கணேஷ்-வசந்த் குறுநாவல்: மாயா

sujathaமாயா 72-73 வாக்கில் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். தினமணி கதிரில் தொடராக வந்தது. வந்த காலத்தில் – குறிப்பாக இளைஞர்கள் நடுவில் – பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும்.

இன்று படிக்கும்போது sensational ஆக – குறிப்பாக செக்ஸ் பற்றிய அந்தக் கால எழுத்தின் எல்லைகளை மீறி எழுதும் ஆர்வம்தான் இந்த குறுநாவலில் பிரதான நோக்கமாகத் தெரிகிறது. அந்தக் கால மஞ்சள் பத்திரிகைகளை நான் படித்ததில்லை. ஆனால் அந்த மஞ்சள் பத்திரிகை எழுத்துக்கும் இதற்கும் அப்போது பெரிய வித்தியாசம் இருந்திருக்காது என்றுதான் தோன்றுகிறது. அப்போது கதிர் ஆசிரியராக இருந்த சாவியும் இப்படிப்பட்ட எழுத்தைப் பிரசுரிப்பதில் விருப்பம் உள்ளவர். சாவி புஷ்பா தங்கதுரை எழுதிய “என் பெயர் கமலா” என்ற தொடர்கதையை தினமணி கதிரில் தொடராக வெளியிட்டதுதான் செக்ஸ் பற்றிய ஐம்பது-அறுபதுகளின் பத்திரிகை எழுத்தின் எல்லைகளை உடைத்த முதல் நாவல் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொல்வார். என்னை விட கிழவர்கள் யாராவது இதைப் படித்திருந்தால் சொல்லுங்கள்!

வணிக எழுத்தில் செக்சைப் புகுத்துவது என்பதற்கும் ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. வடுவூர் துரைசாமி ஐயங்கார் நூறு பக்கம் எழுதினால் அதில் எண்பது பக்கம் தாசிகள் வருவார்கள். ஜாவர் சீதாராமனுக்கு ரவிக்கை கிழிந்து கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் காமெடி ட்ராக் வருவது போல சாண்டில்யனுக்கு மேடு, மன்மதப் பிரதேசம் என்று ஒரு ட்ராக் வந்து கொண்டே இருக்கும், அதை எழுதுவதிலேயே பாதி புத்தகம் போய்விடும். ஆனால் இவை எல்லாமே செயற்கையாகத் தெரியும். சுஜாதாவும் செக்சை வேண்டுமென்றேதான் புகுத்துகிறார் – என்றாலும் அது கதையின் போக்குக்கு அந்நியமாக இல்லை.

ganesh-vasanthகதையின் முடிச்சு ஒன்றும் பிரமாதம் இல்லை. ஒரு சாமியார் மீது ஒரு “பக்தை” செக்ஸ் புகார் கொடுக்கிறாள். கணேஷ் கேசை சுலபமாக உடைக்கிறார். கடைசியில் சுலபமாக யூகிக்கக் கூடிய ஒரு ஓ. ஹென்றி ட்விஸ்ட்.

இது வரை – ஜேகே நாவல் வரை – டெல்லியிலிருந்த கணேஷ் இப்போது சென்னையின் தன் புகழ் பெற்ற தம்புச்செட்டித் தெரு முகவரிக்கு வந்தாயிற்று. சுஜாதாவுக்கும் டெல்லியிலிருந்து மாற்றல் ஆகியிருந்த தருணம் என்று நினைக்கிறேன்.

இந்த நாவலின் முக்கியத்துவம் என்பது வசந்த் இதிலே அறிமுகம் ஆவதுதான். தன் ஜூனியர் ஒரு ரத்தினம் என்று கணேஷ் வியந்து கொள்கிறார். அறிமுகப் புத்தகத்திலேயே வசந்த் பெண்களைக் கண்டு ஜொள்ளு விட்டாலும் வசந்தின் பாத்திரம் இன்னும் முழுதாக உருவாகவில்லை. கணேஷே இன்னும் ஜொள்ளு விடுவதை நிறுத்தவில்லை.

கணேஷ்-வசந்த் ரசிகர்கள் தவறவிடக் கூடாது. மற்றவர்கள் பஸ்ஸில் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்