கணேஷ்-வசந்த் கதை: விதி

sujathaஇன்னொரு சிறப்பான மர்மக் கதை.

இரவு தங்கையோடு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் தாமோதரனுக்கு ஃபோன் வருகிறது. இதோ வருகிறேன் என்று கிளம்பிப் போனவன் பங்களூர் செல்லும் பஸ் ஒன்றில் விபத்தில் அடிபட்டு இறந்து கிடக்கிறான். தங்கைக்காரி இவன் எதற்காக பெங்களூர் போனான், அங்கே யாரையும் தெரியாதே, இதோ வருகிறேன் என்றல்லவா கிளம்பினான், துணிமணி எதுவும் எடுத்து வைத்துக் கொள்ளவில்லையே என்று குழம்பி கணேஷ்-வசந்தை அணுகுகிறாள். அதற்கு மேல் படித்துக் கொள்ள வேண்டியதுதான்.

முடிச்சும் சரி, அது அவிழ்வதும் சரி திறமையாக எழுதப்பட்டவை.

ganesh-vasanthசின்னச் சின்ன நகாசு வேலைகளுக்கும் குறைவே இல்லை. மெல்லிய நகைச்சுவை கதை பூராவும் வருகிறது. வசந்த் திருக்குறளை மேற்கோள் காட்டுவான். தாமதமாக வரும் வசந்த் ‘வர வழியில பஸ்ஸெல்லாம் நிறுத்திட்டாங்களா?…’ என்று ஆரம்பிக்க கணேஷ் உடனடியாக ‘த பார் பொய்யெல்லாம் கோர்ட்டில் போய் சொல்லிக்கலாம்’ என்று கணேஷின் கவுண்டர். ‘ரொம்ப துக்கம் போலிருக்கு. துக்கம் வெக்கம் அறியாதும்பாங்க. இந்தப் பொண்ணு மேல்புடவையை இழுத்துக் கட்டிக்கிட்டுன்னா பேனாவைப் பொறுக்குது!” என்று வருத்தப்படும் வசந்த். பி.ஜி. உட்ஹவுசை நினைவுபடுத்தும் வகையில் ‘என்ன சிங் பாஸ்? தாடியா அதாடியா’ என்று கேட்கும் வசந்த்.

கதையின் ஆரம்ப வரிகளில் வீடியோ பஸ்ஸில் கதாநாயகன் ‘எப்டி எப்டி’ என்று கேட்கிறான். அது என்ன திரைப்படம், யாருக்காவது தெரிகிறதா? பழைய படமாக இருக்க வேண்டும், சென்னையின் டெலிஃபோன் நம்பர்கள் ஐந்து எண்களில்தான் இருக்கின்றன. ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குப் போனது செய்தியாக இருக்கிறது…

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்