நிஜமும் நிழலும்

சொல்வனத்தில் என் சிறுகதை ஒன்று வெளியாகி இருக்கிறது. சொல்வனம் ஆசிரியர்களுக்கு என் நன்றி. முடிந்தால் படித்துப் பாருங்கள்!

இது நிஜ சம்பவம். ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் என்று ஒன்றை மறந்துபோனது, சமாளிக்கப் பார்த்தது, மனைவியிடம் பொய் சொன்னது எல்லாம் நடந்து ஒரு பத்து வருஷம் இருக்கும். யார் அந்தக் கணவன் என்று சொல்வதற்கில்லை. அப்போதிலிருந்தே இதை கதையாக எழுத வேண்டும் என்று ஆசைதான். மனித இயல்பைத் தோலுரித்துக் காட்டிவிட வேண்டும், பால்வண்ணம் பிள்ளை லெவலில், பாயசம் லெவலில் சிறுகதை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பத்து வருஷ முயற்சிக்குப் பிறகு அலுத்துப் போய் வந்த வரை போதும் என்று சொல்வனத்துக்கு அனுப்பினேன். என் அதிர்ஷ்டம், அவர்கள் நிராகரிக்கவில்லை.

இரண்டு மூன்று நண்பர்கள் இந்தச் சிறுகதை சுஜாதாவின் நிஜத்தைத் தேடி சிறுகதையை நினைவுபடுத்துவதாகச் சொன்னார்கள். அப்படி நினைவுபடுத்தக்கூடாது என்பதும் இந்த பத்து வருஷ முயற்சியில் அடங்கும். 🙂 நிஜத்தைத் தேடி பால்வண்ணம் பிள்ளை லெவலுக்கு ஓரிரு மாற்று குறைவுதான், ஆனாலும் நல்ல இலக்கியம்தான். என்ன செய்வது, நம்ம திறமை இலக்கியம் அளவுக்கு இன்னும் போகவில்லை.

என் கண்ணில் நான் எழுதியது இலக்கியம் இல்லை. விகடன் தரத்துக்கு நல்ல சிறுகதை, அவ்வளவுதான். சிறுகதையின் தொழில் நுட்பம் (craft) நன்றாகக் கைவந்திருந்தால் இன்னும் கொஞ்சம் polished ஆக வந்திருக்கலாம். அந்தத் தொழில் நுட்பம் எதிர்காலத்தில் கைவந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் சிறுகதையின் கலை (art) – இந்தக் கருவை இலக்கியமாக மாற்றும் விதம் – கைகூடுமா என்று தெரியவில்லை. இப்போதைக்கு கருவை கதையாக மாற்ற முடிகிறது என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், அவ்வளவுதான்.

நிஜ சம்பவம் என்று சொல்லி இருந்தேன். வெ.சா.வும் இப்படி ஒரு நிஜ சம்பவத்தை நினைவு கூர்கிறார். சிலருக்கு நேரடி அனுபவம், பலர் கேள்விப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். சுஜாதாவும் நானும் மட்டும்தான் கதை எழுதி இருக்கிறோமா என்ன? வேறு ஏதாவது நினைவு வருகிறதா?

தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்