தடை செய்யப்பட்ட முதல் “ஆபாசப் புத்தகம்”

கண்ணில் பட்ட ஒரு சுவாரசியமான, பழைய கட்டுரை.

இந்திய பீனல் கோட் சட்டத்தின்படி முதலில் தடை செய்யப்பட்ட புத்தகம் ஒரு தெலுகுப் புத்தகமாம். ராதிகா சந்த்வனமு என்று பேர். தஞ்சை மராத்திய அரசர் பிரதாப் சிங்கின் அவை தாசி முத்துப்பழனி பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதியது. கிருஷ்ணன் மீது கோபம் கொண்ட ராதா, ராதாவை சமாதானப்படுத்தும் கிருஷ்ணன் என்பதுதான் புத்தகத்தின் தளம். ராதா கலவியை முன்னின்று நடத்துவது போல வருகிறதாம்.

bangalore_nagarathnammaநூறு வருஷங்களுக்கு மேல் ஓடிப் போன பிறகு சி.பி. ப்ரவுன் என்ற ஆங்கிலேயர் இதை புத்தகமாகப் வெளியிட்டிருக்கிறார். இங்கே கொஞ்சம் குழப்பம் – ப்ரவுன் 1884-இல் இறந்திருக்கிறார், புத்தகமோ 1887-இல் வெளிவந்ததாம். புத்தகம் ரெடியாகி, ஆனால் வெளிவருவதற்கு முன் இறந்துவிட்டார் போலிருக்கிறது. வீரேசலிங்கம் பந்துலு அப்படி ரெடியானவற்றைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. பந்துலு முத்துபழனியின் நடையை புகழ்ந்தாலும் இதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி, ‘தேவடியாள்’ எழுதியது இப்படித்தான் இருக்கும் என்று எச்சரிக்கை கொடுத்திருக்கிறாராம். பிறகு மீண்டும் வெங்கடநரசு என்பவர் 1907-இல் வெளியிட்டிருக்கிறார். 1910-இல் பெங்களூர் நாகரத்னம்மா – இவரும் ஒரு தேவதாசி, திருவையாறு தியாகராஜ உற்சவத்தின் இன்றைய வடிவம் உருவானதில் பெரும்பங்கு வகித்தவராம் – திருத்திய பதிப்பை வெளியிட்டிருக்கிறார். நாகரத்னம்மா மிக சுவாரசியமான ஒரு ஆளுமை. போராளி.

நாகரத்னம்மா ஆண்கள் எழுதிய அடல்ட்ஸ் ஒன்லி புத்தகங்களை கண்டுகொள்ளாத பந்துலு முத்துபழனியை இப்படி சித்தரிப்பதை கேலி செய்திருக்கிறார். பெரிய சர்ச்சை கிளம்பி, 1912-இல் புத்தகம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

35 வருஷம் கழித்து ஒன்றிணைந்த சென்னை மாகாணத்தில் முதல்வராக தந்துகூரி பிரகாசம் இருந்தபோது தடை நீக்கப்பட்டிருக்கிறது. நல்ல வேளையாக அதைப் பார்க்க நாகரத்னம்மாவும் அப்போது உயிரோடு இருந்திருக்கிறார். சுபம்!

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய இலக்கியம்