அஞ்சலை பற்றி கண்மணி குணசேகரன்

kanmani_gunasekaranகட்டுரைக்காக மீண்டும் ஹிந்து (தமிழ்) பத்திரிகைக்கு நன்றி!

1994-ம் ஆண்டுக் காலகட்டத்தில் எனது முதல் கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அப்போது எங்கள் பகுதிகளில் கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்கள்தான் பயிரிடுவோம். அந்தக் காலகட்டத்தில் எங்கள் நிலத்தில் களை வெட்ட வந்த பெண்தான் இந்த நாவலின் நாயகி. அப்படி வந்த அவள் அங்கே தன் கதையைப் பகிர்ந்துகொண்டுள்ளாள். அந்தப் பெண் விருத்தாச்சலம் அருகே கார்கூடலில் பிறந்தவள்.

கஷ்டப்பட்ட பின்னணி. அவளை அக்காவின் கணவர் திருமணம் முடிக்க முயல்கிறான். இந்தச் சமயத்தில் மணக்கொல்லையில் இருந்து அவளுக்கு ஒரு வரன் வருகிறது. அவன் கூத்தில் மத்தளம் அடிக்கிறவன். அவனை அஞ்சலைக்கும் பிடித்துவிடுகிறது. சம்மதித்துவிடுகிறாள். ஆனால் திருமண மேடையில் பார்த்தால் மணமகனாக வேறு ஒருவன் இருக்கிறான். அவன் மாப்பிள்ளையாகப் பெண் பார்க்க வந்தவனின் அண்ணன். லட்சணம் இல்லாதவன். ஆனால் எல்லோரும் சமாதனம் சொல்ல வேறு வழியில்லாமல் அந்தப் பெண் அவனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள்.

இதற்கிடையில் தனக்கு நேர்ந்த இந்த நிலைக்கு தன்னைப் பெண் பார்க்க வந்தவன் காரணம் என அவன் எதிர்ப்படும் வேளைகளில் எல்லாம் குறை சொல்லிக்கொண்டிருக்கிறாள். அவனோ ஏற்கனவே மணமானவன். அவனது மனைவிக்கு அஞ்சலையின் இந்தச் செயல் பிடிக்கவில்லை. வீட்டுக்குள் பிரச்சினை வருகிறது. அவள் கதை இப்படிப் போகிறது.

அவளது இந்தக் கதையைக் கேட்ட எங்களுக்குத் தெரிந்த பெண், “உன் கதையைச் சின்னத்தம்பியிடம் சொன்னால் கதையாக எழுதும்” எனச் சொல்லியிருக்கிறாள். ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டு ஒரு தொகையைச் செலவழித்திருந்ததால் மீண்டும் ஒரு செலவுக்கு நான் தயாராக இல்லை. ஆனால் அதற்குச் சில ஆண்டுகள் கழித்து 97-ம் ஆண்டு வாக்கில் அவள் கதையை எழுதத் தீர்மானித்தேன்.

இந்த நாவலின் உள்ள சம்பவங்கள் எல்லாம் நிஜத்தில் நடந்தவையே. சில சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளேன். உதாரணமாக அஞ்சலை பிறந்த இடம் நஞ்சை நிலப் பகுதி. அவள் வாழ்க்கைப்பட்ட இடம் முந்திரிக்காட்டுப் பகுதி. இவை இரண்டையும் நிஜத்தில் உள்ளபடியே விவரித்துள்ளேன். தன் அக்காவின் கொழுந்தனுடன் அவள் இணைந்து வாழ்ந்த பகுதி உண்மையில் திருமுட்டம்.

ஆனால் அந்தப் பகுதி எனக்குப் பரிச்சயம் கிடையாது. அதனால் தொளார் என்னும் ஊரைத் தேர்ந்தெடுத்தேன். தென்னாடம் சர்க்கரை ஆலைக்கு அருகில் உள்ள இந்த ஊரில் எனக்குச் சொந்தக்காரர்கள் உண்டு. அது கரும்புக் காட்டுப் பகுதி. எனக்கும் தெரிந்த பகுதி என்பதாலும் நாவலுக்கும் புதிய வண்ணம் கிடைக்கும் என்பதாலும் அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன்.

முதலில் இந்தப் புத்தகத்தை 1999 குறிஞ்சிப்பாடியில் உள்ள மணியம் பதிப்பகம் மூலம் வெளியிட்டேன். அதன் பிறகுதான் ‘தமிழினி’ வசந்தகுமாரிடம் இந்தப் புத்தகத்தை வாசித்துப் பார்க்கச் சொன்னேன். அவர் நாவலின் சில பலவீனமான பகுதிகளைச் சுட்டிக் கட்டினார். எழுத்தாளர் வ.கீதா இந்த நாவலைப் படித்துவிட்டு முக்கியமான கேள்வியை எழுப்பினார்.

இந்த நாவலில் காலகட்டம் பதிவாகவில்லை என்றார். நாவலில் எங்கே காலத்தைக் காட்டலாம் என யோசித்தபோது நாவல் நிகழும் 1987-ல்தான் எம்.ஜி.ஆர். இறந்திருக்கிறார்; அதைக் குறிப்பாக வைத்துக் காலத்தைக் காட்டலாம் என வசந்தகுமார் சொன்னார். பிறகு அஞ்சலையின் கல்யாணப் பத்திரிகையை அவளே வாசிக்கும் ஒரு காட்சி வருகிறது. அந்த இடத்தில் வைக்கலாம் என அவரே யோசனை சொன்னார்.

அந்த வருடத்துக்கான தமிழ் மாதத்தை ஜோசியரிடம் குறித்து வாங்கிச் சேர்த்தோம். அஞ்சலை நாவல் ‘தமிழினி’ வழியாக இரண்டாம் பதிப்புக் கண்டபோதுதான் பரவலான கவனம் பெற்றது.

தொகுக்கப்பட்ட பக்கம்: கண்மணி குணசேகரன் பக்கம்