சுஜாதா தேர்ந்தெடுத்த அவரது படைப்புகள்

sujatha1978-இல் படிகள் என்ற சிற்றிதழுக்காக சுஜாதா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது அவரிடம் ஒரு கேள்வி:

படிகள்: நாங்கள் அல்லது இன்னொருவர் உங்களின் இலக்கியத்தனமான படைப்புகளைத் தொகுத்துத் தர விரும்புகிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது உங்கள் எழுத்துகளில் எவற்றை எல்லாம் கொடுப்பீர்கள்? ஒரு பட்டியல் தாருங்களேன்.

சுஜாதா: பட்டியலில் சிறுகதைகள் இருக்கும். சில கட்டுரைகள் இருக்கும்.

  • தனிமை கொண்டு (தனிப் புத்தகம்)
  • ஜன்னல் (கசடதபற)
  • காணிக்கை (கல்கி)
  • செல்வம் (கலைமகள்)
  • முரண் (சுதேசமித்திரன்)
  • நகரம் (தினமணிக்கதிர்)
  • எதிர்வீடு (கணையாழி)
  • அகப்பட்டுக் கொள்ளாதவரை திருடவில்லை (குமுதம்)
  • வீடு (தினமணிக்கதிர்)
  • ஒரே ஒரு மாலை (ஆனந்த விகடன்)
  • அம்மோனியம் பாஸ்ஃபேட் (தினமணிக்கதிர்)
  • பார்வை (தினமணிக்கதிர்)

இவைகளை என் முதல் கதைத் தொகுப்பாகவும், Assorted Prose என்று உரைநடைப் பகுதிகள் எனப் பல நூல்களிலிருந்தும் எடுத்து மற்றொரு புத்தகமாகவும் வெளியிடலாம். இலக்கியத் தரம் என்கிற பாகுபாட்டை விட Representative of my writing என்கிற பாகுபாட்டில்தான் வெளியிடுவேன்.

இந்த சிறுகதைகளுக்கான மின்பிரதிகள் கிடைக்குமா? குறிப்பாக ‘தனிமை கொண்டு’. சுட்டிகள் கிடைத்தால் சொல்லுங்கள், இணைத்துவிடலாம்…

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

2015-இன் தமிழ் படைப்புகள்

மேலை நாட்டு பத்திரிகைகளில் வருஷாவருஷம் ஆண்டின் சிறந்த நூல்கள் என்று ஒரு பட்டியல் போடுவார்கள். இந்த முறை நம்மூருக்கு ஒரு பட்டியல் போடலாம் என்று எனக்கு ஆசை.

ஆசை இருக்கு தாசீல் பண்ண என்று ஒரு பழமொழி உண்டு. 2015-இல் என்ன புத்தகங்கள் வெளிவந்தன என்றே தெரியாதபோது எப்படி பட்டியல் போடுவது? நண்பர்கள்தான் உதவ வேண்டும். நீங்கள் படித்த சிறந்த 2015-இன் புத்தகங்களைப் பற்றி ஓரிரு வரிகளாவது எழுதுங்களேன்! நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, அபுனைவு எதுவாக இருந்தாலும் சரிதான்…

தொகுக்கப்பட்ட பக்கம்: புத்தகப் பரிந்துரைகள்

வாரியாரின் ‘ராமகாவியம்’

kirupananda_vaariyarஎன் சிறு வயதில் கிருபானந்த வாரியாரின் குரல் மிகவும் பழக்கமான ஒன்று. அனேகமாக ஒலிபெருக்கியில், அபூர்வமாக நேரடியாக. கோவில், திருவிழா என்றால் பின்னணியில் இந்தக் குரலைக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க முடியாது. அவரும், புலவர் கீரனும், பாலகிருஷ்ண சாஸ்திரிகளும் புகழ் பெற்று விளங்கினார்கள். அதுவும் வாரியாரின் குரல் அவருக்கான ஸ்பெஷல் சொத்து.

அவர் எழுதிய புத்தகம் என்று ஒன்று இணையத்தில் கிடைத்தது. ராமகாவியம். இலக்கியம், மறுவாசிப்பு என்றெல்லாம் இல்லை. ராமாயணத்தை அவர் பாணியில் சொல்கிறார், அவ்வளவுதான். படிக்கும்போதும் அவரது குரல்தான் கேட்டுக் கொண்டே இருந்தது. அவரே நேரடியாக சொல்வது போல இருந்தது.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மின்பிரதியை இணைத்திருக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்

ஜூலியன் சைமன்ஸ் எழுதிய ‘Man Who Killed Himself’

julian_symonsஒரு லெவலில் பார்த்தால் இந்தப் புத்தகம் வெறும் gimmick-தான். சில சமயம் gimmicks-களும் என்னைக் கவர்கின்றன. 🙂

சிம்பிளான கரு. ஆர்தர் ப்ரௌன்ஜான் இரட்டை வாழ்வு வாழ்கிறான். ஒரு வாழ்க்கையில் மனைவி க்ளேருக்கு அடங்கிய கணவன். அடிக்கடி பயணம் செய்யும் வேலை பார்ப்பவன். அதாவது அப்படி சொல்லிவிட்டு இன்னொரு ஊரில் dating agency நடத்தும் மேஜர் மெல்லனாக பாதி நாள் இன்னொரு வாழ்க்கை. க்ளேரின் பணம் வேண்டும். என்ன செய்வது? மேஜர் மெல்லன் க்ளேரைக் கொலை செய்துவிடுவதாக ஜோடிக்கிறான். கொலைக்கப்புறம் மெல்லனை யாரும் பார்ப்பதில்லை. ஆனால் துரதிருஷ்டம், ஆர்தர் மெல்லனை கொன்று பிணத்தை ஒழித்துவிட்டதாக ஆர்தர் மேலேயே சந்தேகம் விழுகிறது!

இலக்கியம் எல்லாம் இல்லை, நல்ல வணிக நாவல் மட்டும்தான். சைமன்ஸின் நடை tongue in the cheek பாணியில் நன்றாக அமைந்திருக்கிறது. இரட்டை வேஷக் கணவன், அவனுடைய ‘கம்பெனிகள்’, அடக்கி ஆளும் மனைவி எல்லாவற்றையும் கோட்டோவியங்களாக திறமையாகக் காட்டுகிறார். புன்னகை எழுந்து கொண்டே இருந்தது. அதற்காகவே படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: துப்பறியும் கதைகள்

குவிகம் இலக்கிய வாசல்

kuvikam

kripanandanஇந்தத் தளத்துக்கு வருபவர்களுக்கு கௌரி கிருபானந்தன் என்பது பரிச்சயமான பேர். தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் மூச்சுவிடாமல் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார். அவரது கணவர் கிருபானந்தனும் பெரிய இலக்கிய ரசிகர். அவரும் சில நண்பர்களும் (சுந்தரராஜன் என்ற பேரை அடிக்கடி பார்த்தேன்) சேர்ந்து குவிகம் என்ற இலக்கிய அமைப்பை சில மாதங்களாக நடத்தி வருகிறார்கள். மாதம் ஒரு முறை சந்தித்து இலக்கியம் பற்றி பேசுகிறார்கள். அவரது வார்த்தைகளிலேயே:

சிறிய அளவில் இலக்கிய நிகழ்ச்சிகள் (பார்வையாளர்களாக இல்லாமல் பங்கேற்பவர்களாக இருக்க வேண்டும் (என்பது முக்கிய நோக்கத்துடன்) நடத்தி வருகிறோம்.

நன்கு சிறக்க என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

குவிகத்தின் தளத்தை இங்கே காணலாம். தி.ஜா., பிரபஞ்சன், அசோகமித்ரன் படைப்புகளைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள். சாரு நிவேதிதா, பிரபஞ்சன், திருப்பூர் கிருஷ்ணன், அழகியசிங்கர் என்று பலர் விருந்தினராக வந்து சிறப்பித்திருக்கிறார்கள். சிறுகதைத் திருவிழா என்று ஒன்றை நடத்தி பரிசுகளும் அளித்திருக்கிறார்கள். சென்னையில் இருப்பவர்கள் போய்த்தான் பாருங்களேன்!

இந்த தளத்தின் உண்மையான லாபம் கௌரி, கிருபானந்தன், ரெங்கசுப்ரமணி, கேசவமணி, பாஸ்டன் பாலா (நிறைய பேர் விட்டுப் போயிருக்கிறது…) போன்ற அன்பர்களின் அறிமுகம்தான். ஒரு முறை கூட இன்னும் சந்திக்கவில்லை, இருந்தாலும் சஹிருதயர்கள் என்பது தெளிவு…

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய நிகழ்ச்சிகள்

இந்துமதி

indumathiஇந்துமதியைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை – தரையில் இறங்கும் விமானங்கள் தவிர. எப்படியோ தெரியாத்தனமாக ஒரு நாவல் இலக்கியமாக இருக்கிறது. அவரது மிச்சக் கதைகள் எல்லாம் தண்டம்தான். ஆனால் பல முறை முயற்சி செய்தும் ஒரு முறை கூட இலக்கியம் படைக்காத சிவசங்கரி, இல்லை முயற்சியே செய்யாமல் எப்படியோ ஒரே ஒரு முறை இலக்கியம் படைத்திருக்கும் இந்துமதி இருவரில் யார் ஒசத்தி என்று தீர்மானிப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

தமிழில் பிரபலமாக இருந்த பெண் எழுத்தாளர்களுக்கு ஒரே தீம்தான் – “பத்தினிக்கு இன்னல் வரும் பழையபடி தீரும்”. இதையே வைத்துக் கொண்டுதான் காலம் காலமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதில் அவர்கள் கொண்டு வரும் மாபெரும் மாற்றம் எல்லாம் பத்தினிக்கு இன்னல் வரும் ஆனால் தீராது, இல்லாவிட்டால் கல்யாணம் ஆகாத இளம்பெண்ணுக்கு வரும் இன்னல் தீரும்/தீராது, ஏழைப் பத்தினிக்கு இன்னல் வரும், மேல்தட்டுப் பெண்ணுக்கு இன்னல் வரும் இந்த மாதிரிதான். இந்துமதி மேல்தட்டுப் பெண்களுக்கு இன்னல் வரும் என்ற template-ஐ வைத்து எழுதித் தள்ளி இருக்கிறார். நாயகிக்கு வெள்ளை நிறம் மிகவும் அவசியம். அவரது target audience எழுபதுகளின் பெண்கள். எண்பது தொண்ணூறுகளிலும் அதே target audience-ஐ குறி வைத்து எழுதிக் கொண்டிருந்தது ஏற்கனவே தண்டமாக இருக்கும் அவரது படைப்புகளை உலக மகா தண்டமாக்குகிறது. இவர் எப்படிப் பிரபலமானார் என்று எனக்குப் புரியவே இல்லை.

எப்படி த.இ. விமானங்கள் மட்டும் இந்த template-இலிருந்து மாறி இத்தனை உச்சத்தை அடைந்தது என்று பல முறை வியந்திருக்கிறேன்.

வெள்ளை நிற நாயகிகளும் உயரமான நாயகன்களும் – அனேகமாக ரிம்லெஸ் கண்ணாடி அணிந்தவர்கள் – எப்போதும் வருவார்கள். ஓரளவு விவரம் தெரிந்தபின் இந்த obsession கொஞ்சம் வினோதமாக இருந்தது.

த.இ. விமானங்களை கொஞ்சமாவது நினைவுபடுத்தும் நாவல் மலர்களிலே ஒரு மல்லிகை. நாயகி வித்யா இலக்கிய ரசனை இல்லாத ரமணியை மணக்கிறாள், ரசனை உள்ள சங்கரிடம் நட்பு.

அவரது பிற புத்தகங்களில் தொட்டுவிடும் தூரம் என்ற புத்தகத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதில் சினிமா, இலக்கியத்தில் ஆர்வம் உள்ள நாயகன், நாயகி. அவர்கள் விவாதிக்கும் எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், ஜெயமோகன், விமலாதித்த மாமல்லன்

அன்பே ஆருயிரே என்ற நாவலையும் குறிப்பிட வேண்டும். எத்தனைதான் முயன்றாலும் இந்த மாதிரி கற்பனை “வளம்” எனக்கு வரப் போவதில்லை. வழக்கமான முக்கோணக் காதல். இரண்டு ஆண்களும் உயிர் நண்பர்கள். ஒரு உணர்ச்சிகரமான கணத்தில் காதலன் தான் விவாகரத்தான ஒரு பெண்ணைத்தான் மணப்பேன் என்று சபதம் செய்கிறான். தியாகச்சுடர் நண்பன் காதலியை மணந்து, அவளைக் கொடுமைப்படுத்தி, அவள் விவாகரத்து வாங்கி, காதலனை மணந்து, சுபம்! இதெல்லாம் எப்டியம்மா யோசிக்கறீங்க?

மிச்ச நாவல்களும் தண்டம்தான், ஆனால் நாளை மறந்து போய் ஒரு நப்பாசையில் படித்துவிடக் கூடாது என்பதற்காக அடுத்த பாரா.

அவளுக்கும் அமுதென்று பேர் என்ற குறுநாவலில் பதின்ம வயதுப் பையன் காதல் நிராகரிக்கப்படுவதால் கொலையே செய்கிறான். ஏன் எப்படி என்று குறுநாவலில் பதினாறு வயதுப் பெண்ணுக்கு சக்தியை மீறி கல்யாணம் செய்தால், பத்து நாளில் மாப்பிள்ளை வீட்டார் அவளைக் கொன்றுவிடுகிறார்கள். என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில் தன் தோழியிடம் அவள் காதலனை மயக்குவேன் என்று பந்தயம் கட்டும் தோழி. என்று புதிதாய் பிறப்போம் என்ற நாவலில் விவாகரத்தான கணவன் மனைவி நடுவில் மாட்டிக் கொள்ளும் சிறுவன். கனகாம்பரம் குறுநாவலில் உடலுறவைத் தவிர்க்க வேண்டிய பெண்ணை ஏமாற்றி ஒருவன் தலையில் கட்ட அவன் அவளை சேர்த்துக் கொள்கிறான். காதல் போயின் நாவலில் அழகுத் திமிரில் இருக்கும் பெண்ணுக்கு அம்மை போட்டு திருந்துகிறாள். கீதமடி நீ எனக்கு என்ற நாவலில் அழகான குடும்பம் இருந்தும் இன்னொரு பெண்ணால் ஈர்க்கப்படும் கணவன். கண் சிமிட்டும் மின்மினிகள் என்ற நாவலில் அழகான, பணக்காரக் குடும்பத்தில் கல்யாணம் ஆக வேண்டும் என்று ஏங்கும் இளம் பெண். மணல் வீடுகள் வாடகைத்தாய்க்கும் கணவனுக்கும் நடுவில் காதல் என்ற கரு. நினைவே இல்லையா நித்யா மில்ஸ் அண்ட் பூன் காதல் கதை. அந்தத் தரத்துக்கு நல்ல கதை. ஓடும் மேகங்களே என்ற நாவலில் காதலனோடு மனைவியை இணைத்து வைக்கும் கணவன். பறப்பதற்கு முன் கொஞ்சம் என்ற நாவலில் மறுமணம் செய்து கொள்ளும் தாய். தூண்டில் மீன்கள் என்ற நாவலில் மனைவியை ஏமாற்றி இன்னொருத்தியையும் மணம் செய்து கொள்ளும் ஒருவன்; அடுத்த பெண்ணைத் தேடும்போது இந்த இரு பெண்களும் அவனைப் பிரிந்து குடும்பமாக வாழ்கிறார்கள். துள்ளுவதோ இளமை என்ற நாவலில் பிறந்த வீட்டில் அன்பு கிடைக்காத பெண் புகுந்த வீட்டின் பழக்கங்களை ஏற்க சிரமப்படுகிறாள். வீணையில் உறங்கும் ராகங்கள் குறுநாவலில் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண் ஏமாற்றப்பட்டு திரும்பி வரும்போது அப்பாவும் தங்கையும் அவளை சுலபமாக ஏற்றுக் கொள்கிறார்கள். விரல்களை மீட்டும் வீணை குறுநாவலில் விவாகரத்தான மனைவிக்கு மறுமணம் ஆன பிறகு முதல் கணவன் தன் குழந்தைக்குப் போராடுகிறான். விரலோடு வீணை குறுநாவலில் ஏழைப் பெண், பணக்காரக் கதாநாயகன், அத்தை பெண்ணோடு கல்யாணம். அசோகவனம், நெஞ்சின் நெருப்பு, நிறங்கள், நிழல்கள் சுடுவதில்லை, ஒரு நிமிடம் தா, பூ மலரும், திசை தேடும், விஷம் மாதிரி குறுநாவல்களெல்லாம் ஒரு வரி கதைச்சுருக்கம் எழுதும் அளவுக்குக் கூட வொர்த் கிடையாது, மகா தண்டம்.

த.இ. விமானங்களைத் தவிர்த்த இந்துமதியை முழுமையாக நிராகரிக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து, தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்

திரைப்படப் பரிந்துரை – Chef

chefChef மகா பிரமாதமான திரைப்படம் என்பதெல்லாம் இல்லை. ஆனால் புன்னகைக்க வைக்கக் கூடிய திரைப்படம்.

மகா சிம்பிளான கதை. சமையல் கலைஞன் கார்ல் ஒரு உணவகத்தின் தலைமை சமையல்காரன். விவாகரத்தானவன், ஆனால் முன்னாள் மனைவியுடன் நல்ல நட்பு இருக்கிறது. சமையலும் பத்து வயது மகனும் அவன் வாழ்வை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறார்கள்.

ஒரு நாள் இரவு பிரபல உணவு/உணவக விமர்சகன் ராம்சே வருவதாக இருக்கிறது. கார்ல் தனித்துவமான உணவைத் தயாரிக்க விரும்புகிறான், ஆனால் ஹோட்டல் முதலாளி தடையுத்தரவு போடுகிறான். வழக்கமான உணவுகளைத்தான் தயாரிக்க வேண்டும் என்கிறான். புதிய ருசியைத் தேடி வந்த ராம்சே கார்லையும் உணவகத்தையும் தன் விமர்சனத்தில் கிழிகிழி என்று கிழித்துவிடுகிறான். கோபத்தில் ட்விட்டரில் கார்ல் ராம்சேவைத் திட்ட, ராம்சே பதிலுக்குத் திட்ட, கைகலப்பு வரை போய் டிவிட்டரில் கார்லுக்கு எதிர்மறை விளம்பரம் (notoriety) கிடைத்துவிடுகிறது. கார்லுக்கு வேலை போய்விடுகிறது.

கார்ல் இந்தப் பெரிய உணவகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு காரில் பொருத்திய கையேந்திபவன் ஒன்றை ஆரம்பிக்கிறான். சில காரணங்களால் அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக்கரை வரை அந்த கையேந்திபவனை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். கார்லின் மகன் அதை சமூகத் தளங்களில் பிரபலமாக்குகிறான். கையேந்திபவன் ஹிட்டாகிவிட ராம்சேவே கார்லுடன் இணைந்து புதிய உணவகம் ஒன்றைத் தொடங்குகிறான்.

ஒன்றுமில்லாத கருவை நல்ல திரைக்கதையாக மாற்றி இருக்கிறார்கள். கார்லாக நடிக்கும் ஜான் ஃபாவ்ரோ கலக்குகிறார். ஆனால் scene-stealer என்றால் கார்லின் மகனாக நடிக்கும் எம்ஜே ஆன்டனிதான். இயக்கமும் ஃபாவ்ரோதான்.

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

திரைப்படப் பரிந்துரை – Still Alice

still_aliceStill Alice திரைப்படத்துக்காக ஜூலியன் மூர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது (2015-இல்) பெற்றிருக்கிறார். அதனால்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்த்தேன். அலெக் பால்ட்வின், கிர்ஸ்டன் ஸ்டீவர்ட் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

கல்லூரி பேராசிரியர் டாக்டர் அலிஸ் ஹௌலண்டுக்கு 50 வயது. பாடம் எடுக்கும்போது ஒரு வார்த்தை மறந்துவிடுகிறது. ஒரு நாள் ஜாகிங் போகும்போது வழி மறந்துவிடுகிறது. டாக்டரிடம் போனால் அல்செய்மர் வியாதி ஆரம்பித்திருக்கிறது என்கிறார்.

திரைப்படம் முழுவதும் அதுதான். அலிஸுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாமே மறந்து கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் காலம் முழுவதும் வேலை செய்த கல்லூரியைக் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை விட மோசம், வீட்டில் கழிப்பறை எங்கே என்பது மறந்துபோய் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிறாள். அப்படி அவளுடைய அடையாளமே அழிந்து கொண்டிருந்தாலும் அவள் ‘still Alice’-தான்.

படத்தின் சிறப்பான காட்சிகள் என்று இரண்டைச் சொல்வேன். ஒன்று, அலிஸ் அல்செய்மர் வியாதியைப் பற்றி பேசும் காட்சி. விவரிக்கப் போவதில்லை, பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்னொன்று, எதிர்காலத்தில் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டால் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று ஒரு வீடியோவை பதிவு செய்து கொள்கிறாள். பிற்காலத்தில் அந்த வீடியோ கைக்கு கிடைத்தாலும் அவளால் முடிவதில்லை. மனதைத் தொட்ட காட்சி.

திரைப்படம் லிசா ஜெனோவா எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டதாம். படித்துப் பார்க்க வேண்டும்.

நினைவுகள் போய்விட்டால் ‘நான்’ என்பது யார்? நம் அடையாளம்தான் என்ன? ஆனால் மனித வாழ்வு என்பது எத்தனை கஷ்டம் வந்தாலும் பெரும் பொக்கிஷம்தான். அப்படி யோசிக்க வைத்ததுதான், உணர வைத்ததுதான் இந்தத் திரைப்படத்தின் வெற்றி. பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

திரைப்படப் பரிந்துரை – Whiplash

whiplashWhiplash-ஐ பரிந்துரைக்க முக்கியமான காரணம் ஜே.கே. சிம்மன்ஸின் நடிப்புதான். சிம்மன்ஸுக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதும் கிடைத்தது.

சிம்மன்ஸ் ஒரு இசைப் பள்ளியில் ஆசிரியர். அங்கே இருக்கும் சிறந்த மாணவர்களை ஒரு இசைக்குழுவாக அமைத்து போட்டிகளில் கலந்து கொள்கிறார். மாணவர்களுக்கு தீசத்தனத்தோடு நிறைய அழுத்தம் கொடுக்கிறவர். மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறார், ஒரு பழைய மாணவன் தற்கொலையே செய்து கொள்கிறான். ஒரு புதிய மாணவன் – ட்ரம்மர் – சிம்மன்சோடு போராடுவதுதான் கதை. ஆசிரியனின் தன்னிச்சையான arbitrary முடிவுகள், நியாயமற்ற எதிர்பார்ப்புகளை சமாளிக்க கடும் முயற்சி செய்யும் மாணவனின் கண்ணோட்டத்தில்தான் திரைப்படம் நகர்கிறது. கடைசியில் நல்ல இறுதிக் காட்சியோடு முடிகிறது.

திரைக்கதையில் காட்சிக்கு காட்சி டென்ஷன்தான். சில காட்சிகள் இப்போது யோசித்துப் பார்த்தால் அதீதமாக இருக்கின்றன, ஆனால் பார்க்கும்போது தெரிவதில்லை. சிம்மன்ஸ்தான் திரைப்படத்தின் அச்சாணி என்றாலும் மாணவனாக வரும் மைல்ஸ் டெல்லரும் கலக்குகிறார். படத்தின் பின்புலமாக இருக்கும் ஜாஸ் இசையும் கலக்குகிறது.

இதையெல்லாம் அதிகமாக விவரிக்கக் கூடாது. பார்த்து ரசியுங்கள்!

படத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு இசை பீஸ் ஒன்று கீழே (படத்தில் வரும் காட்சி அல்ல)

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: ஐஎம்டிபி குறிப்பு

திரைப்படப் பரிந்துரை – American Sniper

சிறந்த திரைப்படம் என்பதை விட intriguing திரைப்படம் என்றுதான் சொல்வேன்.

american_sniperக்ரிஸ் கைல் என்ற அமெரிக்க ராணுவ வீரரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட புத்தகம். கைல் ஒரு typical redneck. சின்ன வயதிலிருந்தே துப்பாக்கியை வைத்து வேட்டையாட எல்லாம் பழகியவர். தானாக சென்று ராணுவத்தில் சேர்கிறார். குறிபார்த்து சுடுவதில் தேர்ச்சி பெறுகிறான். நான்கு முறை இராக்குக்கு சென்று போரிடுகிறார். அவருடைய போர் முறை என்பது மறைவான இடத்திலிருந்து எதிரியை சுடுவது. நகரப் போர்களில் ராணுவம் வீடு வீடாக சென்று எதிரிகளைத் தேடும்போது இது அவர்களுக்கு பெரும் பாதுகாப்பைத் தருகிறது. அவரது சுடும் திறமை அவரைப் பிரபலமாக்குகிறது. 250க்கும் மேற்பட்டவர்களைக் சுட்டுக் கொன்றுவிட்டாராம். எதிரிகள் தரப்பிலும் அவரைப் போலவே குறிபார்த்து சுடுவதில் திறமை வாய்ந்த முஸ்தஃபாவுக்கும் இவருக்கும் நடுவில் போட்டியே ஏற்படுகிறது. கடைசியில் முஸ்தஃபாவை சுட்டுக் கொன்றுவிடுகிறார், ஆனால் இவர்கள் தரப்பில் பெரிய உயிர்ச்சேதம்.

இத்தோடு முடிந்திருந்தால் எனக்கு இந்தத் திரைப்படம் பத்தோடு பதினொன்றாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்த வரையில் இதற்கு அடுத்த பகுதிதான் இந்தத் திரைப்படத்தை முக்கியமானதாக்குகிறது.

chris_kyleகைலுக்கு ராணுவத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லை. பாசமுள்ள மனைவி, குழந்தைகள் இருந்தாலும் அவருக்கு தன் மனதை பூரணமாக குடும்பத்தின் மீது செலுத்த முடியவில்லை. மனதில் எப்போதும் ஒரு அலைக்கழித்தல் இருந்து கொண்டே இருக்கிறது. Post Tramautic Stress Disorder என்று சொல்வார்கள். அடுத்தவரைக் கொல்வதும் எப்போதும் இருக்கும் அபாயமும் ராணுவ வாழ்வில் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதற்குப் பிறகு சாதாரண வாழ்வில் மீண்டும் ஒட்டுவது கஷ்டம். அதுவும் உடல் ஊனம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் கேட்கவே வேண்டாம். ஊனம் இல்லாத பலருக்கு குற்ற உணர்ச்சி மிகுந்திருக்கும். கைலுக்கு குற்ற உணர்ச்சி எதுவுமில்லை, ஆனால் தான் எதிரிகளைக் கொன்றிருக்காவிட்டால் தன் நண்பர்கள் – தன்னவர்கள் நிறைய பேர் இறந்திருப்பார்கள் என்ற உணர்வு பலமாக இருக்கிறது. தேர்ச்சி பெற்றவனாகிய நான் போரிடாமல் திரும்ப வந்துவிட்டேன் என்பதற்கான குற்ற உணர்ச்சிதான் இருக்கிறது. டாக்டர் ஒருவர் தன்னவர்கள் என்று நீ கருதும் பலருக்கும் Post Tramautic Stress Disorder இருக்கிறது, அவர்களுக்கு நீ நட்புக்கரம் நீட்டலாமே என்கிறார். கைல் tangible ஆக எதுவும் செய்துவிடவில்லை, ஆனால் பல முன்னாள் ராணுவ வீரர்களிடம் சென்று பேசுகிறார். பலருடன் சேர்ந்து துப்பாக்கிப் பயிற்சி செய்கிறார். மன அளவில் அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

கைல் மன அழுத்தம் மிகுந்த ஒரு முன்னாள் ராணுவ வீரரால் சுடப்பட்டு இறந்து போகிறார், அத்துடன் படம் முடிகிறது.

கைலாக நடிக்கும் ப்ராட்லி கூப்பர் அசத்திவிட்டார். போர்க்காட்சிகள் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம், தேர்ந்த இயக்குனர்களில் ஒருவர்.

2014-இன் சிறந்த திரைப்படம், இயக்குனர், திரைக்கதை, நடிகர் ஆகிய ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
திரைப்படத்தின் தளம்
ஐஎம்டிபி குறிப்பு
க்ரிஸ் கைல் பற்றிய விக்கி குறிப்பு