் பின்னலை (plot) டெக்ஸ்டர் உருவாக்கி இருக்கிறார். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: மர்ம நாவல்கள்

தொடர்புடைய சுட்டி: ஆர். அஜயின் அலசல் (சிவா கிருஷ்ணமூர்த்திக்கு நன்றி!)