கணேஷ்-வசந்த் கதை – சுஜாதாவின் “மேகத்தைத் துரத்தினவன்”

எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, சுஜாதாவைப் பற்றி ஒரு பதிவு எழுதி (சுஜாதா இலக்கியவாதிதான் என்று எழுதியதைத் தவிர) ரொம்ப நாளாகிவிட்டது. ஒரு வருஷத்துக்கு மேலே! சரி இந்த வாரம் கணேஷ்-வசந்த் கதைகளுக்கு. சுஜாதா இலக்கியவாதி இல்லை என்ற வாதத்துக்கு இவை அனேகமாக வலு சேர்க்கும். 🙂

sujathaமேகத்தைத் துரத்தினவன்” ஒரு கச்சிதமான கணேஷ்-வசந்த் கதை.

கணேஷ்-வசந்த் என்று சம்பிரதாயமாகச் சொன்னாலும் இதில் கணேஷ் கிடையாது. வசந்த் மட்டுமேதான் துப்பறிவார். இந்த ஒரு கதைதான் அப்படி கணேஷ் இல்லாத கணேஷ்-வசந்த் கதை என்று நினைக்கிறேன்.

கதையின் நாயகன் அன்பழகன் – சுருக்கமாக கன் – வேலையில்லாமல் பாங்க் மானேஜர் சித்தப்பா ஆதரவில் வாழும் இளைஞன். வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்யும் சம்பளம் இல்லாத வேலைக்காரன். சிகரெட்டுக்கும் டீக்கும் அந்தக் காலத்தில் வேண்டியிருந்த நாலணா எட்டணாவுக்கு சில்லறைத் திருட்டுகள். சித்திக்கு அவன் மீது ஒரு கண். சித்தப்பா பாங்கை கொள்ளையடிக்கப் போய் மாட்டிக் கொள்கிறான். அவன் மேல் பரிவுள்ள சித்தியின் தங்கை ரத்னா வசந்திடம் இதைப் பற்றி பேச, என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

ganesh-vasanthநல்ல மர்மக் கதை. மர்மம் நன்றாகவும் அவிழ்கிறது. ஆனால் இந்தக் கதையை வேறு லெவலிலும் படிக்கலாம்.

சுஜாதா நல்ல சாகசக் கதை எழுத்தாளர் என்பதற்கு இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லலாம். நல்ல சாகசக் கதைகளுக்கு வேண்டிய எல்லாம் இதில் இருக்கிறது. குற்றம், மர்மம், அதை விடுவிப்பது, ஏன் மறக்காமல் ஒன்றிரண்டு கில்மா சீன்களைக் கூட சேர்த்திருக்கிறார். ஆனால் கில்மா சீன்கள் கூட இயற்கையாக இருக்கின்றன, வலிந்து புகுத்தப்படவில்லை. விறுவிறுப்பு குறைவதே இல்லை.

அதே நேரத்தில் சுஜாதா வெறும் சாகசக் கதை எழுத்தாளர் அல்ல என்பதற்கும் இந்தக் கதையை உதாரணமாகச் சொல்லலாம். சாகசக் கதைகளின் எல்லைகளை மீறி வெகு சுலபமாக இலக்கியத்தின் எல்லைகளை அவர் தொட்டிருக்கிறார். கன், ரத்னா இருவரின் பாத்திரப் படைப்பும் அருமை. கன்னின் வாழ்வின் வெறுமை, இழிந்த நிலை, ரத்னாவை அவன் சைட்டடிப்பது போன்றவற்றை சிக்கனமான வார்த்தைகளில் காட்டிவிடுகிறார். அவர் முனைந்திருந்தால், வாரப் பத்திரிகை தொடர்கதை என்ற இக்கட்டு இல்லாமலிருந்தால் அவர் இன்னும் உன்னதமான இலக்கியவாதியாக பரிணமித்திருப்பார் என்று என்னை நினைக்க வைப்பது இது போன்ற கதைகள்தான்.

வாரப் பத்திரிகை தொடர்கதைகளை விட குறுநாவல்கள் – அவை மாத நாவல்களாக இருந்தாலும் சரிதான் – சிறுகதைகள் போன்றவற்றில்தான் அவரது திறமை அதிகமாக வெளிப்பட்டது என்பதற்கு இன்னொரு அத்தாட்சி இந்தப் புத்தகம்.

தொகுக்கப்பட்ட பக்கம் – கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்

ஜான் க்ரிஷம்

john_grishamக்ரிஷம் மிகப் பிரபலமான த்ரில்லர் எழுத்தாளர். சட்டப் பின்னணியில் த்ரில்லர்கள் எழுதுவது இவர் ஸ்பெஷாலிடி. அவரது Firm, Pelican Brief, Client போன்ற பல புத்தகங்கள் அபார வெற்றி அடைந்திருக்கின்றன. உலகம் முழுவதும் 28 கோடி புத்தகங்கள் விற்றிருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அவரது நாவல்களில் மீண்டும் மீண்டும் வரும் motif ஒரு தனி மனிதன் ஒரு பெரிய அமைப்பை (அனேகமாக ஒரு சட்டக் கம்பெனி) எதிர்த்து நிற்பது. மிஸிஸிபி மாநிலத்தில் அடிநாதமாக ஓடும் racism-உம் வெளிப்படுகிறது. ஆனால் முதலில் இருந்து விறுவிறுப்பு போகப் போக குறைந்துவிட்டது. அவரது பிற்கால நாவல்கள் எல்லாம் மகா தண்டம். Firm, Pelican Brief, Ford County (சிறுகதைத் தொகுப்பு) மூன்றையும் படித்துவிட்டு மற்றவற்றைத் தவிர்த்துவிடலாம்.

கதைகளின் பெரிய பலமாக நான் கருதுவது வக்கீல் தொழில் பின்புலம், minutiae-தான். Litigators நல்ல உதாரணம். சின்ன வக்கீல்களின் தினசரி வாழ்க்கை, கேஸ் பிடிக்க அவர்கள் படும் கஷ்டம் எல்லாம் உண்மையாக இருக்கிறது. நாவல்களைப் படிக்கும்போது அமெரிக்க சட்ட நிர்வாகம் எத்தனை சுவாரசியமானது என்று தெரிய வருகிறது. இவரது கதைகளில் மீண்டும் மீண்டும் பெரும் கம்பெனிகளுக்கு, அமைப்புகளுக்கு எதிராக ஒரு தனி வக்கீல் வென்றாலும் அது அபூர்வ நிகழ்ச்சிதான் என்பதும் புரிந்துவிடுகிறது.

அவரது சிறந்த புத்தகம் Firm (1991). விறுவிறுவென்று போகும் ஒரு த்ரில்லர். மாஃபியா கும்பல் ஒன்று தனக்காகவே ஒரு சட்டக் கம்பெனியை வைத்திருக்கிறது, அது மாஃபியா கம்பெனி என்று தெரியாமல் நாயகன் அங்கே வக்கீலாக சேர்கிறான். எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் கதை. டாம் க்ருய்ஸ், ஜீன் ஹாக்மன் நடித்து திரைப்படமாகவும் வந்தது. இந்தத் த்ரில்லரை நான் நிச்சயமாகப் பரிந்துரைப்பேன்.

Ford County (2009) பல சிறுகதைகளின் தொகுப்பு. எதுவும் மோசம் என்று சொல்வதற்கில்லை, ஆனால் என்னைக் கவர்ந்தது Blood Drive என்ற சிறுகதைதான். ஊர்க்காரன் ஒருவன் மெம்ஃபிஸ் நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான், அவனுக்கு ரத்தம் தேவை என்று தெரிந்து மூன்று இளைஞர்கள் தங்கள் கிராமத்திலிருந்து கிளம்புகிறார்கள். போகும் வழியில் வேகமாக காரை ஓட்டியதற்காக துரத்தும் போலீஸ், அவனுக்கு பயந்து ஒரு வீட்டில் ஒதுங்கும்போது திருடர்கள் என்று நினைத்து அவர்களை சுடும் வீட்டுக்காரன், ஆஸ்பத்திரிக்குப் போவதற்கு முன் அவர்கள் ஜொள்ளு விட்டுக்கொண்டு போய்ப் பார்க்கும் ஒரு strip club, பணம் பற்றாமல் ரத்தத்தை விற்கப் போவது என்று ஒரு black humor திரைப்படம் போல காட்சிகளை அமைத்திருக்கிறார். அந்த ஒரு சிறுகதைக்காகவே இந்தத் தொகுப்பையும் பரிந்துரைக்கிறேன்.

பரிந்துரைக்கும் இன்னொரு புத்தகம் Pelican Brief (1992). Firm அளவுக்கு இல்லை என்றாலும் படிக்கக் கூடிய த்ரில்லர்தான். இரண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கொலை திட்டமிட்ட சதி என்று ஒரு பெண் விளையாட்டாக ஒரு கான்ஸ்பிரசி தியரியை Pelican Brief ஆக உருவாக்குகிறாள்.கான்ஸ்பிரசி தியரி உண்மையாக இருக்கிறது, அந்த Brief-ஐப் பார்ப்பவர்கள் எல்லாம் கொல்லப்படுகிறார்கள். ஜூலியா ராபர்ட்ஸ், டென்சல் வாஷிங்டன் நடித்து திரைப்படமாகவும் வந்தது.

Rogue Lawyer (2015) நல்ல மசாலா நாவல். கொஞ்சம் விரிவாக இங்கே.

மற்ற புத்தகங்கள் பற்றி சிறு குறிப்புகள் கீழே.

A Time to Kill (1989) முதல் நாவல். சிறு கறுப்பினப் பெண்ணை கற்பழிக்கும் இரண்டு வெள்ளையர்கள் – rednecks. அப்பா அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்கிறான். வெள்ளை அப்பா இதே சூழ்நிலையில் இரண்டு கற்பழித்த கறுப்பர்களை சுட்டிருந்தால் கேஸே நடந்திருக்காது. ஆனால் இந்த கறுப்பு அப்பாவுக்கு எதிராக கேஸ் பலமாக ஜோடிக்கப்படுகிறது, தப்பிப்பது கஷ்டம். வெள்ளையன் வக்கீல் ஜேக் ப்ரிகான்ஸ் எப்படியோ அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறான். திரைப்படமாகவும் வந்தது.

Client (1993) அவரது சரிவின் முதல் படி. பஸ்ஸில் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடக் கூடிய முதல் நாவல். இப்போதிலிருந்து அவர் அப்படிப்பட்ட நாவல்களைத்தான் எழுதி இருக்கிறார். இந்தக் கதையில் ஒரு சிறுவன் ஒரு தற்கொலையைப் பார்க்கிறான். தற்கொலை செய்து கொள்பவன் மாஃபியாவோடு தொடர்புள்ளவன். தன் வயதுக்கு மீறிய புத்திசாலித்தனத்தோடு ஒரு வக்கீல், நீதி அமைப்பு, FBI ஆகியவற்றை பயன்படுத்தி மாஃபியாவிடமிருந்து தப்புகிறான். திரைப்படமாகவும் வந்தது.

Chamber (1994)-இல் Ku Klux Klan இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் மரண தண்டனையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அவனது பேரன் இப்போது வக்கீல். அவனை விடுவிக்கப் பாடுபடுகிறான். திரைப்படமாகவும் வந்தது.

Rainmaker (1995)-இல் சிகிச்சைக்குப் பணம் தராமல் ஏமாற்ற முயற்சிக்கும் இன்ஷூரன்ஸ் கம்பெனியை எதிர்த்து அனுபவமே இல்லாத ஒரு வக்கீல் வழக்கு தொடுக்கிறான். சில நல்ல கோர்ட் காட்சிகள் உண்டு, அதற்காகப் படிக்கலாம். திரைப்படமாகவும் வந்தது.

Runaway Jury (1996) ஒரு சிகரெட் கம்பெனிக்கு எதிராக தொடுக்கப்படும் ஒரு வழக்கை விவரிக்கிறது. ஜூரர்களைத் தேர்ந்தெடுப்பது பற்றி பல நுண்விவரங்கள் உண்டு. திரைப்படமாகவும் வந்தது.

Partner (1997) தன்னை ஏமாற்றும் கம்பெனி, மனைவி எல்லாரையும் ஒரு வழி பண்ணும் ஒரு வக்கீலின் கதை.

Street Lawyer (1998)-இல் ஒரு பெரிய சட்டக் கம்பெனியில் வேலை செய்யும் வக்கீல் ஒருவன் மனம் மாறி ஏழைகளுக்காக உழைக்கும் வக்கீல் ஆகிறான்.

Sycamore Row (2013) நல்ல பொழுதுபோக்கு கதை. பயணத்தில் படிக்க ஏற்றது. ஒரு உயில் பற்றிய தகராறுதான் கதை.

Gray Mountain (2014) நல்ல பொழுதுபோக்கு கதை. பெரிய சட்ட நிறுவனத்தில் நிறைய பணம் சம்பாதிக்கும் அழகிய இளைஞி சமந்தாவுக்கு recession-இல் வேலை போய்விடுகிறது. வெர்ஜீனியா மாநிலத்தில் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்கும் ஒரு சின்ன நிறுவனத்தில் வாலண்டியராகச் சேர்கிறாள். அது நிலக்கரி சுரங்கக் கம்பெனிகள் சுற்றுச்சூழல் பற்றி கவலையோ, இல்லை தொழிலாளர்களைப் பற்றி எந்த வித நியாய உணர்வோ இல்லாமல் கொழிக்கும் இடம். அவள் மனம் மாறி குறைந்த சம்பளத்தில் ஏழைகளுக்காக உழைக்கும் வக்கீலாகப் பரிணமிப்பதுதான் கதை.

Whistler (2016) சுமாராக இருக்கிறது. விறுவிறுப்பு பற்றவில்லை. சூதாட்ட அரங்கப் பின்புலம்.

Camino Island (2017) சுமார்தான். ஆனால் புத்தக விற்பனைப் பின்புலம். முதல் பதிப்புகளுக்கு மேலை நாடுகளில் நல்ல மதிப்பு உண்டு. ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்ட் எழுதிய நாவல்களின் கையெழுத்துப் பிரதிகள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுகிறது. அந்தப் பின்புலம் எனக்கு ஆர்வம் ஊட்டியது.

Judge’s List(2021) சுமாரான நாவல். தன்னை பாதித்தவர்களை, அவமானப்படுத்தியவர்களை எத்தனை வருஷங்கள் ஆனாலும் காத்திருந்து கொல்லும் வில்லன். எப்படி பிடிபடுகிறான்?

Sparring Partners(2022) பெரிதாக சுவாரசியப்படவில்லை. ஆனால் ஒரு சிறுகதை – Strawberry Moon – நினைவிருக்கும். மரண தண்டனைக் கைதி. தன் சிறை அறையில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை வைத்திருக்கிறான். அவன் இறப்புக்குப் பின் புத்தகங்கள் என்னாகும்?

பிற சட்டப் பின்னணி த்ரில்லர்கள் – Testament(1999), Brethren(2000), Summons(2002), King of Torts (2003), Last Juror(2004), Broker(2005), Appeal(2008), Associate(2009), Confession(2010), Litigators(2011), Racketeer(2012) – தவிர்க்கப்பட வேண்டியவை.

இவற்றைத் தவிர தியோடோர் பூன் என்ற சிறுவனை – வக்கீல் ஆக விரும்புகிறான் – வைத்து Theodore Boone: Kid Lawyer(2010), Theodore Boone: The Abduction(2011), Theodore Boone: The Accused(2012), Theodore Boone: The Activist(2013) , Theodore Boone: The Fugitive(2015), Theodore Boone: The Scandal (2016) ஒரு சீரிஸ் எழுதுகிறார். சிறுவர்கள் கூடத் தவிர்க்க வேண்டியவை.

சட்டப் பின்னணி இல்லாத A Painted House(2001), Skipping Christmas(2001), Bleachers(2003), Playing for Pizza(2007), Calico Joe(2012) என்ற சில நாவல்களையும் Tumor (2016) என்ற சிறுகதையையும் எழுதி இருக்கிறார். Innocent Man (2006) புனைவு அல்ல. தவறாக தண்டிக்கப்பட்ட ஒரு கேஸைப் பற்றி விவரிக்கிறார். நான் இவற்றைப் படிக்கப் போவதில்லை.

A Painted House திரைப்படமாக வெளியானது. Skipping Christmas-உம் Christmas with the Kranks என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது.

க்ரிஷம் முதலில் அடைந்த பெருவெற்றிகளை (Firm, Pelican Brief, Client…) வைத்தே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார், அவ்வளவுதான். அந்தப் பெருவெற்றிகளும் சுமாரான த்ரில்லர்களே என்பதுதான் சோகம். என்னைப் போன்ற மூடர்கள் அவற்றை இன்னும் பயணங்களில் படித்துக் கொண்டிருக்கிறோம் என்பது இன்னும் பெரிய சோகம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்