Skip to content

கணேஷ்-வசந்த் குறுநாவல்கள்

by மேல் செப்ரெம்பர் 27, 2015

என் தலைமுறை, எனக்கு அடுத்த தலைமுறைக்காரர்களுக்கு கணேஷ்-வசந்த் கதைகள் முக்கியமான படிப்பு அனுபவம். இன்றும் தமிழில் இதை விடச் சிறந்த குற்றப் பின்னணி கதைகள் வரவில்லை. ஆனால் உலக அளவில் பார்த்தால் கணேஷ்-வசந்த் ஷெர்லாக் ஹோம்ஸின் அருகே வராது என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இன்றைய இளைஞர்கள் இவற்றால் பெரிதும் கவரப்படுவார்கள் என்று தோன்றவில்லை. யாராவது இளைஞர்/இளைஞி என்ன நினைக்கிறீர்கள் என்றூ சொல்லுங்கப்பு!

sujathaநண்பர் ஸ்ரீனிவாஸ் பல சமயங்களில் பின்னூட்டங்கள் வழியாக பல கணேஷ்-வசந்த் குறுநாவல்கள் பற்றி சின்னக் குறிப்புகளைத் தந்திருந்தார். அவற்றைத் தொகுத்து இங்கே பதித்திருக்கிறேன். இவற்றில் கணிசமானவற்றைப் பற்றி நானும் இங்கே எழுதி இருக்கிறேன். (பாதி ராஜ்யம், ஒரு விபத்தின் அனாடமி, காயத்ரி, மேற்கே ஒரு குற்றம்,  மீண்டும் ஒரு குற்றம், கொலையரங்கம், எதையும் ஒரு முறை, மலை மாளிகை, மாயா, மேகத்தைத் துரத்தினவன், விதி, ஐந்தாவது அத்தியாயம், நில்லுங்கள் ராஜாவே!) உன்னைக் கண்ட நேரமெல்லாம், மேலும் ஒரு குற்றம், மெரீனா ஆகியவற்றுக்கும் என்றாவது எழுத வேண்டும். உ.க. நேரமெல்லாம், மே. ஒ. குற்றம், மே. துரத்தினவன், விதி நான்கும் என் பதின்ம வயதில் சுஜாதாவை எனக்கு ஒரு icon ஆக்கியவற்றில் பங்குள்ளவை. புகார் புகார் புகார் போன்றவை சரியாக நினைவில்லை. யாராவது சுட்டி கொடுத்தால் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள்!

ganesh-vasanthகணேஷ்-வசந்த் குறுநாவல்கள் எல்லாம் உயிர்மை பதிப்பகத்தால் இரண்டு வால்யூமாகப் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.

பாதி ராஜ்யம், ஒரு விபத்தின் அனாடமி இரண்டிலும் வசந்த் கிடையாது. நீரஜா என்ற ஒரு பெண் பாதி ராஜ்யத்தில் க்ளையண்ட். ஒரு விபத்தின் அனாடமியில் அவள்தான் உதவியாளர்.

ஓவர் டு ஸ்ரீனிவாஸ்!

பாதி ராஜ்யம்: நைலான் கயிற்றில் அறிமுகம் ஆன கணேஷை நாம் மறுபடியும் டெல்லியில் சந்திக்கிறோம். நீரஜா என்னும் பெண் அவனைத் தேடி வருகிறாள்-அவள் பணக்கார அப்பாவின் சார்பாக. மோதலில் ஆரம்பிக்கும் கதை போக போக ஒரு blackmail நாடகத்தில் சங்கமித்து இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பதோடு முடிகிறது. பாதி ராஜ்ஜியம் அந்த பணக்காரர் கணேஷுக்கு கொடுக்கும் பரிசு. தனியாக இருந்தாலும் கணேஷ் காட்டும் சாமர்த்தியம், ஒவ்வொரு நூலாக அலசி ஆராய்ந்து அவன் முடிவை யூகிக்கும் தேர்ச்சி நம்மை வியக்க வைக்கும்.

ஒரு விபத்தின் அனாடமி: டெல்லியின் பரபரப்பான சந்து பொந்துகளில் ஒன்றில் ஒரு கோர விபத்து நடக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவரும் அந்த விபத்தை பார்த்த ஒரே சாட்சியும் கணேஷின் உதவியை நாடுகிறார்கள். எந்த தடயமும் இல்லாமல் கணேஷ் விபத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடிக்கும் கதை இது. வெறும் கற்பனையாக மட்டும் இல்லாமல் மூளைக்கு நல்ல வேலை கொடுக்கிறார் சுஜாதா. ஒவ்வொரு செங்கல்லாக கணேஷ் நகர்த்தும்போதும், இறுதியில் குற்றவாளியைக் கண்டுபிடித்து அவனை அணுகும் போது குடுக்கப்படும் poetic justice நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும். A very excellent story.

மாயா: இது போலி சாமியார்களின் காலம். இந்தக் கதையும் ஒரு ஆசிரமத்தில் நடக்கிறது. வழக்கு ஒன்றை நடத்துவதற்காக ஒரு ஆசிரமம் செல்லும் கணேஷ் அங்கு எதிர்கொள்ளும் சவால்களே கதை. கூடுதல் ஊக்கமாக இதில் வசந்த் அறிமுகமாகிறான். முதல் கதையிலேயே வசந்த்தின் குறும்புத்தனங்கள் நம்மை ‘அட’ போட வைக்கின்றன. உதாரணமாக:
“ஒன்று: வாசுதேவனை போய் பார்க்க வேண்டும்”.
“ஓ.கே.”
“இரண்டு: இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களும் வேண்டும்”.
“ஓ.கே”
“மூன்று: ஒரு பாட்டில் பீர்”.
“பீரா? எப்பொழுது?”
“இப்பொழுதே!”
“ரெடி” என்றான் சிரித்துக்கொண்டே.
இந்தக் கதை நிறைய விமர்சனங்களை சந்தித்ததாக சொல்வார்கள். ஆனால் ஒரு விறுவிறுப்பான கதை என்பதைத் தாண்டி ஒன்றும் ஏடாகூடமாக நமக்கு இதில் தெரிவதில்லை – கூர்ந்து வாசித்தால்.

காயத்ரி: இந்த பெயரில் ரஜினி, ஸ்ரீதேவி நடித்த படமும் உண்டு. ஆனால் கதை இன்னும் சுவாரசியமாக இருந்தது. கதாசிரியரே சொல்லுவதாக அமைந்திருக்கும் இந்தக் கதையில் கணேஷ்-வசந்த்திற்கு வேலை கம்மிதான். ஆனால் இறுதியில் ஈடு கொடுக்கிறார்கள் அபாரமாக. அவர்கள் இருவரையும் விட கதாநாயகி காயத்ரி நம் மனத்தில் அதிக இடம் பிடிக்கிறாள்.

விதி: ஒரு பஸ் விபத்து, காணாமல் போன ஒரு அண்ணன், அழகான தங்கை, இதில் என்ன முடிச்சுக்கள் இருக்கும்? உண்டு என்கிறது விதி. சம்பந்தமே இல்லாத முடிச்சுக்களை வைத்துக்கொண்டு கணேஷ் ஓட்ட வைக்கும் இடங்கள் புத்திசாலித்தனத்தின் ஆச்சர்ய உதாரணங்கள்.

மேற்கே ஒரு குற்றம்: கணேஷை ஒரு நடனக் குழுவை சேர்ந்த பெண் காண வருகிறாள். ஆனால் எதுவும் சொல்லும் முன் கொல்லப் படுகிறாள். விசாரணை கணேஷ்-வசந்த்தை ஜெர்மனி பக்கம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலிடம் கொண்டு செல்கிறது. அவர்கள் அதை சமாளிக்கும் விதமே இந்த கதை. காகிதத்தில் வரையப்படும் வட்டங்கள், கணேஷ் அதை வைத்து ஆடும் ஆட்டம் அருமையான இடங்கள்.

மேலும் ஒரு குற்றம்: ஒரு அனாமநேய டெலிபோன் அழைப்பு வருகிறது கணேஷுக்கு. பிறகு அழைத்தவர் கொலையுண்டு போகிறார். ஒரே சாட்சி கணேஷ்! எப்படி இருக்கும்? கொலையாளியின் சாதுர்யமான அணுகுமுறைகள் கணேஷை குழப்ப வைக்கின்றன, நம்மையும் சேர்த்து.

உன்னைக் கண்ட நேரமெல்லாம்:ப்ரியா‘ படித்தவர்கள் இந்த கதையை அதன் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்றவர்கள் புதிய பார்வையோடு நோக்கலாம். ஒரு நடிகையை மிரட்டும் கடிதங்கள் கணேஷ்-வசந்த்தை எங்கெல்லாம் இழுத்துச் செல்கின்றது என்பதே கதை.

மீண்டும் ஒரு குற்றம்: சுஹாசினி தயாரித்த தொடர்களில் இந்த கதை இடம் பெற்றது. மர்மங்களுக்கும் திகிலுக்கும் பஞ்சம் இல்லாத கதை. விடுமுறைக்காக மெர்க்காரா செல்லும் கணேஷ்-வசந்துக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அவர்கள் ஜெயித்தார்களா என்பது… படித்து தெரிந்து கொள்ளுங்கள். சதுரங்க ஆட்டம் போல சிந்தனைக்கு வேலை வைக்கும் கதை இது.

அம்மன் பதக்கம்: அம்மன் கோவிலில் இருக்கும் ஒரு விலை உயர்ந்த பதக்கம் காணாமல் போகிறது. பதக்கத்தோடு ஒரு பெண்ணும் ஒரு பைத்தியக்காரனும் சம்பந்தப்படுகிறார்கள். பதக்கத்தை கணேஷ் வசந்த் கண்டு பிடித்து மேலும் முடிச்சுக்களை அவிழ்க்கும் சுவாரசியங்கள் நிறைந்த கதை.

மெரீனா: மெரீனா கடற்கரையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. மெரீனாவில் பொழுது போக்கிற்காக செல்லும் ஒரு பணக்கார இளைஞன் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்கிறான். சாதாரணமாக இதை அணுகும் கணேஷ்-வசந்த் இதில் இன்னும் புதை குழிகளைக் கண்டு பிடிப்பதே கதை. இறுதி முடிவு நம்மை திருப்திபடுத்தும் விதமாக இருக்கும்.

புகார் புகார் புகார்: ஒரு pipe ரிப்பேர் விஷயம் கணேஷ்-வசந்தை பாடாய் படுத்தும் சுவாரசியமான கதை. அள்ள அள்ள குறையாத பணம் போல் இதில் அள்ளக் குறையாத பிணங்கள் நம்மை பயமுறுத்தும். Raskolnikov Syndrome என்ற சிந்தாந்தத்தை வைத்து பின்னப்பட்ட கதை. சட்டம் படித்தவர்கள், சட்டம் பயிலுவோர் இந்தக் கதையை அதிகம் ரசிப்பார்கள்.

ஐந்தாவது அத்தியாயம்: மர்மக் கதையில் வரும் சம்பவங்கள் நம் வாழ்க்கையில் நடந்தால்? அதுவும் வரிக்கு வரி நடந்தால்? இது தான் இந்தக் கதையின் முடிச்சு. பிரபல இருதய மருத்துவர் ஒருவரின் மனைவிக்கு இப்படி ஒரு நிலை வருகிறது. அதுவும் அவள் வாசிக்கும் மர்மக் கதையின் ஐந்தாவது அத்தியாயம் முடிவதற்குள் அவள் கொலையுண்டு போவாள் என்கிறது கதை. அந்த கொலை நடப்பதற்குள் கணேஷ் -வசந்த் அதை தடுத்து நிறுத்துவார்களா என்பது suspense. விறுவிறுப்பு கம்மி என்றாலும் (என்னை பொறுத்தவரையில்) இறுதியில் முடிச்சுக்கள் அவிழும் பொது கணேஷின் மூளை இன்ஷூர் செய்யப்பட்டதோ என்னும் கேள்வி நம் மனதில் எழுவது என்னவோ நிஜம்.

மேகத்தைத் துரத்தினவன்: ‘மாலைமதி’ இதழில் 1979-ல் வெளியான நாவல். ஒன்று விட்ட சித்தப்பாவின் வீட்டில் கொத்தடிமை வாழ்க்கையை எதிர்கொள்கிற வேலை கிடைக்காத பரிதாப இளைஞன் ஒருவன், வங்கி ஒன்றைக் கொள்ளையடிக்கும் செயலுக்குத் தூண்டப்படுவதுதான் கதை. திட்டம், செயல், வடிவம் என்று ஒவ்வொரு கட்டமாக பயணிக்கும் வங்கிக் கொள்ளையின் இறுதிக் கட்டத்தில் வஸந்தும் தலை நுழைக்கும் சுவாரசியமான நாவல் இது.

நில்லுங்கள் ராஜாவே!: “நீங்கள், நீங்கள் இல்லை. வேறு யாரோ!” இப்படி ஒருவர் அல்ல, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், உடன் வேலை பார்ப்பவர்கள், உங்கள் மனைவி, குழந்தை… எல்லோரும் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? உச்சக்கட்டமாக வீட்டு நாய்கூட அடையாளம் தெரியாமல் குரைத்து வைக்கிறது, பிடுங்க வருகிறது. இப்படி, யாரும் எதிர்பாராத ஒரு புதுச் சிக்கலுடன் பரபரப்பாகத் தொடங்குகிறது நாவல்.

கொலையரங்கம்: குங்குமம் வார இதழில் வெளியான கதை ‘கொலை அரங்கம்’. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகளை எழுப்பிய பரபரப்பான 1984 கால கட்டத்தில் அதன் தாக்கத்தில் உருவான திரில்லர் வடிவக் கதை. கணேஷ்-வஸந்த், முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி கதையை நடத்தும் நாவல்களில் இதுவும் ஒன்று.

எதையும் ஒரு முறை: குறிக்கோள் இல்லாமல் செய்யப்படும் குற்றம் குற்றமே அல்ல என்கிற விபரீதக் கொள்கையுடன் ஒருவன் கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கதை சுஹாசினி மணிரத்னம் டைரக்ஷனில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டது. கணேஷ்-வஸந்த் தோன்றும் மிகப் பிரபலமான நாவல்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீனிவாஸ் குறிப்பிடாத இரண்டு குறுநாவல்களைப் பற்றியும் இங்கேயே சொல்லிவிடுகிறேன்.

மலை மாளிகை: Gerontology-யை பின்புலமாக வைத்து எழுதப்பட்ட ஒரு சொதப்பல் கதை.

மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்: ஒரு சிறுகதை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் நாயகனை எல்லோரும் வேறு யாரோ என்கிறார்கள், என்ன மர்மம் என்று கணேஷ்-வசந்த் கண்டுபிடிக்கிறார்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்

Advertisements
2 பின்னூட்டங்கள்
 1. excellent.any guide for availability on the net?. there are blogs( i have
  located) devoted to Sujata. But these novels are not there except for,
  ‘nillungal Raajaave’. Bala

  Like

  • பாலா, நெட்டில் கிடைப்பவை எல்லாம் காப்பிரைட் மீறல்கள். 🙂 பரவாயில்லை என்றால் ஒரத்தநாடு கார்த்திக் என்று கூகிள் செய்து பாருங்கள்.

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: