முன்கதைச் சுருக்கம் என்ற பாலகுமாரன் சுயசரிதையிலிருந்து: பாலகுமாரனுக்கு ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுதுவதில் நுட்பங்கள் பிடிபடவில்லையாம். ஒரு முறை சுப்ரமணியராஜுவுடன் சுஜாதாவை சந்தித்து “எத்தனை ட்ரை பண்ணாலும் சிறுகதை எழுத வரலை. சிக்கறது. தப்பா கதை எழுதறோம்னு தெரியறது. ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதறது?” என்று கேட்டிருக்கிறார். சுஜாதா பத்து நிமிஷத்தில் சொல்லித் தருகிறேன் என்று ஒரு மணி நேரம் விளக்கினாராம். அது கீழே.
கதை எழுதறது கஷ்டம் இல்லைய்யா, சுலபம். ஒரு பத்து நிமிஷம் நான் சொல்லித் தரேன். புடிச்சுக்க!
முதல் வரில கதை ஆரம்பி. உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேன். இப்படி ஆரம்பி.
ராமு ஜன்னல் பக்கம் நின்றபடி தன் தலையை அழுத்தி வாரிக் கொண்டிருந்தான். தெருவில் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. ராமு திகைத்தான். தெருவில் நடந்தவனுக்கு தலையே இல்லை. ஃபுல் ஸ்டாப்.
இதுதான் ஆரம்பம். இனி அடுத்த பாரா.
அவன் தலையை யாரோ வெட்டிட்டாங்க. முண்டம் மட்டும் நடந்துபோய் விழுந்ததுன்னு சொல்லு. இல்லை… அவன் தலைல பானைய கவுத்துக்கிட்டுப் போயிருந்தான்னு சொல்லு. தடால்னு ஆரம்பி கதையை.
பலபலவென்று விடிந்தது. சார் போஸ்ட் என்று குரல் கேட்டது.
அன்று தீபாவளி. சரசு புதுப்புடவை சரசரக்க ஹாலுக்கு வந்தாள்னு ஆரம்பிக்காதே.
கதை ஆரம்பிச்சிட்ட. என்ன சொல்லப்போற? முடிஞ்சவரைக்கும் சிறுகதை நடக்கற காலத்தை ஒன் அவர், டூ அவர்ல வச்சுக்க. ஒரு இம்பாக்ட் மட்டும் போறும். ஒரு சிறுகதைல மூணு தலைமுறை சொல்லாதே.
இதனால் அறியப்படும் நீதி யாதெனில் என்றூ முடிக்காதே. நீதி சொல்றது தப்பில்லை. உள்ளடக்கமா அமைதியா இருக்கட்டும். ஒரு சின்ன சண்டை, அதில ஒரு க்ளைமாக்ஸ், அதுல கிடைச்ச இம்பாக்ட் சிறுகதைக்குப் போறும்.
டீடெய்ல்ஸ் எங்க தரணும் தெரியுமா? ஒரு ஹால் பத்தி எழுதினா அந்த ஹால் எப்படி இருந்ததுன்னு எழுது. படிக்கறவங்க மனசுல டிராயிங் மாதிரி விழட்டும். ஃபர்ஸ்ட் பர்சன் சிங்குலர்ல ஆரம்பிக்காதே. நான் தூங்கி எழுந்தபோது இருட்டாகி விட்டிருந்ததுன்னு எழுதாதே. தள்ளி நின்று அவன் எழுந்தபோது இருட்டாய் இருந்ததுன்னு எழுது. உன்னை பாதித்த விஷயம் பத்தி எழுது. உன்னை உன்கிட்டேர்ந்து தள்ளிப் பார்த்து எழுது. எழுதிட்டு மறுவாரம் வரைக்கும் பொட்டில வச்சுட்டு மறுபடி பார். உன் தப்பு உனக்கே தெரியும்.