புத்ர பற்றி லா.ச.ரா.

ஹிந்து பத்திரிகையின் தமிழ் வடிவத்தில் வந்த கட்டுரையை மீள்பதித்திருக்கிறேன், நன்றி, ஹிந்து!

La_Sa_Raஎங்கோ ஒரு இடத்தில் ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நான் என் முன்னோர்களின் சரித்திரகன் தவிர வேறு இல்லையென்று. அவர்கள் எல்லாருமே அவர்கள் தன்மையில் அதீதமானவர்கள். முன்கோபிகள். கர்வம் பிடித்தவர்கள். ஆனால் முற்றிலும் நாணயமானவர்கள். இந்த நாவலை எழுதும்போது நான் அப்படி விடுவித்த வாக்குமூலம் எனக்கு அத்தனை ஸ்பஷ்டமாக விளங்கவில்லை. ஆனால் இப்போது அதைப் படிக்கையில் அது சர்வ உண்மையே. இதில் இடம்பெறும் பாத்திரங்கள் ஐந்து தலைமுறை ஆசாமிகள். அதாவது சுமார் நூறு வருஷங்களுக்கு முன்னவர்களாய் இருக்கலாமா?

என் நாவலின் கதாநாயகி ஜகதாவாக, அவளுடைய மாமியாராக மாற்றி மாறி என் தாயாரைத்தான் பார்க்கிறேன். அவளுடைய மாமனார் பல இடங்களில் என் பாட்டனாரை ஒத்திருக்கிறார். ஜகதாவின் கணவன் அங்கங்கு என் தகப்பனாரை நினைவூட்டுகிறார். ஜகதாவின் பிறந்த கத்தின் ஏழ்மை எங்கள் குடும்பத்தின் ஏழ்மை. இந்த நாவல் தோன்றுவதற்கே அடிப்படையாக விளங்கும் சாபம், எங்கள் குடும்பத்தில் யாரோ ஒரு பாட்டி வயிறு கொதித்து இட்டு பலித்துவிட்ட வாக்கு. மாதா பிதாவின் சாபம் மக்கள் தலைமேலே என்கிற வழக்கு சும்மா பிராசத்திற்காக அல்ல. THE SINS OF THE FATHERS SHALL BE VISITED ON THE CHILDREN. இது பைபிள் வாக்கு. இரண்டும் ஒன்று அல்ல எனினும் ஏறக்குறைய ஒன்றுதான். பரம்பரை அதன் ஆசாரம், பண்பு, வாழ்முறை அவைகளைப் பேணுவதில் இருக்கும் இன்பம் அவசியம். நான் ஐதீகவாதி.

‘அடே!’ இந்த விளிப்பைப் படிக்கையில் எனக்கு இப்போதே குலை நடுங்குகிறது. இந்த ‘அடே’ பெரிசு இல்லை. தொடர்ந்து வரும் சாபத்தின் வார்த்தைகள் பெரிசு இல்லை. ஆனால் அந்த த்வனி நாபிக் கொதிப்பினின்று கக்கும் அந்த எரிமலைப் பிழம்பு – எப்படி என் வாழ்த்தைகளில் பிடிபட்டன என்று இப்போதும் வியப்பாய், பயமாய் இருக்கிறது. இப்பொழுது எனக்கு இப்படி எழுதவருமா? வராது என்பதே என் துணிபு. சொல்லின் உக்ரம் எப்படிப்பட்டது என்று இப்போது உணர்கிறேன்.

பொதுவாகவே என் எழுத்து என் உயிரைக் குடித்து விட்டது. அதுவும் புத்ர, அபிதா இரண்டும் என்னை உறிஞ்சிவிட்டன. அப்படியும் அல்லது அதனாலேதானோ ஒரு சந்தோஷமும் இருக்கிறது. இத்தனை வருடங்கள் கழித்து, இந்த நாவலைப் பற்றி இன்னமும் பேசுகிறார்கள். என் வாசகர் வட்டம் சலிக்கவில்லை என்று என் பதிப்பாளர்களே சொல்லும்போது அதுவேதான் எனக்கு பலம் – உடல் உள்ளம் இரண்டும் சேர்ந்துதான்.

நான் எழுதிக்கொண்டது எனக்குத்தான். வாசகர்கள் நீங்கள் படிப்பதும் உங்களுக்காகத்தான். அதனால்தான் ‘புத்ர’ இன்னமும் பேசப்படுகிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: லா.ச.ரா. பக்கம்