பாரதி புதுவைக்கு பயந்தோடினாரா?

மு. ஹரிகிருஷ்ணன் இதைப் பற்றி சிறப்பான ஒரு ஆய்வை – அதுவும் புத்தகங்களை வைத்துக் கொண்டே – செய்திருக்கிறார். (தவறான ஹரிகிருஷ்ணனுக்கு கொடுக்கப்பட்ட சுட்டியை திருத்திய ஸ்ரீதர் நாராயணனுக்கு நன்றி!) இங்கே படிக்கலாம்.

bharathiபொதுப் புத்தியில் இருக்கும் பிம்பம் இதுதான் – பாரதி இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அதில் ஆங்கில அரசை விமர்சித்தார். அதனால் 1908-இல் அவரைக் கைது செய்ய அரசாங்கம் வாரண்ட் பிறப்பித்தது. பாரதி பாண்டிச்சேரிக்குத் தப்பி ஓடிவிட்டார். இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்ததற்காக முரப்பாக்கம் சீனிவாசன் என்பவர் ஜெயிலுக்குப் போனார். அங்கே பத்து வருஷங்கள் இருந்த பிறகு மீண்டும் 1918-இல் தமிழகம் திரும்பினார். கைது செய்யப்பட்டார். அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று எழுதிக் கொடுத்துவிட்டு கடையத்தில் ஓரிரு வருஷம் வாழ்ந்தார். பிறகு மீண்டும் சென்னை திரும்பினார். உடல் நலம் நலிந்து இறந்தார்.

ஹரிகிருஷ்ணன் ரா.அ. பத்மநாபன் போல பாரதியை ஏறக்குறைய வழிபடுபவர்கள் கூட பாரதி பயந்துபோய் பாண்டிச்சேரிக்கு ஓடினார், யாரோ ஒரு அப்பாவியை மாட்டிவிட்டுவிட்டார் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்களே என்று வருத்தப்படுகிறார். அப்படி இல்லவே இல்லை என்று நிறுவ விரும்புகிறார்.

india_magazine_coverஹரிகிருஷ்ணனின் வாதங்கள் சுருக்கமாக: பத்திரிகை ஆசிரியர் மாதிரி பாரதியே இந்தியா பத்திரிகையின் ஜீவநாடியாக இருந்திருக்கலாம், ஆனால் ஆவணங்களின்படி பார்த்தால் பாரதி ஆசிரியராக இருந்ததே இல்லை. வாரண்ட் ஒரு நபரின் பேரில்தான் பிறப்பிக்கப்படும், இந்தியா பத்திரிகை ஆசிரியருக்கு வாரண்ட் என்று அரசு உத்தரவு தராது, பாரதி மேல் வாரண்ட், இல்லை முரப்பாக்கம் சீனிவாசன் மேல் வாரண்ட் என்றுதான் உத்தரவு வரும். அதனால் பாரதி யாரையும் மாட்டிவிட்டுவிட்டார் என்பது தவறான வாதம். பாரதி பயந்து போய் புதுவைக்கு ஓடவில்லை.

பாரதி யாரையும் மாட்டிவிடவில்லை என்று ஹரிகிருஷ்ணன் சொல்வது சரியாகத்தான் படுகிறது. ஆனால் ஜெயில் பயம் இல்லாவிட்டால் பாரதி பாண்டிச்சேரியில் பத்து வருஷம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை. திரும்பி வந்ததும் ஜெயிலில் அடைக்கப்பட்டும் இருக்கிறார். அதனால் யாரையும் பாரதி மாட்டிவிடாவிட்டாலும் ஜெயில் பயத்தினால்தான் பாண்டிச்சேரியில் வாழ்ந்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதனால் பாரதி கோழை என்று பொருள் கொள்ள முடியுமா என்ன? (அப்படியே ஜெயிலுக்குப் போக பயந்திருந்தாலும் தவறில்லை. சுப்ரமணிய சிவாவுக்கும் வ.உ.சி.க்கும் ஏற்பட்ட கதியைப் பார்த்த பிறகும் பயம் ஏற்படவில்லை என்றால்தான் தவறு)

ஹரிகிருஷ்ணனின் கட்டுரைகளைப் படிக்கும்போது எனக்கு வியப்பு ஏற்பட்டது நம்மூரில் icon-களைப் பற்றிய சின்ன விஷயம் கூட காலப்போக்கில் எத்தனை முரண்பாடுகளோடு வெளிப்படுகிறது என்பதுதான். மேலை நாடுகளில் – குறிப்பாக அமெரிக்காவில் – இந்தப் பிரச்சினை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தலைவர்கள், எழுத்தாளர்களின் கடிதங்கள், குறிப்புகள் எல்லாம் சேகரிக்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன.

இத்தனை முரண்பாடுகளையும் தெளிவாக விளக்கி, தான் எதை நம்புகிறேன் என்பதை அற்புதமாக எழுதி இருக்கும் ஹரிகிருஷ்ணனுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுகள்! இத்தனை காலம் ஆகியும் பாரதிக்குக் கூட இன்னும் ஒரு சரியான வாழ்க்கை வரலாறு எழுதப்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: பாரதி பக்கம்