பா.ராகவனின் ஓரினச்சேர்க்கை பின்புலச் சிறுகதை

pa_raghavanசமீபத்தில் பா.ரா. எழுதிய சிறுகதை ஒன்றைப் பற்றி – இறுதிச் சடங்கு – நண்பர்களுக்குள் காரசாரமான விவாதம் நடந்தது.

வழக்கம் போல பாலாஜிதான் ஆரம்பித்தார். சுட்டி கொடுத்துவிட்டு பா.ரா. என்ன சொல்ல வராருன்னு ஒண்ணும் தெரியாத சின்னப்பிள்ளை மாதிரி எங்கள் எல்லாரையும் கேட்டார். முத்துகிருஷ்ணனின் பதில்:

there is no “reveal” in the story due to the last line. Pun not intended. 🙂 Actually I thought “Ramachandran” unzipped his pants…I was super confused. Then understood “he” un zipped. So I was back to normal confused.

பாலாஜி: ஓரினச் சேர்க்கையாளர்கள் செக்ஸ் வெறியர்கள், துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் சுய இன்பத்தில் ஈடுபடுபவர்கள் என்கிறார் பா.ரா. இது சுத்த மடத்தனம்.

முகின்: இது அவனுடைய முதல் இரவும் கூட.

பாலாஜி: என்னது? சுய இன்பத்தில் ஈடுபடுவது முதலிரவா?

முகின்: கதையில் உடல் ரீதியான பந்தம் மனதுக்கும் வந்தது என்று வருகிறது, இது அவன் மனதளவில் முதலிரவாக இருக்கக் கூடும்.

ஆர்வி: நீங்கள் இருவரும் ஏன் ஓரினச் சேர்க்கையாளர்களின் செக்ஸ் வெறி துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் சுய இன்பத்தில் ஈடுபட வைக்கும் என்று பா.ரா. சொல்கிறார் என்ற முடிவுக்கு வருகிறீர்கள்? பிரியமான மனைவி/கணவன்/அம்மா/அப்பா/மகன்/மகள் பிணம் எரிக்கப்படவில்லை, ஆனால் இந்த பாழும் வயிறுக்கு பசிக்குதே என்ற அழுகையை நான் சில முறை நேராகவே கேட்டிருக்கிறேன், அந்த அழுகுரலைப் பற்றி நிறைய முறை எழுதப்பட்டு அது ஒரு தேய்வழக்காகவே (cliche) ஆகிவிட்டது. பா.ரா. அந்த கருவை இன்னும் நீட்டுகிறார், அவ்வளவுதான். ஜெயகாந்தன் கணவன் பிரியமான மனைவி இறந்த சில நாட்களுக்குள்ளேயே மறுமணம் செய்து கொள்வதாக ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார், கதை பேர் நினைவு வரவில்லை…

முகின்: ஆனால் பசியும் காமமும் வேறுவேறு.

ஆர்வி: வேறு என்றால் வேறுதான்; காமம் வாழ்வின் அடிப்படை உந்துவிசை என்று பார்க்கும்போது ஒன்றேதான். இது வாழ்க்கையின் சாதாரண சம்பவமாகக் கூட இருக்கலாம். நெருக்கமானவர் பிணம் கிடக்கும்போதும் – நல்ல காஃபியின் மணம் எச்சிலை ஊற வைக்கலாம்; கிரிக்கெட்/டென்னிஸ்/ஃபுட்பால் மாட்சில் என்ன நடக்கிறது என்று நாம் நின்று பார்க்கலாம்; ஃபேஸ்புக்கில் ஏதாவது அப்டேட் வந்திருக்கிறதா என்று செக் செய்யலாம். பா.ரா. அப்படிப்பட்ட செயல்களின் முரண்பாட்டை (irony) காட்டவும் இதை எழுதி இருக்கலாம். எதை நினைத்து எழுதினார் என்பது வாசகன் தேர்வு. இது ஓரினச்சேர்க்கையாளர்களின் குணம் என்று அவர் சொல்ல வரவில்லை என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன்.

பாலாஜி: ஆர்வி, இந்தக் கதையில் உங்களுக்கு ஹோமோஃபோபியா தெரியவில்லையா? ஆண்-பெண் உறவு என்றால் அது உடலுறவிலிருந்து மனரீதியான பந்தத்துக்கு சென்றது என்று எழுதுவாரா? இதையே ஏன் ஒரு கணவன் மனைவி இறந்துகிடக்கும்போது சுயஇன்பம் காண்பதாக எழுதி இருக்கக்கூடாது? ஓரினச்சேர்க்கை பின்புலத்தை எதற்காக கொண்டு வந்திருக்கிறார்? ஓரினச்சேர்க்கை உறவு என்பது உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்லாமல் சொல்லத்தானே?

ஆர்வி: இதையே நான் வேறு விதமாகக் கேட்கிறேன். இது அப்படியே மாற்றி ஒரு கணவன் சுயஇன்பம் காண்கிறான் என்று எழுதப்பட்டிருந்தால் நீங்கள் ஆண்-பெண் உறவு என்பது உடல் கவர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் ஓரினச்சேர்க்கை அப்படி அல்ல என்று உணர்ந்திருப்பீர்களா?

அருணகிரி: ஆண்-பெண் என்றால் அந்தக் கணவன் ஒரு pervert என்று நினைத்திருப்போம். ஓரினச்சேர்க்கையும் ஆண்-பெண் உறவும் அடிப்படையில் ஒன்றுதான் என்பது சமூகத்தால் ஏற்கப்படவில்லை. பா.ரா.வின் முந்தைய எழுத்துக்களை வைத்தும் அப்படி சொல்ல முடியாது. அப்படி இல்லாதபோது இந்தச் சிறுகதை ஓரினச்சேர்க்கையாளர்களை தாழ்த்துவதாகத்தான் பொருள் கொள்ள முடியும்.

முகின்: முரண்பாடு (irony) என்று வைத்துக் கொள்ள முடியவில்லை, அந்தக் கோணம் வலுவாக வெளிப்படவில்லை.

அருணகிரி: அமெச்சூர்தனமான எழுத்து வேறு.

ஆர்வி: அருணகிரி, நம் கோணங்களில் உள்ள அடிப்படை வித்தியாசம் – இந்த நிலையில் சுயஇன்பம் என்பதை நான் perversion ஆகக் கருதவில்லை, நீங்கள் கருதுகிறீர்கள். இது அபூர்வமாக இருக்கலாம், ஆனால் மனித இயல்பே. மேலும் இது புனைவுலகம். பா.ரா. முன்னால் என்ன எழுதினார் என்பதைப் பற்றி நமக்கென்ன? அவர் ஓரினச்சேர்க்கையாளர்களை தாழ்த்தி வேறு ஒரு சிறுகதை எழுதி இருக்கலாம். அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? ஒவ்வொரு கதையையும் அதன் தனி உலகத்துக்குள்தான் படிக்க வேண்டும்.

அருணகிரி: எதையுமே மனித இயல்பு என்று சொல்லிவிடலாம்.

பாலாஜி: பா.ரா. மறைமுகமாக ஓரினச்சேர்க்கையாளர்களைத் தாக்குகிறார். ஓரினச்சேர்க்கை உடல் ஆசைகளால் மட்டுமே ஏற்படுவது, அதனால்தான் துணைவனின் பிணம் அடுத்த அறையில் இருக்கும்போதும் இவனால் சுயஇன்பத்தில் ஈடுபடமுடிகிறது என்று எழுதுகிறார். இப்படி ஆண்-பெண் உறவைப் பற்றி அவர் எழுதமாட்டார். இது obvious ஆகத்தானே இருக்கிறது, உங்களுக்குப் புரியவில்லையா ஆர்வி?

ஆர்வி: எனக்கு obvious ஆக இல்லை, அவர் எழுத்தில் இல்லாததை நீங்கள் வாசித்திருக்கிறீர்கள் என்றே கருதுகிறேன்.

பாலாஜி: வரிகளுக்குள் படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், ஆர்வி!

இசைவு வரப்போவதில்லை என்று இங்கே நிறுத்திக் கொண்டோம். இந்தக் கதையைப் படித்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? பாலாஜியைப் போல மறைமுகத் தாக்குதல் என்றா? இல்லை என்னைப் போல அடிப்படை மனித விழைவைப் பற்றி என்றா? யாருடைய கோணம் பொதுவாக அப்பீல் ஆகிறது என்று பார்க்க ஆவல்…

பிற்சேர்க்கை: நவம்பர் 22 வரை 18 பேர் தாழ்த்துகிறார்கள், 14 பேர் அப்படி இல்லை, 12 பேர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை என்கிறார்கள். இரண்டு கோணமும் ஏறக்குறைய சமமாக பாப்புலராக இருக்கிறது. ஆனால்:

பா.ரா. இரண்டுமில்லை, இது அவன் தன் துணைவனுக்காக நடத்தும் இறுதிச் சடங்கு என்கிறார். எழுத்தாளன் முக்கியமே இல்லை, வாசகன் அவன்(ள்) இஷ்டத்துக்குப் படித்துக் கொள்கிறான்(ள்) என்ற என் எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்துகிறார்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சிறுகதைகள்