யார் சிறந்த வாசகன்?

பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு வருஷம் முன்னால் ஜெயமோகனோடு நடந்த ஒரு விவாதத்தைத் தொடர்ந்து முத்துகிருஷ்ணன் உள்ளூர் சிலிகன் ஷெல்ஃப் கூட்டத்திற்குள் சிறந்த வாசிப்பு என்றால் என்ன, யார் சிறந்த வாசகன் என்று கேட்டிருந்தான். அதைத் தொடர்ந்து எங்களுக்குள் நாங்கள் பேசிக் கொண்டவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

முத்துகிருஷ்ணன்: ஜெயமோகன் கண்ணோட்டத்தில் நல்ல வாசகன் என்பவன் எழுத்தாளனின் படைப்பின் ஆழங்களையும், தரிசனங்களையும் அறிந்து கொள்பவன் மட்டுமே. அவர் இதைப் போன்ற வாசிப்பு பொதுவாக தமிழில் நிகழுவதில்லை என்கிறார். உங்களுடைய வாசிப்பில் நல்ல கதைகளில் இப்படி ஆழங்களை அறிந்த பிறகுதான் அதை நல்ல கதை என்பீர்களா? எனக்கு அப்படி நிகழ்ந்ததில்லை. எனக்கு புரியவில்லை, பிடிக்கவில்லை என்றால் நீ தரிசனத்தை பார்க்கவில்லை என்றால் ஆகிவிடுகிறதா? அப்படி என்றால் யார் தான் ஒரு கதையை தரமான கதை என்று மதிப்பிடுவது? உலக இலக்கியங்கள் வாசித்தவர்கள் அதன் ஆகச் சிறந்த படைப்புகளை கொண்டு இந்த விளக்கத்துக்கு எதிர்வினை அளிக்க முடியுமா?

ராஜன்: தரிசனத்தை கண்டடைபவன் மட்டுமே நல்ல வாசகன் என்ப்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். தரிசனம் அவனுக்குப் பின்னால் கூட கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஒருவன் ஒரு கதையைப் படித்து விட்டு ஆத்மார்த்தமாக நல்ல கதை என்று நினைத்தாலே போதுமானது. அதன் முழு அர்த்தத்தையும் உணராத பட்சத்திலும் கூட ஆழங்களை அடையாத பட்சத்திலும் கூட அவன் நல்ல வாசகனே. அப்படி அவன் வேறு எதையேனும் கண்டடைந்தால் ஒரு வேளை அவனுக்கு வாசிப்புக்கான நோபல் கொடுக்கலாம், தேர்ந்த வாசகன் என்று பாராட்டலாம் அவ்வளவே.

ஆர்வி: கறாராகப் பார்த்தால் எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான்(ள்) என்பது வாசகனுக்கு தேவையில்லாத விஷயம். எனக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். அதே போல பிற வாசகர்களுக்கு கிடைக்கும் தரிசனங்களும் எனக்கு கிடைக்காமல் போகலாம். எனக்கு பிரமாதமான தரிசனங்கள் கிடைத்து உயர்ந்த புத்தகமாகத் தெரிவது அடுத்தவருக்கு ஏமாற்றம் அளிக்கலாம். இன்னொருவருக்கு உயர்ந்த புத்தகமாகத் தெரிவது எனக்கு ஏமாற்றம் அளிக்கலாம். டிக் ஃப்ரான்சிசின் சாகச நாவல்களில், இந்த இலக்கிய விமர்சகரும் சீந்தாத லவ் ஸ்டோரி போன்ற படைப்புகளில் எனக்கு பெரிய தரிசனங்கள் கிடைத்திருக்கின்றன. காஃப்காவின் Metamorphosis புத்தகம் மற்றவர்களுக்கு ஒரு அற்புதமாகக் கூடத் தெரியலாம், ஆனால என்னால் ஒன்றவே முடிவதில்லை.

வேண்டுமென்றால் இது வரை wisdom of the crowds – மனித இனத்தின் கூட்டுத் தேர்வுகள் – காலத்தைக் கடந்த இலக்கியம் என்று எவற்றைத் தேர்ந்தெடுத்திருகிறதோ, அவற்றை சிறந்த இலக்கியம் என்று தன் ரசனையின் அடிப்படையிலும் கருதுபவன் சிறந்த வாசகன் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் வாசிப்பு என்பது தனி மனித அனுபவம் என்பதை நீங்களும் ஏற்றால் சிறந்த வாசகன், மோசமான வாசகன் என்பதை விட என் சஹிருதய வாசகன், என் பாணிக்கு ஒத்து வராத வாசகன் என்று பிரிப்பதுதான் சரிப்படுகிறது.

இதை வாசிப்பவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களைப் பொறுத்த வரை சிறந்த வாசகனுக்கான வரையறை என்ன? உங்களுக்குத் தெரிந்தவர்களில், நீங்கள் படித்தவர்களில் யாரையாவது சிறந்த வாசகர் என்று கருதுகிறீர்களா? எழுத்தாளன் என்ன நினைத்து எழுதினான் என்பது முக்கியமா இல்லையா? இதையெல்லாம் பேசத்தான் இந்தத் தளம், உங்கள் கருத்துக்களை கட்டாயம் எழுதுங்கள்!

அடுத்த பகுதி – இலக்கிய விமர்சகனின் பணி


தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம்

13 thoughts on “யார் சிறந்த வாசகன்?

  1. ஆர்வி, நீங்கள் கொடுத்துள்ள தேர்வு பதில்கலை தாண்டி இன்னொரு வாசகனும் உண்டு என்று சொல்லபடுகிறது. அது, எழுத்தாளன் உணர்த்த நினைத்ததை கண்டடைந்து அத்தோடு நிற்காமல் அதற்கும் மேலான ஒரு subtextஐ வாசிக்கும் வாசகன். லட்சிய வாசகன் என்றெல்லாம் சொல்லாம்.
    எனக்கு அதில் உடன்பாடு இல்லை. நான் உங்கள் கட்சி தான். எனக்கு பிடித்திருக்கிறது என்பது நல்ல அளவுகோல் தான். நிறைய வாசிக்கும் தோறும் நமது ரசனை செம்மைப்படுகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். அதன் காரணமாக நமது தேர்வுகளும் குறிப்பிட்ட தரத்தை நோக்கி செல்கிறது. அதன் வழியே சில படைப்புகள் பண்டைய முக்கியதுவத்தை இழந்து மனதளவில் அதிலிருந்து முன்னோக்கி நகர்ந்து விடுகிறோம்.
    அதை அவதானித்து ஒரு கோட்பாடாக ஆக்கிக் கொண்டால் அதை விமர்சன கோட்பாடு என கூறலாம். ஆனால் அதற்கு பிறகு அந்த கோட்பாட்டை ஒவ்வொன்றிலும் போட்டு தரம்பிரிக்கையில் straitjacket போல ஆகிவிடுகிறது. “இது” இல்லாத்தால் “இந்த படைப்பு” ஒரு படி கீழே தான் என தீர்க்கமான முடிவிற்கு வந்து விடலாம். அது வேறுபடுத்தி தொகுத்துக் கொள்ள தனிப்பட்ட முறையில் மிகவும் உதவலாம். ஆனால் அதையே எல்லா வாசகர்களுக்கும் பொது அளவுகோலாக வைக்க முடியாது.
    எப்படி ஒவ்வொரு படைப்பையும் ஒரு குறிப்பிட்ட Genre என்று முடிவாக சொல்லிவிடமுடியாதோ அதைப் போல ஒரு விமர்சன கோட்பாட்டை தீர்க்கமாக எல்லா படைப்புகளுக்கும் சொல்லிவிட முடியாது. தோராயமான தரப்படுத்துதலுக்கு நம்பகதன்மையை அதிகரிக்கும் துணைகருவியாக அதை சொல்லலாம் (எனக்கு பிடித்திருக்கிறது அதனால் இது நல்ல படைப்பு என சொல்லுவதை விட ஒரு கோட்பாட்டை வைக்கும் போது அது புறவயமான அணுகுமுறை ஆகிறது.) ஆனால் அதற்குள்ளே இன்னும் மிக அழுத்தமான அகவயமான தர்க்கம் உள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
    முடிவாக, விமர்சன கோட்பாடு ஒரு லிஸ்ட் போடுவதற்கு மிகவும் உதவிகரமானது, தேவையும் கூட. ஆனால் அதற்கு அடுத்த்தாக அந்த நிரலில் உள்ள படைப்புகளை வாசிக்க புகும் போது அந்த கோட்பாட்டை உதாசீனம் செய்துவிடுதல் நல்லது. (லிஸ்ட் வாசிப்பதற்கும் பலவிதமான விமர்சகர்களின் லிஸ்டை பார்க்க வேண்டும். உங்களுக்கே தெரியும் சல்மான் ருஷ்டியை நீங்கள் இங்குள்ள லிஸ்டுகளில் பார்க்க முடியாது. ஆனால் மிகச்சிறந்த வாசிப்பாளர்கள் என நான் நினைப்பவர்கள் அவருடைய படைப்புகளை must read என்றே கூறுகிறார்கள்).
    🙂

    Like

  2. ஆசிரியர் என்ன சொல்ல வருகின்றார் என்று புரிந்து கொண்டு, அதை தெரிந்து கொள்ள படிக்க இலக்கியம் என்ன பாடபுத்தகமா? அப்படி படிக்க வேண்டுமென்றால ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு கோனார் நோட்ஸ்தான் வைத்துக் கொள்ள
    வேண்டும்.

    ஒவ்வொரு புத்தகமும் அதனதன் வாசகனுக்கு தனியான ஒரு அனுபவத்தையே தரும் என்பது என் கருத்து. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிறிய உதாரணம், பாரீஸுக்கு போ, நாவல் எனக்கு இசையை பற்றியும், கலாச்சார வித்தியாசத்தை பற்றி பேசுவது. ஆனால் இப்புத்தகத்தை எனக்கு தந்தவனுக்கு கிடைத்த ‘தரிசனம்’, பிறன் மணை நோக்குவது தவறில்லை (!!!)

    ஒவ்வொரு கதையும் எங்கோ நமது நிஜ வாழ்வின் ஒரு பக்கத்தை தொடும் போது அது நெருக்கமாகின்றது. கதையிலிருந்து எங்கோ நமக்கான திறப்பு ஏற்படலாம். சில புத்தகங்கள் பல வருடம் கழித்து படிக்கும் போது எரிச்சலாக கூட இருக்கலாம். அப்பம் வடை தயிர்சாதம், கல்லுரி படிக்கும்போது நன்றாக இருந்ததாக தோன்றியது, இன்று படித்தால் என்ன இது என்றே தோன்றுகின்றது.

    ஒவ்வொரு புத்தகத்திலும் நமக்கு என்ன கிடைக்கும் என்று தேடிக்கொண்டு படித்தால், அது படிக்கும் இன்பத்தை தராது.

    அதே சமயம், பிற வாசகர்கள் நம் கண்ணில் படாத நுட்பத்தை காட்டும் போது, அதை நாம் நம் போக்கிலே உள்வாங்கிக் கொண்டால் மட்டுமே நிற்கும். வெண்முரசிலன் பல விஷயங்கள், பலரால் விவாதிக்கப்படுகின்றன. பலர் கூறும் பல விஷயங்கள் நான் படிக்கும் போது என்னுள் ஏறவில்லை. உதாரணம், அதில் வரும் யோகம், தாந்த்ரீகம், தியானம் எத்தனையோ. ஆனால் அதில் வருகின்ற அடிப்படை மனித உணர்ச்சிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. இதில் ஜெயமோகன் என்ன நினைத்து எழுதினால் எனக்கு என்ன வந்தது. அவர் உண்மையில் பல விஷயங்களை வாசகனுக்கு கடத்த நினைத்தாலும், என்னிடம் இருக்கும் வாங்கும் சக்திக்கே அவை வந்து சேரும்.

    நல்ல வாசகனுக்கு அந்த சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேரும். அதைவிட்டு விட்டு, யாரோ கூறியதை அப்படியே படித்து, அப்படியே புரிந்து கொண்டதாக பாவனை செய்வதன் நஷ்டம் வாசகனுக்கே.

    Like

  3. முகின் மற்றும் ரெங்கா,

    வாசகனால் என்ன முடியுமோ அதைத்தான் பெற்றுக் கொள்ள முடியும் என்பது சரிதான். ஆனால் அவனுடைய பெறும் திறமை அதிகமாக இருந்தால் – எழுத்தாளன் நினைத்த நுட்பத்தை எல்லாம் பெற்றால் – அவன் இன்னும் சிறந்த வாசகன் ஆகிறானா? இல்லை யாரை விட யார் பெட்டர் என்ற ஒப்பிடலே தவறான அணுகுமுறையா?

    Like

    1. வாசகனின் வாங்கும் சக்தி, தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் அதிகமாகிக் கொண்டு போகலாம், போக வேண்டும். அடுத்து என்ன, அடுத்து என்ன என்று ஒரு சவாலுடன் சென்று கொண்டே இருப்பான். வாசகனில் யார் பெட்டர் என்று ஒப்பிடுவது தவறாகவே முடியலாம். அதை தீர்மானிப்பது யார் என்ற கேள்வி வரும்போது அது அடிபட்டு போகின்றது என்பது என் எண்ணம்.

      ஆசிரியர் கூறும் நுட்பங்கள், விஷயங்கள் சிலருக்கு படிக்கும் போது புரியாமல், தோன்றாமல் இருக்க கூடும். ஆனால் நிஜவாழ்வில் எங்கோ எப்போதோ அதை உரசும் சந்தர்ப்பம் வரும்போது அது அவனுக்கு புரியும். உதவும்.

      Like

  4. நல்ல கேள்விகளை எழுப்பியிருக்கிறீர்கள். இரண்டு நாட்களாக என்னுள் ஓடிகொண்டிருக்கும் கேள்விகளுடன் ஒத்துபோகிறது.

    வாசிப்பு என்பது அகவயமானது. ஓரளவுக்கு மேல் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது. கற்பனையை அடிப்படையாக கொண்டது. அப்படி இருக்கயில் ஒவ்வொரு வாசகனின் கற்பனை சக்திக்கு ஏற்பவும் அவனது இயல்புக்கு ஏற்பவும் படைப்பிலிருந்து தனக்கான அனுபவங்களை பெற்றுகொள்கிறான். அதிலிருந்து கருத்துக்களை உருவாக்கி கொள்கிறான்.

    வெறும் கதை ஓட்டத்தை மட்டும் படித்து செல்லாமல் அந்த கதை தருணங்களை பற்றி தன்னுள் கேள்விகளையும் கற்பனைகளையும் எழுப்பி கொண்டு தனக்கென ஒரு பார்வையை கதை முழுதும் தொகுத்து கொண்டு வருபவன் நல்ல இலக்கிய வாசகன் என்று கருதுகிறேன்.

    இது நல்ல வாசகனின் முதல் நிலை என்று நினைக்கிறேன். ஆனால் ஒரு படைப்பில் இருந்து எடுக்கப்படும் கருத்தை தன் வாழ்வு மட்டும் பிரபஞ்சம் என்ற Phenomenon மீது தனக்கான ஒரு பார்வையை உருவாக்கி கொள்ள கூடியதாக இருப்பின் அது தரிசனமாக அமைகிறது. இப்படி ஒரு கருத்தை படைப்பிலிருந்து எடுப்பவன் மேலே சொன்ன வாசகனை விட ஒரு படி மேல்.

    அதே சமயம் ஒரு நல்ல இலக்கியம் என்பது(நாவல் போன்றவை) இந்த ஒட்டு மொத்த தரிசனத்தை தருபவையாக இருக்கவேண்டும். அப்படிப்பட்ட படைப்புகள் உலகியல் தளத்திலும் எளிய உணர்வு தளத்திலும் பேசும் படைப்புகளை விட உயர்ந்தது.

    எழுத்தாளர் எழுதியதையே தான் வாசகனும் சென்று அடையவேண்டும் என்று இல்லை. வாசகன் தனக்குண்டான அனுபவத்தை எடுத்துகொள்ளலாம். ஆனால் எழுத்தாளர் எந்த அளவுக்கு ஆழமான ஒரு கதை கருவை அடிப்படையாக கொண்டு எழுதியிருக்கிறாரோ அந்த ஆழம் வரை வாசகன் செல்லக்கூடியவனாக இருக்கவேண்டும். அதை விட ஆழமாக சென்று கூட அதை விளக்கி கொள்ளலாம். அவன் சிறந்த வாசகன்.

    அதே சமயம் இன்னொரு விஷயமிருக்கிறது. ஒரு படைப்பு என்பது அந்த படைப்பாளி உருவாக்குவதால் அவர் எழுத நினைத்த சாரம்சத்தை நோக்கி நம்மை அழைத்து சொல்கிறார். இலக்கிய வாசிப்பை ஒரு பயணமாக உருவகித்து பார்க்கலாம். வாசகர்கள் அனைவரும் ஒரு இடத்துக்கு பயணம் செல்கிறார்கள். பயணத்தின் இலக்கு என்பது அந்த படைப்பின் சாராம்சம். போகும் பாதை என்பது அந்த படைப்பு. நம்மை அந்த இலக்கை நோக்கி வண்டி ஓட்டி செல்வது எழுத்தாளர்.

    இந்த பயணத்தில் அனைவருக்கும் ஒரே புறவெளிதான் இருக்கிறது. எங்கு, எந்த வழியே செல்கிறோம் என்பதை எழுத்தாளரே முடிவெடுக்கிறார். அங்கு கொண்டும் சேர்க்கிறார். ஆனால் இந்த பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவமிருந்திருக்கலாம். அவரவரின் அக ஓட்டம், கற்பனை, நுண்ணுணர்வு பொருத்தது அது. இருந்தும் சென்ற பயணம் ஒன்றே. அதனால் கிட்டத்தட்ட எழுத்தாளர் உட்பட அனைத்து நல்ல வாசகர்களும் – பயணத்தில் தூங்காமல் வந்தவர்கள்! – ஒரு பொதுவான அனுபவத்தையும் அடைந்திருப்பார்கள்.

    அதனால் இந்த விஷயத்திற்கு Binary இல் பதில் சொல்ல முடியாது. இரண்டுமே முக்கியம்.

    Like

    1. ஹரீஷ், // ஆனால் ஒரு படைப்பில் இருந்து எடுக்கப்படும் கருத்தை தன் வாழ்வு மட்டும் பிரபஞ்சம் என்ற Phenomenon மீது தனக்கான ஒரு பார்வையை உருவாக்கி கொள்ள கூடியதாக இருப்பின் அது தரிசனமாக அமைகிறது. // என்று நீங்கள் சொல்வது சரியாகப் புரியவில்லை.

      Like

      1. ஜெ அடிக்கடி சொல்லும் தரிசனம் தான் அது. நம் வாழ்வு மற்றும் பிரபஞ்சம் குறித்த ஒரு முழுமை பார்வையை அடைவது. ஒரு இலக்கிய படைப்பு அல்லது கவித்துவமான வரி மூலம் எழும் உணர்வால் நாம் இந்த உலகை விளக்கி கொண்டோமானால் நாம் ஒரு தரிசனத்தை சென்றடைகிறோம். நான் வெண்முரசு படித்துவிட்டு எழுதிய சில பதிவுகளை உதாரணமாக கொடுக்கிறேன்.

        http://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_871.html
        http://venmurasudiscussions.blogspot.com/2015/04/blog-post_62.html
        http://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_576.html

        Like

  5. ஹரீஷ், // ஒரு இலக்கிய படைப்பு அல்லது கவித்துவமான வரி மூலம் எழும் உணர்வால் நாம் இந்த உலகை விளக்கி கொண்டோமானால் நாம் ஒரு தரிசனத்தை சென்றடைகிறோம் // அதைத்தான் சொல்ல வருகிறேன். அப்படிப்பட்ட தரிசனம் எனக்கு இலக்கியம் என்று அங்கீகரிக்கப்படாத படைப்புகளிலும் கிடைத்திருக்கிறது.

    ரெங்கா, இப்படி ரெண்டு பேரும் ஒரே மாதிரி சிந்திக்கிறோமே, இது எப்படி? // வாசகனின் வாங்கும் சக்தி, தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் அதிகமாகிக் கொண்டு போகலாம், // 200% ஆமோதிக்கிறேன். // ஆசிரியர் கூறும் நுட்பங்கள், விஷயங்கள் சிலருக்கு படிக்கும் போது புரியாமல், தோன்றாமல் இருக்க கூடும். ஆனால் நிஜவாழ்வில் எங்கோ எப்போதோ அதை உரசும் சந்தர்ப்பம் வரும்போது அது அவனுக்கு புரியும். உதவும். // இந்தப் பதிவைப் பாருங்கள்! – https://siliconshelf.wordpress.com/2010/12/05/அசோகமித்ரனின்-ஒற்றன்/

    ரெங்கா, நீங்களும் கேசவமணியும் மிக அபூர்வமான சஹிருதயர்கள்!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.