திரைப்படப் பரிந்துரை – American Sniper

சிறந்த திரைப்படம் என்பதை விட intriguing திரைப்படம் என்றுதான் சொல்வேன்.

american_sniperக்ரிஸ் கைல் என்ற அமெரிக்க ராணுவ வீரரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட புத்தகம். கைல் ஒரு typical redneck. சின்ன வயதிலிருந்தே துப்பாக்கியை வைத்து வேட்டையாட எல்லாம் பழகியவர். தானாக சென்று ராணுவத்தில் சேர்கிறார். குறிபார்த்து சுடுவதில் தேர்ச்சி பெறுகிறான். நான்கு முறை இராக்குக்கு சென்று போரிடுகிறார். அவருடைய போர் முறை என்பது மறைவான இடத்திலிருந்து எதிரியை சுடுவது. நகரப் போர்களில் ராணுவம் வீடு வீடாக சென்று எதிரிகளைத் தேடும்போது இது அவர்களுக்கு பெரும் பாதுகாப்பைத் தருகிறது. அவரது சுடும் திறமை அவரைப் பிரபலமாக்குகிறது. 250க்கும் மேற்பட்டவர்களைக் சுட்டுக் கொன்றுவிட்டாராம். எதிரிகள் தரப்பிலும் அவரைப் போலவே குறிபார்த்து சுடுவதில் திறமை வாய்ந்த முஸ்தஃபாவுக்கும் இவருக்கும் நடுவில் போட்டியே ஏற்படுகிறது. கடைசியில் முஸ்தஃபாவை சுட்டுக் கொன்றுவிடுகிறார், ஆனால் இவர்கள் தரப்பில் பெரிய உயிர்ச்சேதம்.

இத்தோடு முடிந்திருந்தால் எனக்கு இந்தத் திரைப்படம் பத்தோடு பதினொன்றாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்த வரையில் இதற்கு அடுத்த பகுதிதான் இந்தத் திரைப்படத்தை முக்கியமானதாக்குகிறது.

chris_kyleகைலுக்கு ராணுவத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கை சுலபமாக இருக்கவில்லை. பாசமுள்ள மனைவி, குழந்தைகள் இருந்தாலும் அவருக்கு தன் மனதை பூரணமாக குடும்பத்தின் மீது செலுத்த முடியவில்லை. மனதில் எப்போதும் ஒரு அலைக்கழித்தல் இருந்து கொண்டே இருக்கிறது. Post Tramautic Stress Disorder என்று சொல்வார்கள். அடுத்தவரைக் கொல்வதும் எப்போதும் இருக்கும் அபாயமும் ராணுவ வாழ்வில் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதற்குப் பிறகு சாதாரண வாழ்வில் மீண்டும் ஒட்டுவது கஷ்டம். அதுவும் உடல் ஊனம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் கேட்கவே வேண்டாம். ஊனம் இல்லாத பலருக்கு குற்ற உணர்ச்சி மிகுந்திருக்கும். கைலுக்கு குற்ற உணர்ச்சி எதுவுமில்லை, ஆனால் தான் எதிரிகளைக் கொன்றிருக்காவிட்டால் தன் நண்பர்கள் – தன்னவர்கள் நிறைய பேர் இறந்திருப்பார்கள் என்ற உணர்வு பலமாக இருக்கிறது. தேர்ச்சி பெற்றவனாகிய நான் போரிடாமல் திரும்ப வந்துவிட்டேன் என்பதற்கான குற்ற உணர்ச்சிதான் இருக்கிறது. டாக்டர் ஒருவர் தன்னவர்கள் என்று நீ கருதும் பலருக்கும் Post Tramautic Stress Disorder இருக்கிறது, அவர்களுக்கு நீ நட்புக்கரம் நீட்டலாமே என்கிறார். கைல் tangible ஆக எதுவும் செய்துவிடவில்லை, ஆனால் பல முன்னாள் ராணுவ வீரர்களிடம் சென்று பேசுகிறார். பலருடன் சேர்ந்து துப்பாக்கிப் பயிற்சி செய்கிறார். மன அளவில் அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

கைல் மன அழுத்தம் மிகுந்த ஒரு முன்னாள் ராணுவ வீரரால் சுடப்பட்டு இறந்து போகிறார், அத்துடன் படம் முடிகிறது.

கைலாக நடிக்கும் ப்ராட்லி கூப்பர் அசத்திவிட்டார். போர்க்காட்சிகள் பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம், தேர்ந்த இயக்குனர்களில் ஒருவர்.

2014-இன் சிறந்த திரைப்படம், இயக்குனர், திரைக்கதை, நடிகர் ஆகிய ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
திரைப்படத்தின் தளம்
ஐஎம்டிபி குறிப்பு
க்ரிஸ் கைல் பற்றிய விக்கி குறிப்பு