ஜெயகாந்தன் அஞ்சலி தினம்

பழைய மின்னஞ்சல்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கிடைத்த இன்னொன்று – ஜெயகாந்தன் இறந்த சமயத்தில் சிலிகன் ஷெல்ஃப் மக்கள் கூடிப் பேசியதின் சுருக்கமான ரிப்போர்ட். நம்ம முத்துகிருஷ்ணன் இதை அப்டேட் செய்கிறேன் என்று சொல்லி இருந்தான், அது இனிமேல் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. 🙂 காலம் கடந்துவிட்டாலும் இங்கே பதிவு செய்கிறேன்.

ராஜனின் ரிப்போர்ட்:

jeyakanthanசிலிக்கான் ஷெல்ஃபின் இந்த மாத (ஏப்ரல் 2015) புத்தக தினம் ஜெயகாந்தன் அஞ்சலி தினமாக அனுசரிக்கப்பட்டது. ஜெயகாந்தனின் பல்வேறு படைப்புகள் குறித்து கலந்து கொண்ட புத்தக நண்பர்கள் விரிவாக அலசி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பாலாஜி மற்றும் காவேரி கணேஷ் ஜெயகாந்தனின் சில சிறுகதைகளை வாசித்தனர்.

நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து உரையாற்றிய பாலாஜி ஸ்ரீநிவாசன் ஜெயகாந்தனின் எழுத்துக்கள் தனது பதின்ம வயதில் தன்னிடம் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விரிவாகப் பேசினார். ஜெயகாந்தனின் பல சிறுகதைகளை உதாரணங்களாகக் கொண்டு ஜெயகாந்தன் வாசகர்களிடம் ஏற்படுத்திய ஆழமான தாக்கங்களை விளக்கினார். குருபீடம், ரிஷிபத்தினி, ரிஷிபுத்திரன் போன்ற சிறுகதைகள் குறித்தும் அவரது நாவல்கள் குறித்தும் விரிவாக வாசித்து அலசினார்.

சுந்தரேஷ் ஜெயகாந்தனின் ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ” என்ற சிறுகதை குறித்தும் குருபீடம் குறித்தும் பேசினார். காவேரி அந்தரங்கம் புனிதமானது சிறுகதையை வாசித்தார். ஜெயகாந்தனுக்கும் புதுமைப்பித்தன் மற்றும் லா.ச.ரா. படைப்புகளின் ஒற்றுமை வேற்றுமைகள் குறித்தும் அலசப்பட்டன.

ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் நாவல்களிலும் அவசியம் படிக்கப் பட வேண்டியவை குறித்த விரிவான பட்டியலை பாலாஜி ஜெயகாந்தனை இது வரை படித்திராத வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் பத்மநாபன், ராஜன், பக்ஸ், நித்யா ஆகியோர் தங்களைக் கவர்ந்த ஜெயகாந்தனின் படைப்புகள் குறித்து அலசினார்கள். ஜெயகாந்தனின் சினிமாக்கள் குறித்தும் தமிழக அரசியலில் அவரது தாக்கம் குறித்தும் ஜெயகாந்தனின் ஆன்மீகம் மற்றும் அரசியல் பங்களிப்புகள் குறித்தும் அவரது சர்ச்சைக்குரிய சில பேச்சுக்கள் குறித்தும் விரிவாக விவாதித்தனர். இந்த மாதப் புத்தக தினம் ஜெயகாந்தனுக்கு ஒரு நிறைவான அஞ்சலி நிகழ்ச்சியாக அவரது அனைத்து பங்களிப்புகளும் நினைவு கூரப்பட்டு போற்றப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக நடந்தது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்