தமிழறிஞர் வரிசை 10 – சீனி. வேங்கடசாமி

seeni_venkatasamiசீனி. வேங்கடசாமி சென்னையில் உள்ள மயிலாப்பூரில் சீனிவாச நாயக்கருக்கும் தாயார் அம்மாளுக்கும் 16-12-1900-இல் பிறந்தார். இவரது குடும்பம் பாரம்பரியமாக சித்த வைத்தியம் செய்து வந்திருக்கிறது. இவருடைய தம்பி சீனி. கோவிந்தராஜனும் தமிழ் ஆராய்ச்சியாளர்தான். வேங்கடசாமி முதலில் தமிழ் படித்ததே தன் தம்பியிடம்தான். பிறகு மஹாவித்வான் சண்முகம் பிள்ளை, சென்னை கிறித்துவக் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ச.த. சற்குணம் ஆகியோரிடம் படித்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. தத்தெடுத்து வளர்த்த இரு குழந்தைகளும் இறந்தன. 1980-இல் மறைந்தார்.

முப்பத்து சொச்சம் நூல்களை எழுதியுள்ளார். இவற்றைத் தவிர பல கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.
எழுதிய நூல்கள்:

 1. மறைந்து போன தமிழ் நூல்கள்
 2. கிறித்தவமும் தமிழும்
 3. பௌத்தமும் தமிழும்
 4. சமணமும் தமிழும்
 5. மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
 6. சமயங்கள் வளர்த்த தமிழ்
 7. பௌத்தக் கதைகள்
 8. புத்தர் ஜாதகக் கதைகள்
 9. இசைவாணர் கதைகள்
 10. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
 11. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 12. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
 13. கொங்கு நாட்டு வரலாறு
 14. துளு நாட்டு வரலாறு
 15. மகேந்திரவர்மன்
 16. நரசிம்மவர்மன்
 17. மூன்றாம் நந்திவர்மன்
 18. பழங்காலத் தமிழர் வாணிகம்
 19. சாசனச் செய்யுள் மஞ்சரி
 20. களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
 21. சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
 22. சேரன் செங்குட்டுவன்
 23. பாண்டியர் வரலாற்றில் ஓர் அரிய புதிய செய்தி
 24. அஞ்சிறைத் தும்பி
 25. சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்

குழந்தைகள் இறந்த துக்கத்தை மறக்க புத்தகப் படிப்பில் ஆழ்ந்து ஈடுபட்டார். அப்போது படித்த புத்தகங்களில் ஒன்று “யாப்பருங்கல விருத்தி”. அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த பல நூல்கள் அழிந்து போயிருந்ததை உணர்ந்தார். அதனால் எழுதப்பட்டதுதான் “மறைந்து போன தமிழ் நூல்கள்“. சங்கப் பாடல்களில் துளு நாடு பற்றி கிடைக்கும் தகவல்களை எல்லாம் முறையாகத் தொகுத்து “துளு நாட்டு வரலாறு” என்ற நூலை எழுதினார். தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கி இருக்கிறது.

வேங்கடசாமி தமிழக வரலாற்றில் ஹிந்து மதம் தவிர்த்த பிற மதங்களின் தாக்கம் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். களப்பிரர்களும் தமிழர்களே என்று வலிமையான வாதங்களை முன்வைக்கிறாராம். அவரது ஆய்வுகளின் மூலங்கள் கல்வெட்டுக்கள், மற்றும் சங்க இலக்கியங்கள் என்று தெரிகிறது. ஆனால் அவரது முக்கியமான பங்களிப்பு என்ன, அவரது எந்த நூல்கள் இன்றும் முக்கியமானவை என்பதெல்லாம் பற்றி எதுவும் தெரியவில்லை. இணையத்தில் கிடைக்கும் புகழாரங்களால் தேடல் உள்ளவர்களுக்கு எந்தப் பயனுமில்லை. இவற்றைப் பற்றி தெரிந்திருந்தாலோ, அவரது புத்தகங்களை படித்திருந்தாலோ கட்டாயமாக மறுமொழி எழுதுங்கள்!

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழறிஞர்கள்