கென் ஃபாலட் எழுதிய “Key to Rebecca”

ken_follettஇந்த நாவலை முதன்முதலாகப் படிக்கும்போது நான் பதின்ம வயதினன். விறுவிறுவென்று போகும் சாகசக் கதை. கிளுகிளு கில்மா சீன்களும் உண்டு. பதின்ம வயதில் பிடித்துப் போக வேறென்ன வேண்டும்?

ஓரளவு வயதான பிறகு வரலாற்றில் ஆர்வம் வந்து கையில் கிடைத்ததை எல்லாம் படித்தேன். அதுவும் English Patient திரைப்படமாக வந்தபோது ஆபரேஷன் சலாம் பற்றி படித்தேன். அட இது ‘Key to Rebecca’ கதையை நினைவுபடுத்துகிறதே, மீண்டும் படித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். சமீபத்தில்தான் கண்ணில் பட்டது.

இன்று படிக்கும்போதும் நல்ல சாகசக் கதை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் துரதிருஷ்டம், கில்மா சீன்களில் அன்றிருந்த கிளுகிளுப்பு இன்றில்லை. 🙂 ஆனால் இன்று இந்தப் புத்தகத்தில் இருக்கும் கவர்ச்சி அதன் அடிப்படையாக அமைந்த உண்மை சம்பவங்கள்தான். இது என் கண்ணில் சாகச நாவல் என்பதை விட (சமீபத்திய) சரித்திர நாவல்தான்.

ரொம்ப சிம்பிளான கதை. இரண்டாம் உலகப் போர். இங்கிலாந்துக்கு எகிப்து ஏறக்குறைய ஒரு காலனிதான். கெய்ரோவில் ராணுவத்தின் முக்கியமான தலைமையகம் இருக்கிறது. ரோமலின் தலைமையில் ஜெர்மன் படைகளுக்கு ஏறுமுகம், எகிப்து விழுந்துவிடுமோ என்ற சூழ்நிலை. இந்த நிலையில் பல தடைகளை மீறி ஜெர்மன் உளவாளி வுல்ஃப் கெய்ரோவுக்கு வந்து சேர்கிறான். ஒரு பெல்லி டான்சரின் உதவியோடு இங்கிலாந்து ராணுவத்தின் திட்டங்கள் பற்றிய தகவல்களை ரோமலுக்கு ரேடியோ மூலம் செய்தியாக அனுப்புகிறான். செய்திகள் சங்கேத முறையில் அனுப்பப்படுகின்றன – அதற்குத்தான் டாஃப்னே டு மாரியரின் Rebecca புத்தகம் பயன்படுத்தப்படுகிறது. ரோமலுக்கு எதிரியின் திட்டங்கள் தெரிந்துவிடுவதால் பெருவெற்றி அடைகிறார்.

ஜெர்மான் உளவு அமைப்பு வுல்ஃபிடம் நிறைய ஆங்கிலப் பணத்தை கொடுத்தனுப்பி இருக்கிறது, ஆனால் எல்லாம் கள்ள நோட்டு. இது வுல்ஃபுக்கே தெரியாது. ஆரம்பத்திலிருந்தே கெய்ரோவில் ஒரு ஜெர்மன் உளவாளி இருக்கிறானோ என்று சந்தேகப்படும் மேஜர் வாண்டாம் கள்ள நோட்டுகள் எங்கிருந்து வருகின்றன என்பதை ஆராய்ந்து மெதுமெதுவாக வுல்ஃபை நெருங்குகிறான். கடைசியில் வுல்ஃபை சிறைப்பிடித்து, ரோமலுக்கு பொய்யான செய்தியை அனுப்பி, ரோமல் தோற்று, வாண்டாமுக்கு ஒரு காதலி கிடைத்து, சுபம்!

புத்தகத்தின் இன்னொரு சுவாரசியம் பின்னாளில் எகிப்தின் அதிபரான சதாத்தும் ஒரு பாத்திரமாக வருவது. சதாத் ஜெர்மன் உதவியுடன் ஆங்கிலேயர்களை விரட்டி சுதந்திர எகிப்தை அடைய முயற்சிக்கிறார். (தோல்வி)

ரோமலுக்கும் அவருக்கு மேலதிகாரியாக இருந்த கெஸ்ஸல்ரிங்குக்கும் உள்ள டென்ஷன்களும் விவரிக்கப்படுகின்றன. அதுவும் சுவாரசியமான பகுதி.

சரித்திரமும் இதற்கு நெருக்கமானதுதான். ஒன்றல்ல, இரண்டு ஜெர்மன் உளவாளிகள் – எப்ளர் மற்றும் சாண்ட்ஸ்டெட் – கெய்ரோவை ரகசியமாக அடைகிறார்கள். ஒரு பெல்லி டான்சரின் உதவியோடு தகவல்களை சேகரிக்கப் பார்க்கிறார்கள். தகவல்களை ரகசிய மொழியில் அனுப்ப Rebecca புத்தகத்தைத்தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். கள்ள நோட்டுகளை பறக்க விட்டிருக்கிறார்கள். சதாத்தின் உதவியையும் நாடி இருக்கிறார்கள். ஆனால் எந்தத் தகவலும் ரோமலைப் போய்ச் சேரவில்லையாம், ரோமல் இவர்கள் உதவி இல்லாமலேதான் பெருவெற்றிகளை அடைந்திருக்கிறார்.

எப்ளர் தன் அனுபவங்களை புத்தகமாக – Rommel Ruft Kairo – எழுதி இருக்கிறார். லியோனார்ட் மோஸ்லி எழுதிய Cat and the Mice புத்தகமும் ஓரளவு பிரபலமானது. சதாத் தன் வாழ்க்கை வரலாற்றில் எப்ளரும் சாண்ட்ஸ்டெடும் ஓபி அடித்தார்கள், பெண்களோடு உல்லாசமாக இருப்பதில்தான் குறியாக இருந்தார்கள் என்கிறாராம். கெஸ்ஸல்ரிங் ரோமலோடு தனக்கு இருந்த பிணக்குகளை தன் புத்தகங்களில் குறிப்பிடுகிறார்.

இது இலக்கியம் இல்லை. ஆனால் விறுவிறுப்புக்காகவும், சரித்திரப் பின்னணிக்காகவும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஒற்றன் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்: கென் ஃபாலட்டின் தளம்

மார்க் ட்வெய்ன் எழுதிய “ப்ரின்ஸ் அண்ட் த பாப்பர்”

prince_and_the_pauperஎனக்குப் பிடித்த சிறுவர் புத்தகங்களில் ஒன்று.

சாதாரண ஆள் மாறாட்டக் கதைதான். இங்கிலாந்தின் இளவரசனும் ஒரு ஏழைச் சிறுவனும் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள், இடம் மாறிவிடுகிறார்கள். போலி இளவரசனுக்கு ராஜாவாக பட்டம் சூட்டப்படும் தறுவாயில் உண்மை இளவரசன் வெளிப்படுகிறான், அவ்வளவுதான். அதை “திரைக்கதையாக” எழுதி இருக்கும் விதம்தான் இந்தப் புத்தகத்தை ஒரு ஜாலியான புத்தகமாக மாற்றுகிறது.

இளவரசன் எட்வர்டும் ஏழைச் சிறுவன் டாமும் தற்செயலாக சந்திக்கிறார்கள். எட்வர்ட் டாமை அரண்மனைக்குள்ளே அழைத்துச் செல்கிறான். விளையாட்டாக இருவரும் உடைகளை மாற்றிக் கொள்கிறார்கள். கொஞ்சம் வெளியே வரும் எட்வர்டை காவலர்கள் அரண்மனையை விட்டு துரத்திவிடுகிறார்கள். அரண்மனைக்கு வெளியே வரும் எட்வர்டை எல்லாரும் ஏழைச்சிறுவன் என்றே நினைக்கிறார்கள். உள்ளே இருக்கும் டாமை இளவரசன் என்று நினைக்கிறார்கள். டாம் தான் இளவரசன் இல்லை என்று சொல்வதை யாரும் நம்புவதில்லை. அவனுக்கு மனநிலை பிறழ்ந்துவிட்டதோ என்று வைத்தியம் பார்க்கிறார்கள். வெளியே வரும் எட்வர்ட் தான் இளவரசன் என்று சொன்னால் பைத்தியம் என்று அவனைத் தாக்குகிறார்கள்.

மைல்ஸ் ஹெண்டன் என்ற வீரன் எட்வர்டை தாக்குதலிலிருந்து காக்கிறான். ஹெண்டன் சிறுவனுக்கு பைத்தியம், அதனால்தான் தான் இளவரசன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்கிறான். சிறுவன் மேல் இரக்கம் கொண்டு அவனைப் பாதுகாக்கிறான். ஏழைச் சிறுவனின் “பிரமைகளை” உடைக்க அவன் விரும்பவில்லை. எட்வர்ட் நீதி-சட்டம் எப்படி ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை நேரடியாகப் பார்க்கிறான். தான் அரசனாகும்போது இதை நிறுத்துவேன் என்று உறுதி கொள்கிறான். ஒரு கட்டத்தில் அவனும் ஹெண்டனும் பிரிந்துவிட, அவன் தனியாக டாமுக்கு முடிசூட்டும் விழாவுக்குச் சென்று அதைத் தடுத்து நிறுத்துகிறான். பல கேள்விகளுக்கு பதிலளித்து தானே உண்மையான இளவரசன் என்று நிரூபிக்கிறான். டாம் தான் இளவரசன் இல்லை என்று சொல்வதை எல்லாரும் இப்போதுதான் நம்புகிறார்கள். எட்வர்ட் அரசனாகிறான்.

ஹெண்டன் எட்வர்டுடன் இருக்கும்போது எட்வர்ட் தான் இளவரசன், தனக்குரிய மரியாதைகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறான். ஏழைச் சிறுவன் மீது இரக்கப்பட்டு ஹெண்டன் எட்வர்ட் எதிர்பார்க்கும் முறைமைகளில், மரியாதைகளில் குறை வைக்காமல் பார்த்துக் கொள்கிறான். எட்வர்ட் இப்படி என்னைப் பாதுகாப்பதற்கு உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்கும்போது ஹெண்டன் இளவரசன் முன்னால் உட்கார அனுமதி கேட்கிறான். அவனுக்கு நின்று நின்று கால் வலிக்கிறது! கடைசி காட்சியில் எட்வர்டுக்கு பட்டம் சூட்டப்பட்ட பிறகுதான் ஹெண்டன் அவனை அரசவையில் மீண்டும் பார்க்கிறான். உடனே உட்கார்ந்து கொள்கிறான்! அவனை கைது செய்ய விரையும் காவலர்களை முன்னாள் ஏழைச்சிறுவன்-இளவரசன், இன்னாள் ராஜா தடுத்து அது ஹெண்டனுக்குத் தரப்பட்ட உரிமை என்பதை எல்லாருக்கும் அறிவிக்கிறான். சிறந்த காட்சி.

mark_twainட்வெய்ன் சிறுவர் புத்தகங்களாகப் படிக்கக் கூடிய Tom Sawyer, Huckleberry Finn, Connecticut Yankee in King Arthur’s Court என்று சில புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவற்றில் Huckleberry Finn மற்றும் Connecticut Yankee இரண்டும் சிறுவர் புத்தகங்களாகவும் படிக்கக் கூடியவை, பெரியவர்களும் படிக்கக் கூடியவை என்பதுதான் சிறப்பு.

எர்ரால் ஃப்ளின், க்ளாட் ரெய்ன்ஸ் நடித்து 1937-இல் திரைப்படமாகவும் வந்தது.

இதைப் படிக்க ஏற்ற வயது எட்டிலிருந்து பனிரண்டு வரை என்று நினைக்கிறேன். குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: சிறுவர் புத்தகங்கள்

சுஜாதா எழுதிய “வாய்மையே சில சமயம் வெல்லும்”

sujathaஇதுவும் தொடர்கதையாக வந்திருக்க வேண்டும்.

ஐயங்கார் வீட்டு சின்னப் பெண் சித்ரா – பள்ளி மாணவி. பணக்காரக் குடும்பத்தில் அன்பில்லாமல் வளர்ந்த இளைஞன் வினோத். அவளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துவிடுகிறான். தியாகச்சுடர் நாயகன் விஜி அவளை மணக்க தயாராக இருக்கிறான். இளைஞனும் அவளை மணக்க முன்வர, சித்ரா விஜியை நிராகரித்து வில்லனையே மணக்கிறாள்.

vaaimaiye_sila_samayam_vellumகதையின் சிறப்பு பாத்திரங்கள். விஜி தியாகச்சுடர்தான், ஆனால் caricature இல்லை – சிவாஜி படங்களைப் பார்க்கும்போது சில சமயம் “அய்யய்யோ ஆளை விடுங்கப்பா” என்ற தோன்றும், அது மாதிரி தோன்ற வைப்பதில்லை. சித்ரா இன்றும் இருக்கும் பதினேழு வயதுப் பெண்தான். ஓரளவு stereotype ஆகத் தெரியும் வினோத்தைக் கூட எதையும் வெளிப்படையாக உண்மையாகப் பேசுபவன் என்ற குண்ம் காப்பாற்றிவிடுகிறது. சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட உயிரோடு இருக்கின்றன. எப்போதும் தொடர்கதை படிக்கும் ஆசிரியை, கையாலாகாத அப்பா, சின்னத் தங்கை எல்லாம் நாலே வரியில் பளிச்சென்று தெரியும் பாத்திரங்கள்.

பலவீனம் கதையை பெரிதாக டெவலப் செய்யாதது. பத்திரிகை ஆசிரியர் கொடுத்த கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்திருக்கும். கிடுகிடுவென்று முடித்துவிட்டார். ஒழுங்காக எழுதி இருந்தால் இலக்கியமாக இருந்திருக்கும். இன்று நல்ல வணிக நாவல் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

மௌனி பற்றி வெ.சா

venkat_swaminathanவெ.சா. எழுதிய ஒரு கட்டுரையை இங்கே அவருக்கு அஞ்சலியாகப் பதித்திருக்கிறேன்.

எழுதும் முனைப்போ ஆர்வமோ இல்லாத இந்த எழுத்து மேதை மௌனியைப் பற்றி என்ன சொல்ல? அவர் ஒன்றும் எழுதிக் குவிப்பவர் இல்லை. அவர் முதலில் எழுத ஆரம்பித்ததே, இதில் ஏதாவது உருப்படியாக செய்யமுடியுமா என்று பார்க்கத்தான். பின்னர் அவ்வப்போது எழுதியது நண்பர்களும் மற்ற எழுத்தாளர்களும் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாகத்தான்.

mowniமௌனியைத் தமிழகத்துக்குத் திரும்ப நினைவூட்டிய மறைந்தே போன அவர் இடத்தைத் திரும்ப புனர்ஜீவித்த க.நா. சுப்ரமண்யம் 1959-இல் மௌனியின் கதைகளைச் சேகரித்து அவர் கதைகளின் தொகுப்பு ஒன்றை புத்தகமாக வெளியிட முயன்றபோது, அது எத்தகைய சாகச வேட்டையாக முன் நிற்கும் என்பதை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். கடைசியில் ஒரு பதினைந்து கதைகளை அவர் தேடிப் பிடித்து வெளியிடுவதில் வெற்றி பெற்றார். மௌனி என்ற பெயரில் ஒரு மனிதர் எழுத்தாளர் உண்மையில் இந்த உலகில் இருக்கிறார் என்று நிரூபிக்க, மௌனியை ஆல்வாயில் நடந்த எழுத்தாளர் மகாநாட்டிற்கு அழைத்துவந்து முன் நிறுத்தினார். பின் வந்த வருடங்களில் மௌனியின் கதைகளைப் புகழ்ந்து பாராட்டும் விமர்சனங்கள் குவியத் தொடங்கின. அதே அளவிலும் எண்ணிக்கையிலும் அவரது எழுத்தைக் குறிந்த கண்டனங்களும்தான்.

தமிழின் சிறுகதை முன்னோடிகள் இரண்டு முனைகளில் போராடியதாகத் தோன்றுகிறது. ஒன்று மொழி சம்பந்தப்பட்ட போராட்டம். இரண்டு, சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தைக் கையாளுவதில். அவர்களில் புதுமைப்பித்தன் மாத்திரமே எவ்வித சிரமமுமின்றி வெற்றிகண்ட ஒரு மேதையாக இருந்தார். என்னமோ அவர் பாட்டிலைத் திறக்கவேண்டியது உடனே அடைத்துக் கிடந்த பூதம் அவர் கட்டளையை நிறைவேற்றுவது போலத்தான் மொழியும் வடிவமும் அவருக்கு பணிந்தன. மற்றவர்கள் எல்லாம் சிரமப்பட வேண்டியிருந்தது.

மௌனியின் விஷயத்தில் அந்த போராட்டம் இன்னம் சிரமம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் அவர் எழுத நினைத்தது அவருக்கே உரிய கருப்பொருளாக இருந்தது. புதுமைப்பித்தனே இது பற்றி எழுதியிருக்கிறார்.

கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று கொண்டு வார்த்தைகளில் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் அவர்(மௌனி) ஒருவரே

கற்பனை வளமும் மொழித்திறனும் மிக எளிதாகக் கைவரப் பெற்ற ஒரு மாமேதை, தன்னுடைய சிந்தனைகளையும் கற்பனையையும் வெளியிடுவதற்கு மொழியுடன் நிரந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தன் உடன் நிகழ்கால முன்னோடிக்கு அளிக்கும் இந்த பாராட்டு மிகப் பெரிய பாராட்டுதான்.

அக்காலத்திய மற்ற எழுத்தாளர்களைப் போல மௌனியின் போராட்டம் மொழியை ஒரு ஆற்றல் பெற்ற சாதனமாகக் கையாளுவதில் மட்டுமில்லை. மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதும், தனக்கே உரியதுமான தன் உள்ளுலகை வெளியிடுவதற்கு ஏற்ற வெளியீட்டு மொழியைக் காண்பதற்கும் அவர் சிரமப்படவேண்டியிருந்தது.

அவரது ஆரம்பத் தயக்கத்தையும் பின்னர் அவருக்கு இருந்த அசிரத்தையையும் மீறி, பின்னர் அவர் ஒரு கதை எழுத உட்கார்ந்து விட்டாரானால், அவர் தான் சொல்ல விரும்பியதைச் சொல்லும் வகையில் மொழியை ஆக்கிக் கொள்வதில் அவர் திறன் காட்டத்தான் செய்தார். அவருடைய முதல் சிறுகதையான ஏன்? அவருடைய இலக்கியக் கலையை ஆராய முதல் அடியை எடுத்துக் கொடுக்கிறது. மாதவன் என்னும் பதினான்கு வயது மாணவன் பள்ளி விட்டு வீட்டுக்குப் போகும்போது தன் வகுப்புத் தோழி சுசீலாவிடம், “சுசீலா, நானும் வீட்டிற்குத்தானே போகிறேன், இருவரும் சேர்ந்து போகலாமே?” என்று சொல்கிறான். ஆனால் சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்து, புருவங்கள் உயர்த்தி வியப்புடன் கண்கள் பெரிதாகிப் பார்த்தது “ஏன்?” என்று கேட்பது போல் இருந்தது. இந்த “ஏன்?” அந்த பையனைப் பிசாசாகப் பற்றிக் கொள்கிறது. அதன் பின் அவர்கள் இருவர் மனதையும் ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் தனித்தனி அன்றாட வாழ்வில் அந்த ஏன் அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் முன் நின்று ஏன் என்று கேட்கத் தவறுவதில்லை. அவர்கள் பிரமை பிடித்தது போல் ஆகிறார்கள். இந்த ஏன் அவர்களுக்குள்ளிருந்து மாத்திரம் எழும் கேள்வியாக இல்லை. அவ்விதமாயின் அது உணர்வு நிலையாக இருக்கும். மன நோயாக ஆகியிருக்கும். ஆனால் இந்த ஏன் அவர்களை வெளிஉலகத்திலிருந்தும் எதிர்ப்பட்டு முறைத்து நிற்கும் ஒன்றாக ஆகியிருக்கிறது. அப்போது அது ஒரு தத்துவார்த்த பிரச்சினையாக விரிகிறது. ஏன் இப்படி? எதற்காக? ஏன் எதுவும் அப்படி? என்ற கேள்விகளே எழுந்த வண்ணம் இருக்கின்றன, பதில் வருவதில்லை. மௌனி கதையை அத்தோடு முடிக்கிறார். இரு நிலைகளின் இடையே வாசகனை நிற்க வைத்துவிட்டுப் போய்விடுகிறார் மௌனி.

உலகைப் பற்றிய இந்தப் பார்வையைத்தான் மற்ற கதைகளிலும் நாம் சந்திக்கிறோம். கொஞ்ச தூரம் என்ற கதையில், “மேலே கிளையில் உட்கார்ந்திருந்த ஒரு காகம் இவனைச் சந்தேகமாய்த் தலை சாய்த்துப் பார்த்தது. வாய்க்காலில் துணி துவைக்கும் பாறாங்கல்லில் ஒரு சிறு குருவி உட்கார்ந்திருந்தது. அதுவும் திடீரென்று பறந்து அச்செடியில் “ஏன்? எங்கே?” என்று கத்திக்கொண்டு மறைந்து விட்டது.”

இங்கும் கதை முழுதும் பரந்து கவிந்திருப்பது ஒரு வெறுமை உணர்வு. வாழ்வின் அர்த்தமற்ற குணம். அது முதலில் நிறைவேறாத காதலில் தொடங்கி பின் அத்தோடு நிற்பதில்லை.

மௌனியின் கதைகளிலும், கதை சொல்பவனும், கதையின் முக்கிய பாத்திரமும் காஃப்கா கதைகளின் K போல ஒரு பெயரற்ற ‘அவன்’தான். அவன் எங்கிருந்தோ தன் இருப்பிடம் திரும்பி வருவான். தன் கடந்த காலத்திய நினைவில் தோய்ந்து விடுவான். இன்னொரு படிநிலையில் மௌனியின் பாத்திரங்கள் தனி மனிதர்கள் மாத்திரமல்ல. உணர்வு நிலைகளின் பிரதிபலிப்புகள். பிரக்ஞை வெளிகள். தோற்ற உலகின் பின்னிருக்கும் உலகின் பளிச்சிட்டு மறையும் மின்னல் காட்சிகள்.

அவருடைய கதைகளில் சம்பவங்கள் என்று எதுவும் நிகழ்வதில்லை. அவர் ஒரு நிலையின் மின்னல் வெட்டிப் பளிச்சிடும் கணத்தை எடுத்துக் கொண்டு அதன் சாரமான உணர்வு நிலையை வெளிக்கொணர்கிறார். பின் அதை தத்துவார்த்த நிலைக்கு எடுத்துச் செல்கிறார். ஆரம்ப ஏன்? என்ற கேள்வியின் நீரில் விரல் விட்டுப் பார்க்கும் சோதனையாய் தொடங்கிய மௌனியின் பயணம் பின் கதைகளில் மிகச் சிக்கலான ஒன்றாக வளர்ந்து விடுகிறது. அழியாச்சுடர் கதையில் ஒரு இளைஞன் கோவிலில் சன்னதியின் முன் கூடியிருந்தவர்களில் ஒரு பெண்ணைப் பார்த்த பரவசத்தில் ‘நான் உனக்காக எது செய்யவும் காத்திருக்கிறேன், எதுவும் செய்ய முடியும்’ என்று ரகசியமாகச் சொல்லிக் கொண்டது “உள்ளிருந்த விக்கிரஹம், எதிர்த் தூணில் ஒன்றியிருந்த யாளி எல்லாம் கேட்டு நின்றது” போலத் தோன்றியது மட்டுமல்லாமல் “சந்தனப் பொட்டுடன் விபூதி பூசி இருந்த விக்கிரஹமும் புருவஞ்சுளித்து சினம் கொண்டதாகத்” தோன்றுகிறது. அது மட்டுமில்லை. “தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிக மருண்டு கோபித்து முகம் சுளித்தது” கோவிலினுள் அந்நிகழ்வையும் அச்சூழலையும் விவரிக்கும் மௌனி ஒரு மயிர்க் கூச்செரியும் அச்சம் தோன்றும் மாய உலக உணர்வை எழுப்புகிறார். கர்ப்பக்கிரஹத்தினுள் இட்டுச் செல்லும் நுழைவாயிலுக்கும் கர்ப்பக்கிரஹத்திற்கும் இடையே உள்ள இருள் வெளியில் எண்ணெய் விளக்குகளின் விட்டு விட்டு பிரகாசிக்கும் மஞ்சள் ஒளி பரவியிருக்க நிகழ்கிறது இந்த நாடகம். இந்த வெளிதான் பிரக்ஞை நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறும் வெளி போலும். இடத்திலும் காலத்திலும் நிகழும் மாற்றம்.

அவருடைய தனித்துவமான பெரும்பாலான கதைகளில் இந்த நிலை மாற்றம், ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கான பயணம் அந்தி நேரத்தில் தான் நிகழ்கிறது. சுற்றியிருக்கும் இருள் வெளியை ஒரு மாய உணர்வூட்டும் மஞ்சள் ஒளி, அப்போது மனிதர்கள் நிழல் உருவங்களாக, நகரும் நிழல்களாகத் தோற்றம் தருவார்கள். விக்டர் டர்னர் தன் The Ritual Process: Structure and Anti-Structure (1969) புத்தகத்தில் liminality என்றும் communitas என்றும் சொல்லும் நிலையை மௌனி கதைகளின் இச்சூழல்கள் நினைவூட்டுகின்றன.

மரபான நாட்டுப்புற கலைகளையும் அவற்றின் சடங்குகளுக்குள்ள சக்தியையும், உள்ளர்த்த அர்த்தங்களையும் பற்றியெல்லாம் மௌனி தெரிந்திருப்பார் என்றோ ஆழமாக ஆராய்ந்தறிந்திருப்பார் என்றோ சொல்லமுடியாது. தன்னையறியாமலே, கூட்டு அடிமனப் பிரக்ஞையிலிருந்து பெற்றதைக் கொண்டு அவர் இலக்கிய சிந்தனை இவற்றை வெளிப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. பிரக்ஞை வெளியில் என்ற கதையில் அவர் சொல்கிறார்:

ஒளி படராத பிரக்ஞை வெளியில் சேகரன் தடுமாறிக் கொண்டிருந்தான். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் உள்ள எல்லைக்கோடு, பிளவு கொண்டு ஒரு சிறு வெளி விரிவு தெரிவது போலும் அந்நடுவெளியில் நின்று உலக விவகாரங்களைக் கவனித்தான். உலகம் உண்மையெனத் தோன்றுவதற்கு -வஸ்துக்கள் வாஸ்தவம் எனப் படுவதற்கு – மாயைப் பூசு கொள்ளுமிடம் அதுதான் போலும். தூக்கத்தில் மறையவும் விழிப்பில் மறக்கவும்…

இம்மாதிரியான பல பகுதிகளை மௌனியின் கதைகளில் சந்திக்க நேரும். அவை வேறு வேறு சந்தர்ப்பங்களில் வேறு வடிவங்களில், தனி மனிதனையும் பிரபஞ்சத்தையும், ஒரு தத்துவார்த்த பிரகடனமாக அல்ல, குணரூப வாக்கியமாக அல்ல, உணர்ந்த வாழ்ந்த அனுபவங்களாக சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசகன் தத்துவார்த்த உள்ளீடுகளை, பிரபஞ்சம் முழுதும் ஒன்றிணைந்துள்ள முழுமையை, அத்வைத ஒருமையை வாசிக்கக் கூடும். ஆனால் இக்கதைகள் ஏதும் தத்துவார்த்த சிந்தனை விளக்கமாக எழுதப்படவில்லை. உண்மையான மனித வாழ்க்கை நிலைகளை, மனதின் உருக்கமான மன நிலைகளைச் சொல்லும் முகமாகத்தான் இவை எழுதப்பட்டுள்ளன. இதுதான் அவருடைய எழுத்தின் உள்ளார்ந்த மையம். அவருடைய சிறந்த கதைகள் சொல்ல முயற்சிப்பது.

மௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர்கணிதத்தின் தத்துவ விசாரம் பயின்ற மாணவர். கர்நாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எஃப்.ஹெச். ப்ராட்லியின் Appearance and Reality அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் ஃப்ரான்ஸ் காஃப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே, ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.

அவருடனான என் பழக்கம் அறுபதுகளின் தொடக்க வருடங்களில் ஏற்பட்டது. நாங்கள் கடிதங்கள் பரிமாறிக்கொண்டோம். Encounter என்ற மாதப்பத்திரிகையில் போர்ஹேயின் இரண்டு கதைகளை முதலில் நான் படிக்க நேர்ந்த போது (அவற்றில் ஒன்று Circular Ruins, மற்றது இப்போது என் நினைவில் இல்லை) அந்த கதைப் பக்கங்களைக் கிழித்து அவருக்கு அனுப்பி வைத்தேன். அவை அவருக்கு மிகவும் பிடித்துப் போயின. அதிலிருந்து போர்ஹேயும் அவர் விரும்பிப் படிக்கும் ஆசிரியர்கள் பட்டியலில் சேர்ந்தார். அறுபதுகளில் அவருடனான என் ஆரம்ப சந்திப்புக்களில் அவருடைய அப்போதைய சமீபத்திய கண்டுபிடிப்பான ராபர்ட் ம்யுசீலின் Man without Qualities பற்றி மிகப் பரவசத்தோடு பேசினார்.

சங்கீதத்தைப் பொறுத்த வரை ஒரு சங்கீதக் கச்சேரி முழுதும் உட்கார்ந்து கேட்க அவருக்குப் பொறுமை இருப்பதில்லை என்பார். ராக சஞ்சாரத்தில் அவ்வப்போது மின்னலடிக்கும் மேதைத் தெறிப்புகள் ஒருவரது கற்பனையின் வீச்சைச் சொல்லும் அத்தெறிப்புகள்தான் அவருக்கு வேண்டும். இலக்கியத்திலும் அவர் விரும்பி ரசிப்பது இம்மாதிரிதான். அவ்வப்போது பளிச்சிடும் மின்னல் வீச்சுக்கள், அவைதான் கற்பனையின் மின்னல் கீற்று போல வீசி மறையும், அவைதான் தோற்றக் காட்சி உலகத்திலிருந்து அவற்றின் பின்னிருக்கும் உண்மைக்கு வாசகனை இட்டுச் செல்லும். ராமகிருஷ்ண பரமஹம்சர் முன்னறிவிப்பில்லாது அவ்வப்போது ஆழ்ந்து விடும் தன்னை மறந்த தியான நிலை போல. உருவகமாகச் சொல்வதென்றால் எழுத்து என்பது அவருக்கு ஒரு பயணம் கட்டமைக்கப்பட்ட நிலையிலிருந்து கட்டவிழ்க்கப்பட்ட நிலைக்கு, டர்னர் liminality என்று சொல்கிறாரே அந்த நிலைக்கு. மௌனி சொல்வார், “புதுமைப்பித்தனிடம்தான் ஏதோ இருப்பது போல் தோன்றுகிறது.”

தமிழ் இலக்கியத்தில் தனித்து நிற்கிறார். காஃப்காவும் போர்ஹேயும் அவரவர் இலக்கிய சமூகத்தில் தனித்து இருப்பது போல. இன்று இந்த நூற்றாண்டு நிறைவு பெறும் கட்டத்தில் தமிழில் நிறைய எழுத்தாளர்கள் சிலர் தம் எழுத்துக்களில் புதுமைப்பித்தனின் பாதிப்பை, இன்னும் சிலர் ஜானகிராமனின் பாதிப்பைக் காணமுடியும். மௌனி, நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளுடன் அவர்களது சகாவாக அவர் காட்சியளித்தாலும், அவர் தனித்து நிற்பவர் – இவ்வளவு நீண்ட காலமாக எழுதியது அரைகுறை மனத்தோடும் தயக்கத்தோடும், மிகக் குறைவாக எழுதியபோதிலும்.

Katha Classics வெளியிட்ட Short Stories: Mowni, A Writers’ Writer என்ற புத்தகத்திற்காக எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து மௌனியைப் பற்றி மாத்திரம் உள்ள பகுதி

தொகுக்கப்பட்ட பக்கம்: மௌனி பக்கம், வெ.சா. பக்கம்

சாண்டில்யனின் ‘மலைவாசல்’

sandilyanசாண்டில்யனின் மலைவாசல் மீது எனக்குள்ள கவர்ச்சி ஏழெட்டு வயதில் ஏற்பட்டது. ஹூணர்கள், தோரமானா, ஸ்கந்தகுப்தன் என்ற பின்புலம் என்னை மிகவும் கவர்ந்தது. யவனராணி, கடல்புறா, ராஜமுத்திரை போன்ற நாவல்கள் எல்லாம் மிகவும் பிடித்திருந்தனதான். ஆனால் அவை தமிழ் நாட்டு அரண்மனை சதிகள். எங்கோ கண் காணாத தூரத்தில், ஆனால் இந்தியாவில் நடைபெறுவதாக சித்தரிக்கப்பட்ட இந்த நாவலின் பின்புலம், தோரமானா, அடிலன் போன்ற பேர்களிலேயே தெரிந்த அன்னியத்தன்மை எல்லாம் exotic ஆக இருந்தது. பின்னாளில் குப்த அரசு பற்றி கொஞ்சம் விரிவாகப் பாடத்தில் படிக்கும்போது இந்த நாவல் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். பேசாமல் சாண்டில்யனை பாடப் புத்தகம் எழுத விட்டிருக்கலாம், படிப்பதும் நினைவில் வைத்துக் கொள்வதும் சுலபமாக இருக்கும் என்று தோன்றும்.

கதையும் விறுவிறுவென்று போகும் (அந்தக் காலத்துக்கு). குப்தர் படைத்தலைவன் அஜித்சந்திரன் ஹூணர்களிடம் சிறைப்படுகிறான். அங்கே சரித்திர நாவல்களின் விதிகள்படி தன்னை சிறை வைத்திருக்கும் அடிலனின் மகள் சித்ராவைக் காதலிக்கிறான். பிறகு தப்பிச் சென்று குப்த சக்ரவர்த்தி ஸ்கந்தகுப்தனை சந்திக்கிறான். அவரோடு ஒப்புக்கு சண்டை போடுவதாக காட்டிவிட்டு, ஹூணர்களின் தலைவனான தோரமானாவிடம் படைத்தலைவனாக சேர்கிறான். அங்கே வழக்கம் போல் சதிக்கு மேல் சதி. கடைசியில் அஜித் எப்போதுமே குப்தர்களுக்காகத்தான் பணி புரிகிறான், தோரமானாவுக்கு உதவுவது போல நடித்து அவன் படையெடுப்பை தாமதப்படுத்திவிட்டான் என்று தெரிகிறது. சித்ராவை மணந்து சுபம்!

இது ஜெயமோகனின் historical romances பட்டியலில் இடம் பெறாதது எனக்கு ஆச்சரியம்தான்.

சிறு வயதில் படிப்பதற்கேற்ற சாகசக் கதை. என்னைப் போல நாஸ்டால்ஜியா இல்லாத பெரியவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

ஷேக்ஸ்பியரின் Merchant of Venice

shakespeare_portraitMerchant of Venice எனக்குப் பிடித்த ஷேக்ஸ்பியர் நாடகங்களில் ஒன்று.

எல்லாருக்கும் தெரிந்த கதைதான், அதனால் கதைச்சுருக்கம் எல்லாம் எழுதி நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. நாடக சாத்தியங்களைப் பற்றி மட்டும்தான் எழுதப் போகிறேன்.

ஷைலக் சிறந்த நடிகர்களுக்காகவே உருவாக்கப்பட்ட பாத்திரம்.

I am a Jew. Hath not a Jew eyes? Hath not a Jew hands, organs, dimensions, senses, affections, passions; fed with the same food, hurt with the same weapons, subject to the same diseases, healed by the same means, warmed and cooled by the same winter and summer as a Christian is? If you prick us do we not bleed? If you tickle us do we not laugh? If you poison us do we not die? And if you wrong us shall we not revenge? If we are like you in the rest, we will resemble you in that. If a Jew wrong a Christian, what is his humility? Revenge. If a Christian wrong a Jew, what should his sufferance be by Christian example? Why, revenge. The villainy you teach me I will execute, and it shall go hard but I will better the instruction.

போன்ற வசனங்களைக் கேட்க வேண்டும். அந்த அதிர்ஷ்டம் எனக்கு இது வரை இல்லை.

merchant_of_veniceபோர்ஷியாவாக நடிக்க கொஞ்சம் குறும்புத்தனம் உள்ள கண்கள் வேண்டும்.

Tarry a little, there is something else. This bond doth give thee here no jot of blood; The words expressly are “a pound of flesh.”

என்று உணர்ச்சியே இல்லாத முகத்தில் கண்கள் மட்டும் பிரகாசிக்க ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிக்கும் குரலில் பேசினால் பிரமாதமாகத்தான் இருக்கும். என் கணவன் எந்த நிலையில் நான் கொடுத்த மோதிரத்தை அடுத்தவருக்குக் கொடுக்கமாட்டார் என்று போர்ஷியா சொல்லும் இடத்தில் மணமானவர்கள் புன்னகைக்காமல் இருக்க முடியாது.

போர்ஷியா ஷைலக்கின் திட்டத்தை முறியடிக்கும் நீதிமன்றக் காட்சிதான் நாடகத்தில் உச்சம் என்றாலும், பல காட்சிகள் – போர்ஷியாவின் “சுயம்வரக்” காட்சிகள், மோதிரம் எங்கே என்று போர்ஷியாவும் நெரிசாவும் தங்கள் கணவன்மார்களை உலுக்குவது எல்லாமே நல்ல நாடகத்தன்மை உள்ள காட்சிகள்.

பல உபகாட்சிகள் – ஷைலக் “A second Daniel come to judgment!” என்று சொல்வதை க்ராஷியானோ மீண்டும் மீண்டும் திருப்பிச் சொல்வது, தன் மகள் ஒரு கிருஸ்துவ இளைஞனோடு ஓடிவிடுவதை எதிர்கொள்ளும் ஷைலக் எல்லாமே ரசிக்க வைக்கும் காட்சிகள்.

அடுத்த நிலை பாத்திரங்களில் பசானியோ, க்ராஷியானோ ஓரளவு நடிக்க ஸ்கோப் உள்ளவை. ஆனால் அன்டோனியோ, போர்ஷியாவின் “தோழி” நெரிசா எல்லாம் ஏறக்குறைய props-தான். அவர்களை விட சில சிறு பாத்திரங்கள் நடிக்க நல்ல ஸ்கோப் உள்ளவை. போர்ஷியாவின் “சுயம்வரத்திற்கு” வரும் மொராக்க இளவரசன், வெனிசின் அதிபர் (duke) என்று சிலவற்றைச் சொல்லலாம்.

படியுங்கள். இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் பார்த்துவிடுங்கள். அல் பசினோ ஷைலக்காக நடித்து ஒரு திரைப்படம் கூட வந்திருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஷேக்ஸ்பியர் பக்கம்

அந்தமான் ஜெயில் நினைவுகள் – இரு வங்காளிகளின் புத்தகங்கள்

மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று பார்க்கிறேன், ஆனால் இந்த வாரத்துக்கு தீம் என்று ஒன்றை வரையறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் படித்த சில புத்தகங்களைப் பற்றி random ஆக சில பதிவுகள்.

அலிப்பூர் வெடிகுண்டு வழக்கில் அரவிந்தரின் தம்பி பரின் கோஷ் (Barindra Kumar Ghose) மற்றும் உல்லாஸ்கர் தத் இருவரும் அந்தமானுக்கு அனுப்பப்பட்டார்கள். ஜெயில் அனுபவங்களைப் பற்றி இருவரும் எழுதி இருக்கிறார்கள். இருவரும் சிறை வாழ்க்கை முடிந்த பிறகு நீண்ட நாள் வாழ்ந்தவர்கள்.

barindra_kumar_ghoseஅந்தமான் அப்போது ஏறக்குறைய நரகம்தான். கடுமையான உடல் உழைப்பு, பற்றாக்குறை உணவு, மோசமான ஜெயில் நிலை, வியாதி, எதிர்காலத்தைப் பற்றி கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத நிலை. பரின் கோஷ் matter of fact ஸ்டைலில் இதைப் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார். புத்தகத்தின் பெயர் ‘Story of My Exile‘. இதை எல்லாம் படித்தால் சவர்க்கார் சமரசம் செய்து கொண்டார், பாரதி புதுவைக்கு ஓடிப் போனார், வ.உ.சி. விடுதலை பெற்றதும் குடும்பத்தைப் பற்றித்தான் கவலைப்பட்டார் என்றெல்லாம் பேச வாய் வராது. அவர்கள் செய்த தியாகங்களில் நூற்றில் ஒரு பங்கு கூட என்னைப் போன்ற சாதாரணர்கள் செய்வதற்கில்லை.

ullaskar_duttஉல்லாஸ்கர் தத்தின் புத்தகம் அவருடைய தனிப்பட்ட அனுபவங்களை அதிகம் பேசுகிறது. புத்தகத்தின் பெயர் ‘12 Years of Prison Life‘. மனிதருக்கு பிரமையோ என்னவோ சில பல hallucinations ஏற்பட்டிருக்கின்றன. நிஜமாகவே பைத்தியம் பிடிக்காவிட்டாலும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிறகு சென்னைக்கு (அப்போதும் கீழ்ப்பாக்கம்தானா?) மாற்றலாகி இருக்கிறது. ஒரு சின்ன சுவாரசியம் – அங்கே ஆஷ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சங்கரகிருஷ்ண ஐயரை சந்தித்திருக்கிறார். (இந்த சங்கர கிருஷ்ண ஐயர் வாஞ்சியோடு ரயில்வே நிலையம் வரை போயிருக்கிறார், ஆனால் பாதியில் ஓடி வந்துவிட்டாராம்.)

தமிழைப் பற்றி தத் சொல்வது:

Moreover, the local language being Tamil, it all sounded a queer jargon to me, full of hard consonants, with scarcely any liquid sounds or modulations, to mellow their tone. How well did Gopal Bhat describe it, in Raja Krishna Chandra’s court, as sounding something like the rattling noise, that came out of a dry calabash-skin, when a few brick-bats were inserted and shaken.

தத் பிறகு கொஞ்சம் தமிழை கற்றுக் கொண்டும் இருக்கிறார். 🙂 நாம் மெய்யெழுத்துகளை மட்டும் தனியாக உச்சரிக்கும்போது முன்னால் ஒரு ‘இ’ சேர்த்து இக் (கன்னா), இச் (சன்னா) என்றெல்லாம் சொல்வோமில்லையா? அதுவே அவரை குழப்பி இருக்கிறது.

இவை எல்லாருக்குமான புத்தகங்கள் இல்லைதான். பலருக்கு போரடிக்கலாம். ஆனால் முக்கியமான ஆவணங்கள். மின்புத்தகங்களை இணைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுதந்திரப் போராட்டம்

தொடர்புடைய சுட்டிகள்:
பரீந்திர குமார் கோஷின் ‘Story of My Exile’
உல்லாஸ்கர் தத்தின் ’12 Years of Prison Life’

என்ன கொடுமை இது சரவணன்?

வேலைப்பளுவினால் எதுவும் எழுத முடியவில்லை. அதை விட மோசம், பாதி எழுதி வைத்திருந்ததெல்லாம் எனக்கே தெரியாமல் பதிக்கப்பட்டு அப்புறம் நான் அவற்றை நீக்க வேண்டியதாகி விட்டது. குழப்படிக்கு மன்னிக்க வேண்டும்.

ஆனால் விசித்திரம் ஒன்றைப் பார்த்தேன். நான் எழுதினாலும் எழுதாவிட்டால் சராசரியாக ஒரு நாளைக்கு 100 பேர் இந்தப் பக்கம் வருகிறீர்கள், 200 ஹிட் விழுகிறது. எப்படி என்றே புரியவில்லையே?

Curiosity-ஆல் கேட்கிறேன். ரெகுலராக இங்கே வந்து பார்ப்பவர்கள் யார் யார்? அவ்வப்போது வருபவர்கள் யார் யார்? முடிந்தால் உங்கள் பேரோடு இந்தத் தளத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று ஒரு பின்னூட்டம் எழுதுங்களேன்! (முடியாவிட்டால் கீழே உள்ள poll-இலாவது ஓட்டுப் போடுங்கள்)


தொகுக்கப்பட்ட பக்கம்: பலதும்

வெங்கட் சாமிநாதன் – அஞ்சலி

venkat_swaminathanதமிழின் முக்கிய இலக்கிய விமர்சகரான வெங்கட் சாமிநாதன் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு என் அஞ்சலி.

நானே விழுந்து விழுந்து புத்தகங்களைப் பற்றிதான் எழுதுகிறேன். ஆனாலும் புத்தக விமர்சனம் என்றால் எனக்கு கொஞ்சம் இளக்காரம்தான். மூலத்தை படிப்பதை விட்டு விமர்சனத்தை ஏன் படிக்க வேண்டும்? ஷேக்ஸ்பியர் எழுதிய பக்கங்களை விட நூறு மடங்கு பக்கங்களில் அவரது நாடகங்களுக்கான விமர்சனங்கள், ஆய்வுகள் எழுதப்பட்டிருக்கின்றன. யார் படிப்பது?

புத்தகங்களை தன் ரசனையை அடிப்படையாக வைத்து அறிமுகம் செய்வது ஒன்றுதான் ஒரு “விமர்சகன்” செய்யக் கூடிய அர்த்தமுள்ள செயல் என்று நான் உறுதியாகக் கருதுகிறேன். வெ.சா.வை அப்படி புத்தக அறிமுகங்களை எழுதியவர் என்று குறுக்கிவிட முடியாது. அப்படி என்றால் ஒரு வாசகனாக நான் ஏன் வெ.சா.வை பொருட்படுத்த வேண்டும்?

முதலில் அவர் ஒரு சஹிருதயர். எங்கள் ரசனையில், எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை என்ற முடிவுகளில் எனக்கும் அவருக்கும் நிறைய இசைவு உண்டு. அவர் இது நல்ல இலக்கியம் என்று சொன்னால் அது எனக்குப் பிடிக்க நிறைய வாய்ப்புண்டு. சக வாசகன் சஹிருதயராக இருப்பதில் பெரும் மனத்திருப்தி உண்டு, ஒரு பந்தமே ஏற்பட்டுவிடுகிறது. லா.ச.ரா. பற்றி அவர் ஒரு அருமையான கட்டுரையை எழுதி இருக்கிறார். அதில் நான் லா.ச.ரா. ஒரே கதையைத்தான் திருப்பி திருப்பி எழுதினார் என்று அடிக்கடி சொல்வதை அவரும் ஏறக்குறைய அதே வார்த்தைகளில் சொல்லி இருக்கிறார். அதைப் படித்தபோது என் அப்பா வயதிருக்கும் அவரை “நண்பேண்டா” என்றே உணர்ந்தேன்.

இரண்டாவதாக எனக்கு சில எழுத்தாளர்களை ஏன் பிடிக்கிறது, சில எழுத்துக்கள் ஏன் எனக்கு இலக்கியமாகத் தெரிகின்றன என்பதை எனக்கே தெளிவாக்கியவர் அவர். குறிப்பாக அவர் லா.ச.ரா. பற்றி எழுதிய கட்டுரையைச் சொல்ல வேண்டும்.

மூன்றாவதாக அவர் ஒரு பண்பாட்டு மையமாகவே இருந்திருக்கிறார். குறிப்பாக நாடகம், தெருக்கூத்து, நடனம் இவற்றைப் பற்றிய நுண்ணுணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். டெல்லியில் இருந்த சிறு தமிழ்க்கூட்டம் டெல்லியை ஒரு தமிழ் மையமாகவே ஆக்கியதில் அவருக்கு பெரும் பங்குண்டு. இது போன்ற சிறு குழுக்கள்தான் – கணையாழி கூட்டம், லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி முன்னின்று நடத்திய வாசகர் வட்டம், சுந்தர ராமசாமியின் “மடம்”, செல்லப்பாவின் எழுத்து, க.நா.சு.வின் நிற்காத எழுத்து, சரஸ்வதி, சுபமங்களா – ஒரு இருபது முப்பது வருஷம் தமிழை vibrant ஆக வைத்திருந்தன என்று தோன்றுகிறது.

வெ.சா.வுடன் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகளும் உண்டு. குறிப்பாக திராவிட இயக்கத்தின் போலித்தனத்தின் மீது அவருக்கு இருந்த வெறுப்பு சில சமயம் அவரது மதிப்பீடுகளை ஒரு பக்கம் சாய்த்துவிட்டது என்று நினைக்கிறேன். சோ. தர்மனின் கூகை நாவலின் ஒரு சிறு பகுதியை அவர் பெரிதாக விவரிப்பது ஒரு நல்ல உதாரணம்.

அவரை என்றாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இனி நான் மேலே போன பிறகுதான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்

தொடர்புடைய சுட்டிகள்:

தமிழின் டாப் டென் நாவல்கள் – வெ.சா. தேர்வுகள்

திலீப்குமார், வ.ரா., லா.ச.ரா. பற்றி வெ.சா.
வெ.சா. கட்டுரை – தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3
வெ.சா. கட்டுரை – எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (பகுதி 1, பகுதி 2)

பழைய தமிழ் உரைநடைக் கதை பற்றி வெ.சா.

சொல்வனம் தளத்தில் வெ.சா. கட்டுரைகள்
தமிழ் ஹிந்து தளத்தில் வெ.சா. கட்டுரைகள்
திண்ணை தளத்தில் வெ.சா. கட்டுரைகள்

வெ.சா. பற்றி ஜெயமோகன் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4)
வ.ந. கிரிதரன் – வெ.சா.வின் பார்வைகள்
அரவிந்தன் நீலகண்டன் – நமக்கு எதற்கு வெ.சா.?
ஜடாயு – வெ.சா. என்னும் சத்தியதரிசி

ஸ்வெட்லானா அலெக்சேவிச்சுக்கு நோபல் பரிசு

svetlana_alexeivich2015-க்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வெட்லானா அலெக்செவிச்சுக்குக் கிடைத்திருக்கிறது.

அலெக்சிவிச்சை எழுத்தாளர் என்பதை விட நிருபர் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய படைப்புகள் எல்லாம் பேட்டிகளின் தொகுப்புகள், வாய்மொழி வரலாறு என்றுதான் இருக்கின்றன. அவரது வார்த்தைகளிலேயே:

But I don’t just record a dry history of events and facts, I’m writing a history of human feelings. What people thought, understood and remembered during the event. What they believed in or mistrusted, what illusions, hopes and fears they experienced. This is impossible to imagine or invent, at any rate in such multitude of real details. We quickly forget what we were like ten or twenty or fifty years ago. Sometimes we are ashamed of our past and refuse to believe in what happened to us in actual fact. Art may lie but document never does. Although the document is also a product of someone’s will and passion. I compose my books out of thousands of voices, destinies, fragments of our life and being. It took me three-four years to write each of my books. I meet and record my conversations with 500-700 persons for each book. My chronicle embraces several generations. It starts with the memories of people who witnessed the 1917 Revolution, through the wars and Stalinist gulags, and reaches the present times. This is a story of one Soviet-Russian soul.

The Unwomanly Face of War என்ற புத்தகம் பெண்களின் கண்ணோட்டத்திலிருந்து போரையும் Zinky Boys (1992) ரஷியாவின் ஆஃப்கானிஸ்தான் போர் அனுபவங்களையும், Voices from Chernobyl (2005) செர்னோபில் அணு உலை விபத்தின் பின் விளைவுகளையும் விவரிக்கிறது.

அபுனைவுகளுக்கு நோபல் பரிசு கிடைப்பது அபூர்வம். எனக்குத் தெரிந்து சர்ச்சில், பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இரண்டு பேருக்குத்தான் கிடைத்திருக்கிறது. இந்த genre-க்கு அங்கீகாரம் கொடுத்த நோபல் கமிட்டிக்கு ஒரு ஜே!

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்