இலக்கிய விமர்சகனின் பணி

யார் சிறந்த வாசகன் பதிவின் தொடர்ச்சியாக இதை எழுதுகிறேன்.

என் வாசிப்பு அனுபவம் என்னுடையது மட்டுமே என்று சொல்லி இருந்தேன். ஒரு படைப்பில் எனக்கு கிடைக்கும் தரிசனங்களின் எண்ணிக்கையும் தரமும் அதிகரிக்க அதிகரிக்க, அது என் தரவரிசையில் உயர்ந்த இடத்துக்குப் போகிறது. அனிதா இளம் மனைவியை விட விஷ்ணுபுரத்தை நான் மிக உயர்ந்த இடத்தில் வைக்க அதுதான் காரணம். ஒரு படைப்பு என்ன மேலும் சிந்திக்க வைக்கும்போது, புதிய உலகங்களை பார்க்க/கற்பனை செய்ய உதவும்போது, மனித இயல்பை தோலுரித்துக் காட்டும்போது (என்னுடைய ஃபேவரிட் உதாரணம் – பால்வண்ணம் பிள்ளை), அதற்கு நான் மேலும் மேலும் அதிக மதிப்பெண்கள் அளிக்கிறேன். இது அத்தனையும் என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையிலேயேதான் நடக்கின்றன.

விமர்சகர்களோ முன்/பின்/நடு நவீனத்துவம், எதார்த்தவாதம், சர்ரியலிசம், முற்போக்கு இலக்கியம், இலக்கியத்தின் வேர்கள் என்று பல சட்டகங்கள், வரையறைகள், கோட்பாடுகள் மூலமாக இலக்கியத்தைப் பாகுபடுத்த முயற்சிக்கிறார்கள். சாதாரணமாக நான் ஜெயமோகன் தவிர வேறு யாராவது இப்படி எழுதினால் தவிர்த்துவிடுவேன். ஜெயமோகனின் வரையறைகளைப் படிக்கும்போதும் அவரது சட்டகங்கள் குறுகலானவை, அவர் சொல்லும் ஒவ்வொரு விதிக்கும், கோட்பாட்டுக்கும் ஏதோ ஒரு படைப்பு விதிவிலக்காக இருக்கிறதே என்று தோன்றும். அவருடைய வழி அவருக்கானது, அதை எல்லாரிடமும் வலிந்து புகுத்த முடியாது என்று தோன்றும். சில சமயம் அவரிடமே கேட்டதும் உண்டு. சில சமயம் வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. 🙂

இதனால்தான் நான் பொதுவாக விமர்சகர்களை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. நான் அடிக்கடி சொல்வது போல ஷேக்ஸ்பியர் ஆயிரம் பக்கம் எழுதினால் அவரது நாடகங்களைப் பற்றி லட்சக்கணக்கான பக்கங்களில் விமர்சனம் எழுதி இருக்கிறார்கள். யார் சீந்துகிறார்கள்?

காலம் செல்லச் செல்ல, மனித இனத்தின் கூட்டு தரவரிசைப்படுத்துதல் – wisdom of the crowds – நல்ல இலக்கியத்தை, காலத்தைக் கடந்த படைப்புகளை தேர்ந்தெடுக்கின்றன. ஷேக்ஸ்பியரைத்தான் படிக்கிறோம், பென் ஜான்சனையும் மார்லோவையும் பொருட்படுத்துவதில்லை. பலரும் இந்தப் புத்தகம் இலக்கியம், எனக்கு இன்னின்ன தரிசனம் கிடைத்தது என்று சொல்கிறோம். பல்வேறு காலகட்டங்களில் இவற்றைப் படிப்பவர்களும் ஆமாம் எனக்கும் இந்த தரிசனம் கிடைக்கிறது என்று சொல்கிறோம். அந்தப் படைப்புகள் காலத்தைத் தாண்டி நிற்கின்றன. பல சமயம் என்னய்யா அறுக்கிறான்(ள்) இதையா இலக்கியம் என்றார்கள் என்று அடுத்த தலைமுறையே அலுத்துக் கொள்கிறது. அகிலன், நா.பா., மு.வ. போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம். அவை மெதுமெதுவாக இலக்கியத்தின் ரேடாரில் இருந்து தொலைந்துபோய் விடுகின்றன.

ஆனால் எனக்கு ஒரு ஷார்ட் லிஸ்ட், பரிந்துரைகள் – அதிலும் குறிப்பாக சமகால, சமீபத்திய இலக்கியத்துக்கு – அவசியமாக இருக்கிறது. எல்லாருக்குமே அது தேவைதான். அதுதான் நல்ல விமர்சகன் எனக்கு செய்யக் கூடிய உதவி. அதனால் விமர்சகர்கள் ஒரு பட்டியலை உருவாக்கினால்; அந்த விமர்சகரின் ரசனை உங்கள் ரசனையோடு ஒத்துப் போனால்; கப்பென்று பிடித்துக் கொள்ளுங்கள். அவர்களை ஒரு மோப்ப நாய் போல பயன்படுத்துங்கள். எனக்கு க.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா? புத்தகம் ஒரு திருப்புமுனை – seminal என்றே சொல்லலாம். ஆனால் அவர் போட்டிருக்கும் பட்டியலில் பல புத்தகங்கள் ஏமாற்றம் அளித்தன. அவரது தனிப்பட்ட ரசனை சார்ந்த அணுகுமுறை என் சிந்தனை முறைக்கு, வாசிப்பு முறைக்கு ஒத்து வருகிறது. ஆனால் எங்கள் ரசனை வேறுவேறு. ஜெயமோகன் meta-அணுகுமுறை -காலத்தைக் கடந்த இலக்கியம் என்று அங்கீகரிக்கப்பட்டவற்றை அலசி அவற்றுக்குள் உள்ள பொதுவான பண்புகள் என்ன என்று கண்டுபிடிப்பது – மிகச் சரி. ஆனால் அவரது வரையறைகளும் சட்டகங்களும் எனக்கு மிகவும் குறுகலானவையாகத் தெரிகின்றன. ஆனால் அவர் இலக்கியம் என்று ஒரு பட்டியல் போட்டால் – அது என் ரசனைக்கு நன்றாக ஒத்துப் போகிறது.

நல்ல விமர்சகன் என்பவன் அப்படி தன் அனுபவத்தை, தரிசனங்களை அடுத்தவருக்கு உணர வைப்பவன்(ள்) என்பதுதான் தியரி. அதுதான் இன்றைய இலக்கிய உலகில் விமர்சகனுக்கான வரையறையாக இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் அந்த வரையறை வேலைக்காவதில்லை. புத்தகங்களைப் பற்றி படிக்கும்போதும் பேசும்போதும் அட நானும் இப்படி உணர்ந்தேன், நண்பேண்டா என்று அடிக்கடி தோன்றி இருக்கிறது. இல்லை, இவர்கள் சொல்லும் இந்தக் கோணம் எனக்கு இசைவுடையதாக இல்லை என்று அவ்வப்போது தோன்றி இருக்கிறது. சில சமயங்களில் என் எண்ணங்களை – நான் உணர்ந்தவற்றை, எனக்குத் தோன்றியவற்றை – கோர்வையாகத் தொகுத்துக் கொள்ள விமர்சனங்கள் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் என் அனுபவத்தில் சிறந்த வாசகர்களாக, வாசிப்பிற்கான தேடல் உள்ளவர்களாக நான் கருதும் ஜெயமோகன், எஸ்ரா, பாவண்ணன், சுஜாதா, வெ.சா., பாலாஜி, விசு, முத்துகிருஷ்ணன் போன்றவர்களால் கூட வெகு அபூர்வமாகவே நானாக உணராத ஒரு கோணத்தை எனக்கு புரிய வைக்க முடிந்திருக்கிறது.

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு கிடைக்கும் அனுபவத்தை, தரிசனங்களை அடுத்தவருக்கு புரிய வைப்பது மிகவும் சிரமம், almost impossible என்றே நான் சில வருஷங்களாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். சிலிகன் ஷெல்ஃப் கூட்டம் என்று அவ்வப்போது கூடி புத்தகங்களைப் பற்றி பேசும்போதெல்லாம் நம்முடைய வார்த்தைகளின் போதாமையைத்தான் உணர்ந்திருக்கிறேன். அது என்னுடைய குறையா, இல்லை இதுதான் எல்லாருடைய நிலையுமா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

வரையறைகளும் சட்டகங்களுக்கும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் பயன்பட்டால்; எது சரியான வாசிப்பு முறை என்பதை வரையறுப்பது உங்களுக்கு உதவியாக இருந்தால்; அதுதான் சரியான வழி என்று உங்களுக்குத் தோன்றினால்; அந்த அணுகுமுறையை பயன்படுத்துங்கள். அதாவது விமர்சகர்கள் சொல்வதில் உங்களுக்கு எது வேலைக்காகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள், மற்றவற்றை விட்டுவிடுங்கள், அவ்வளவுதான்.

இலக்கியத்தை கோட்பாடுகள், சட்டகங்கள் வைத்து பகுப்பது முற்றிலும் பயனற்ற வேலை என்று நான் சொல்ல வரவில்லை. ஒரு trivial, அற்பமான உதாரணம் – தலித் இலக்கியம் என்றோ, பிராந்திய இலக்கியம் என்றோ, பின் நவீனத்துவப் புத்தகம் என்றோ பின் குத்தப்பட்ட புத்தகம் (இதெல்லாம் இன்னும் வருகிறதா?) என்றோ அடையாளப்படுத்துவது நமது எதிர்பார்ப்புகளை ஓரளவு தீர்மானிக்கிறது. ஆனால் இதெல்லாம் ஒரு வசதிக்கு மட்டும்தான். உண்மையில் தலித் இலக்கியம் என்று எதுவும் இல்லை – தலித் பின்புலத்தை வைத்து எழுதப்பட்ட புத்தகம், இலக்கியத் தரம் வாய்ந்தது என்றுதான் சொல்ல முடியும்.

என் அணுகுமுறை க.நா.சு.வின் அணுகுமுறை, என் ரசனை ஜெயமோகனோடு பெரிதளவு ஒத்துப் போகிறது, அதனால் ஜெயமோகனின் பரிந்துரைகளும், பட்டியல்களும் எனக்கு முக்கியமானவை. அவ்வளவுதான் மேட்டர்.

நீங்கள் எப்படி? யாருடைய விமர்சனங்கள், பட்டியல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கின்றன? வரையறைகள், சட்டகங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கின்றனவா? யாரையாவது நல்ல விமர்சகர் என்று நினைக்கிறீர்களா?

பின்குறிப்பு: Wisdom of the crowds பிரச்சினையே இல்லாத அணுகுமுறை அல்ல. காலனிய ஆதிக்கம், இனக்குழுக்களின் அழிவு, அதிகம் தெரியாத மொழிகளில் எழுதப்படுதல் போன்ற காரணங்களால் நல்ல இலக்கியத்தை நாம் இழந்துவிடலாம்தான். தொன்மையான படைப்பு அல்லது ஒரு இனக்குழுவை, மொழியை, பண்பாட்டு இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பு போன்ற காரணங்களுக்காக தரம் குறைந்த படைப்புகள் சில சமயம் முன்வைக்கப்படலாம்தான். மனித இனத்தின் இயல்புக்காக நாம் தர வேண்டிய விலை இது.

அடுத்த பகுதி: க.நா.சு.வின் இலக்கிய விமர்சனப் பாணி

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம்

8 thoughts on “இலக்கிய விமர்சகனின் பணி

  1. ஜெயமோகனின் தளமும், உங்கள் தளமுமே எனக்கு பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கின்றது. எஸ்.ரா அவரை படிப்பது கொஞ்சம் அலர்ஜியாக இருக்கின்றது.

    கருத்துக்கள் வேறுபடலாம். பல தீவிரவாதிகளுக்கு, பொ.செ இலக்கியமே அல்ல, எனக்கு அது இலக்கியம்தான். முதன் முதலில் ஏழாவது படிக்கும் போது படித்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு, அதன் பின் எப்படியும் ஒரு இருபது முறையாவது படித்திருப்பேன். ஒவ்வொருமுறை அதை படிக்கும் போதும், ஒரு உற்சாகம், சந்தோஷம், மலர்ச்சி உண்டாகின்றது.

    அதை வேறு ஏதாவது ஒரு நாவலுடன் ஒப்பிடும் போதே விமர்சகனின் வேலை அங்கு வருகின்றது. பொ.செல்வனைத் வெண்முரசுடன் நான் ஒப்பிட்டால்? வெண்முரசை விட எனக்கு அதுதான் பெரிது என்னும் போது விமர்சகனின் தேவை உண்டாகின்றது.

    ஒவ்வொரு விமர்சகனும் அவரவர்க்கான அளவுகோலை வைத்திருக்கின்றார்கள்.

    நம் அளவுகோலுக்கு நெருக்கமான விமர்சகரை பின் தொடர வேண்டியதுதான்.

    Like

  2. // எஸ்.ரா அவரை படிப்பது கொஞ்சம் அலர்ஜியாக இருக்கின்றது. // ரெங்கா, நானும் எஸ்ராவை ரெகுலராக எல்லாம் படிப்பதில்லை. ஆனால் பல சமயங்களில் அவர் நல்ல படைப்புகளை அடையாளம் காட்டி இருக்கிறார்.

    Like

  3. ஒவ்வொரு வாசகனின் வாசிப்பனுபவம் என்பது அவரவர் வாசிப்பின் எல்லைக்கும், வாழ்க்கையின் அனுபவத்திற்கும் உட்பட்டது. எனவே அதையும் தாண்டி அறியும் விழைவோடு வாசிப்பவனே சிறந்த வாசகன். தன் சொந்த அனுபவத்தின் எல்லைகளைத் தாண்டும் துணிவுள்ளவனே மேலான படைப்புகளைக் கண்டுகொள்ள முடியும். அப்படித்துணியாதபோது ஏற்படும் நஷ்டம் வாசகனுக்கே தவிர படைப்புக்கு இல்லை.

    தன்னுடைய ‘நாவல்’ புத்தகத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் ‘கரமசாவ் சகோதரர்கள்’ பற்றிச் சொல்லும்போது, ”மூன்றாவது பக்கத்திலேயே தூக்கி வீசிவிடும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். ஆக அந்த மூன்றாவது பக்கத்திலேயே வீசப்பட்ட வாசகன், ‘சீசீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று ஓதுங்கிக்கொள்வானெனில் அவன் நல்ல வாசகனா அல்லது நல்ல வாசகன் இல்லையா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலில் எதை ஒருவன் தேர்கிறானோ அதைப்பொருத்தே அவன் நல்ல வாசகனாவதும் நல்ல வாசகனாக ஆகாமற்வோதும் நடக்கிறது.

    வாசிப்பு என்பது சாகசமும் சவாலும் நிறைந்தது. அந்த சாவாலை எதிர்கொண்டு சமாளிக்கும் துணிவு கொண்டவனே நல்ல வாசகன் மாறாக, ஒதுங்கி நிற்பவனல்ல. அப்படி ஒதுங்கி நிற்பவன் தன் அனுபவங்களின் எல்லையைக் கடந்து செல்லும் திராணியற்றவன். அவனால் ஒருபோதும் மேலான படைப்புகளை நெருங்க முடியாது. விஷ்ணுபுரம் முன்னுரையில், “எந்தப் படைப்பின் முகப்பிலும் எழுத்தாளனின் மௌன வேண்டுகோள் ஒன்று உள்ளது –தயவு செய்து கவனமாகப் படியுங்கள்” என்று ஜெயமோகன் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. அப்படிக் கவனமாகப் படித்து தன் வாசிப்பின் எல்லைகளை விஸ்தரிக்கும் வல்லமை கொண்டவனே நல்ல வாசகன்.

    நாம் முன்னரே அறிந்தவற்றையும் தெரிந்தவற்றையும் மீண்டும் மீண்டும் வாசிப்பதில் அர்த்தமில்லை. பழக்கத்தின் பாசிகளுக்கும் அப்பால் தன் வாசிப்பின் பயணத்தை மேற்கொள்ளும் திறன் கொண்டவனே நல்ல வாசகன்.

    Like

    1. கேசவமணி, என்ன ரொம்ப நாளாக ஆளையே காணோம்?

      தூக்கி வீசுபவன் நல்ல வாசகன் இல்லையா என்ற கேள்வியை விட ‘நல்ல’ வாசகன், ‘மோசமான’ வாசகன் என்ற பாகுபாடே ஒரு அளவுக்கு மேல் செல்லுமா என்றுதான் எனக்கு கேள்வி…

      Like

    1. கேசவமணி, // வணிக எழுத்து, இலக்கியம் என்ற பாகுபாடு உள்ளவரை உங்கள் கேள்வியும் செல்லுபடியாகும் // அப்ப விடையே கிடையாதா?

      Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.