சாண்டில்யனின் ‘மலைவாசல்’

sandilyanசாண்டில்யனின் மலைவாசல் மீது எனக்குள்ள கவர்ச்சி ஏழெட்டு வயதில் ஏற்பட்டது. ஹூணர்கள், தோரமானா, ஸ்கந்தகுப்தன் என்ற பின்புலம் என்னை மிகவும் கவர்ந்தது. யவனராணி, கடல்புறா, ராஜமுத்திரை போன்ற நாவல்கள் எல்லாம் மிகவும் பிடித்திருந்தனதான். ஆனால் அவை தமிழ் நாட்டு அரண்மனை சதிகள். எங்கோ கண் காணாத தூரத்தில், ஆனால் இந்தியாவில் நடைபெறுவதாக சித்தரிக்கப்பட்ட இந்த நாவலின் பின்புலம், தோரமானா, அடிலன் போன்ற பேர்களிலேயே தெரிந்த அன்னியத்தன்மை எல்லாம் exotic ஆக இருந்தது. பின்னாளில் குப்த அரசு பற்றி கொஞ்சம் விரிவாகப் பாடத்தில் படிக்கும்போது இந்த நாவல் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரும். பேசாமல் சாண்டில்யனை பாடப் புத்தகம் எழுத விட்டிருக்கலாம், படிப்பதும் நினைவில் வைத்துக் கொள்வதும் சுலபமாக இருக்கும் என்று தோன்றும்.

கதையும் விறுவிறுவென்று போகும் (அந்தக் காலத்துக்கு). குப்தர் படைத்தலைவன் அஜித்சந்திரன் ஹூணர்களிடம் சிறைப்படுகிறான். அங்கே சரித்திர நாவல்களின் விதிகள்படி தன்னை சிறை வைத்திருக்கும் அடிலனின் மகள் சித்ராவைக் காதலிக்கிறான். பிறகு தப்பிச் சென்று குப்த சக்ரவர்த்தி ஸ்கந்தகுப்தனை சந்திக்கிறான். அவரோடு ஒப்புக்கு சண்டை போடுவதாக காட்டிவிட்டு, ஹூணர்களின் தலைவனான தோரமானாவிடம் படைத்தலைவனாக சேர்கிறான். அங்கே வழக்கம் போல் சதிக்கு மேல் சதி. கடைசியில் அஜித் எப்போதுமே குப்தர்களுக்காகத்தான் பணி புரிகிறான், தோரமானாவுக்கு உதவுவது போல நடித்து அவன் படையெடுப்பை தாமதப்படுத்திவிட்டான் என்று தெரிகிறது. சித்ராவை மணந்து சுபம்!

இது ஜெயமோகனின் historical romances பட்டியலில் இடம் பெறாதது எனக்கு ஆச்சரியம்தான்.

சிறு வயதில் படிப்பதற்கேற்ற சாகசக் கதை. என்னைப் போல நாஸ்டால்ஜியா இல்லாத பெரியவர்கள் படிப்பார்களா என்று தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்