எம்.வி. வெங்கட்ராம்

mv. venkatramதற்செயலாக எம்விவி சாஹித்ய அகாடமி பரிசு பெற்றபோது நிகழ்த்திய ஏற்புரையை ஆபிதீனின் வலைப்பதிவில் பார்த்தேன்.
அதிலிருந்து சில வரிகள்:

வாசகர்களையும் விமரிசகர்களையும் பற்றிச் சிறிதும் கவலைப்படாத இலக்கியப் படைப்பாளி நான். என்னைப் புரிந்துகொண்டு, நான் எங்கு இருக்கிறேன் என்பதைக் கண்டுபிடித்து, என் படைப்புகளைச் சுவைத்துப் போற்றுகிற ரசிகர்களை நான் போற்றுகிறேன். ஒரு லட்சம் பேர் கை தட்டியதால் என் இலக்கியப்பணி வளரவில்லை. ஒரு சில ரசிகர்களால் என் படைப்பாற்றல் வலுப்பெறுகிறது.

நல்ல எழுத்தாளன் தனக்காகத்தான் எழுதுகிறான், அதை யாராவது புரிந்து கொண்டால் அது அவனுக்கு போனஸ் என்றுதான் நான் நினைக்கிறேன். (தனக்காக எழுதுபவர்கள் எல்லாரும் நல்ல எழுத்தாளர்கள் என்று பொருள் கொள்ளாதீர்கள், நான் கூட அடுத்தவர்களுக்காக எழுதுவதில்லை, எனக்காகத்தான் எழுதுகிறேன்.) எம்விவியும் அப்படியே உணர்வதில் ஒரு சின்ன சந்தோஷம்!

அப்படியே எம்விவி பற்றி இணையத்தில் தேடினேன். சில நல்ல கட்டுரைகள் கிடைத்தன. சில விவரங்களும் தெரிந்து கொண்டேன். சுட்டிகள், சிறுகுறிப்புகள் கீழே.

எம்விவி 1920-இல் பிறந்து நிறைவாழ்க்கை வாழ்ந்து 2000த்தில் மறைந்திருக்கிறார். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சௌராஷ்டிரர். பட்டு நெசவுத் தொழில். ஆனால் பணத்தை எல்லாம் வெகு விரைவில் கோட்டைவிட்டுவிட்டு கஷ்டப்பட்டுதான் வாழ்நாளைக் கழித்திருக்கிறார். பணத் தேவைகளுக்காக பல வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்களுக்காக எழுதி இருக்கிறார். ஜெயமோகனின் அறம் சீரிசின் முதல் கதையான அறம் அவர் பணக் கஷ்டங்களைத்தான் சித்தரிக்கிறது.

தஞ்சாவூர் மாவட்ட எழுத்தாளர். கரிச்சான் குஞ்சு, தி.ஜா., மற்றும் இவரை கு.ப.ரா.வின் சிஷ்யப் பரம்பரை என்று சொல்வார்களாம்.

நித்யகன்னி, இருட்டு, உயிரின் யாத்திரை, அரும்பு, ஒரு பெண் போராடுகிறாள், வேள்வித் தீ, காதுகள் என்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.

நித்யகன்னி என் அம்மா ரொம்ப நாளாக – என் பள்ளிப் பருவத்திலிருந்தே – பரிந்துரைத்த புத்தகம், தலை வழுக்கையான பிறகுதான் படிக்க முடிந்தது. சிறந்த புத்தகம்தான் ஆனால் என் அம்மா கொடுத்த ஓவர் பில்டப்போ என்னவோ, நான் எதிர்பார்த்த அளவு இல்லை. ஜெயமோகன் இதை சிறந்த தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலிலும் எஸ்ரா சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் வைக்கிறார்கள். நித்யகன்னி பற்றி எம்விவியே சொல்வது:

அக்கதையின் கருவை மகாபாரதத்திலிருந்து எடுத்தேன். ‘பெண் விடுதலை’ என்னும் பீஜத்தை அதில் நான் வைத்தேன். பலப்பல நூற்றாண்டுகளாய்த் தெரிந்தோ தெரியாமலோ, ஆண் வர்க்கம் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமையை அதில் நான் விசாரிக்கிறேன். இன்று பெண் விடுதலை பற்றி நிறையப் பேசுகிறோம். எழுதுகிறோம். சட்டங்கள் இயற்றியுள்ளார்கள். ஆண் மனோபாவம் மாற வேண்டும் என்கிறோம்; நியாயம்தான். பெண் மனோபாவம் மாறியுள்ளதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

வேள்வித்தீ வாசகர் வட்டத்துக்காக எழுதப்பட்டது. இதைப் பற்றி எம்விவி சொல்வது:

திருமண பந்தத்தை மீறி ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்வது பாவம் என்கிறார்கள். ஆனால், இம்மாதிரி உடலுறவு சோகத்தை சுகமாக்கும் சாதனமாகச் சிலருக்கு, பெண் ஆண் இருபாலருக்கும் உதவுகிறது என்பதை ‘வேள்வித்தீ’ என்கிற என் நாவலில் சுட்டிக் காட்டினேன். பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையை இந்த நாவல் வருணிக்கிறது. கல்வியறிவு உள்ளவர்களுக்கு விதிக்கப்படும் ஒழுக்கக் கட்டுப்பாடு, அறியாமை வயப்பட்ட மக்களுக்குப் பொருந்தாது என்பதையும் இந்த நாவல் வலியுறுத்துகிறது.

“ஒரு பெண் போராடுகிறாள்” பற்றி எம்விவி சொல்வது:

எந்த உடல் நலனும் குணநலனும் உள்ள கணவனும் மனைவியும் மானத்தைக் காத்துக்கொள்வதற்காக, எதிரிகளோடு போரிட்டு மடிவதை, ‘ஒரு பெண் போராடுகிறாள்’ என்னும் நாவலில் சித்தரிக்கிறேன்.

காதுகள் புத்தகத்துக்காக சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் semi-autobiographical எழுத்து. அதைப் பற்றி எம்விவியே சொல்வது:

அகாதெமி விருது பெறும் ‘காதுகள்’ என்கிற என் நாவல் என் வாழ்க்கை வரலாற்றில் ஒரு சிறிய பகுதி. என் வாழ்க்கை உங்கள் வாழ்க்கை போன்றது அல்ல என்பதே இதன் தனித்தன்மை. பகுத்தறிவையும் அறிவியலையும் நம்புகிறவர்களுக்கு அது திகைப்பு தருகிறது. அதற்கு நான் என்ன செய்ய?

இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தான். அவனுக்கு 36, 37 வயதாகும்போது திடீரென்று உள்ளிருந்தும், வெட்ட வெளியிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின; ஆபாசமாகவும், பயங்கரமாகவும் 24 மணி நேரமும் கத்திக்கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்து கற்பனை கூடச் செய்யமுடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்ந்திருந்தன.

மகாலிங்கம் நிலை குலைந்தான். ஆனால், அவனுடைய புத்தியோ ‘நான்’ என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. தன்னுள்ளும் தன்னைச் சுற்றிலும் நிகழ்வதை ஒரு சாட்சியாக இருந்து கவனித்து வந்தான். அவன் ஒரு எளிய பக்தன்; திருமுருகன் என்னும் தெய்வத்தையே குருவாக வரித்துக்கொண்டவன். அருவருப்பு தரும் உருவங்கள் ஆபாசமான சொற்களை உமிழ்வதைச் சகிக்க முடியாமல் அவ்வப்போது தன் இஷ்ட தேவதையின் உருவப்படத்தின் முன்னிலையில் சென்று முறையிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இல்லை.

தாமச சக்தி தன்னைக் காளி என்று கூறிக்கொண்டது. மகாலிங்கம் முருகனை வழிபடக்கூடாது என்றும் தன்னைத்தான் வழிபடவேண்டும் என்பது தாமசத்தின் மையக்கருத்து. இந்தக் கருத்தை மகாலிங்கம் ஏற்கவேண்டும் என்பதற்காகவே பல பயங்கரமான அருவருப்பு தருகிற பிரமைக் காட்சிகளை அலை அலையாகத் தோற்றுவித்தபடி இருந்தது.

இந்த அனுபவம் தொடங்கியதைத் தொடர்ந்து அவனுடைய செல்வமும் செல்வாக்கும் சரிந்தன; வறுமையும் அவன் கால்களைக் கவ்விக்கொண்டது. சுமார் 20 ஆண்டுகள் இந்த அதிசுந்தரமான, அதிபயங்கரமான அனுபவம் நீடித்தது. அமானுஷியமான தமஸ்ஸும், அதிமானுஷ்யமான சத்துவமும் தன்னுடைய அகத்திலும் புறத்திலும் நடத்தும் போராட்டத்தை உதாசீனம் செய்துகொண்டு அவன் சில நாவல்களும், குறுநாவல்களும், பல சிறுகதைகளும் எழுதினான். ஏராளமான மொழிபெயர்ப்புகள், ஐம்பதுக்கும் அதிகமான வாழ்க்கை வரலாறுகள், பல பொதுஅறிவு நூல்களையும் எழுதிக் குவித்தான்.

தாமச சக்தியின் தாக்குதலில் ஆரம்பித்த ‘காதுகள்’ என்னும் நாவல் அதை வென்று ஒழிக்க வல்ல சத்துவ சக்தியின் தோற்றத்தோடு முடிவு பெறுகிறது. தேடல் தொடருகிறது.

பல சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவரது “பைத்தியக்காரப் பிள்ளை” உலகின் தலை சிறந்த சிறுகதைகளில் ஒன்று. ஜெயமோகன் இதை தன் seminal பட்டியலில் வைக்கிறார். எஸ்ராவின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலிலும் இது இடம் பெறுகிறது. எனக்குப் பிடித்த இன்னொரு சிறுகதை “பெட்கி“. இணையத்தில் கிடக்கவில்லை. “தெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை” சிறுகதையை இங்கே படிக்கலாம். அவரது சிறுகதை ஒன்றை எஸ்.ரா. இங்கே சிலாகிக்கிறார்.


சுட்டிகள்:

எம்விவியும் தி.ஜா.வும் நெருங்கிய நண்பர்கள். எம்விவியே மோகமுள்ளில் ஒரு பாத்திரமாக வருகிறாராம். (யாரென்று படித்தபோது எனக்குத் தெரியாது.) தங்கள் நட்பைப் பற்றி எம்விவியே இங்கே எழுதி இருப்பதைத் தவற விடாதீர்கள்!

எம்விவியின் ஒரு நீண்ட பேட்டியை இங்கே ஆபிதீன் பதித்திருக்கிறார், இதையும் தவற விடாதீர்கள்!

ரவி சுப்ரமணியன் அவரை இங்கே நினைவு கூர்கிறார், இதையும் தவற விடாதீர்கள்!

எம்விவியைப் பற்றி தினமணியில் ஒரு கட்டுரை

எம்விவிக்கு மரியாதை செலுத்த எம்விவியின் மகனை சந்தித்தது பற்றி மணி.செந்தில் இங்கே எழுதி இருப்பது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஏன் எழுத ஆரம்பித்தேன், தன் எழுத்து முறை ஆகியவற்றைப் பற்றி அவர் நினைவு கூர்வதை இங்கே படிக்கலாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: எம்விவி பக்கம்