யார் சிறந்த வாசகன்?

பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு வருஷம் முன்னால் ஜெயமோகனோடு நடந்த ஒரு விவாதத்தைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் உள்ளூர் சிலிகன் ஷெல்ஃப் கூட்டத்திற்குள் சிறந்த வாசிப்பு என்றால் என்ன, யார் சிறந்த வாசகன் என்று கேட்டிருந்தான். அதைத் தொடர்ந்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொண்டவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

முத்துகிருஷ்ணன்: ஜெயமோகன் கண்ணோட்டத்தில் நல்ல வாசகன் என்பவன் எழுத்தாளனின் படைப்பின் ஆழங்களையும், தரிசனங்களையும் அறிந்து கொள்பவன் மட்டுமே. அவர் இதைப் போன்ற வாசிப்பு பொதுவாக தமிழில் நிகழுவதில்லை என்கிறார். உங்களுடைய வாசிப்பில் நல்ல கதைகளில் இப்படி ஆழங்களை அறிந்த பிறகுதான் அதை நல்ல கதை என்பீர்களா? எனக்கு அப்படி நிகழ்ந்ததில்லை. எனக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை என்றால் நீ தரிசனத்தை பார்க்கவில்லை என்றால் ஆகிவிடுகிறதா? அப்படி என்றால் யார் தான் ஒரு கதையை தரமான கதை என்று மதிப்பிடுவது? உலக இலக்கியங்கள் வாசித்தவர்கள் அதன் ஆகச் சிறந்த படைப்புகளை கொண்டு இந்த விளக்கத்துக்கு எதிர்வினை அளிக்க முடியுமா?

ராஜன்: தரிசனத்தை கண்டடைபவன் மட்டுமே நல்ல வாசகன் என்ப்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தரிசனம் அவனுக்குப் பின்னால் கூட கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஒருவன் ஒரு கதையைப் படித்து விட்டு ஆத்மார்த்தமாக நல்ல கதை என்று நினைத்தாலே போதுமானது. அதன் முழு அர்த்தத்தையும் உணராத பட்சத்திலும் கூட ஆழங்களை அடையாத பட்சத்திலும் கூட அவன் நல்ல வாசகனே. அப்படி அவன் வேறு எதையேனும் கண்டடைந்தால் ஒரு வேளை அவனுக்கு வாசிப்புக்கான நோபல் கொடுக்கலாம், தேர்ந்த வாசகன் என்று பாராட்டலாம் அவ்வளவே.

ஆர்வி: கறாராகப் பார்த்தால் எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான்(ள்) என்பது வாசகனுக்கு தேவையில்லாத விஷயம். எனக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதே போல பிற வாசகர்களுக்கு கிடைக்கும் தரிசனங்களும் எனக்கு கிடைக்காமல் போகலாம். எனக்கு பிரமாதமான தரிசனங்கள் கிடைத்து உயர்ந்த புத்தகமாகத் தெரிவது அடுத்தவருக்கு ஏமாற்றம் அளிக்கலாம். இன்னொருவருக்கு உயர்ந்த புத்தகமாகத் தெரிவது எனக்கு ஏமாற்றம் அளிக்கலாம். டிக் ஃப்ரான்சிசின் சாகச நாவல்களில், இந்த இலக்கிய விமர்சகரும் சீந்தாத லவ் ஸ்டோரி போன்ற படைப்புகளில் எனக்கு பெரிய தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. காஃப்காவின் Metamorphosis புத்தகம் மற்றவர்களுக்கு ஒரு அற்புதமாகக் கூடத் தெரியலாம், ஆனால என்னால் ஒன்றவே முடிவதில்லை.

வேண்டுமென்றால் இது வரை wisdom of the crowds – மனித இனத்தின் கூட்டுத் தேர்வுகள் – காலத்தைக் கடந்த இலக்கியம் என்று எவற்றைத் தேர்ந்தெடுத்திருகிறதோ, அவற்றை சிறந்த இலக்கியம் என்று தன் ரசனையின் அடிப்படையிலும் கருதுபவன் சிறந்த வாசகன் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாசிப்பு என்பது தனி மனித அனுபவம் என்பதை நீங்களும் ஏற்றால் சிறந்த வாசகன், மோசமான வாசகன் என்பதை விட என் சஹிருதய வாசகன், என் பாணிக்கு ஒத்து வராத வாசகன் என்று பிரிப்பதுதான் சரிப்படுகிறது.

இதை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களைப் பொறுத்த வரை சிறந்த வாசகனுக்கான வரையறை என்ன? உங்களுக்குத் தெரிந்தவர்களில், நீங்கள் படித்தவர்களில் யாரையாவது சிறந்த வாசகர் என்று கருதுகிறீர்களா? எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான் என்பது முக்கியமா இல்லையா? இதையெல்லாம் பேசத்தான் இந்தத் தளம், உங்கள் கருத்துக்களை கட்டாயம் எழுதுங்கள்!

அடுத்த பகுதி – இலக்கிய விமர்சகனின் பணி


தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம்