ஜெயமோகன், பிஏகேவைப் பற்றி நமக்கென்ன?

பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சிக்காக முதலில் தயார் செய்த உரை இதுதான். பழைய பஞ்சாங்கங்களைக் கிளறியபோது கிடைத்தது. அதை முடித்து பதித்திருக்கிறேன்.


இன்று விடுமுறை நாள். நல்ல மதிய நேரம். பிள்ளைகளுக்கு பள்ளி இல்லை. அவர்களை அழைத்துக் கொண்டு வெளியே எங்காவது சுற்றாமல் இங்கே ஏன் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்? ஜெயமோகனுக்கும் பிஏகேவுக்கும் நம் வாழ்க்கையில் என்ன முக்கியத்துவம்?

குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால் மிகவும் தெளிவான விடை இருக்கிறது. இருவரும் இலக்கியத்தில் – தமிழ்/இந்திய/உலக இலக்கியத்தில் ஆழ்ந்து அனுபவித்தவர்கள். நமது பண்பாட்டுப் பின்புலத்தை நன்றாக உணர்ந்தவர்கள். அனுபவ அறிவு நிறைந்தவர்கள். மனித வாழ்க்கையை – அதன் சிகரங்களை, வீழ்ச்சிகளை நன்கறிந்தவர்கள். அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் சுவாரசியமாக பேச்சிலும் எழுத்திலும் கொண்டு வரக் கூடியவர்கள். அதனால் இந்த பின்மதியப் பொழுது சுவாரசியமாகக் கழியும் என்று எதிர்பார்க்கலாம். பற்றாக்குறைக்கு தேனீரும் சமோசாவும் வேறு கிடைக்கின்றன.

கண்ணோட்டத்தை கொஞ்சம் விரிவாக்கினால் இலக்கியத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும் நம் வாழ்வில் என்ன இடம் என்ற கேள்வி எழுகிறது.

எதற்காக நாம் இலக்கியத்தைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்? இலக்கியம் படிப்பதனால் நமக்கு எந்த லாபமுமில்லை, சம்பளம் உயரப் போவதில்லை, வேலை உயர்வு கிடைக்கப் போவதில்லை, வீட்டுக்கடன் தீரப் போவதில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் நஷ்டம்தான். அந்த நேரத்தில் ரொம்ப நாளாக தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் வேலைகளை செய்யலாம். உடல் இளைக்க ஒரு வாக் போகலாம். இங்கே இரண்டு மணி நேரம் செலவழித்து என்னத்தை பெறப் போகிறோம்?

இன்று இங்கே வந்திருக்கும் பெரும்பான்மையினர் – என்னையும் சேர்த்து – மத்திய வர்க்கப் பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான். இன்று குறைந்தபட்சம் உயர் மத்திய தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறோம். அனேகமாக நம் பெற்றோர்களை விட சௌகரியமான வாழ்க்கையை அடைந்துவிட்டோம். வாழ்வில் லௌகீக ரீதியாக ஓரளவாவது வெற்றி அடைந்துவிட்டோம். பெரும்பாலானவர்களுக்கு செய்யும் பணியும் வாழ்விற்கு ருசி சேர்க்கிறது. ஏறக்குறைய அனைவருக்குமே குடும்பமும் குழந்தைகளும் வாழ்க்கையை பொருள் உள்ளவையாக செய்கின்றன.

ஆனால் இப்போது மாஸ்லோவின் Theory of Needs வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். கணிசமானவர்கள் மீண்டும் மீண்டும் அதே தினத்தை வாழ்வது போல – தினமும் மூன்று வேளையும் கத்தரிக்காய் பொரியலையே சாப்பிடுவது போல – உணர ஆரம்பிக்கிறோம். டி.எஸ். எலியட் சொன்னது போல

Here we go round the prickly pear
Prickly pear prickly pear
Here we go round the prickly pear
At five o’clock in the morning

என்று நித்தநித்தம் எதற்காக ஓடுகிறோம் என்பதைக் கூட புரிந்து கொள்ள நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். அலுவலக டென்ஷன்கள், பிள்ளைகளின் படிப்பு, பணச்சிக்கல்கள், ஏற்றுக் கொண்ட பொறுப்புகளின் சுமைகள் – இவற்றின் எடை நம்மை அழுத்த ஆரம்பிக்கிறது. நம்மில் சிலராவது இது என்ன வாழ்க்கை என்று அலுத்துக் கொள்கிறோம், வாழ்வு வெறுமையாகக் கூடும் என்பது நம்மை பயமுறுத்த ஆரம்பிக்கிறது. சிலருக்கு midlife crisis ஆக மாறுகிறது.

ஆனால் இலக்கியமோ முடிவில்லாத சுவை கொண்டது. ஒவ்வொரு புத்தகத்திலும் புதிய தரிசனங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. காந்தி இறந்து அறுபத்தைந்து வருஷம் ஆகிவிட்டாலும் அந்த மாமனிதருக்கு அருகே செல்ல கலங்கிய நதியில் நீந்திப் போகலாம். மிகச் சுலபமாக ஆறு உலகத்தைக் கடந்து ஏழாம் உலகத்துக்கே சென்று நம்மில் எவருக்கும் பரிச்சயம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் வாழும் மனிதர்களை – இல்லை இல்லை உருப்படிகளை – பக்கத்தில் சென்று பார்க்க முடியும். மீண்டும் மீண்டும் புதிய புதிய உலகங்களைக் காட்டிக் கொண்டே இருப்பது இன்று இரண்டுதான் – இலக்கியமும் சினிமாவும். இத்தனை சுகத்தை, சுவாரசியத்தை வேறு எங்கு பெற முடியும்?

அதுவும் மனித இனத்துக்கு கதைகளில் இருக்கும் ஆர்வம் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று. மூவாயிரம் நாலாயிரம் வருஷங்களில் நம் கூட்டுத் தேர்வுகள் – wisdom of the crowds – உயர்தரமான படைப்புகளை மட்டும்தான் இன்றும் இலக்கியம் என்று அடையாளம் காட்டுகின்றன. அதனால் கண்டதையும் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். மகாபாரதமும் ஈடிபஸ் ரெக்சும் ஷேக்ஸ்பியரும் டால்ஸ்டாயும் மனித இனத்தின் சொத்துக்கள். இலக்கியத்தை படிப்பதில் ஒரு விதத்தில் நஷ்டம்தான் என்று முன்னால் சொன்னேன். ஆனால் இந்த சொத்துக்களை அனுபவிக்காமல் போனால் நமக்கு நஷ்டம்தான். வானவில்லையோ, காலையில் பூத்திருக்கும் பவழமல்லி மலர்களையோ, சூரியோதயத்தையோ, நயாகராவில் கொட்டும் நீரையோ, மாமல்லபுரத்து மஹிஷன் சிற்பத்தையோ, சிஸ்டைன் chapel-இன் கூரையில் விரல் நீட்டும் முதல் மனிதனையோ பார்க்கும்போது; ஐந்தாவது சிம்ஃப்னியையோ, இமாஜின்/தில்-ஏ-நாதான்/எந்தரோ மஹானுபாவுலு/இது ஒரு பொன்மாலைப் பொழுது போன்ற பாட்டுகளைக் கேட்கும்போது; மும்பையின் முதல் பருவ அடைமழையில் ஆடிக் கொண்டே நனையும்போது; நம் இரண்டு வயதுக் குழந்தை நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்க்கும்போது; மனம் விம்மி விரியும் அனுபவத்துக்கு எந்த வகையில் குறைந்ததல்ல நல்ல இலக்கியத்தைப் படிக்கும்போது ஏற்படும் அனுபவம். அதுவும் உங்களுக்கான இலக்கியத்தை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது, உங்கள் உணர்வுகளை நீங்களே தரிசிக்கும்போது ஏற்படும் சுகானுபவத்தை விவரிக்க முயல்வது வார்த்தைகளின் போதாமையைத்தான் காட்டப் போகிறது.

சரி என்ன காரணத்தாலோ இலக்கியத்தில் ஆர்வம் இருக்கிறது, புத்தகம் படிக்கிறோம். விஷ்ணுபுரத்தையோ, புலிநகக் கொன்றையையோ அறம் சிறுகதைகளையோ கலங்கிய நதியையோ வெண்முரசையோ படிக்கும்போது நம்மில் சிலராவது மெய்சிலிர்க்கிறோம். நம் வாழ்வில் ஏதோ தாக்கம் கூட ஏற்படலாம். ஆனால் எழுதியவரைப் பற்றி நமக்கென்ன? புத்தகத்தைப் படிப்பதை விட்டுவிட்டு இங்கே எதற்காக உட்கார்ந்திருக்கிறோம்? மனிதர்களுக்கு இயற்கையாக இருக்கும் ஒரு பிரபலத்தைப் பார்க்கும், அவர் பேசுவதைக் கேட்கும் ஆசை மட்டும்தானா? முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னால் எம்ஜிஆரைப் பார்க்கப் போனவர்களுக்கு இருந்த காரணங்கள்தானா?

jeyamohanஎன் கண்ணில் இலக்கியவாதிகள் மற்ற பிரபலங்களிடமிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருந்தாலும் சரிதான்; நன்றாக பேசத் தெரியவில்லை என்றாலும் சரிதான். குறைந்தபட்சம் நம் மனதில் அவர்கள் படைப்புகளைப் பற்றி கலைந்து கிடக்கும் எண்ணங்களை அவர்களிடம் பேசித் தொகுத்துக் கொள்ள முடியும். அவர்கள் படைப்புகளைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நமக்கே மொழிபெயர்த்துச் சொல்லி தெளிவாக்கிவிடுவார்கள்.

நம் அதிர்ஷ்டம் ஜெயமோகன், பி.ஏ.கே. இருவருக்கு கூச்ச சுபாவத்துக்கும் வெகு தூரம். பார்த்த இரண்டாவது நிமிஷத்தில் வெகு சகஜமாக பேசுபவர்கள். பேசத் தெரிந்தவர்கள். எண்ணங்களை, கருத்துக்களை அழகாக தொகுத்துச் சொல்லக் கூடியவர்கள். மற்றவர் கருத்துக்களை காது கொடுத்துக் கேட்டு அதை ஒட்டியும் வெட்டியும் வாதிடுபவர்கள். அதனால் இரண்டு மணி நேரம் விரயம் ஆகாது என்பது நிச்சயம்.

p_a_krishnanஇது வெறும் சம்பிரதாய மேடைப் புகழ்ச்சி அல்ல. ஐந்தாறு வருஷங்கள் முன்னால் ஜெயமோகன் இங்கே வந்திருந்தபோது அவரை சந்திக்க நான் நிறையவே தயங்கினேன். ஒரு வயதுக்கு மேல் புதியவர்களை சந்திப்பது, பழகுவது கொஞ்சம் கஷ்டம்தான். மேலும் சந்தித்து அவரிடம் என்ன பேசுவது? விஷ்ணுபுரம் ஒரு மாபெரும் சாதனை என்றா? அது நான் சொல்லியா தெரிய வேண்டும்? அவரை சந்திக்கும் நேரத்தில் இன்னும் நூறு பக்கமாவது படிக்கலாம் என்று தோன்றியது. ஆனால் சந்தித்த இரண்டாம் நிமிஷத்தில் ஏதோ வெகு காலமாகப் பழகிய பழைய நண்பரைப் பார்ப்பது போலத்தான் உணர்ந்தேன். இலக்கியத்தில் ஆர்வம் இல்லாதவர்களைக் கூட இழுத்து வைத்து அவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையில் பேசுவதில் ஜெயமோகன் மன்னர்தான். அதற்குப் பிறகு எழுத்தாளர்களை மிஸ் செய்வதில்லை. அவர்களிலும் பிஏகேவும் நாஞ்சிலும்தான் மனதுக்கு மிக நெருக்கமானவர்களாக அமைந்திருக்கிறார்கள்.

இதற்கு மேலும் பேசினால் அடி விழலாம். அதனால் கடைசியாக என் மகள் ஸ்ரேயாவுக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன். என்ன பேசுவது, இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கு என்ன தேவை என்ற மாதிரி கேள்விகள் எழும்போதெல்லாம் அவளைத்தான் கேட்பேன். அதுவும் காரில் போகும்போது வரும்போதுதான், அப்போதுதான் அவள் தப்பிக்க வாய்ப்பே இல்லை. ஸ்ரேயா சொன்ன வார்த்தைகள்தான் – literature is fun, it shows me an alternate reality, I can observe what goes on when people face problems – இந்த உரையின் ஊற்றுக்கண். நன்றி, ஸ்ரேயா!

தொகுக்கப்பட்ட பக்கம்: இலக்கிய விமர்சனம், ஜெயமோகன் பக்கம், பி.ஏ.கே. பக்கம்