கணேஷ்-வசந்த்: ஐந்தாவது அத்தியாயம்

sujathaகணேஷ்-வசந்த் கதைகளில் மீண்டும் மீண்டும் தெரியும் ஒரு தீம் – சென்சேஷனல், இது எப்படி என்று வியக்க வைக்கும் முடிச்சு. சில சமயம் அந்த மர்மம் ஜுஜுபியாக அவிழ்ந்தாலும் அது அவருக்கு பெரிய வாசகர் வட்டத்தை சேர்த்தது.

ganesh-vasanthஇந்த குறுநாவலும் அப்படித்தான். அபூர்வாவின் வாழ்க்கை விவரங்களை அப்படியே எடுத்து (கணவன் ஒரு டாக்டர், அபூர்வாவுக்கு மச்சம் எங்கே, கணவன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணைத் தடவுவது, சொத்துத் தகராறு) ஒரு தொடர்கதை வெளிவருகிறது. தொடர்கதையின் ஐந்தாவது அத்தியாயம் வெளிவருவதற்குள் அபூர்வா கொல்லப்படுவாள் என்று முதல் நான்கு அத்தியாயங்களில் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லப்படுகிறது. யார் எழுதுவது என்று வெளியிடும் பத்திரிகைக்கே தெரியாது, ஈமெயில் மூலம் அத்தியாயங்கள் வருகின்றன. அபூர்வா கணேஷ்-வசந்தை அணுக, அவர்களுக்கு டாக்டர் கணவன் மீது கொஞ்சம் சந்தேகம் ஏற்படுகிறது. அதற்குள் அபூர்வாவே கணேஷ்-வசந்தை அழைத்து கணவன் தன்னைக் கொல்ல வந்ததாகவும், கைகலப்பில் தற்செயலாகக் கணவனைக் கொன்றுவிட்டதாகவும் அழுகிறாள். அபூர்வா மீது கேஸ் நிற்காது என்ற நிலையில் கணேஷுக்கு இந்தத் தொடர்கதை எல்லாம் அபூர்வாவின் செட்டப்பாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சந்தேகத்தைத் தீர்க்காமல் கதையை முடித்துவிட்டார்.

Lady or the Tiger என்று ஒரு பிரமாதமான சிறுகதை உண்டு. சுஜாதா அதைப் படிக்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. சும்மா அந்த டெக்னிக்கைப் பயன்படுத்திப் பார்ப்போமே என்றுதான் இதை எழுதி இருக்கிறார். எனக்கென்னவோ இங்கே அந்த டெக்னிக் பொருந்தவில்லை. பாதியில் முடித்துவிட்ட மாதிரி இருக்கிறது.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய கணேஷ்-வசந்த் நாவல் இல்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம், சுஜாதா பக்கம்